என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
- உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) நேற்று மாலை அங்கலக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) நேற்று அதிகாலை சுமார் 1 மணியள வில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இரும்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சரவணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 51). இவர் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 6 மணி அளவில் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் கிருஷ்ணவேணியின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணவேணியின் மீது மோட்டார்சைக்கிளை மோதிய வாலிபர் அங்கலகுறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (21) என்பவர் என தெரியவந்தது. விபத்தில் இவரும் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
- வெள்ளி விலையும் குறைவு.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை காண முடிந்தது. தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், ரூ.57 ஆயிரத்தை நெருங்கியும், பின்னர் குறைவதும் என தங்கம் விலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640-க்கும் கிராமுக்கு ரூ.7,455-க்கும் விற்பனையானது
இந்த நிலையில், நவம்பவர் மாத தொடக்கநாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 23-ந் தேதி உச்சத்தை தொட்ட நிலையில், அதன் பின்னர் விலை குறைந்தது. அதன்பின்னர் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,640
30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,520
29-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,000
28-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-10-2024- ஒரு கிராம் ரூ. 109
30-10-2024- ஒரு கிராம் ரூ. 109
29-10-2024- ஒரு கிராம் ரூ. 108
28-10-2024- ஒரு கிராம் ரூ. 107
27-10-2024- ஒரு கிராம் ரூ. 107
- 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர்.
- மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த விஜயகணேசன் மகன் சேவக் (23). மணிகண்டன் மகன் சஞ்சய் (22). அச்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து கம்பத்துக்கு மது குடிக்க சென்றனர்.
இதில் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர். மது குடித்து விட்டு மீண்டும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீலிங் செய்தபடி வந்துள்ளனர்.
கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லிங்கேஷ் மற்றும் சேவக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி நாளில் ஒரே தெருவைச் சேர்ந்த திருமணமாகாத 3 இணை பிரியாத நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
- அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் மழை பெய்து வந்தது. தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தரைப்பகுதியில் நிலவும் வெப்பத்தை விட இங்கு குறைவாக இருப்பதாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் வரை சுற்றுலா பயணிகள் இல்லாததால் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் அண்டை மாநிலமான கேரளாவில் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கேரள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்ததால் அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதில் அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்து வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் 50 சதவீத சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வருவது வழக்கம்.
- அதிகாலையிலேயே கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள், முண்டியடித்துக்கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆர்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் 50 சதவீத சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வருவது வழக்கம்.
கடையின் முன்பு மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அதிகாலை 3 மணிக்கே ஜவுளிக்கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள், முண்டியடித்துக்கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஈரோடு மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.
தீபாவளிக்கு மறுநாளான இன்று ஆர்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திரு்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை 61.50 ரூபாய் அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
- மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
- மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர்.
சென்னை:
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் பி.எம்.ஜெய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரியவந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தினால் பரவலாகப் பலர் இதில் பயன் பெற முடியும்.
தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களிலேயே மாற்றுத்திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5,177 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
- மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தின் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது சென்னையில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயத்தால் பாதிப்படைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






