search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்... பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரியங்கா காந்திக்கு அமித் ஷா பதில்
    X

    உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்... பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரியங்கா காந்திக்கு அமித் ஷா பதில்

    • பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
    • கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.

    தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×