என் மலர்tooltip icon

    டெல்லி

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

    • வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும் என உத்தரவு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த எந்திரங்களில் பொத்தானை அமுக்கி வாக்களித்ததும் அந்த வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளை உறுதி செய்யும் எந்திரம் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் முதல் பயன்படுத்தப்படுகிறது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றப்படுவதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதே இதற்கு காரணமாகும்.

    குறிப்பாக எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் வகையில் மின்னணு எந்திரங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பான வழக்கில் முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கில் ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

    அதன் பேரில் தற்போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாடிகளின் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

    இந்த நிலையில் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். விவிபாட் எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "விவிபாட் எந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் சிஸ்டம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஒரு முறை செயல்படுத்தக்கூடியவை. அவற்றை மாற்றி அமைக்க முடியாது. இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவை இவற்றை தயாரித்து கொடுக்கின்றன" என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வசதியாக விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முதலில் உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு தீர்ப்பில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்யும் நடைமுறையை 5 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளாகும்.

    ஆனால், நீங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது.

    இந்த எந்திரங்களின் செயல்பாடுகளில் சில சந்தேகங்கள் இருந்ததாலேயே, அது குறித்து தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் திறன் குறித்து 2-வது முறையாக தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க முடியாது.

    தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சி கிடையாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை இன்று வழங்கினார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறிய நீதிபதிகள் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கட்சியின் சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கும் நடைமுறை தொடர வேண்டும்.

    வாக்காளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க விவிபாட் ஒப்புகை சீட்டுகளை கூடுதலாக எண்ணுவதற்கான முடிவை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

    வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி வேட்பாளர்கள் யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

    மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியை ஆய்வு செய்யலாம்.

    எந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் ஸ்டிராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும்.

    மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியில் பயன்படுத்தும் சிப், பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்.

    மின்னணு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பகத்தன்மை உள்ளது. எனவே விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
    • ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.

    • தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் குற்றச்சாட்டு.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் பதில்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுத்தியுள்ளார்.

    இரண்டு பக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என கார்கே அதில் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க உங்களை சந்திக்கும் நபராக நான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் தவறான அறிக்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்திருந்தார்.

    தேர்தல் அறிக்கையின் ஒரு வரியை வைத்துக்கொண்டு பேசக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சிகளும் செலவு செய்வது தேர்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை செய்யும். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச் சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட வேலைகளை கவனிக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

    மொத்தமாக தேர்தல் தொடர்பாக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலை மீடியா ஆய்வுகளுக்கான மையம் (The Centre for Media Studies) வெளியிட்டுள்ளது.

    லாபம் நோக்கத்தோடு செயல்படாத இந்த அமைப்பின் தலைவர் என். பாஸ்கர ராவ், இந்த தேர்தலுக்காக சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    முதலில் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டநிலையில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்படுகிறது என என். பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

    96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளருக்கான செலவு சுமார் ரூ.1,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது 2020 அமெரிக்க தேர்தலில் செலவிடப்பட்டதை விட அதிகமானது. அமெரிக்க தேர்தல் செலவுக்கு 1.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. OpenSecrets.org இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இவ்வளவு செலவு என தெரியவந்துள்ளது.

    பல்வேறு தளங்களை கொண்ட மீடியா மூலமாக பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன
    • இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர்.

    கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பாஜகவினர் பிரச்சினை கிளப்பினர்.

    இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.

    பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

    மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் மனீஷ் டெல்லியில் பாஜக எம்,.பி மனோஜ் திவாரி முன்னிலையில் காஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணீஷ் காஷ்யப், "பாஜகவுடன் இணைந்து பீகாரை வலுப்படுத்துவேன். என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி என்னை விடுதலையும் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என் மீது போடப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும், தேசியவாதத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.

    பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.

    பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

    அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.

    ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • 5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர்.
    • 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) 89 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

    3-ம் கட்டத் தேர்தல் 94 தொகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மே மாதம் 7-ந் தேதி 3-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    4-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ந்தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது. மே மாதம் 13-ந் தேதி 96 தொகுதிகளில் 4-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    5-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர். 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    மே 20-ந்தேதி 5-ம் கட்டத் தேர்தலுக்கான 49 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அதே போல மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 7, ஒடிசாவில்-5, ஜார்க்கண்டில்-3, லடாக் தொகுதி மற்றும் காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கும் 5-ம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    • மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-

    புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.

    இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • கேரளாவில் உள்ள 20 தொதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு.
    • கர்நாடகா மாநிலத்தில் 14 இடங்களில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 102 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    2-ம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (26-ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

    கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனிராஜா, பா.ஜ.க சார்பில் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பா.ஜ.க சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும், திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுரேஷ்கோபியும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 3 தொகுதிகளும் நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளன. இதனால் திருவனந்தபுரம், வயநாடு, திருச்சூர் தொகுதிகளின் முடிவை அனைவரும் எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அங்கும் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

    மேலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    இறுதி கட்ட பிரசாரம் முடிந்துள்ள நிலையில் கேரளா உள்பட 12 மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதி என மொத்தம் 89 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள்:

    அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, கர்நாடகா-14, கேரளா-20, மத்திய பிரதேசம்-7, மராட்டியம்-8, ராஜஸ்தான்-13, திரிபுரா-1,

    உத்தர பிரதேசம்-8, மேற்கு வங்காளம்-3, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×