என் மலர்tooltip icon

    அரியானா

    • ‘ஆன்-லைன்’ மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
    • பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குருகிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.

    அதன்படி 'ஆன்-லைன்' மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை 'கேஷ்-ஆன் டெலிவரி' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு வினியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றனர். அங்கிருந்த பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், காதலர் தினத்தன்று இப்படி ஒரு பரிசை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர், காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டனர்.

    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
    • இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என அரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:-

    ஒரு நபர் மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றால், பின்னர் அந்த நாடு அவரை வெளியேற்ற எல்லா உரிமையையும் பெற்றுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை. இதில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன்.

    லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக உள்ளனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலோ பிறந்தவர்கள். ஆனால் நாம் அவர்களுக்கு உணவு அளிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அனில் விஜ் தெரிவித்தார்.

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். இதில் தலா 33 பேர் குஜராத் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தலா 3 பேர் மகராஷ்டிரா, உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சண்டிகரை சேர்ந்தவர்கள்.

    இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, அவருடைய நண்பரான டொனால்டு டிரம்ப் உடன் இது தொடர்பாக பேச வேண்டும் என பஞ்சாப் மாநில அமை்சர் தலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    • ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
    • செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று ஆதங்கம்.

    அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனத சகோதரியின் செல்போன் திருடப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர்.

    "ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்?" என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.

    "நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அதிகாரி பதிலளித்தார்" என்றார்.

    பின்னர், "அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார்.

    திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமூகமான ஒருங்கிணைப்பு இருந்தது, இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது," என்று காபா கூறினார்.

    • யமுனை நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசுமீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
    • இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.

    சண்டிகர்:

    டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி எனக்கூறிய கருத்து தொடர்பாக, அரியானா அரசு கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி சோனிபேட் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்
    • ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    அரியானாவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா (41 வயது) படுகொலை செய்யப்பட்டார்.

    நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு தனது நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    உடனே அவர்கள் மீட்க்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹர்பிலாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

     

    • செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார்.
    • செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.

    செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது. நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.

    அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.



    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் போது வீடுகளில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதை கேள்விபட்டிருப்போம். சில நேரங்களில் வீடுகளில் நகை, பணம் இல்லாவிட்டால் அங்கு இருக்கும் பொருட்களையாவது திருடி செல்வார்கள்.

    இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு வீட்டில் நடந்த வினோத கொள்ளை சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் மண்டல் என்பவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டில் அதிகளவில் பெண்களின் தலை முடியை மூலப்பொருளாக வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். வெளியில் சென்றிருந்த ரஞ்சித் மண்டல் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பக்கத்து அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.
    • படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தின் கைதல் நகரின் மார்க்கெட் அருகில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காரை நிறுத்துவதற்கு பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால் வேகமாக ஓடிய கார் சாலையோரம் சேர் போட்டு உட்கார்ந்திருந்த 5 பேர் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள். படுகாயமடைந்த மீதி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
    • ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர்.

    சண்டிகர்:

    ஜம்மு காஷ்மீரின் ப்ரீலான்சர் ரேடியோ ஜாக்கியும், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருமான சிம்ரன் சிங், அரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள அபார்ட்மென்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.

    இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இவர் கடைசியாக டிசம்பர் 13-ம் தேதி இன்ஸ்டாவில் ரீல் வெளியிட்டுள்ளா.

    25 வயதான சிம்ரன் சிங் குருகுராமில் வாடகைக்கு வசித்து வந்த செக்டார் 47 அபார்ட்மென்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் தங்கியிருந்த நண்பர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

    தகவலறிந்து வந்த போலீசார் சிம்ரன் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

    விசாரணையில், சில நேரங்களில் சிம்ரன் சிங் அப்செட்டாக இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது.
    • காங்கிரஸ் கட்சி அங்கு 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

    முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


    காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டன.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. அரியானா முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.


    ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 19 ஆண்டாக இந்தத் தொகுதியில் தோல்வியைப் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றி தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை.

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் புடானா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்தார்.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புடானாவில் உள்ள சூளையில் வேலை செய்து வருகின்றனர். செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் தற்போது நடந்து வருகிறது.

    இதனிடையே நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாதங்களே ஆன நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை. 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய தேசிய லோக் தள தலைவரும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.

    குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அரியானா மாநிலத்தின் முதல்வராக 1989-ம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து ஓம் பிரகாஷ் சௌதாலா சாதனை படைத்துள்ளார். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ×