என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக நடமாடி உள்ளார்.
- ஞானசேகரன் ஏராளமான வீடியோக்களை அழித்து இருப்பது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் என்ஜினீயரிங் மாணவி தனது காதலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த மாணவியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்த மாணவியை மிரட்டிய மர்ம நபர், "நான் கூப்பிடும் போது எல்லாம் வரவேண்டும்" என்று மிரட்டல் விடுத்தார். இல்லையெனில் செல்போனில் பதிவாகி இருக்கும் காட்சிகளை உன் தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார்.
ஆனால் அந்த மாணவி இந்த மிரட்டலுக்கு பயப்படவில்லை. தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். தனக்கு நேர்ந்த விவரங்கள் அனைத்தையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே மாணவியிடம் அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இது தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கைது செய்தனர். விசாரணை நடக்கும் போது அவர் வழுக்கி விழுந்ததால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்று முதலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை தி.மு.க. தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில் ஞானசேகரன் விசாரணைக்கு பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவர் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோட்டூபுரம் போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது "சார்" என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரியவந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தவிர ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக நடமாடி உள்ளார்.
இதனால் மேலும் சில மாணவிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதை உறுதிப்படுத்துவதற்கு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது ஞானசேகரன் ஏராளமான வீடியோக்களை அழித்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் என்ன இடம்பெற்றுள்ளது என்று ஆய்வு செய்தனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது.
அந்த செல்போனில் ஞானசேகரன் வேறு சில பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் சில வீடியோக்களில் பெண்கள், மாணவிகள் போல இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சில வீடியோக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில வீடியோ காட்சிகளில் திருநங்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவுகள் விசாரணை நடத்தும் போலீசாரை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஞானசேகரன் செல்போனில் இருக்கும் வீடியோ காட்சிகள் அவரால் படம் பிடிக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. சில காட்சிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எடுக்கப்பட்டது போல இருக்கிறது.
எனவே மேலும் சில மாணவிகளை ஞானசேகரன் படம் பிடித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாரா? என்று தீர்வு காண முடியாத சிக்கல் உருவாகி இருக்கிறது. இதுபற்றி போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஞானசேகரனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் யார்-யார் என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து உள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து போலீசார் கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.
அதன்படி ஞானசேகரனின் 3 மனைவிகளிடமும் நேற்றும், இன்றும் தீவிர விசாரணை நடந்தது. அவர்களது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் ஞானசேகரனின் நடத்தைகள், குண நலன்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஞானசேகரனின் மற்ற தொடர்புகளும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஞானசேகரனுக்கு ரகசிய தோழி ஒருவர் இருப்பது தெரிய வந்தது. அவரையும் தனிப்படை போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஞானசேகரனின் செல்போனில் ஏராளமான தனித்தனி போல்டர்கள் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த ரகசிய போல்டர்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுளள் அறிக்கையில்,
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31-12-2024 மற்றும் 01-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்க்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதான ஞானசேகரன் என்பவர், திமுகவை சார்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்துவதாகக் கூறியிருந்தார்.
அதன்படி, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் அண்ணாமலை ஈடுபட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
மணிப்பூர் பிரச்சனைக்கு ஏன் அமைதியாக இருந்தீர்கள்? கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்? கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டபோது, சில தலைவர்கள் ஏன் ரத யாத்திரையை ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள்? தடுப்பூசி கொள்கை ஏன் பேரழிவை ஏற்படுத்தியது? என கேள்வி கேட்டுள்ளார்.
- காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. இந்த வேன் துவரங்குறிச்சி முக்கன்பாலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பேருந்தும் வேனும் மோதிக்கொண்டன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சற்று தொலைவில் உள்ள வனத்துறை அலுவலகம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.
கடைசியாக வனத்துறை அலுவலகம் அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு டிங்கரிங் பவுடர் ஏற்றி சென்ற லாரி நின்றது. இந்த வேளையில் அந்த வழியாக திருச்சியை நோக்கி காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது.
லாரியை டிரைவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீர் அகமது (38) என்பவர் ஓட்டினார். அருகில் கிளீனர் அப்துல் சித்திக்(45) அமர்ந்திருந்தார். அதிகாலை வேளை என்பதால் முன்னால் லாரி நின்றுகொண்டிருந்ததை டிரைவர் ஜமீர் அகமது கவனிக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக முன்னால் நின்ற லாரி மீது காலி சிலிண்டர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜமீர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் அப்துல் சித்திக் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ஜமீர் அகமது உடலையும், காயம் அடைந்த அப்துல் சித்திக்கையும் கடுமையாக போராடி மீட்டனர். பலத்த காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து பலியான ஜமீர் அகமது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவர்.
- வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை விடும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனைக் காண விடுமுறை தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவர்.
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் செவ்வாய்கிழமை பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை விடும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவி வன்கொடுமை வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தானாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக்கொண்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவை சென்னை ஐகோர்ட் அமைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தானாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக்கொண்டது.
அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
- எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது,
* மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.
* ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என போதிப்பதைவிட அவரை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
* பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
* குற்றம் நடைபெற்றால் பெண்தான் குற்றம்சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும்.
* பெண்கள் மீது குற்றம்சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகி விடும்.
* பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
* தனிப்பட்ட முறையில் யாருடனும் பேசுவதில் தவறு இல்லை. அது பெண்களுக்கான உரிமை, யாரும் தலையிட முடியாது.
* ஆண் என்பதற்காக பெண்களை தொட உரிமை இல்லை.
* Victim Blaming and Victim Shaming கூடாது.
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* மாணவி தனது படிப்பை தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்புக்கான செலவை இனி அவரிடம் வசூலிக்கக்கூடாது. மாணவி படிப்பு செலவுகளை ஏற்க வேண்டும்.
* எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
* காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து விசாரணையை மாற்ற வேண்டும். விசாரணையை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது.
* காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.
- முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாகாலயாசர் (வயது45). இவரது மனைவி ருக்மணி பிரியா(40). மகள் ஜலந்தரி (17) மகன் ஆகாஷ்குமார் (15) ஆகியோர் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணமாக வந்தனர்.
அவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. பண்ணை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் சென்று பார்த்த போது அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டுக்குள் 4 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
- மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உள் விசாரணை குழுவிடம் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உள் விசாரணை குழுவிடம் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
- டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் கரிகாலன் (வயது 42). கூலி தொழிலாளி.
இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார்.
இந்நிலையில் கரிகாலன் தனது கையில் உள்ள ஊசி செலுத்தும் வென்ப்ளானை கழட்டி வீசி உள்ளார். அப்போது ஊசி செலுத்த சென்ற பயிற்சி பெண் டாக்டர், இது பற்றி கேட்டார். அப்போது கரிகாலன் திடீரென பயிற்சி டாக்டரை தாக்கினார்.
இது குறித்து டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர். இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
- அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.
விசாரணையின்போது, மாணவி தொடர்பான எப்.ஐ.ஆரை பொதுவெளியில் வெளியிட்டது மீடியாதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில்,
* ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
* ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன, ஊடகங்கள் எதிரிகள் அல்ல.
* பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.
* அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
- குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
- பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலகுப்பம் மலையில் இருந்து மழை நீர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
விவசாய நிலங்களில் இருந்த மழை நீர் வடிந்து இன்று காலை ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.
மழை நீர் வழிந்து செல்ல வழி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
ஏற்கனவே கடந்து 2 நாட்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் வரிசையாக நின்றன.
பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






