என் மலர்
ஒடிசா
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
- பச்சை நிறத்தில் இருந்த பள்ளி சீருடைகள் ஏற்கனவே கலர் மாற்றப்பட்டுள்ளது.
- தற்போது பள்ளி கட்டிடங்களின் நிறங்களை மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதல் 2024 வரை முதல்வராக இருந்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.
ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில்தான் காட்சியளித்தன.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.
இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் (orange-tan) பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க இருக்கிறது.
பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.
- கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
- குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
ஒரு காலக்கட்டத்தில் உடல் உறுப்பு தானம் என்பது அரிதான நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வால் பல பேர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய தொடர்ந்து பலரும் முன் வருகின்றனர்.
இந்த நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன.
இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை ஒடிசாவின் இளைய உறுப்பு தானம் செய்பவரான 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும்.
- ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மத் கடற்கரைக்கு 12 நாட்களில் சுமார் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்துள்ளன. வரிசையாக ஆமைகள் குவிந்து கிடக்கின்றன.
இது அங்குள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜி.வி ஏ பிரசாத் கூறுகையில்:-
இந்த ஆமைகள் நிலவொளி இரவுகளில் முட்டையிட விரும்புகின்றன. அட்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளன.
ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும். அவற்றைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும் அதனால் கடற்கரையில் மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்னும் லட்சம் ஆமைகள் வரக்கூடும் என்றார்.
- சட்டம் அதை மோசடி என்று கூறவில்லை.
- ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சப் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த 2021 இல் போலீசில் புகார் அளித்தார். கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகளை அவர் தனக்கு கொடுத்ததாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவிதிர்ந்தார்.
இந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு முதல் உறவிலிருந்தனர். இருவரும் தங்கள் சம்மதத்துடன் ஒரு உறவில் நுழைந்தனர். ஆனால் இந்த உறவு திருமணமாக மாறவில்லை. அது தனிப்பட்ட குறைகளால் இருக்கலாம், ஆனால் காதல் தோல்வி ஒரு குற்றமல்ல. தனிப்பட்ட ஏமாற்றத்தை சட்டம் மோசடி என்று வரையறுக்கவில்லை என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும், நமது சட்ட அமைப்பு மற்றும் அதை வடிவமைக்கும் சமூக உணர்வு இரண்டிலும், உடல் உறவு மற்றும் திருமண பந்தங்களை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு ஒரு ஆண் தரும் திருமண உறுதிப்பாட்டுடன் பிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குகிறது. திருமணம் என்பது ஒரு இலக்கு அல்ல. உறவையும் திருமணத்தையும் கலப்பது என்பது மனித உறவுகளைப் பழமையான எதிர்பார்ப்புகளில் சிறை வைப்பதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
- இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
- பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.
அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது.
- முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இதனிடையே 2025 ஐபிஎல் கோப்பை ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் முன்பு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் கோப்பைக்கு கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.
- ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
- ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன்.
கட்டாக்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார். விருது பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீஅந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56-வது இடத்தில் இடம் பெற்றது. ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் தனது பெயரில் உள்ள ஒருவர் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றதாக கூறி ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அதில் அவர், ''ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன். இதற்காக 2023-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்த விருது தவறுதலாக பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இலக்கிய பங்களிப்புகள் எதுவும் இல்லை. விருது பெற்றவர் எந்த புத்தகமும் எழுதவில்லை. எனது பெயரில் உள்ளவர் ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றார்'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஒடிசா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, "அரசாங்கத்தின் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது. விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
- நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இதற்காக இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலி பெண் ஒருவரை கட்டிப்பிடித்து பேசினார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்களில் ஒருசாரார் அப்பெண் கோலியின் நெருங்கிய உறவினர் என்றும் மற்றொரு சாரார் அப்பெண் "அதிர்ஷ்டசாலி" ரசிகை என்றும் கூறி வருகின்றனர்.
- இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
- அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
கட்டாக்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.
இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.
இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:
ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34
- கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை
- உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
ஒடிசாவில் பள்ளி சீருடையில் இருந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் காட்டில் உள்ள மரம் ஒன்றில் சிறுமிகளின் உடல்கள் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுப்பட்டன.
உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த எம்.வி 74 கிராமத்தைச் சேர்ந்த ஜோதி ஹல்தார் (13) மற்றும் எம்.வி 126 கிராமத்தைச் சேர்ந் மந்திரா சோடி (13) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஒரே உள்ளூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே அருகில் காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு உடல்களையும் உள்ளூர்வாசிகள் கண்டு போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளார் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.
இதற்கிடையே, ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ராகுல் காந்தி தேச விரோத கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






