என் மலர்
மகாராஷ்டிரா
- ரத்தன் டாடா உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மும்பை:
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஓர் அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும் என பதிவிட்டுள்ளார்.
- பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதி.
- ரத்தன் டாடா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு ஒன்று பகிர்ந்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
86 வயதான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டாடா, " வதந்திகளை பரப்ப வேண்டாம்" என கூறியிருந்தார்.
இது தொடர்பாக, ரத்தன் டாடா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், "எனது உடல்நிலை குறித்து தற்போது பரவி வரும் வதந்திகள் எனது கவனத்திற்கு வந்தன. மேலும் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடந்த திங்கள் அன்று தனது வயது மற்றும் அது தொடர்பான மருத்துவ காரணங்களுக்காக வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.
டாடாவின் உடல்நலம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து டாடாவின் பிரதிநிதிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
- ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் மாற்றம் இல்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் அறிவிப்பு.
- 2023-ல் இருந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் தொடர்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தி தாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது "ரெப்போ வட்டி சதவீதத்தில் மாற்றம் இல்லை. 6.5 சதவீதமாக தொடரும். நாணயக் கொள்கை கமிட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனத்திற்கான கடன் வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது.
- மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
முதல் மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை மகா விகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்யும்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) முதல் மந்திரி வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.
ஏனென்றால் மகாராஷ்டிரா மக்களைக் காப்பாற்ருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
- பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
- இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம்.
படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.
அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின
- வரது உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் பரவின
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா [86 வயது] ரத்த அழுத்தம் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தான் நலமுடன் உள்ளதாக ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலை குறித்து பரவி வரும் செய்திகளை பற்றி கேள்விப்பட்டேன். அவை அனைத்தும் வதந்திகள்தான் என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
எனது வயது மற்றும் உடல் உபாதைகள் காரணமாகவே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வந்தேன். எனவே ஊடகங்கள் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
- வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார்.
- போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பள்ளியொன்றில் 6 வகுப்பு மாணவன் [11 வயது] சட்டையை இன்- பண்ணி வரவில்லை என்று ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார். அந்த சிறுவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுவனை கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கியது பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் வீட்டுக்கு வந்த சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் கூறிவே உடனே மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் செவிப்பறை [eardrum] நிரந்தரமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நடவடிக்கை எடுக்காததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது.
- மின்சாதன விற்பனை கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது
- தீயை அணைத்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் சித்தார்த் காலனி பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பாரீஸ் குப்தா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவர் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் மின்சாதன விற்பனை கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் மின்சாதனப் பொருட்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
5.30 மணியளவில் கீழ் தளத்தில் பிடித்த தீ மாடிக்கும் பரவியது. அந்த சமயத் தில் பாரீஸ் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தீ வெப்பம் காரணமாக கண் விழித்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.
ஆனால் அதற்குள் தீ அந்த வீட்டின் நான்கு புறமும் பரவிவிட்டது. அவர்களால் தப்ப இயலவில்லை. வீட்டுக்குள்ளேயே அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மும்பையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயை அணைத்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
ஆனால் பாரீஸ் குப்தா, அவரது குடும்பத்தினர் மஞ்சு, நரேந்திரா, பிரேம், அனிதா, விதி, கீதா ஆகிய 7 பேரும் வீட்டுக்குள்ளேயே பிணமாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என்றார்.
மும்பை:
சாவர்க்கர் குறித்தும், இந்துத்துவ கொள்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
அந்த மனுவில், கடந்த 2023-ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி சாவர்க்கர் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது நண்பர்களும் முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் மகிழ்ச்சியாக உணர்ந்தோம் என எழுதியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. சாவர்க்கர் எங்கேயும் அப்படி ஒரு விஷயத்தை எழுதவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி புனே சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
- கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
- மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
மும்பை:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் சென்றார்.
போகாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் அவர் முதலில் தரிசனம் செய்தார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். 12 மணியளவில் ரூ.23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
9.4 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 20,000 கோடி மதிப்புள்ள 18-வது தவணையை வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி சுமார் ரூ.3.45 லட்சம் கோடியாகும். மேலும், சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5-வது தவணையையும் தொடங்கி வைத்தார்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி மாலை 4 மணியளவில் தானே செல்கிறார். அங்கு ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ரூ.14,120 கோடி மதிப்பிலான மும்பை மெட்ரோ ரெயில் பாதை-3ன் பி.கே.சி. முதல் ஆரே வரையிலான ஜே.வி.எல்.ஆர். பிரிவை தொடங்கி வைக்கிறார். ரூ.12,200 கோடி செலவில் தானே ஒருங்கிணைந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்
- இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் 21 வயது இளம்பெண் 3 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈவென்ட் மேனேஜ்மேண்ட் படித்துவந்த 21 வயது பெண்ணையும் அவரது ஆண் நண்பனையும் அன்றைய தினம் போப்தேவ் காட் பகுதியில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்தது.
ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு மூவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்தநாள் [நேற்று] காலை 5 மணியளவில் அப்பெண் போலீசிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மூவரில் இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் அவர்களை பார்த்தால் தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் தாயார் சடலமாக மீட்கப்பட்டார்.
- அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான சலீல் அங்கோலாவின் தாயார் மாலா அசோக் அங்கோலா (77) வசித்து வந்தார்.
இந்நிலையில், இந்தக் குடியிருப்பில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். நேற்று அவரது பணிப்பெண் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கதவைத் திறந்து அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார்.
சலீல் அங்கோலா இந்திய அணிக்காக 1989 முதல் 1997-ம் ஆண்டு வரை ஒரு டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






