என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல.
- ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.
சென்னை:
அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல. அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என கூறியுள்ளார்.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்து, நேற்று முன்தினம் குறைந்து, நேற்று மீண்டும் உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 520-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.93 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 176 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760
24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-11-2025- ஒரு கிராம் ரூ.174
24-11-2025- ஒரு கிராம் ரூ.171
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
21-11-2025- ஒரு கிராம் ரூ.169
- மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
- இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
* சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.
* அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
* சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த மாதம் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
- 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்ட்ரல்) இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66009), திருவலங்காடு-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
- இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கோவை:
கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
புதிதாக முதலீடு செய்பவர்களை வரவேற்கிறேன். மீண்டும் முதலீடு செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணை நிற்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.
மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம் என
தெரிவித்தார்.
- 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
- சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவையில் இன்று 3வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
- இதில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கோவை:
தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.
தொழில் நகரான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதுதவிர தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2021 நவம்பர் 23-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இன்று கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) எனும் 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.43 ஆயிரத்து 844 கோடி முதலீட்டில் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன்மூலம் 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் கோவை மண்டலம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்றும், தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
- தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
- பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.
சென்னை:
கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?
எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.
தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.
- அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
- தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.
- வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
அவினாசி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.






