என் மலர்tooltip icon

    கேரளா

    • தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
    • கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.

    இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

    விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து, தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


    • உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் குவைத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டது.
    • உடல்களை பெறுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருந்தது.

    குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் ஆவர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இதையடுத்து உயிரிழந்த 31 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் குவைத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டது. கொச்சி விமான நிலையத்திற்கு வந்ததும் தனித்தனி வாகனம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. உடல்களை பெறுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருந்தது.

    இந்த நிலையில், இந்தியர்களின் உடல்களை சுமந்து வந்த வான்படை விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தமிழர்கள் 7 பேரின் உடல்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னதாகவே கொச்சி விமான நிலையத்தில் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது.
    • கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும், விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

    இதனால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. கால்நடை மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் விலங்கு நோய்களுக்கான மாநில நிறுவனம் மற்றும் பறவை நோய் கண்டறியும் ஆய்வகத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய இந்த குழு பறவை காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

    இந்த நிலையில் மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் தான் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள் மொத்தமாக இறந்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபால் அனுப்பியதாகவும், அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முகம்மா கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்வப்னா பாபு தெரிவித்துள்ளார்.

    ஆலப்புழா மாவட்டத்தின் தென் பகுதிகளில் வாத்துகளுக்கு மட்டுமே பரவி வந்த பறவைக் காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோழி, காகங்களுக்கு பரவி இருப்பதாகவும், மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கும் இது பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜமுனா வர்கீஸ் கூறுகையில், பறவைக் காய்ச்சலின் தோற்றம் தற்போது வரை தெரியவில்லை. இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா? அல்லது பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்த பறவைகளால் வந்ததா? என்று தெரியவில்லை. இருப்பினும் இது மனிதர்களுக்கு பரவவில்லை.

    கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும், விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.

    • நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
    • சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை மந்திரி பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

    தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

    சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார்.

    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    இந்த கூட்டத்தில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    • 6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.
    • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் குவைத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.

    6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும் பலர் தீயின் கோரபிடியில் சிக்கினர்.

    இதற்கிடையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயில் கருகியும், புகையின் காரணமாக மூச்சுத்திணறி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், 30-க்கும் மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    ஆகாஷ் எஸ்.நாயர் (வயது 23), பந்தளம், உமருதீன் சமீர் (33) லூகோஸ் (48), கொல்லம், ரஞ்சித் (34), கெலு பொன்மலேரி (55), காசர்கோடு, முரளிதரன், பத்தினம்திட்டா, சாஜு வர்கீஸ் (56), கோனி, தாமஸ் உம்மன், (திருவல்லா).

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் ஜோசப், பிரவீன் மாதவ், பூனத் ரிச்சர்ட் ராய் ஆனந்த், அனில் கிரி, முஹம்மது ஷரீப், துவரிகேஷ் பட்நாயக், விஸ்வாஸ் கிருஷ்ணன், அருண்பாபு, ரேமண்ட், ஜீசஸ் லோபஸ், டென்னி பேபி கருணாகரன் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விபத்தில் பலியான கொல்லத்தைச் சேர்ந்த சமீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் திருமணம் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அவர், மீண்டும் குவைத் சென்றுள்ளார். கனரக வாகன ஓட்டுனராக பணியாற்றிய அவர் பரிதாபமாக தீயில் கருகி இறந்துள்ளார்.

    அவரது நண்பர் நஜீப் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் தனது தந்தைக்கு போன் மூலம் சமீர் இறந்த தகவலையும், தான் காயமுற்றிருப்பதையும் தெரிவித்தார்.

    சமீரின் மற்றொரு நண்பர் ஷானவாஸ் கூறுகையில், நாங்கள் 3 பேரும் ஒரே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தோம். ஒன்றாகவே வேலை பார்த்தோம். நான் வேறு இடத்தில் தங்கியிருந்தேன். தீ விபத்து பற்றி அறிந்ததும், நண்பர்களை பற்றி விசாரித்தேன். அப்போது சமீர் இறந்து விட்டார் என்பது பேரிடியாக அமைந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நஜீப்பிடம் போனில் பேசினேன். நான் இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் கூறுகையில், குவைத் தீ விபத்து சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவை கதறி அழ வைக்கும் சம்பவமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கேரளாவைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என்றார்.

    தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வாசனை குவைத் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரும் குவைத் விரைந்துள்ளார். 

    • பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள காவல் துறை பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த ருசிகர சம்பவம் குறித்து கூறியதாவது:-

    கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி என்ற இடத்திற்கு அருகே பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா உள்பட தொழில் நுட்ப வசதி இல்லாத காலம் என்பதால், சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனிடையே, கொள்ளையர்களுக்கு போலீசார் உதவுவதாக கூறி பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து எந்த துப்பும் துலங்காததால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தேன்.

    இதற்காக பய்யனூரில் ஜோதிடர் வி.கே.பி.பொதுவால் என்பவரை ரகசியமாக சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அதுவரை நடந்த விசாரணை மற்றும் தொடர் விசாரணை தோல்வி குறித்தும் விளக்கினேன். அப்போது அவர், நகைகள் கொள்ளை போன வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டு வரும்படி கூறினார்.

    அதனை பெற்று அவரிடம் கொடுத்தேன். அந்த ஜாதகத்தை படித்து பார்த்த ஜோதிடர், வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், அதே வங்கியில் வேலை பார்த்து வரும் ஊழியரின் உதவியுடன் நடந்துள்ளது என கூறினார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியில் இருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ தூரத்தில் சாலையோரம், 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றோம். அங்கு ஜோதிடர் கூறியதை போல் தென்னை மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பின்னர் அதில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வற்ற வைத்தோம்.

    இறுதியில் கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி (லாக்கர்) கிடந்தது. அதனை மீட்டு வெளியே கொண்டு வந்து திறந்து பார்த்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 100 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்திருந்தது.

    பின்னர் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் மற்றும் கொள்ளையர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த கொள்ளை வழக்கு தொடர்பான டைரி குறிப்பில், ஜோதிடம் பார்த்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக எழுதவில்லை. இவ்வாறு எழுதினால் சிரிப்பார்கள் என கருதி அந்த விவரத்தை எழுதவில்லை. ஆனால் ஜோதிடம் பார்த்து நகையை மீட்டது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

    பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

    அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

    நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

    ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 15-ந்தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளன.

    19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    • பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் இடது சாரி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த போதிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இடதுசாரி கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

    யாக்கோ படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ், இந்த தோல்வியில் இருந்து இடதுசாரிகள் பாடம் கற்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும் என்று கூறினார்.

    2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் 2021-ம் ஆண்டு மாநிலத்தில் இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது என்று கூறிய அவர், எப்போதும் வெள்ளம் மற்றும் தொற்று நோய்கள் உதவ முடியாது என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் என்று முன்னாள் பிஷப் வெளியிட்ட அறிக்கையை நான் பார்க்க நேர்ந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது என்றார். அவரது இந்த கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    பினராய் விஜயன் இது போன்ற கருத்துக்களை அவ்வப்போது கூறுவதுண்டு. கட்சி அல்லது அரசை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீசன் (காங்கிரஸ்) கூறுகையில், பினராய் விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தனது கட்சிக்குள்ளோ அல்லது வெளியேவோ எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஓரு எடுத்துக்காட்டு என்றார்.

    • பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு.
    • அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.

    ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.

    அப்போது கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அப்போது அவர் "பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்."

    "திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்," என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. மத்திய இணை அமைச்சராக தொடருவேன்.

    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றதை பெருமையாக கருதுகிறேன். கேரள மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு மோடி தலைமையில் பாடுபடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பா.ஜ.க தலைமைக்கு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
    • கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    "பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் எனினை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்."

    "திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்," என்று தெரிவித்தார்.

    கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×