என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயின் அருவியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் குற்றாலம் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது என அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பிறப்பையொட்டி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தேவாலயங்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
- ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
மதுரை:
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த காதலர்களான காமாட்சி மற்றும் தர்னிகா புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மன் கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.
4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதலிக்கு காதலன் மாங்கல்யம் கயிறை கட்டியபோது கூடியிருந்த நண்பர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
உலகமெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படக்கூடிய நாளில் எங்களுடைய காதல் திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்றைய நாள் போலவே என்றும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும், மீனாட்சி அம்மனின் தரிசனத்தோடு எங்களுக்கு காதல் திருமணம் புத்தாண்டு நாளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு மீனாட்சி அம்மனின் ஆசிர்வாதத்தோடும் எங்கள் திருமணம் நடந்துள்ளது எனவும் புதுமண தம்பதியினர் தெரிவித்தனர்.
- கடந்தமுறை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமையின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது.
- தன்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணான எடப்பாடி பழனிசாமியின் சட்டவிரோத நடவடிக்கை.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 6.12.2021-ல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதன்மை உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுத்ததே கட்சி அடிப்படை விதியின்படி சட்டப்பூர்வமானது.
ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.
மேலும், கடந்தமுறை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமையின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது, எனவே அதனை ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் செல்லாது என அறிவிக்க கட்சியின் அடிப்படை சட்டவிதி அனுமதிக்காது.
அதேபோல கட்சியின் அடிப்படை சட்ட விதியில் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை முன்கூட்டியே நீக்கம் செய்ய எந்த வழிவகையும் இல்லை.
அதேபோல கடந்த 6.12.2021ல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்ட தலைமைக்கான அந்த தேர்தலை எவரும் இதுவரை எதிர்க்கவில்லை. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் எதிர்க்கவில்லை.
தன்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணான எடப்பாடி பழனிசாமியின் சட்டவிரோத நடவடிக்கை ஆகும்.
ஏனெனில் ஒருவரை நீக்குவது என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் ஆகும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொதுக்குழு கூடி கட்சியைவிட்டு விலக்க அதிகாரமோ, சட்ட விதியோ இல்லை.
பொதுக்குழு என்பது கட்சியின் கொள்கை மற்றும் நிகழ்வுகளை வரையறுப்பதற்கானது மட்டுமே.
மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது ஆகும்.
மேலும் தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு சட்டவிரோதமாக செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது.
எனவே தற்போதைய அ.தி.மு.க. கட்சி மற்றும் இ.பி.எஸ். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வசம் இரட்டை இலை சின்னத்தையும் , கட்சியையும் ஒப்படைக்க வேண்டும். எங்கள் தரப்பையே அ.தி.மு.க. என்று அங்கீகரிக்க வேண்டும்.
மேலும், அ.தி.மு.க. தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் அவர் கூறியுள்ளார்.
- அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்.
- ருசிகரமான அந்த கணிப்பு உங்களுக்காக
இன்று மலர்ந்துள்ள 2025-ம் ஆண்டு அதிக மகிழ்ச்சியும், இன்பமும் தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர் பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவர்களது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஜோதிட ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ருசிகரமான அந்த கணிப்பு வருமாறு:-

பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு குருபகவான் 7-வது வீட்டில் இருக்கிறார். இதனால் அவர் அனைத்து துறைகளிலும் எடுக்கும் திட்டங்களும், முடிவுகளும் வெற்றிகளுடன் மேம்பாட்டை பெறும். மே மாதம் 29-ந்தேதி வரை அவருக்கு செவ்வாய், சனி தசாபுத்தி இருப்பதால் திடீர் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
என்றாலும் வருகிற மே மாதம் முதல் அவரது ஜாதகத்தில் புதன் திசை மிகவும் அனுகூலமாக இருக்கிறது. இது அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக ஆதரவை பெற்று தந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
சனிப்பெயர்ச்சி அவருக்கு சிறப்பாக இருப்பதால் நாட்டின் நிதி மேம்பாட்டிலும் சர்வதேச அளவில் அவர் எடுக்கும் முயற்சிகளிலும் அபரிமிதமான வெற்றிகளை கொடுக்கும்.

அமித்ஷா
மத்திய மந்திரி அமித்ஷா ஜாதகத்தில் சனி 12-வது இடத்துக்கு செல்கிறார். அவரது அதிரடி நடவடிக்கை கள் நாட்டுக்கு நலன் பயப்பதாக இருக்கும். ஆனால் குரு பகவான் 3-வது வீட்டில் இருப்பதால் அவருக்கு ஆதரவாளர்கள் மூலம் திடீர் நெருக்கடியும், கோபமும் ஏற்படலாம்.
சனியும், குரு பகவானும் சரியான நிலையில் இல்லை. எனவே உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ராகுல்காந்தி
ராகுல் ஜாதகத்தில் சனி 4-வது இடத்தில் இருக்கிறார். ராகு பகவான் 9-வது வீட்டில் அமர்ந்துள்ளார். அதோடு தற்போது அவருக்கு ராகு திசையும் நடக்கிறது. இதனால் அவருக்கு எதிர்பாராத சவால்கள் வரக்கூடும்.
மே 14-ந்தேதிக்கு பிறகு அவருக்கு சில கிரக மாற் றங்கள் ஏற்படுகிறது. இத னால் தோழமை கட்சிகளின் ஆதரவும், நட்பும் மேம்படும். ஆனால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரது கிரக மாற்றங்கள் இருக்கின்றன.

பிரியங்கா
பிரியங்காவின் ஜாத கத்தில் வெள்ளி திசை நடக்கிறது. இதனால் அவரது முயற்சிகளில் திருப்தியும், வெற்றியும் உண்டாகும். மே 14-ந்தேதிக்கு பிறகு அவ ருக்கு அரசியலில் தனிப்பட்ட முறையில் பல்வேறு சவால் கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் மிகவும் சாதகமான பலன்கள் பெறும். குறிப்பாக இந்த காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு மேலும் நன்மைகள் தருவதாக அமையும்.
என்றாலும் சனி பகவான் 8-வது இடம் மீன ராசிக்கு செல்வதால் உணவு வகைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அவரது தசாபுத்திகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மறு மலர்ச்சி உண்டாக்கும் வகையில் அமையும்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஜாத கத்தில் தற்போது கிரக அமைப்புகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மேற்கொள்ளப் போகும் பயணங்களுக்கு மிகப்பெரிய வெற்றியும் சாதனைகளும் காத்து இருக்கிறது.
சனி திசை உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு உரிய வெற்றிகளை தரும். சுக்கிர பகவானின் அமைப்பும் அவருக்கு மிகவும் அமோகமாக இருக்கிறது. இது அவருக்கு அரசியலில் கூடுதல் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும்.
குரு பகவான் அடுத்து மிதுன ராசிக்கு செல்ல இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் அனைத்து துறைகளிலும் நன்மையையும், திருப்தியையும் கொடுக்கும்.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஜாதகப்படி 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சவால்களையும், சாதனைகளையும் சம அளவில் பெற்றுத் தருவதாக இருக்கும்.
சனி பகவான் 8-வது வீட்டுக்கு செல்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது போல உள் கட்சி விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
குரு பகவான் 4-வது வீட்டுக்கு செல்லும் போது பல புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குறிப்பாக அவரது தலைமையிலான அ.தி.மு.க.வில் பல புதிய அம்சங்களுடன் ஒற்றுமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சனி பகவான் மீன ராசிக்கு செல்லும்போது அரசியலில் அவர் எடுக்கும் முடிவுகள் ஆதாயத்தை கொடுக்கும். என்றாலும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜாதகப்படி சனி பகவான் 8-வது வீட்டில் இருக்கிறது. இது அவரது அரசியல் பயணத்தை நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.
குரு பகவான் 12-வது வீட்டுக்கு மிதுன ராசிக்கு செல்வதால் விஜய் தனது அரசியல் பயணத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இந்த கால கட்டத்தில் பிரசாரத்தை தொடங்கலாம். விஜய் ஜாதகப்படி சந்திரனின் அமைப்பு மிக மிக சாதகமாக இருக்கிறது. இது அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியை 2025-ல் மிகவும் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜாதகப்படி குரு பகவான் 11-வது வீட்டில் இருக்கிறார். சனி பகவான் 9-வது வீட்டுக்கு செல்கிறார். இது அவருக்கு அரசியலில் அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.
சுக்கிர திசை இருப்பதாலும் புதன் தசை அனுகூலமாக இருப்பதாலும் கட்சியை அவர் கட்டுப்கோப்புடன் வைத்து இருப்பார். சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இந்த கால கட்டங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன.

கனிமொழி
கனிமொழி எம்.பி.க்கு ஜென்ம சனி கால கட்டம் இது. மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது ஜாதக அமைப்பில் மாற்றம் ஏற்படும். அது அவரது கட்சி பணிகளை மேன்மைப் படுத்தும்.
குரு பகவானின் மாற்றம் வரும்போது அவருக்கு அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சசிகலா
சசிகலா ஜாதகப்படி சனி 12-வது இடத்திலும், குரு பகவான் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். இது அவ ருக்கு தொடர்ந்து நெருக்கடி களையும், சவால்களையும் கொடுத்து கொண்டே இருக் கும். இதனால் இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குரு பகவான் 4-வது இடத்துக்கு செல்லும் போது அவருக்கு சாதகமான சூழ்நிலை அமையும். அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கலாம்.
- கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ம் ஆண்டு மலர்ந்தது. இந்தப் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. ஆனால் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இதனால் ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது. மேக மூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்திற்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
- தமிழக அணிகள் இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
சென்னை:
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பள்ளியில் 30-வது தேசிய சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4 நாட்களாக லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய 2 பிரிவிலும் தமிழக அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
மகளிர் இறுதிப் போட்டி யில் லக்சனா சாய் எலமஞ்சி தலைமையிலான தமிழக அணி 17-14 என்ற கணக்கில் அசாமை வீழ்த்தி முதலிடத்தை பிடித் தது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட் டார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்தது.
ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கேரள அணிகள் மோதின. 29-26 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றது. தெலுங்கானா 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிகளுக்கு ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனி ரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார்.
இந்திய நெட்பால் சம்மேளனத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், செயலாளர் எலமஞ்சி பிரதீப், பொருளாளர் சவுமியா, இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் பி.செல்வராசு, ஆர்.எம்.கே. பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நேற்று முன்தினம் காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
- அன்று பிற்கலில் கவனர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதனிடையே, நேற்று முன்தினம் காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அன்று பிற்கலில் கவனர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்து இருந்தார்.
கட்சி தொடங்கியது முதல் அறிக்கை மூலமே அரசியலில் ஈடுபட்ட வந்த விஜய், முதன் முதலாக கடந்த திங்கள் கிழமை அன்று ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது அவரின் அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இந்த நிலையில், கவர்னரை சந்திக்க சென்ற த.வெ.க. தலைவர் விஜயுடன் அலுவலர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கவர்னரை சந்தித்த பின் விஜயுடன் புகைப்படம் எடுக்க அலுவலர்கள் ஆர்வம் காட்டியதை அடுத்து மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அவர்களுடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய்.
- சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த 26-ந்தேதி இரவு 7 மணிக்கு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பால் சங்கத்திற்கு பால் விற்பனை செய்வதற்காக சென்றவர் கொடியவர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்மலா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், குற்றவாளிகள் யார் என்பது இதுவரை அடையாளம் கூட காணப்படவில்லை.
தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், முறையே 4, 3 வயது கொண்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களில் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
- நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.
இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.
அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வீட்டில் புகுந்தது.
- இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் கோவிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.
நெய்குப்பையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பஸ் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் திடீரென புகுந்தது. இதில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டு க்குள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி ( 40) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுற்றுலா பஸ் வீட்டின் சுவரில் மோதுவதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.
- கனவுகள் நனவாகும் ஆண்டாக, எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக அமையட்டும்.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்முறை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் நடமாட்டம் ஆகியவை ஒழிக்கப்பட்டு, அமைதி, வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டைச் அழைத்துச் சென்று, தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான், அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.
வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கலந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருரும் ஆண்டாக, தடைகளைத் தகர்ந்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக, எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
- அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல்:
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் பழனி கோவிலுக்கு வருகை தந்தனர்.
இதனால் பழனி படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். மலைக்கோவிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதையில் ராணி மங்கம்மாள் மண்டபம் அருகே உள்ள வழியில் இறங்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.
பழனி மலைக்கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு அதனை பக்தர்கள் பாதுகாப்பு அறையில் வைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி மலைக்கோவிலில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது.
மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதல் கடும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சொர்ணா அபிஷேகமும் நடைபெறும். அதன்படி இன்று காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காகவே அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதனை பெற்றுச் சென்றனர்.






