என் மலர்tooltip icon

    கேரளா

    • மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.
    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மேலும் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.

    அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். அது மட்டுமின்றி புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை (17-ந்தேதி) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
    • உடனடி தரிசன வசதியை கடந்த ஆண்டைப் போல் நடைமுறைப்படுத்த அரசுக்கு இந்த அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

    நடப்பு சீசனையொட்டி உடனடி முன்பதிவு வசதி ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் அரச கும்பத்தினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடி தரிசன வசதியை கடந்த ஆண்டைப் போல் நடைமுறைப்படுத்த அரசுக்கு இந்த அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

    • திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.

    • பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
    • கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    எதிர்பாராமல் நடப்பவை விபத்துக்கள். இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கேரளாவில் கார் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக வாகனங்கள் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மற்ற வாகனங்கள், சாலையின் தடுப்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகளில் மோதுவது தினந்தோரும் எங்கேயும் நடக்கும் சம்பவங்கள் தான்.

    ஆனால், கார் ஒன்று சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவர் ஒருவர் ஓட்டிவந்த கார், சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.

     


    கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்த சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இதனால், காரில் இருந்து வெளியே வந்த மருத்துவர், உதவி கோரி கூச்சலிட்டார். காரில் மருத்துவருடன் அவரது மனைவியும் இருந்தார்.

    கிணற்றுக்குள் இருவர் கூச்சலிடுவதை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மருத்துவர் மற்றும் அவரது மனைவி எந்த வித காயமும் இன்றி உயிர்தப்பினர். 

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
    • இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழு பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம் மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    மக்களவை, சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

    இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கேரள சட்டசபையில் முதல் மந்திரி பினராயி விஜயன் சார்பில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி எம்.பி. ராஜேஷ் தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இந்தத் திட்டம் நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் வழிவகுக்கும் என தெரிவித்தார்.

    • ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
    • மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ்(வயது52). இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தது.

    ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். அதன்படி அந்த ரிசார்ட் தகுதி சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தது. தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர் மனோஜ் ரூ.1லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த ரிசார்ட்டின் மேலாளர், மனோஜை சந்தித்து பேசி ரூ.75ஆயிரம் தருவதாக கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவ அதிகாரி மனோஜ், அந்த பணத்தை தனது தனிப்பட்ட டிரைவர் ராகுல்ராஜிக்கு 'கூகுள்-பே' மூலமாக அனுப்புமாறு கூறியிருக்கிறார்.

    அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட் மேலாளர், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கூறியதன்பேரில், குறிப்பிட்ட நேரத்துக்கு மருத்துவ அதிகாரியின் டிரைவரின் செல்போன் எண்ணுக்கு 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளர் பணத்தை அனுப்பினார்.

    அப்போது மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ஷாஜூ ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் ஷின்டே, குரியன், பிலிப் சாம் உள்ளிட்டோர், அலுவலகத்துக்குள் அதிரடியாகசென்று மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களின் அலுவலகத்ததுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரி மனோஜ், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையால் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதற்கு கேரள நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.

    இதையடுத்து மருத்துவ அதிகாரி தனது அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது டிரைவரின் 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரிக்காக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது.
    • பரிசு விழுந்த நபர் விருப்பப்பட்டால் உரிய தகவலை அவரே வெளியிடலாம் என அரசு சார்பில் கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் மற்றும் பூஜா பம்பர் டிக்கெட் விற்பனை தொடக்க விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கேரள நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால் பங்கேற்று ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலை தொடங்கி வைத்தார். இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி டிஜி 434222 என்ற எண்ணுக்கு கிடைத்தது.

    பின்னர் இதுகுறித்து மந்திரி கே.என்.பாலகோபால் கூறியதாவது:-

    கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரிக்காக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500. மொத்தம் 71 லட்சத்து 43 ஆயிரத்து 8 டிக்கெட்டுகள் விற்பனையானது. இந்த வருடம் வயநாடு பேரிடர் காரணமாக டிக்கெட் விற்பனை குறைந்தது. ஓணம் பம்பர் குலுக்கல் மூலம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 670 அதிர்ஷ்டசாலிகளுக்கு ரூ.125 கோடிக்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.25 கோடி, வயநாட்டில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்பு ஓணம் பம்பரில் ரூ.25 கோடி பரிசு விழுந்த நபரின் பெயர் உடனடியாக தெரிந்ததும் அவருக்கு உறவினர்கள் மூலமாக பல்வேறு தொந்தரவு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ரூ.25 கோடி பரிசு விழுந்த நபரின் பெயரை உடனடியாக அறிவிப்பதை கைவிட்டுள்ளனர்.

    அதே சமயத்தில் பரிசு விழுந்த நபர் விருப்பப்பட்டால் உரிய தகவலை அவரே வெளியிடலாம் என அரசு சார்பில் கூறப்படுகிறது. எனினும் தற்போதைய ஓணம் பம்பர் குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிய மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    • இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கவர்னரின் நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

    அதாவது கேரள மாநிலத்திற்கு மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் விமான நிலையம் வழியாக அதிகள வில் தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவை தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    பினராயி விஜயனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரை குறிப்பிட்டு அவர் பேசியி ருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.


    பினராயி விஜயனின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அவரது பேச்சு தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் விளக்கம் அளித்தது. தேச விரோத நடவடிக்கைகள் என்ற வார்த்தை மலப்புரத்திற்கு குறிப்பாக கூறப்படவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெளிவுபடுத்தியது.

    இருந்தபோதிலும் பினராயி விஜயனின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு சில கேள்விகளையும் எழுப்பினார்.

    அதாவது தேச விரோத சக்திகளாக யார் தகுதி பெறுகிறார்கள்? இந்த நடவடிக்கைகளின் தன்மைகள் ஏன் விவரிக்கப்படவில்லை? என்பது பற்றியும் விளக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் விளக்கம் கேட்டார்.

    மேலும் இந்த விஷயங்கள் குறித்து முதல்-மந்திரிக்கு எப்போது தெரியவந்தது?, இவற்றின் பின்னணியில உள்ளவர்கள் யார்? தேச விரோத சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுமாறும் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

    இதனால் பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரியின் பேச்சு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கேரள மாநில தலைமை செயலர் சாரதா முரளீதரன், டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் ஆகியோருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் சம்மன் அனுப்பி உள்ளார்.

    அவர்கள் இருவரும் இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கவர்னரின் கேள்விகளுக்கு முதல்-மந்திரியிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்பதால் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கவர்னரின் இந்த நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
    • வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரம் காட்டி வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

    இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதிவி யேற்றுக் கொண்டார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதேபோன்று மக்களவை தொகுதி தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.

    இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.


    கேரள மாநிலத்தை பொறுத்தவரை வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. வழக்கமாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அந்த 3 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன. இதனால் அந்த தொகுதிகளுக்கு விரைவிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும் இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் வேட்பாளர்கள் தேர்விலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

    வயநாடு தொகுதியில் கடந்த 2019 மற்றும் தற்போது நடந்துமுடிந்த தேர்தல் என இரு மக்களவை தேர்தல்களிலுமே ராகுல்காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிபெறுவார் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    அவருக்கு எதிராக செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை களமிறக்குவதில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. தீவிரம் காட்டுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜாவையே போட்டியிட வைக்க அக்கட்சி விவாதித்து வருகிறது.

    பா.ஜ.க. சார்பில் சோபா சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப், பா.ஜ.க. சார்பில் டாக்டர் சரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாலக்காடு தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தங்களது கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    அந்த தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பணியை விரைவு படுத்தும் வகையில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தயாராக இருக்கின்றன.

    • கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.
    • சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதில் பாலியல் தொந்தரவு உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வெளியான பிறகு பல்வேறு நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் புகார் கூறி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், எடவேளை பாபு உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டன.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.

    இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், புகார்களின் அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து பலரும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர். இதில் நடிகர் சித்திக் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதன் விசாரணைக்கு முன்பு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.

    அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளார்.

    இதனை அவர் மின்னஞ்சல் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிவித்து உள்ளார். நாளை (திங்கட் கிழமை) சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.

    • கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.
    • சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.

    பாரம்பரிய காட்டு வழி நடைபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் தேவஸ்தான மந்திரி வாசவன், தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், போலீஸ் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் சாகிப், கூடுதல் டி.ஜி.பி.க்களான மனோஜ் அபிரகாம், ஸ்ரீஜித், தேவஸ்தான சிறப்பு செய்லாளர் அனுமா, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், தேவஸ்தான தலைவர் பிரசாந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • படப்பிடிப்பின் மோது யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது.
    • பொது மக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்டுபிடிக்க வனப்பகுதிக்குள் சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. குட்டப்புழா வனப் பகுதியை ஒட்டிய பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

    கதையின்படி 5 யானைகள் மோதுவது போன்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. புதுப்பள்ளி சாது, தடாதவிளை மணிகண்டன் உள்ளிட்ட 5 யானைகள் பயன்படுத்தப்பட்டன. புதுப்பள்ளியை சேர்ந்த வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான சாது யானை, மிகவும் அமைதியான சுபாவம் கொண்டது.

    திருச்சூர் பூரம் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் பங்கேற்றதன் மூலம் யானை சாது பிரபலமானதாகும். இந்தநிலையில் தான் அந்த யானை படப்பிடிப்பில் பங்கேற்றது. படப்பிடிப்பின் மோது யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது.

    யானைகளின் அங்கி மிங்கும் ஓடியபடி மோதிக் கொண்டதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கேமராக்கள் உள்ளிட்டவைகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் உயிர் தப்புவதற்காக சிதறி ஓடினர்.

    இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மோதலின் போது மணிகண்டன் உள்ளிட்ட மற்ற யானைகள் பாகன்களின் உத்தரவை கடைபிடிக்காமல் சாது யானையை தாக்கின. இதனால் பயந்துபோன அந்த யானை, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

    சாது யானை ஓடிய வனப்பகுதி காட்டு யானைகள் நடமாடும் பகுதியாகும். இதனால் படக்குழுவினர் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே வனப்பகுதிக்குள் ஓடிய யானையை கண்டுபிடிக்க வனத்துறையினரின் உதவி நாடப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் உள்ளிட்ட ஏராளமான வனத்துறையினர் வந்தனர். வனத்துறையினர், யானை பாகன்கள் மற்றும் பொது மக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்டுபிடிக்க வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அவர்கள் யானையை தேடும் பணியில் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் வனப்பகுதிக்குள் ஓடிய யானை சாது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வனப்பகுதிக்குள் இருந்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.

    ×