என் மலர்
டெல்லி
- இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
- இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்த தடுப்பூசிதான் போடப்பட்டது.
இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து இந்திய மருத்துவர்கள் கூறியதாவது:
இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த எச்சரிக்கையை நன்கு அறிவோம்.
இந்த தடுப்பூசி செலுத்துவதால் அரிதான ரத்த உறைவு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு மிகக் குறைந்த ஆபத்தை அறிவித்தது.
இங்கிலாந்தில் ஒரு மில்லியன் பேருக்கு 4 வழக்குகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 1,00,000 பேருக்கு ஒரு வழக்கு, இந்தியாவில் ஒரு மில்லியன் டோசுக்கு 0.61 வழக்கு பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.
- உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டிபிஎஸ் பள்ளி மற்றும் சன்ஸ் கிரிதி ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நொய்டாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
டெல்லியில் உள்ள பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே மின்னஞ்சல் மூலம் ஒரே விதமான முறையில் பல்வேறு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டார்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவேந்தர் யாதவ் ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், டெல்லி மாநில இடைக்கால தலைவராக தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
- கடந்தவாரம் தான், ‘வாட்ஸ்-அப்’ மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார்.
புதுடெல்லி:
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.
மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் சுப்ரீம் கோர்ட்டு மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், சுப்ரீம் கோர்ட்டில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். அதோடு பழைய வழக்கு விசாரணைகளையும் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்களை மக்கள் எளிதான தேடல்கள் மூலம் பெறுவதற்கும் இந்த இணையதளம் உதவி செய்கிறது.
கடந்தவாரம் தான், 'வாட்ஸ்-அப்' மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார். அதாவது வழக்கினை தாக்கல் செய்யும் பொதுமக்கள் மற்றும் வக்கீலுக்கு வழக்கின் விவரம், விசாரணைக்கு வரும் தேதி மற்றும் தீர்ப்பு விவரம் ஆகியவை வாட்ஸ்-அப் எண் 87676- 87676 மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த சூழ்நிலையில் இந்த புதிய இணையதளமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.
- பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
- கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.
தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி எனத் தெரிவிக்க வேண்டும்.
- இந்த வழக்கில் இதுவரை இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அமலாக்கத்துறை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்போது "இந்த வழக்கில் இதுவரை இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது எடுக்கப்பட்டிருந்தால், கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை என்னிடம் தெரிவியுங்கள்.
இந்த வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய நிறுவனம் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி எனத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும். சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதை நாம் மறுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது சட்டவிரோதம் என அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கடந்த 15-ந்தேதி சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
- அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார்.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சந்தித்து பேசினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதேபோல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அதுகுறித்து கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். எங்களுடைய அனைத்து தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.
இவ்வாறு பகவத் மான் தெரிவித்தார்.
- தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
- ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று அந்த மிரட்டலில் கூறப்பட்டு இருந்தது. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வெளியாகி இருந்தது.
தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மருத்துவமனைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு மிரட்டல் காாரணமாக நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அதுபோல நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
- பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
- நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அசல் பக்கத்தை பதிவு செய்யுமாறு அவர்களது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
புதுடெல்லி:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது.
கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த சுப்ரீம் கோர்ட், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 16-ம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?, நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து நேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 23-ம் தேதி நடைபெற்றபோது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது மன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதனைப் பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இதுபோன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? பொருளை விளம்பரப்படுத்துவது போல மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சுப்ரீம் கோர்ட் கண்டனத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் மீண்டும் பொது மன்னிப்பு கோரி விளம்பரம் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அசல் பக்கத்தை பதிவு செய்யுமாறு அவர்களது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த விசாரணையின்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராவதில் இருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.
#WATCH | Yog guru Baba Ramdev and Patanjali Ayurved CMD Acharya Balkrishan leave from the Supreme Court. https://t.co/Dwh9x1UrgA pic.twitter.com/Lkqv9eJErR
— ANI (@ANI) April 30, 2024
- டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து மட்டுமே இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.
- கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
- இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.
இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நம்முடைய நாட்டில் மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- 38 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 17 போ் மீது வெறுப்புணா்வு பேச்சு தொடா்பான வழக்குகளும் உள்ளன.
- வேட்பாளா்களில் 392 போ் கோடீஸ்வரா்கள். அவா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.66 கோடி.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தோ்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் 1,352 வேட்பாளா்களின் தோ்தல் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீா்திருத்த சங்கம், தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஆராய்ந்தன.
இந்த ஆய்வின்படி, 1,352 வேட்பாளா்களில் 244 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 172 போ் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 38 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 17 போ் மீது வெறுப்புணா்வு பேச்சு தொடா்பான வழக்குகளும் உள்ளன. 7 வேட்பாளா்கள் மீதான வழக்குகளில், அவா்கள் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 24 வேட்பாளா்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும், 5 வேட்பாளா்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.
வேட்பாளா்களில் 392 போ் கோடீஸ்வரா்கள். அவா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.66 கோடி. இதில் அதிகபட்சமாக தெற்கு கோவா பா.ஜ.க. வேட்பாளா் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போவின் சொத்து மதிப்பு ரூ.1,361 கோடி. அடுத்த இடத்தில் ரூ.424 கோடி சொத்துகளுடன் விமான போக்குவரத்துத்துறை மந்திரியும், மத்திய பிரதேசத்தின் குனா தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா உள்ளாா்.
639 வேட்பாளா்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவா்கள். 591 போ் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பை நிறைவு செய்துள்ளனா்.
411 வேட்பாளா்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவா்கள். 41 முதல் 60 வயதுக்குட்பட்டவா்களாக 712 வேட்பாளா்கள் உள்ளனா். 1,352 வேட்பாளா்களில் 123 போ், அதாவது 9 சதவீதம் போ் மட்டுமே பெண்கள்.






