என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.
    • புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் துறையூர் தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் தனது அண்ணன் திருமணம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த இளம்பெண் சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது அந்த இளம்பெண்ணுக்கு, காதலன் செண்ட்பாட்டில் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் அதிருப்தி அடைந்த இளம்பெண் தனது காதலனின் நண்பனான குப்பன் மகன் மூர்த்தி (வயது 27) என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று, தன்னை தனது காதலனின் வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.

    இளம்பெண்ணை துறையூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று , பலவந்தமாக கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் இந்த சம்பவத்தை பற்றி வெளியில் கூறினால், இளம்பெண்ணின் குடும்பத்தினரை காலி செய்து விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் பயந்து போன இளம்பெண் நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் தெரிவிக்காமல், மீண்டும் செங்கல்பட்டு சென்று பணியில் சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மூர்த்தி இளம்பெண்ணின் காதலனுக்கு போன் செய்து கற்பழிப்பு சம்பவத்தை பற்றி போதையில் உளறியுள்ளார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன், இதைப் பற்றி இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து பாதிப்படைந்த இளம்பெண், பெற்றோரின் துணையுடன் நேற்று துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தியை துறையூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். துறையூர் அருகே இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளகவி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 13-ந்தேதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டதால் கடந்த 8 நாட்களாக தடை தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரை, சுருளி அருவியில் நீராடிச் செல்வார்கள். அவர்களும் அதிக அளவில் வந்ததால் கும்பக்கரை அருவியில் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது. 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4633 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது. 1808 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 43 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும் திறப்பும் 31.29 கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணை நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் மட்டும் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது.
    • நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையும், புதுடில்லி பாரதீய மொழிகள் குழுமமும் இணைந்து அகத்திய மாமுனிவர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய மாநாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி பேசுகையில், மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது. அகத்திய மாமுனிவர் மறைந்துவிடவில்லை இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். நமது அன்னை பூமியான பாரதநாடு உள்ளவரை அகத்திய மாமுனிவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என பேசினார். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலா மாநாட்டைத் தொடங்கி வைத்துக் கருத்தரங்கு மலரை வெளியிட்டுப் பேசினார். கர்நாடக மாநிலம் மைசூரின் மூத்த வக்கீலும் அகத்திய மரபின் ஆய்வாளருமாகிய ஷாமா பட் மாநாட்டின் மைய உரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது. அவர் பாரத தேசம் முழுமைக்கும் உரியவராகத் திகழ்கின்றார். அகத்தியரின் படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள் இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும் தொன்மைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. வடமொழிக்கும் தமிழுக்குமான இணைப்புப் பாலமாக அகத்தியர் திகழ்ந்து வருகின்றார். இந்த இரு மொழிகளும் உலகின் பழமையான மற்றும் சிறப்பான மொழிக்குடும்பங்களாக, செம்மொழிகளாகத் திகழ்கின்றன.

    பாரத தேசத்திற்கு அகத்தியர் மாமுனிவர்தான் முதுகெழும்பாகத் திகழ்கின்றார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும் அவரது மருத்துவ மூலிகைகளின் நூல்கள் விளங்குகின்றன.

    மருத்துவத்துறையில் அவரின் பங்களிப்புகள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. அகத்தியர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். துளு என்னுடைய தாய்மொழி. தமிழில் நீங்கள் கூறும் மருந்து என்னும் சொல் துளு மொழியிலும் மருந்து என்றே வழங்கப்படுகின்றது என்றார்.

    மாநாட்டில் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம், பழனி ஐவர்மலை அனாதி நிறுவனத்தின் நிறுவனர் ஆதி நாராயண சுவாமிகள், தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர்கள் முத்தையா, சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரம்பரிய மருத்துவர்கள் அகத்தியர் மருத்துவ குறிப்பு சம்பந்தமான கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பல்கலைக்கழக வேளாண்மை துறை சார்பில் சித்த மருத்துவ மூலிகைகள், காணிக்காரப் பழங்குடிகளின் மருந்துப் பொருட்கள், மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாணவர்களுக்கு அகத்தியர் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    • 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் முதல் பிரிவின் 3-வது அலகில் கடந்த 19-ந்தேதி மாலை பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 42 மீட்டர் உயரத்தில் 3-வது தளத்தில் இருந்த 165 டன் எடைகொண்ட பங்கர் டாப் 500 டன் நிலக்கரியுடன் விழுந்ததால் 2-ம் தளத்திலும், முதல் தளத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

    பங்கர் டாப் வழுவிழந்து விழுந்ததா?அல்லது சதி வேலை காரணமாக விழுந்ததா? என்பது இதுவரை கண்டுபிடிக்க ப்படவில்லை. இந்த பகுதியில் எப்போதும் தொழிலாளர்களும், கண்காணிப்பாளர்களும் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். விபத்து நடந்தபோது மாலையில் தேநீருக்கான நேரம் என்பதால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பணி யில் இருந்தனர். இதனால் தொழிலாளர்கள் உயிரிழ ப்பும், காயமும் குறைந்து ள்ளது.

    இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளன. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் அலகில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் '2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்ததன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்த பிறகு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மீண்டும் 2-வது பிரிவில் நேற்று காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 அனல் மின் நிலையங்களின் மொத்த மின்உற்பத்தி திறன் 1,440 மெகாவாட் என்ற நிலையில், தற்போது 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 87 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • செயற்குழு கூட்டத்தில் சுமார் 1000 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய விவகாரம் தொடர்பாகவும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    இது தவிர மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்ட பலரும் பேசினார்கள். கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    செயற்குழு கூட்டத்தில் சுமார் 1000 பேர்கள் வரை கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    • வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி ரெத்னம். இவர்களுக்கு ஜெனிபர் (வயது 14) என்ற மகளும், சிவராஜ்(12) என்ற மகளும் உள்ளனர்.

    ஜேக்கப் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரெத்னம் திசையன்விளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிவராஜ் சண்முகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெனிபரும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு ரெத்னம் வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் பள்ளி முடிந்து சிவராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் புத்தகப்பையை வைத்து விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

    அவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.

    தொடர்ந்து திசையன்விளை போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள நந்தன் குளத்தில் சிவராஜின் சைக்கிளும், அதன்மீது அவரது சட்டையும் இருந்தது.

    இதனால் அவர் குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிவராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க நிர்வாக கூட்டம் நடந்தது. இதில் நானும், செயலாளர் செல்லப்பன், பொருளாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர், அமைப்பு செயலாளர் சுரேஷ் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

    விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சேவிங்-49, கட்டிங் -99 என்று வெளியே விளம்பரம் வைத்து சாதாரண சக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செய்ய வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




    • மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    • சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதனால் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானநிலையில், அதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி (வயது 63) என்று தெரியவந்தது. அவர் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியிலேயே வசித்து வந்தார். ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    மூதாட்டி பிணமாக கிடந்த போது அதே ரெயில் நிலையத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி முத்து என்பவர் சந்தேகப்படும்படி அங்கு இருந்துள்ளார். அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டியை மாற்றுத்திறனாளி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இந்த தகவலை அறிந்த மூதாட்டியின் உறவினர்கள் திடீரென்று அந்த மாற்றுத்திறனாளியை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதற்கிடையே மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடீர் திருப்பமாக மூதாட்டி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி முத்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியில் வசித்து வருகிறேன். அதே ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நானும், மூதாட்டி லட்சுமியும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் 2 முறை பாலியல் உறவு கொண்டோம்.

    இந்த நிலையில் மீண்டும் அவருடன் உறவு கொள்ளலாம் என்று சென்றேன். அப்போது மூதாட்டி லட்சுமி அசைவின்றி காணப்பட்டார். அவரை தொட்டுப் பார்த்த போது இறந்து கிடந்தார். அவரை நான் கொலை செய்து விட்டதாக கருதி அவரது உறவினர்கள் என்னை தாக்கினார்கள்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டி லட்சுமி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    • சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஏரிகள் நிரம்பியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டியது.

    தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு நேரம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஓடியது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    • கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
    • கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக அத்திகுளம் அணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிருதுமால் ஆற்றின் வழியாக உலக்குடி மற்றும் மானூர் கண்மாய்களை சென்றடைகிறது.

    உலக்குடி காலனி குடியிருப்பை ஒட்டியே கிருதுமால் ஆற்று குறுகிய கால்வாய் செல்வதாலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர் இல்லாததாலும், கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் காலனி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களின் பலரது வீடுகளை கிருதுமால் ஆற்று தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் வீட்டிற்குள் குடியிருக்க முடியாமல் வெளியேறி உள்ளனர்.

    எனவே உலக்குடி-மானூர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள உலக்குடி காலனி குடியிருப்பு பகுதியில் கிருதுமால் ஆற்று கால்வாயில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் காலனி குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய நிவாரணமாக இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
    • முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

    அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.

    சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×