என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திமுக அரசு என்பது விளம்பர அரசாக அமைந்துள்ளது.
    • திமுக வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    * அதிமுக ஆட்சி நிறைவுக்கு வரும்போது தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி.

    * கொரோனா காலத்தில எந்த திட்டமும் நிறுத்தப்படாமல் செயல்படுத்தப்பட்டது.

    * சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் தேவையா?

    * திமுக அரசு என்பது விளம்பர அரசாக அமைந்துள்ளது.

    * திமுக ஆட்சியில் குழு போட்டால் அந்த திட்டம் அத்தோடு முடிந்துவிட்டது.

    * திமுக வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    * குடிமராமத்து திட்டத்தின் மூலம் பல நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன.

    * அதிமுக ஆட்சி நிறைவுக்கு வரும்போது தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி.

    * 2026 தேர்தலில் முதலமைச்சர் மக்கள் மத்தியில் பதில் சொல்லியாக வேண்டும்.

    * அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

    * சொத்து வரி மின் கட்டணம் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்கி ஊழல் செய்கின்றனர்.

    * கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

    * நெருக்கடி கொடுக்க கொடுக்க அதிமுக வளர்ந்து கொண்டே இருக்கும்.

    * அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டு விட்டது. எழுச்சி தான் வெற்றிக்கு அடிப்படை என்று பேசினார்.

    • டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
    • எந்த திட்டமும் கொண்டு வராமல் அதிக கடனை வாங்கி உள்ளது திமுக அரசு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    * மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.

    * பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொல்லைபுறமாக ஆட்சியை பிடித்துள்ளது திமுக.

    * காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.

    * டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.

    * விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

    * அதிமுக ஆட்சியில் அத்தனை புயல்களை எதிர்கொண்டோம்.

    * மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக.

    * ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக.

    * அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

    * கொரோனா காலத்தில் மக்கள் பசியாற அம்மா உணவகத்தில் இலவச உணவு அளிக்கப்பட்டது.

    * குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்த விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது அதிமுக அரசு.

    * எந்த திட்டமும் கொண்டு வராமல் அதிக கடனை வாங்கி உள்ளது திமுக அரசு என்று பேசினார்.

    • தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக.
    • 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி வரும் போகும் ஆனால் கொள்கை என்பது நிலையானது.

    * தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக.

    * பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் பல விமர்சனங்கள் எழுந்தன.

    * எந்த கட்சிக்கும் இல்லாத தொண்டர் பலம் அதிமுகவிற்கு உள்ளது.

    * உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.

    * 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி குறைவான வாக்குகளை பெற்றது.

    * பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, சட்டசபை தேர்தல் என்பது வேறு.

    * 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வின் வாக்கு சதவீதம் உண்மையில் சரிந்துள்ளது.

    * 2014 தேர்தலை ஒப்பிடும்போது பாஜக 1 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை இழந்துள்ளது.

    * 2021 தேர்தலில் அதிமுக 34 இடங்களில் குறைந்த வாக்குகளில் தோற்றது.

    * 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.

    * 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    * அதிமுக-விற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.

    * யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை என்று கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி 2 கோடி தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார்.
    • 2,500 நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    பொதுக்குழு-செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஒரு வாக்காளரை 10 முறையாவது சந்தித்தால் அவர்கள் நமக்கு வாக்களிப்பார்கள்.

    2026-ல் வெற்றி உறுதி. கட்சிக்காக செலவு செய்ய பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி செலவு செய்யுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நிலைப்பாட்டை கூட முழுமையாக நம்பவில்லை. கூட்டணியைதான் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

    கூட்டணியினர் எதிர் கருத்து கூறினால் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தி.மு.க. கூறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கோடி கழக தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார். அப்படி உழைப்பை நம்பி இருக்கின்ற அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் 5 முதல் 6 மாதத்துக்குள் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற மற்ற கட்சியை சேர்த்தவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள்.

    ஏனென்றால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றிபெறும் வாய்ப்பு வந்து விட்டது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு வரவேண்டும்.

    அந்த எண்ணத்தை இங்கு இருக்கும் 2,500 நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் நோக்கி வருவார்கள். அந்த சூழ்நிலையை உருவாக்க இந்த செயற்குழு-பொதுக்குழுவில் நாம் சூளுரை ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.
    • 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய தாவது:-

    புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம், அம்மா அரசு இருக்குமா? இருக்காதா? என்ற நிலையிலே, அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு சோதனையான காலக் கட்டத்திலே இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற ஒரு தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அம்மா ஆட்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்று 4½ ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு எடப்பாடியார் அரசாகும்.

    அதற்கு பிறகு இந்த இயக்கத்திலே எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளால், பல்வேறு சோதனைகள் வந்தது, பிளவுபட்டது. சின்னம் முடக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அதை எதிர் கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் எக்கு கோட்டையாக அ.தி.மு.க. கழகம் இன்று இருப்பதற்கு முழு காரணம் ஆளுமை மிக்க நம்முடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

    ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மை தோற்கடிப்பதற்கு எவனும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கைத்தான் நம் வெற்றிக்கு முதல்படி.

    அந்த நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு நம் மீது மறைமுகமாக, நேரடியாக தாக்குதல்கள் நடத்தி கொண்டி ருக்கிறார்கள். 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.

    அன்றைக்கு இந்த எடப்பாடியார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே எழுச்சி அதே ஆரவாரத்தோடு இன்றைக்கும் இருக்கிறது.

    காது இருந்தும் கேட்காத செவிடர்களுக்கும், கண் இருந்தும் பார்க்காத குருடர்களுக்கும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த மண்டபத்தில் நிரம்பி இருக்கிற இந்த தொண்டர்களை பாருங்கள். எங்கடா இருக்கிறது இங்கே கருத்து வேறுபாடு? எங்கிருக்கிறது சலசலப்பு?

    சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இங்கே பாருங்கள். இந்த எழுச்சியை பாருங்கள்... இதுதான் 2026-ல் நம்முடைய அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும்... அமையும்.

    நம்முடைய பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க. தொண்டனுடைய பலம் தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டன் இருக்கிற வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பன் மட்டுமல்ல 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அதனால்தான் இந்த தொண்டனுடைய மனதை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காக பல் வேறு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

    இதையெல்லாம் நாம் தலைவர் காலத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறோம். ஆகவே அ.தி.மு.க. மக்களை நம்பி மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற இயக்கம்.

    இன்றைக்கு ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அழித்து விடலாம். வழக்குகளை போடலாம். கைது செய்யலாம். அ.தி.மு.க.வினரை அடக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி நடந்ததே அங்கு என்ன நிலைமை ஏற்பட்டது. குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது. மக்கள் பொங்கிவிட்டார்கள். இங்கு ஒருவர் மீது சேறு வீசப்பட்டதே. மக்கள் எழுச்சி அடைந்துவிட்டார்கள்.

    வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா அரசு எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

    கூட்டணி... எல்லோரும் கேட்பது கூட்டணி. நான் கேட்கிறேன். 2001-ல் தேர்தலுக்கு 3 மாதம் முன்பு வரை கூட்டணி வந்ததா? எப்போது வந்தது? தேர்தலுக்கு 10 நாளுக்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. மிகப் பெரிய வெற்றியை அம்மாபெற்று தந்தார்.

    2011-ல் கூட்டணி வந்ததா? எப்போது அமைந்தது? தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புதான் கூட்டணி அமைந்தது.

    ஆகவே கூட்டணி வரும். அதை பொதுச்செயலாளர் பார்த்துக்கொள்வார். கவலையே படாதீர்கள். நாம் அமைக்கிறோமோ இல்லையோ ஸ்டாலினே கூட்டணியை அமைத்து கொடுத்து விடுவார்.

    கவலையே படாதீர்கள். எப்போதெல்லாம் அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைகிறதோ அதற்கு பிறகு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

    அந்த நம்பிக்கையோடு அந்த எழுச்சியோடு அந்த உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றி நம் அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையிலே அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

    • ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும்.
    • கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறார்கள். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய உறுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தார்கள் . அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல் சமூக நீதிப் கோட்பாட்டுக்கு எதிரான தாக்குதல் அதேபோல வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 இல் வந்தது.

    அந்த சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கிறார்கள் ராமர் கோவில் கட்டியது இதற்கு ஒரு முன்னுதாரணம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருக்கிற சோசியலிசம் செக்யூலரிசம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இப்போது அதே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1948 நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள் பாஜக கட்சியை சார்ந்தவர்கள். அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இதுவும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

    ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கரையும், அரசமைப்பு சட்டத்தையும் புகழ்ந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதலை பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது . தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தை தடுக்க வேண்டும்.

    அரசமைப்பு சட்டம் குறித்த விவாதத்தில் இது குறித்த கருத்துக்களை பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை . ஆதவ் அர்ஜூன்

    நீக்கம் குறித்து யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. முதலமைச்சரை அடிக்கடி நேரில் சந்திக்க முடியாது என்ற காரணத்தினால் தான் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பேசினேன்.

    ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பேசி வருவது தவறு.

    தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். முதல்வரை சந்தித்தபோதும் இதனை வலியுறுத்தினோம்.

    கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு சட்ட வழிகாட்டுதல் இருக்கிறது அதற்கான அரசாணை இருக்கிறது அதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    கொடைக்கானல்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சாரமும் அதிக நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் மலைச்சாலையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் நகரின் பல பகுதிகளில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய டோபிகானல் பகுதி வழியாக ஓடும் நீரோடையில் நட்சத்திர ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் அதிகமாக வெளியேறுவதாலும் தொடர் மழையாலும் அதிகமான நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    இதனால் இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பவர்கள் முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாலை நேரத்தில் மழை அளவு குறைந்து கடும் பனிமூட்டம் நிலவியது.இதனால் நகரின் பல பகுதிகளில் அதிகமான பனிமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    மேலும் நீண்ட நேரம் இப்பனிமூட்டம் நீடித்தது.நட்சத்திர ஏரிப்பகுதியில் சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாக காணப்பட்ட பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

    நட்சத்திர ஏரியை ஒட்டிய நடைமேடையில் கேரள கல்லூரி மாணவிகள் பனிமூட்டத்தை ரசித்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மிக நீண்ட நேரம் நீடித்த பனிமூட்டத்தை ஏரிச்சாலையை சுற்றி வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    அதன் பின்னர் நகர் பகுதியில் அவ்வப்போது பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.இன்று காலை மேகமூட்டம் கூட இல்லாமல் வெயில் தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தப்படுகிறது.
    • தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணியளவில் வந்தார். அவருக்கு ஸ்ரீ வாரு மண்டபத்தின் முன்பும் வழி நெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் அணியினர் பூரண கும்பங்களை கையில் ஏந்தியபடியும், மலர் தூவியும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

    அதன் பிறகு அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த முன்னாள் அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர்கள் பெஞ்சமின், விருகை ரவி, தி.நகர் சத்தியா, ஆதிராஜா ராம், வேளச்சேரி அசோக், அலெக்சாண்டர், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, சிறு ணியம் பலராமன், பால கங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து 2523 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 1000 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, ஆளுமைத் திறன் மிக்க அரசியல் தலைவராகத் திகழும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை 2026-ம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்.

    * அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை பெருமை பொங்க நடத்திக் காட்டிய, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

    * உலகப் பொதுமறையாகவும், இந்தியாவுக்கு வாழ்வியல் வழிகாட்டியாகவும், தமிழகத்திற்கு காலம் வழங்கிய கொடையாகவும் திகழ்கின்ற திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    * சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தப்படுகிறது.

    * மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

    * வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரிசெய்திடவும்; தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டது.

    * கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறோம்.

    * சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்கி விடாமல் தொடர்ந்து செயல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

    * மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    * தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களில் பொதுக்குழு அழைப்பு கடிதம் இல்லாதவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுக்குழுவில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக வெளியே கூடியிருந்தனர்.

    • கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
    • தற்போது வரை 141 தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபம்:

    வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படாத நிலையில் நேற்று முதல் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.

    இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 377 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்துரு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியத்தனர். மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடித் தால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படுவீர்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

    உடனடியாக கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதனால் பெரிய படகுகளுக்கு ரூ.80 ஆயிரம், சிறிய படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் இழப்புடன் இன்று காலையில் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இன்று இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் இது போன்று தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய பிரதமர் இலங்கை அதிபரை சந்திக்கும் போது தமிழக மீனவர்கள் மீன்பிடி வாழ்வாதாரத்தை பாதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதே போன்று தண்டனை கைதிகளாக உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு 141 தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 45 பேர் விசாரணை கைதிகளாகவும், 96 பேர் தண்டனை பெற்றும் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 198 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பெய்த மழை காரணமாக குமரலிங்கம் பழைய வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் சுமார் 150 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு வந்த விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    மேலும் விவசாயிகள் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கனமழையின் காரணமாக சாமராயபட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம் பகுதிகளில் புது வாய்க்கால் தண்ணீர், மழைநீர் மற்றும் அனைத்து விதமான கழிவு நீர்களும் குமரலிங்கம் பழைய வாய்க்காலில் கலந்து ஆற்றுக்கு செல்கின்றன.

    இதனால் வாய்க்கால் கீழ்பகுதியில், கடைமடையில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல் பயிர்கள், கரும்புகள், தென்னந்தோப்புகள் என சுமார் 150 ஏக்கருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    கடைமடையில் பாதிப்பை தவிர்க்கும் வகையில், உரிய இடத்தில் கால்வாய் அமைத்தல், நீர் வரத்தை கண்காணித்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற திட்டங்களை நீர்வளத்துறை செயல்படுத்தாமல் உள்ளனர். இதுவே பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது.
    • 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அதன்படி பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரியில் இன்று பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால்யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் வங்க கடல், இந்திய பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.

    கடலில் இறங்கிய சிலரை ரோந்து பணியில் ஈடுபட்ட சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அங்கு இருந்து வெளியேற்றி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்ககடல் பகுதியில் கடுமையான சீற்றம் காணப்பட்டதால் அங்கு செல்வதற்கான படகு போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணி கள்ஏமாற்றமடைந்தனர்.

    கடல் சகஜநிலைக்கு திரும்புவதை பொறுத்து படகு போக்குவரத்து இயக்கப்படும்என்று பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு பலகை படகுத்துறை நுழை வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திரு வள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புபால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்க ளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    ×