என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
    • ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

    அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.

    அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    • செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
    • இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிட்டுள்ளது.

    இந்நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கள் கிழமை) விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
    • நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.

    உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.

    வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.

    தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


    மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.

    சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.

    அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.


    காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.

    எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.

    • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அதற்குப் பதிலாக VB-G RAM G மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மந்திரிசபையை கேட்காமலும், இதுகுறித்து ஆய்வு நடத்தாமலும் பிரதமர் மோடி, தானாகவே MGNREGA-ஐ அழித்துவிட்டார். நாங்கள் அதை தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணைந்து நிற்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    பண மதிப்பிழப்பை போன்று, பிரதமர் மோடி ஒரு நபராக மாநிலங்கள் மற்றும் ஏழை மக்கள் மீது நடத்திய பேரழிவு தாக்குதல் இது.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    20 ஆண்டு கால மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் VB-G RAM G மசோதாவாக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    • ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த திட்டமிட்ட சதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
    • UPA அரசால் கொண்டு வரப்பட்ட MGNREGA உலக நாடுகளால் பாராட்டை பெற்றது.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் பிரசாரம் தேவை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் என்று கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கார்கே பேசியதாவது:-

    * ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த திட்டமிட்ட சதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.

    * ஜனநாயகம், அரசியலமைப்பு, மக்கள் உரிமை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த கூட்டம் கூட்டப்படுகுிறது.

    * UPA அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் {Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)} உலக நாடுகளால் பாராட்டை பெற்றது. இந்த திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக மகாத்மா காந்தி எனப் பெயரிடப்பட்டது.

    * மோடி அரசு எந்தவித ஆய்வும் இன்றி, மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் மதிப்பீடு அல்லது ஆலோசனை செய்யாமல் சட்டத்தை ரத்து செய்துள்ளது. இதை மூன்று விவசாய சட்டங்களை போன்று செய்துள்ளனர்.

    * இந்த சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் தேவை. நாடு முழுவதும் அரசு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும். 2015 நிலம் கையப்படுத்துதல் சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றது தேவை.

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) குறித்து உறுதியான திட்டங்களைத் தீட்டுவதும், நாடு தழுவிய மக்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.

    * வங்கதேசத்தில் இந்து மைனாரிட்டிகள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    * கிறிஸ்துமஸ் அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை குலைத்ததுடன், உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது.

    அவ்வாறு கார்கே பேசினார்.

    • பானு முஷ்டாக் எழுதிய ‘ஹார்ட் லாம்ப்’ என்ற புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது.
    • கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட 'ஹார்ட் லாம்ப்' எனும் நூலும் ஒன்றாகும்.


    கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹார்ட் லாம்ப்' எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது. கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    பானு முஷ்தாக் கன்னடத்தில் ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் புத்தக தொகுப்பை எழுதி இருந்தார். 1990 முதல் 2012-ம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத் தொகுப்பு தென் இந்தியாவில் இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் குறித்து வெளிப்படுத்தியது.

    குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், அதன் நகைச்சுவையான, துடிப்பான பேச்சு வழக்கு, நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான கதை சொல்லலுக்காக பாராட்டுகளை பெற்றது.


    கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் கன்னட எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். சர்வதேச புக்கர் பரிசு வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். அவருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் புக்கர் விருதும், 50 ஆயிரம் யூரோ பரிசு பணமும் வழங்கப்பட்டது.

    பானு முஷ்டாக் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார் என்பதும், இந்த விவகாரம் சர்ச்சை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    • விஜய் மல்லையா, லலித் மோடி இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.
    • இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என லலித் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

    பொருளாதா குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார் லலித் மோடி. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.

    குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம். அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

    • பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, ​​கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?.
    • பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-வது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது டி. ராஜா கூறியதாவது:-

    இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் மிகவும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 100 வருடங்களில், கட்சி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பிளவு பட்டு உள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தொடர முடியும்?. இடதுசாரி இயக்கம் பிளவு பட்டு நிற்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாம் போரிட்டு கொண்டிருந்தபோது, ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எவ்வளவு காலம் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இவ்வாறு இருக்கும்.

    ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் இடதுசாரி ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்து, தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் ஒன்றிணைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போது, மற்றவர்களும் தீவிர சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

    பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?. பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். நாம் சாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும்

    இவ்வாறு டி. ராஜா பேசினார்.

    • இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.
    • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

    2025-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு (ISRO) ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் குறித்த விவரங்கள் இங்கு பார்க்கலாம்..

    LVM3-M6 (BlueBird Block-2) - மிகப்பெரிய வெற்றி:

    டிசம்பர் 24, 2025 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட், அமெரிக்காவின் 6,100 கிலோ எடையுள்ள 'BlueBird Block-2' செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது. 

    இது இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 'பாகுபலி' ராக்கெட்டான LVM3 தனது 100% வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து 9-வது முறையாக நிலைநாட்டியது.

    PSLV-C61 (EOS-09) - தோல்வி:

    மே 18 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கில் (Third Stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயற்கைக்கோளைத் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இது இஸ்ரோவிற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

    GSLV-F15 (NVS-02) - சிக்கல்:

    ஜனவரி மாதம் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றாலும், அதன் திரவ இயந்திரத்தில் (LAM) ஏற்பட்ட வால்வு கோளாறு காரணமாகச் சரியான சுற்றுவட்டப் பாதைக்கு உயரவில்லை. தற்போது இது மாற்று வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    100-வது ராக்கெட் மைல்கல்:

    ஜனவரி 29 அன்று ஏவப்பட்ட GSLV-F15 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. 

    இஸ்ரோவின் (ISRO) வரலாற்றில் ஜிஎஸ்எல்வி-எஃப்15 (GSLV-F15) ராக்கெட் ஏவுதல் ஒரு மிகமுக்கியமான மைல்கல்லாகும். இது 2025-ம் ஆண்டின் முதல் ஏவுதல் மட்டுமல்லாமல், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற பெருமையையும் பெற்றது.

    GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) - இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் கொண்ட 17-வது ஜிஎஸ்எல்வி பயணமாகும்.இந்த ராக்கெட் NVS-02 என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.

    ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்து, செயற்கைக்கோளைப் புவிவட்டப் பாதையில் (GTO) வெற்றிகரமாக விடுவித்தது. இது புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான முதல் வெற்றிகரமான ஏவுதலாகும்.

    2025-ம் ஆண்டின் தொடக்கம் சில சவால்களுடன் இருந்தாலும், ஆண்டின் இறுதியில் LVM3 ராக்கெட்டின் அடுத்தடுத்த வெற்றிகள் (குறிப்பாக அமெரிக்கச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது) உலக விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

    • மன்மோகன் சிங் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார்.
    • அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்திய கொள்கைகள் மற்றும் நாட்டின் உலகளாவிய நிலையை வலுப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மன்மோகன் சிங் என்று அவர் தெரிவித்தார்.

    மன்மோகன் சிங் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவர் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார். நாட்டின் நலிந்த மற்றும் ஏழை மக்களுக்காக அவர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகளும், துணிச்சலான முடிவுகளும் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தன.

    அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
    • முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன.

    இந்தியாவின் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்களின் (Petrol Pumps) எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,00,266 எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகிலேயே அதிக பெட்ரோல் பங்குகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.

    2015-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் கிராமப்புறங்களுக்கு எரிபொருள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த பங்குகளில் கிராமப்புறங்களின் பங்கு 22% ஆக இருந்தது. தற்போது அது 29% ஆக உயர்ந்துள்ளது.

    இந்திய எரிபொருள் சந்தையில் அரசு நிறுவனங்களே பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. 90% மேற்பட்ட பங்குகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

    தனியார் நிறுவனங்களான நாயாரா எனர்ஜி, ரிலையன்ஸ்-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள பங்குகளைக் கொண்டுள்ளன.

    தற்போதைய பெட்ரோல் பங்குகள் வெறும் பெட்ரோல், டீசல் விற்பனையுடன் நில்லாமல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளையும் கொண்ட 'எரிசக்தி மையங்களாக' மாறி வருகின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு நிலையங்களில் மாற்று எரிபொருள் வசதிகள் உள்ளன.

    • புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டன.
    • சிகரெட் மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தற்போதைய வருமானவரி சட்டம், கடந்த 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்துவதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

    இந்நிலையில், புதிய வருமானவரி சட்டம்-2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது. 64 ஆண்டுகால பழமையான வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக இச்சட்டம் அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.

    இதனால், வருமானம் ஈட்டும் தனிநபர்களின் கைகளில் அதிக பணம் புழங்கும். அவர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    மேலும், புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 22-ந்தேதி இது அமலுக்கு வந்தது. 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.

    அதே சமயத்தில், சிகரெட் மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பான்மசாலா, புகையிலை பொருட்கள் ஆகியவை மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் வரி விதிக்க புதிய சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள், மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும். அடுத்தகட்டமாக சுங்க வரிகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    ×