என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
- பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள்
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 3-ந் தேதி சென்னைக்கு புறப்படுவார்கள்.
தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக் கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் காட்டாங்கொளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத் தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்... அதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.
- நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்து தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 200 வார்டுகளிலும் பட்டாசு குப்பைகளை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தூய்மைப்பணியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது. திட, திரவ கழிவுகள், பட்டாசு குப்பைகள், கம்பிகள் என தரம் பிரித்து கொண்டு சேர்ப்போம். இந்த பகுதியில் காலையில் தெரு முழுவதும் குப்பைகள் அதிகமாக இருந்தது. இன்னும் 2 மணி நேரத்தில் திருவல்லிக்கேணி முழுவதும் சுத்தமாகி விடும் என்று தெரிவித்தார்.
- விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் மற்றும் நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
- தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். அவரது மகன் லித்திஷ் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் லித்திஷ் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஓ.எம்.ஆரில் உள்ள விளையாட்டு திடலுக்கு விளையாட சென்றுள்ளார்.
அங்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் மற்றும் நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயங்களுடன் சிக்கி தவித்தவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் லித்திசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பறவைகள் கூட்டம் கூட்டமாக கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும்.
- 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
சென்னிமலை:
தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கி விடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும்.
இப்படி தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மக்களும், ஊர்களும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடாத வித்தியாசமான பல கிராமங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.
கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.
பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.
பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.
மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.
இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன.
இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.
இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.
இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.
- விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது.
- பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 30 விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதந்தோறும் சராசரியாக 2.8 லட்சம் பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.
இந்த விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 936 டன் சரக்குகள் கையாளப்பட்டன. அதேபோல ஜூலையில் 1079 டன், ஆகஸ்டு மாதத்தில் 1239 டன் என்ற அளவில் சரக்குகள் கையாளப்பட்டன. அதாவது கோவை விமான நிலையத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 100 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கோவையில் இருந்து விமானம் வாயிலாக 3 டன் இனிப்பு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 டன்களுக்கும் அதிகமான இனிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக உணவுப்பொருட்கள்தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள் கூட்டமும் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை:
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளன.
தி.மு.க. குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. மேலிடம் நியமனம் செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அடுத்தகட்டமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணிகளில் உள்ள தோழமைக் கட்சிகளும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க.வும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் பற்றி விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர தேர்தல் கூட்டணி, பிரசாரம் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளார்.
அதன்படி வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 6-ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.
7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.
காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.
9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது தீபாவளியை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் இரவு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கினர்.
தமிழக அரசின் சார்பில் பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் பட்டாசுகளுடன் தெருக்களுக்கு வந்திருந்து வெடிகளை வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி வெடிவிபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீவிபத்துக்கள் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் தீபாவளி வெடி வெடித்ததில் பல்வேறு இடங்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு விபத்துக்கள் பெருமளவில் குறைந்து இருந்தது. மேலும் கோவையில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களில் வேலை பார்க்கும் 110-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீபாவளி அன்று பணியில் இருந்தனர். மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீரர்கள் விரைந்து சென்று தீயை இணைத்தனர். பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
- உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) நேற்று மாலை அங்கலக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) நேற்று அதிகாலை சுமார் 1 மணியள வில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இரும்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சரவணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 51). இவர் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 6 மணி அளவில் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் கிருஷ்ணவேணியின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணவேணியின் மீது மோட்டார்சைக்கிளை மோதிய வாலிபர் அங்கலகுறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (21) என்பவர் என தெரியவந்தது. விபத்தில் இவரும் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
- வெள்ளி விலையும் குறைவு.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை காண முடிந்தது. தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், ரூ.57 ஆயிரத்தை நெருங்கியும், பின்னர் குறைவதும் என தங்கம் விலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640-க்கும் கிராமுக்கு ரூ.7,455-க்கும் விற்பனையானது
இந்த நிலையில், நவம்பவர் மாத தொடக்கநாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 23-ந் தேதி உச்சத்தை தொட்ட நிலையில், அதன் பின்னர் விலை குறைந்தது. அதன்பின்னர் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,640
30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,520
29-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,000
28-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-10-2024- ஒரு கிராம் ரூ. 109
30-10-2024- ஒரு கிராம் ரூ. 109
29-10-2024- ஒரு கிராம் ரூ. 108
28-10-2024- ஒரு கிராம் ரூ. 107
27-10-2024- ஒரு கிராம் ரூ. 107
- 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர்.
- மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த விஜயகணேசன் மகன் சேவக் (23). மணிகண்டன் மகன் சஞ்சய் (22). அச்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து கம்பத்துக்கு மது குடிக்க சென்றனர்.
இதில் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர். மது குடித்து விட்டு மீண்டும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீலிங் செய்தபடி வந்துள்ளனர்.
கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லிங்கேஷ் மற்றும் சேவக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி நாளில் ஒரே தெருவைச் சேர்ந்த திருமணமாகாத 3 இணை பிரியாத நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






