என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக அரசின் ரூ.4 கோடி பரிசை ஏற்ற வினேஷ் போகத்.. விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதில்!
    X

    பாஜக அரசின் ரூ.4 கோடி பரிசை ஏற்ற வினேஷ் போகத்.. விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதில்!

    • பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.
    • 2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது.

    அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது.

    இதில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்தார். காங்கிரசில் இருந்துகொண்டு பாஜக அரசு தரும் பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில் அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு வினேஷ் போகத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,

    "2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!

    உங்களுக்குத் தெரியப்படுத்த, நான் உங்களுக்குச் சொல்கிறேன் - இதுவரை, கோடிக்கணக்கான மதிப்புள்ள (விளம்பரத்தில் நடிக்கும்) சலுகைகளை நான் நிராகரித்துவிட்டேன். குளிர்பானங்கள் முதல் ஆன்லைன் கேமிங் வரை.

    ஆனால் நான் என் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை.

    நான் எதைச் சாதித்திருந்தாலும், அதை நேர்மையான கடின உழைப்பாலும், என் அன்புக்குரியவர்களின் ஆசீர்வாதத்தாலும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

    சுயமரியாதை கொண்ட தாயின் பாலில் கரைந்த மண்ணின் மகள் நான். உரிமைகள் பறிக்கப்படுவதில்லை, வெல்லப்படுகின்றன என்பதை என் முன்னோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அவர்களுடன் ஒரு சுவர் போல எப்படி பாதுகாத்து நிற்பது என்பதும் எனக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக மல்யுத்த வீராங்களைகளுக்கு பாஜகவை சேர்ந்த மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×