என் மலர்tooltip icon

    டெல்லி

    • குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது. குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
    • போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

    புதுடெல்லி:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

    இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

    இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்லும் அவர், ரஷியா மற்றும் சீனா நாடுகளின் உயரதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித் தோவலின் இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்துப் பேசுகிறார். அப்போது ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கலாம் என தகவல் வெளியானது.

    • எதிரே மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • துகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திர நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த சம்பவத்தில் ரெயில் தடத்தின் அருகே ஓடிக்கொண்டிருத்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    அதன்பின் அந்த பெண் மெட்ரோ போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. 

    • என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராக வந்துள்ளார்.
    • மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    டெல்லியில் பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு சொல்லித்தருவதற்காக வந்தபயிற்சியாளர் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவிகளுக்கு தங்களை ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சதீஸ் என்ற நிபுணர் ஒருவர் என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ளார்.

    இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவிக்கு தற்காப்பு சொல்லித்தருவதாகக் கூறி தனியாக அழைத்துத் தகாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

    • சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    • நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது வெறுப்பை அன்பு வெல்லும் என்று கூறினேன்

    காங்கிரசைச் சேர்ந்த மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 2023 ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீர்  ஸ்ரீநகரில் முடிவடைந்தது. சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இந்த பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்த 145 நாட்களில் நான் இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன் அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் நிறைய தெரிந்துகொண்டேன். அவர்களின் குரல்கள் பாரதத் தாயை பிரதிபலித்தன.

    நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது நாட்டில் பரவியுள்ள வெறுப்பை அன்பு வெல்லும் என்றும், பயத்தை நம்பிக்கை வெல்லும் என்றும் கூறியிருந்தேன். இன்றும் நமது அந்த இலக்கு அப்படியே உள்ளது. பாரதத் தாயின் குரல் எங்கும் ஒலிப்பதிற்கும் அன்பின் குரல் நாட்டின் உள்ள மூலை முடுக்குகளில் கேட்பதற்குமான இலக்கு அப்படியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது அரசியல் சதி
    • பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்பிய வினேஷ் போகத் சக வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரசில் இணைந்துள்ளார். எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் வினேஷ் போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கிய போதே இது முழுக்க முழுக்க அரசியல் சதி என்றும் காங்கிரசால் இயக்கப்படும் போராட்டம் என்றும் நான் கூறி வந்தேன்.குறிப்பாக இதில் [அரியானா முன்னாள் முதல்வர்] பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா,ராகுல் மற்றும் பிரியங்காவின் சதி.

    பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர். தற்போது அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் இது தெளிவாகியுள்ளது. அரியானாவின் புதல்விகளுக்கு அவர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.அவர்கள் அரியானாவில் எந்த தொகுதியில் நின்றாலும், ஒரு சிறு பாஜக வேட்பாளரே அங்கு வெல்ல போகிறார்.

    ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்.எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    • விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இதையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா என பதிவிட்டுள்ளார்.

    • பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதையடுத்து காங்கிரசில் இணைந்த சேர்ந்த சில மணி நேரங்களிலேயே பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகள் தங்களது அணிகளில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது.
    • பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று அசத்தியது.

    இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.

    இதேபோல், ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்ககரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்தப் பதவிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர், தேவ்தத் படிக்கல் அரை சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    துலீப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. டாஸ் வென்ற சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் கடந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சி அணி சார்பில் வைஷாக் 3 விக்கெட்டும், அனுஷ் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார்.

    இந்தியா டி சார்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டும், அக்சர் படேல், சரண் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்-தேவ்தத் படிக்கல் ஜோடி 53 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னில் அவுட்டானார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல்-ரிக்கி புய் ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா சி அணியை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டும், விஜய்குமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்
    • ''நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவில் தனது கிராமத்தில் ஓய்விலிருந்த வினேஷ் போகத் அரியானா பஞ்சாப் இடையே அமைந்துள்ள ஷம்பு எல்லையில் பயிர்களுக்கு ஆதார விலை கோரி 200 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.

    தனது சொந்த காரணங்களுக்காக ரெயில்வே பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரெயில்வே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வினேஷுக்கு வாட்ஸப்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன, வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை சந்தித்ததை ஊடகங்கள் பெரிதாக காட்டியபிறகே இவ்வாறு நடந்துள்ளது. நாட்டின் எத்ரிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதும் குற்றமாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரசில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், [கடந்த வருடம் போராட்டத்தின்போது] நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன் என்று தெரிவித்துளார். கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்க்காட்டை விசாரிக்கக்கோரி 6 மதஹக்லாமாக நடந்த போயிராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.    

    ×