search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மூடா முறைகேடு வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா இன்று ஆஜர்
    X

    மூடா முறைகேடு வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா இன்று ஆஜர்

    • சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
    • முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4-வது குற்றவாளியாக தேவராஜன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லோக் ஆயுக்தா போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணிக்கு ஆஜரானார். இதையொட்டி அலுவலகம் வெளியே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர்களும் அந்த பகுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தி.கா. உதேஷ் தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி சித்தராமை யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கமாக பதில் அளித்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி லோக் ஆயுக்தா அலுவலகம் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் லோக் ஆயுக்தா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதற்கிடையே மைசூரு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் லோக் ஆயுக்தா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர் இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×