என் மலர்
கேரளா
- கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர்.
- தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதல்மைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். இவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது.
- குழந்தைகள் நலக் குழுவினரும் மாணவியிடம் விசாரணை.
- ரூ1.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று தேர்வு நடந்தபோது அவரது செயல்பாட்டை கண்டு சந்தேகமடைந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச்சென்று பேசினார்.
அப்போது கூலித்தொழிலாளியான தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை, அதுபற்றி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் குழந்தைகள் நலக் குழுவினரும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப் பட்ட மாணவிக்கு ஒன்றரை வயது இருக்கும் போது அவளது தாய் இறந்து விட்டார். அதன்பிறகு மாணவியின் தந்தை வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் மாணவி தங்கியிருந்தார்.
மாணவிக்கு 5 வயதான நிலையில் 1-ம் வகுப்பு படித்தார். அப்போதில் இருந்துதான் மாணவிக்கு அவளது தந்தை பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 10 ஆண்டுகளாக மாணவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்தி ருக்கிறார்.

தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி கூறியதன் அடிப் படையில், அவளது தந்தை மீது அருவிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்துவந்தது. வழக்கில் சேர்க்கப்பட்ட 26 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது.
தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சாகும்வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஷிபு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
- மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
- நடிகைகளை தொடர்ந்து சீரியல் நடிகை பாபியல் புகார்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த நடிகை, கேரளாவை சேர்ந்த சீரியல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசில் பாலியல் புகார் கூறியிருக்கிறார்.
ஒரு சீரியலில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து, 2018-ம் ஆண்டு கனகாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சீரியல் தயாரிப்பாளர் சுதீஷ் சேகர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் ஷானு ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சுதீஷ் சேகர் மற்றும் ஷானு ஆகிய இருவரின் மீதும் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது 376 (கற்பழிப்பு) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, சீரியல் நடிகை ஒருவரும் பாலியல் புகார் கூறியிருப்பது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல்.
- வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து வருகின்றனர்.
ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

பிரபல மலையாள இயக்குனரான ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். 2009-ம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க அழைத்து பாலியல் நோக்கத்துடன் தொட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தாக இயக்குனர் ரஞ்சித் மீது அந்த நடிகை குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குனர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு ஜாமீனில் விடக்கூடிய தாகவும், அது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திருடப்பட்டது.
- பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குருவாயூரில் வசிக்கும் அஜித் என்கிற ஷாம்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் 6 மாதங்களுக்கு முன்பு இதே பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
குருவாயூர் செல்ல பேருந்து இல்லாததால், குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நின்ற இந்த பேருந்தை மதுபோதையில் குருவாயூருக்கு ஓட்டி வந்ததாக அஜித் தெரிவித்தார்.
பின்னர் பேருந்தின் உரிமையாளர் தனது முன்னாள் ஊழியரை மன்னித்துவிட்டதால், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ஓட்டுநர் அஜித்தை விடுவித்தனர்.
- 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு முன்னதாக வெளியிட்டது.
- விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.
மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.
இந்த கமிட்டி, கடந்த சில நாட்களாக கேரள திரையுலகில் வெளிவந்த பாலியல் புகார்களை அடுத்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது.
இந்நிலையில், ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் கேரள அரசு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, முன்னதாக அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், ஹேமா கமிட்டி அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
- ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
- திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சி.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்களின் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் திரையுலகம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தினமும் வெவ்வேறு நடிகர்களின் மீது நடிகைகள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லோபஸ் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

எர்ணாகுளம் செங்க மாநாடு பகுதியை சேர்ந்த அந்த நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு 'ஆபாசம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூருவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடிகர் அலென்சியர் லோபஸ் தன்னிடம் தவறாக நடந்ததாக ஹேமா கமிட்டி விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அதனடிப்படையில் நடிகர் அலென்சியர் லோபஸ் மீது செங்கமாநாடு போலீசார், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 4½ வருடங்களாக அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்?
- மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பத்மபிரியா. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் கொச்சியில் பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட சினிமா பெண்கள் கூட்டு அமைப்பை உருவாக்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
இந்த அமைப்பில் இருந்த பத்மபிரியா, ரேவதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகள் நேரில் சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்த கோரிக்கையை ஏற்று அப்போது அமைக்கப்பட்டதுதான் இந்த ஹேமா கமிட்டி ஆகும்.

இந்த நிலையில் நடிகை பத்மபிரியா ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4½ வருடங்களுக்கு மேலாக அந்த அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர்.
மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சனையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு சரக்கு மட்டுமே.
எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு 26 வயது இருக்கும்போது வயதாகி விட்டதே, நடிப்பதை நிறுத்தக் கூடாதா? என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம், தனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.
- குழந்தையை கொன்று புதைக்க ஆஷாவுக்கு அவரது ஆண் நண்பரான ரதீஷ் என்பவர் உதவியுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பள்ளிப்புரம் ஊராட்சிக்குட்டப்ட பகுதியை சேர்ந்தவர் ஆஷா(வயது35). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஆஷா மீண்டும் கர்ப்பமானார்.
ஆனால் தான் கர்ப்பமான விஷயத்தை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம், தனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தநிலையில் அவர் பிரசவத்துக்காக கடந்த மாதம் 26-ந்தேதி சேர்தலாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு 26-ந்தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து 31-ந்தேதி ஆஷா டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அவரது வீட்டுக்கு சென்றனர். பிறந்த குழந்தையை கேட்டபோது, அந்த குழந்தை அங்கு இல்லை. தனக்கு பிறந்த குழந்தையை, குழந்தை இல்லாத தம்பதிக்கு கொடுத்துவிட்டதாக ஆஷா கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் கூறியது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே அதுபற்றி அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்து கொன்று, கழிவறையில் புதைத்த அதிர்ச்சி தகவலை ஆஷா தெரிவித்தார். குழந்தையை கொன்று புதைக்க ஆஷாவுக்கு அவரது ஆண் நண்பரான ரதீஷ்(38) என்பவர் உதவியுள்ளார்.
அவரது வீட்டின் கழிவறையில் தான் ஆஷாவின் குழந்தையை புதைத்துள்ளனர். இதனையறிந்த போலீசார், ஆஷா மற்றும் அவரது ஆண் நண்பர் ரதீஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்பு கழிவறையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்ற குழந்தையை கொன்று புதைத்ததற்கான காரணம் குறித்து ஆஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
படப்படிப்பு தளம் மற்றும் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கியிருந்தபோது பல நடிகைகள் சந்தித்த பாலியல் பிரச்சினைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பல நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று நடிகர் சித்திக்கும் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நடிகை ஒருவரின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார், அவர் மீது கற்பழிப்பு (376), கொலைமிரட்டல் (506) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இதில் 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்குபாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவர், அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை என்ற போர்வையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
ஏற்கனவே ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி மனுத்தாகக்ல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேமா கமிஷனின் அறிக்கை மலையாள திரையுலகில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகைகள் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- பல பள்ளிகள் கடந்த 27-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பெய்த மழையின்போது தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்தன. அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டகை பகுதிளில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடுகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனை தொடர்ந்து பல பள்ளிகள் கடந்த 27-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவ-மாணவிகள் கல்வி தொடர்ந்தது.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலை பகுதியை சேர்ந்த 2 பள்ளிகள் மேப்பாடியில் கிராம பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் இன்று செயல்பட தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.






