என் மலர்
இந்தியா

அரசு வேலை, நிலம் வேண்டாம்.. அரியானா அரசின் ரூ.4 கோடி பரிசை தேர்வு செய்த வினேஷ் போகத்!
- காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
- தல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது. அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது அரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக அரியானாவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






