என் மலர்
டெல்லி
- விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது.
- கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும்.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொலி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா மனு தாக்கல் செய்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது என்று கூறி இம்மனுவை நேற்று டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும்.
விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் ஐகோர்ட் தலையிட முடியாது. ஏன் கோர்ட்டை அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? ஒருவர் அவரை (அரவிந்த் கெஜ்ரிவாலை? விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.
- ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.
இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
- திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல.
- இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.
புதுடெல்லி:
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பந்தத்தில் நுழைவதற்கு முன்பு, இந்திய சமூகத்தில் திருமணம் எவ்வளவு புனிதமானது என்பதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. அழுத்தம் கொடுத்து, வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல.
ஒரு ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை பெற்று, எதிர்காலத்தில் குடும்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்ச்சி. 2 தனிநபர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணியமான, சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் புனிதமான நிகழ்ச்சி.
ஆனால், இந்த மனுதாரர்களை போல், இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள்.
''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.
இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.
எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது. திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஒரு ஆதாரமாக கருதப்படலாம். ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்துக்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது. இந்து திருமண சட்டப்படி, அதை திருமணமாக கருத முடியாது.
1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.
- இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.
புதுடெல்லி:
உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.
இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது. அதாவது அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.
இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டை எட்டியுள்ளது. இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அதில் அவர், கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
மேலும் எந்த தனிநபரும் அல்லது நிறுவனமும் இந்த தடுப்பூசி விற்பனை மற்றும் வினியோகம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதைப்போல இந்த தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
அனைத்து தரப்பினரிடமும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
- வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுகும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.
வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 24 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்ற முடிவை எடுக்க தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிப்போம். யாரும் பயப்படவில்லை, யாரும் விட்டு ஓடவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
- காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் இணைந்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், 32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருணா சாகர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர் அவரது மனைவி அஞ்சுவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் கருணா சாகர் காங்கிரசில் இணைந்தார்.
- கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
- குஜராத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் அவரால் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சுனிதா, டெல்லி மாநில அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் வழங்கும் ஆலோசனைகள் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அம்மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.
டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மாநிலங்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ராம்லீலா ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது.
- பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை "உரிமைகளின் மறுசீரமைப்பு" என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வீட்டு பீரோ, அலமாரிகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர் உலகளவிலும் பரவியுள்ளது, அதுதான் கோத்ரேஜ். அன்னி பெசன்ட் அம்மையார், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற நிறுவனம் இது. 1921 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து ராணி வந்திருந்தபோது கோத்ரேஜ் தயாரிப்பைப் பயன்படுத்தினார். 1897-ம் ஆண்டு கோத்ரேஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரேஜ் தொடங்கினார்.

127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது.
கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு புறம் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் உள்ளனர். மறுபுறம் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோரின் சித்தப்பா வாரிசுகள் தான் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா.

இதன் மூலம், ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
மறுபுறம், ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் அண்ட் பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் முக்கியமான பகுதிகளில் உள்ள முதன்மை நிலங்களை மொத்தமாக கைப்பற்றுகின்றனர்.
இனி ஜாம்ஷெட் கோத்ரேஜ் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கட்டுப்பாட்டில் இயங்கும். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நிரிகா ஹோல்கர் இந்நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருப்பார். இதோடு மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலப்பகுதி உட்பட நில தொகுப்பை இவர்கள் நிர்வகிப்பார்கள்.

கோத்ரேஜ் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதியின் மகனான பிரோஜ்ஷா கோத்ரேஜ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் ஆகஸ்ட் 2026 இல் நாதீர் ஓய்வுபெற்ற பிறகு தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பார். பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை "உரிமைகளின் மறுசீரமைப்பு" என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பாண்டியா நியமனம்.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக நேற்று அறிவித்தது.
இதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஆளாக ரோகித் சர்மா இருந்திருப்பார் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
- பீகார் தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
- இந்த வழக்கு விசாரணையில் டெல்லி நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யால் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையின் அடவாடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அமலக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுபட்டுதான் நடக்க வேண்டும்.
பி.எம்.எல்.ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் அமலாக்கத் துறை நியாப்படுத்த முடியாது.
நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
- உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் ஜி.எஸ்.டி. வரி வசூல் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வசூல் 6 சதவீதம் அதிகமாகும்.
- வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது.
- திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம்.
புதுடெல்லி:
சென்னையில் இருந்து டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கைதான ஜாபர்சாதிக்கிடம் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு ஜாபர்சாதிக்கிடம் திகார் ஜெயிலில் வாக்குமூலம் பெறலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இதற்காக திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம் என்று சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு ஜாபர்சாதிக் மீதான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்து உள்ளது.






