என் மலர்
புதுச்சேரி
- ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாடு நடத்த முடிவு.
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
அதனையொட்டி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான இந்தியாவின் கிளை நிர்வாகிகள் புதுச்சேரி சட்ட சபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னரின் செயலாளர் மணிகண்டன், கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுச்சேரியில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
- விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.
- 5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.
புதுச்சேரி:
நேபாள அரசு அங்குள்ள சட்டசபையைக்காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது.
நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் இன்று (சனிக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கு தங்குகின்றனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.
3-ந் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அங்கு சட்டசபையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.
4-ந் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான்தர்பார், சுயம்புநாதர் கோவிலை பார்வையிடுகின்றனர்.
5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.
7-ந் தேதி காத்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்புகின்றனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் நேபாளம் செல்வார்கள் என கூறப்படுகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
- த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.
புதுச்சேரி:
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.
இதன் மூலம் த.வெ.க. ஆண்டு விழாவில் முதலமைச்சர ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
- பட்ஜெட்டில் வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
- கூட்டத்தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் கடந்த 12-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024-25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட் ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
மார்ச் மாதம் 2-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாக உள்ளது.
2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளதால் அப் போது முழு பட்ஜெட் தாக் கல் செய்ய முடியாது. எனவே தற்போது மார்ச் மாதம் கூட்டத் தொடரில் முழுமையான பட்ஜெட்டை நிதிதுறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த முழு பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட் தயாரிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
எனவே பட்ஜெட்டில் ஏராளமான வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கூட்டத் தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பார்.
சட்டசபை நடவடிக்கைகளை காகித பயன்பாடு இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
- காக்கிநாடா, கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
புதுச்சேரி:
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 27, 28-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுச்சேரிக்கு இயக்கப்படும் சில ரெயில்கள் தற்காலிகமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17655), கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17653) ஆகிய ரெயில்கள் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் ரெயில் (161II) 28-ந் தேதி அன்று திருப்பதியில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய மெமு ரெயில் அதற்கு பதிலாக மாலை 5.07 மணிக்கு விக்கிரவாண்டியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
28-ந் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17654) அதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். புதுச்சேரி -காக்கிநாடா (17656) எக்ஸ்பிரஸ் ரெயிலும் அன்று மாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும்.
மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
- தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.
நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழ கத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 15 ஆண்டில் 2 முறை காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையத்தை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுவை அமைச்சர்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை அலுவலக டீ, காபி மற்றும் பூங்கொத்து வாங்கிய செலவுகள், கார் பயன்பாடு, வெளிநாட்டு பயணம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அமைச்சர்களின் செலவு தொடர்பாக அமைச்சரவை அலுவலக பொதுதகவல் அதிகாரியான அமுதன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள். அமைச்சர்களின் அலுவலகத்தில் தலா 14 பேர் பணிபுரிகிறார்கள். உள்துறை அமைச்சர் அலுவலக காபி, டீ செலவாக ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 635-ம், பொதுப் பணித்துறை அமைச்சருக்கு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 421-ம், வேளாண்துறை அமைச்சருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயி ரத்து 320-ம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 39-ம் செலவிடப்பட்டுள்ளது.
பூங்கொத்து வாங்கிய வகையில் உள்துறை அமைச்சருக்கு ரூ.22 லட்சத்து 31 ஆயிரமும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்து 955-ம், முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 700-ம், இந்நாள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு ரூ.1 லட்சத்து 400-ம் செலவிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார். அமைச்சர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் ஏதும் அரசு பதிவேடுகளில் கிடையாது. முதலமைச்சர் ரங்கசாமி 3 முறை மட்டுமே அரசு பயணமாக டெல்லி சென்று வந்துள்ளார். ஆனால் வெளிநாடு பயணம் ஏதும் செல்லவில்லை.
அமைச்சர்கள் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை எரிபொருள் தேவைக்கு செலவிட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
- பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.
- 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது.
இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செந்தமிழ் என்ற மீனவர் காலில் பயங்கர அடிபட்டு காலை எடுக்கும் நிலையிலும், மணிகண்டன் என்ற மீனவர் கண் பறிபோகும் நிலையிலும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களுக்கு மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்று 8-வது நாளாக, மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
- பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
- அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும், ஏம்பலம் செல்வம் சபாநாயகராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
இதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டுள்ளனர். காவல் துறை மெத்தனமாகவோ, அலட்சியமாகவோ இல்லை.
பாலியல் பாதிப்பு தொடர்பாக குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் மூலம்தான் தீர்வு காணமுடியும். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டால் நீதி மன்றமே முடிவு எடுக்கும்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அருகில் உள்ள பள்ளியில் செய்முறை தேர்வு செய்ய அனுமதி தந்துள்ளது.
சி.பி.ஐ. விசாரணை தேவையா? என்ற சூழலை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். குழந்தைகள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியிலும் பல குற்றங்கள் நடந்துள்ளன. என்னையும், சபாநாயகர், முதலமைச்சரையும் சம்பந்தப்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் சொல்கிறார்.
முதலமைச்சராக நாராயணசாமி இருந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான 413 குற்றங்களும், போக்சோ வழக்குகள் 366-ம், பாலியல் பலாத் காரம் 47, கொலை 174, செயின் பறிப்பு 222-ம் நடந்தது.
அவர் ஆட்சியில் எதுவும் நடக்காதது போல் கூறுகி றார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லி வருகிறார். காவல் துறையில் குடும்ப தலையீடு இருப்பதாக நாராயணசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் குடும்பத்தில் உள்ளோர், பெண்கள் அரசியலிலும், நிர்வாகத்திலும் எந்த காலத்திலும் தலையிட்டதில்லை, தலையிடபோவதுமில்லை.
குடும்பத்தினரை அரசியலுக்காக களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதை நாராயணசாமி நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த குற்றவாளியையும் விடுவிக்க அவரிடம் சிபாரிசு செய்ததில்லை. அவர் உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டுவது நல்லதல்ல. நேர்மையுடன் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
- நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசி மணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
- சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே வில்லியனூர் மூர்த்தி நகரில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமையொட்டி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் கலெக்டரை சந்தித்து நரிக்குறவர்கள் வந்திருப்பதை தெரிவித்தனர். கலெக்டரும் அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நரிக்குறவ குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக வரவேற்பு அறைக்கு வந்தனர்.
கலெக்டர் குலோத்துங்கன் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். அப்போது நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசிமணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வில்லியனுார் மூர்த்தி நகர் மெயின்ரோடு, கொம்பாக்கம், திருக்காஞ்சி மெயின்ரோடு பகுதியில் 70 ஆண்டுக்கும் மேலாக சாலை யோரங்களில் 80 குடும்பத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் தார்பாய் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர். எனவே அரசு குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.
- விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் விலங்குகளை பாதுகாக்கும் குரல் அற்றவர்களின் குரல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக் ராஜ்.
இவர் நோயால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை எடுத்து சென்று சிகிச்சை அளித்து பராமரிப்பு செய்து வருகிறார்.
இவரது சேவையை பற்றி அறிந்த நடிகர் பாலா தன்னை யார் என அறிமுகம் செய்து கொள்ளாமல் கடந்த 2 நாட்களாக அசோக்ராஜை போனில் அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் உங்களால் காப்பாற்றி பராமரிக்கபடும் விலங்குகளை பார்க்க வேண்டும், என கூறியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென புதுச்சேரி வந்த பாலா அசோக்ராஜை சந்தித்துள்ளார். அப்போது பாலா, விலங்குகளுக்கு நீங்கள் அளிக்கும் சேவையை கேள்வி பட்டேன். பல இன்னல்கள், வேதனைகளுடன் பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையே தியாகம் செய்து வரும் உங்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்தேன் என கூறி விலங்குகள் அவசர ஊர்தியை (ஆம்புலன்சு) அளித்து பாராட்டினார்.
ஒரு கனம் செய்வதறியாது திகைத்த அசோக்ராஜ் ஆம்புலன்ஸ் சாவியை பெற்று கொண்டார். பின்னர் அவர் கூறும்போது,
பல வருடங்களாக விலங்குகளுக்கு உதவி செய்வதாகவும், புழு பிடித்த, நாற்றம் வரும் நாய்களை 2 சக்கர வாகனத்தில் மருத்துவ உதவிக்கு எடுத்து சென்றதாகவும் புதுச்சேரியில் சிகிச்சை பெற முடியாத நாய்களை, சென்னைக்கு, வாடகை வண்டியில் எடுத்து சென்றேன்.
தற்போது நடிகர் பாலா மூலமாக தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி செல்ல மாட்டேன் என சிறுமி அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.
பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை காண்பித்தபோது சரியாக அடையாளம் காட்டியுள்ளார்.
இதைதொடர்ந்து, ஆசிரியர் மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்த சிறுமியின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என்றும் அரசியல் தலையீட்டால் காவல்துறை மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.
பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர். இதற்கிடையே, புதுச்சேரி- கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.






