என் மலர்
கர்நாடகா
- சென்னபட்டணா தொகுதியில் நிகில் குமாரசாமி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
- நான் உற்சாகமாக செயல்படுகிறேன் என்றால் அதற்கு தொண்டர்களின் ஆதரவு காரணம் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் ராம்நகர் மாவட்டம் சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் தேவகவுடா தன் பேரன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் கர்நாடகாவில் ஒரு மோசமான ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது.
இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. இந்த ஆட்சியை அகற்றும்வரை ஒயமாட்டேன்.
மேகதாது திட்டம் அமல்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். மாநில விவசாயிகளின் நலனுக்காக மேகதாது அணை கட்டுவது தான் உண்மையான சாதனை ஆகும்.
எனக்கு 92 வயதாகிறது. 62 ஆண்டு தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை தீவிர அரசியலில் இருப்பேன்.
92 வயதான நான் 18 வயது போல் உற்சாகமாக செயல்படுகிறேன் என்றால் அதற்கு தொண்டர்களின் ஆதரவு தான் காரணமாகும் என தெரிவித்தார்.
- திடீரென கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
- விபத்து ஏற்பட்ட போது உள்ளே யாரும் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.
கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டம் பங்காரபேட்டை தாலுகாவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று மாடி கட்டடமும் முழுமையாக சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டபோது கட்டத்தில் யாரேனும் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.
விபத்து குறித்த முழு விவரம் உடனடியாக தெரியவில்லை.
- நேஹா பிஷ்வால் என்ற பெண் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் 10 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஹா பிஸ்வால் என்ற பெண் பெங்களூரு நகர சாலையில் நடந்தபடியே வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே வந்த சிறுவன் ஒருவன் அப்பெண்ணை தகாத முறையில் தொட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இன்புளுயன்சராக இருக்கும் நேஹா பிஷ்வால் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய நேஹா பிஸ்வால், "எனக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. நான் சாலையில் நடந்து கொண்டே வீடியோ பதிவு செய்து கொண்டு இருக்கும்போது எனக்கு பின்னால் இருந்து சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் என்னை கடந்து சென்றவுடன் சைக்கிளை திருப்பி கொண்டு என்னை நோக்கி வந்தான். என அருகில் வந்த சிறுவன் என்னை கிண்டலடித்தான். என்னை போலவே பேசி மிமிக்ரி செய்தான். பின்னர் தகாத முறையில் என்னை சீண்டினான்.
உடனே நான் சத்தம் போட்டதும் அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை பிடித்தனர். அவர்களிடம் நான் நடந்ததை கூற, அவர்களோ இவன் சிறுவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று அவன் மீது கருணை காட்டினார்கள். நான் எனக்கு நடந்த பாலியல் சீண்டல் தொடர்பான வீடியோவை அவர்களிடம் காட்டியபிறகு தான் அவர்கள் அதை நம்பினார்கள்.
ஆனாலும் கூட சிலர் சிறுவன் மீது இரக்கம் காட்டினார்கள். நான் அந்த சிறுவனை அடித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அங்கிருந்த சிலரும் அந்த சிறுவனை அடித்தார்கள். ஆனால் அந்த இடத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை.
அந்த சிறுவனின் மீது போலீசில் புகார் கொடுத்து அவனது எதிர்காலத்தை அழிக்க விரும்பவில்லை. ஆனால் அந்த சிறுவனை இது தொடர்பாக கண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ தொடர்பாக தானாக முன்வந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார்.
- ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உயிரை காப்பாற்றினார்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பேருந்தை ஒட்டிக்கொண்டிருந்த போதே ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார். ஓட்டுநர் இல்லாமல் பேருந்து தடுமாறுகிறது. அப்போது உடனடியாக ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துநர் பேருந்தை லாவகமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
உயிரிழந்த ஓட்டுநர் பெயர் கிரண் குமார் என்று தெரியவந்துள்ளது. துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய நடத்துநர் ஓபலேஷ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
- முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4-வது குற்றவாளியாக தேவராஜன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லோக் ஆயுக்தா போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணிக்கு ஆஜரானார். இதையொட்டி அலுவலகம் வெளியே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர்களும் அந்த பகுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தி.கா. உதேஷ் தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி சித்தராமை யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கமாக பதில் அளித்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி லோக் ஆயுக்தா அலுவலகம் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் லோக் ஆயுக்தா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையே மைசூரு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் லோக் ஆயுக்தா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர் இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- முடா நில மோசடி வழக்கை லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிபிஐ-க்கு மாற்றக்கோரி ரிட் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் பதில் அளிக்க மனு.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மீது முடா நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஆர்.டி.ஐ. ஆர்வலர் சினேகாமயி கிருஷ்ணா கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவரது மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, மத்திய அரசு, மாநில அரசு, சிபிஐ, லோக்ஆயுக்தா இதுகுறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அத்துடன் லோக்ஆயுக்தா இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட பதிவு விசாரணையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையா மனைவியிடம் கடந்த மாதம் 25-ந்தேதி லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முறைகேடு தொடர்பான வழக்கை லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
- சி.ஐ.டி. தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஏ.டி.ஜி.பி. அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு,
கர்நாடக மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமிக்கு எதிராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் அவர்களுடைய உதவியாளர் சுரேஷ் பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்ததுடன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. எம். சந்திரசேகர் அளித்த புகார் அடிப்படையில் பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரசாமி தொடர்பான முறைகேடு வழக்கை விசாரணை நடத்தி வரும் கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை சட்டவிரோதமாக வழங்கியதாக குமாரசாமி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெற்ற பிறகு, அதிகாரிக்கு குமாரசாமி தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. செப்டம்பர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், மிரட்டலும் விடுத்ததாக சந்திரசேகர் தெரிவித்தள்ளார்.
- பட்டாசு மீது அமர்ந்து இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி தருவதாக பந்தயம் காட்டியுள்ளனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சபரீஷ் (32) மற்றும் அவரது நண்பர்கள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
அப்போது சக்திவாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.
எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சபரீஷ், ஆட்டோ ரிக்சா கிடைக்கும் என்ற ஆசையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் அதீத சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
- சித்தராமையாவின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்விதியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, 3வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முடா ஊழல் தொடர்பாக நவம்பர் 6ம் தேதி மைசூவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தற்போது சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள்
ஸ்டிக்கர்களை மாற்றிய பிறகு அதிக மதிப்புமிக்க பொருளை குறைவான மதிப்புடைய ஸ்டிக்கரை பயன்படுத்தி வாங்கி விடுவார்கள். அதிக மதிப்புமிக்க பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைவான மதிப்புடைய பொருளுக்கு தவறான OTP சொல்லி இறுதியில் ஆர்டரை ரத்து செய்து விடுவார்கள்.
அமேசானின் டெலிவரி பார்ட்னரான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் இவர்களின் தந்திரத்தை கண்டுபிடித்து அமேசான் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராஜ் குமார், சுபாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
- தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
- மனஉளைச்சலால், வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு தில்மில் மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் தனது மகன் பாலாஜிக்காக, தில்மில் என்கிற மேட்ரிமோனியில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து பதிவு செய்துள்ளார்.
தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
ஆனால், நாட்கள் ஆகியும் நிறுவனம் தரப்பில் இருந்து மணப்பெண்ணை தேடித் தரவில்லை எனத் தெரிகிறது. இதனால், கல்யாண் நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் மேட்ரிமோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
- எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன.
- ஒட்டுமொத்த நாடும் எங்களுடைய மாடலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு உத்தரவாதங்களை அளித்தது. அதில் ஒன்று பெண்கள் இலவச பேருந்து பயணம் (சக்தி திட்டம்) ஆகும். ஆட்சியை பிடித்ததும் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது இந்த திட்டம் அமலில் இருந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், டிக்கெட் கொடுத்து பயணம் செய்ய விரும்புவதாக பல பெண்களிடம் இருந்து எங்களுக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை வந்தது. இதனால் இந்த திட்டம் குறித்து பரிசீலனை செய்வோம் எனக் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒரு உத்தரவாதத்தை அறிவிக்கும்போது அதற்கு போதுமான நிதி உள்ளதா? என ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். அறிவித்தபின் இவ்வாறு பேசக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இதை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுவிட்டது, பின்னர் மக்களை வஞ்சிக்கின்றனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "எங்களுடைய உத்தரவாதங்கள் நாட்டை சீர்திருத்துகின்றன. ஒட்டுமொத்த நாடும் எங்களுடைய மாடலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. எங்களுடைய மாடலை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் காப்பி அடித்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய உத்தரவாதங்கள் மக்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து வருகின்றன. பா.ஜ.க. இதை அரசிலாக பார்க்கிறது. நாங்கள் வளர்ச்சியாக பார்க்கிறோம்" என்றார்.






