என் மலர்tooltip icon

    டெல்லி

    • வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
    • செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    அந்த மனுவில், குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி, 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருவதாகவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "வாட்ஸ்அப் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை என்றாலோ, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றாலோ, அதை நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைதளங்கள், செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது.
    • ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமானம் மற்றும் ரெயில் சேவை பாதிப்பு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 

    • டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    • பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல்முறையீடு செய்து இருந்தனர்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.

    கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.

    இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

    டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    டாக்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது. பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்பிப்பட்டதே இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கோரமான ‘மேக்-அப்’ அணிந்து கண்களில் ‘லென்ஸ்’ பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்துகிறார்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    பேய்களுக்கு என்று கொண்டாடப்படும் ஹாலோவின் திருவிழா வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். இந்த விழாவையொட்டி பேய், ஆவிகள் போல வேடமணிந்து சாலையில் திரண்டு செல்வார்கள்.

    இந்தநிலையில் டெல்லியை சேர்ந்த ஷைபாலி கேக்பால் என்ற பெண், ஹாலோவின் திருவிழாவை கொண்டாடும் வகையில் பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்தார்.

    கோரமான 'மேக்-அப்' அணிந்து கண்களில் 'லென்ஸ்' பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்துகிறார். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகள், பெண்கள் ஆகியோரை பயமுறுத்த முயற்சிக்கிறார். அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலர் கண்டன கருத்து தெரிவித்துள்ளனர்.

    • மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
    • புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணமாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதற்கிடையே, கடந்த 2006-ம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. திருமண வயதை ஆண், பெண் இருபாலாருக்கும் 21 ஆக ஒரேமாதிரி நிர்ணயிக்க அம்மசோதா வகை செய்கிறது.

    அது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும், ஆய்வு முடியாத நிலையில், இந்த ஆண்டு 17-வது மக்களவை பதவிக்காலம் முடிவடைந்ததால், மசோதா காலாவதி ஆனது.

    இருப்பினும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. இக்குழு காங்கிரஸ் எம்.பி. திக்விஜய்சிங் தலைமையில் செயல்படுகிறது.

    வருகிற 22-ந் தேதி, பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள்ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள்.

    பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதுடன், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது. பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி ஆசிரியர் அமைப்புகள் ஆகியோர் பள்ளிக்கல்வியில் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி தெரிவிக்கிறார்கள்.

    சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பற்றியும், என்.சி.இ.ஆர்.டி., கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    • நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது.
    • பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் இந்த உத்தரவு செல்லாது.

    குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளன.

    இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. புல்டோசர்களை கொண்டு சொத்துகளை இடிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வகுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் விசாரணையின் போது தெரிவித்து இருந்தது.

    மேலும், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும். அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்' என்றும் தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தது.

    இந்த நிலையில் புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்தது. புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் சொத்துகளை இடிப்பதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் என்பதற்காக மட்டுமே மக்களின் வீடுகள் இடிக்கப்படுமானால் அது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதித்துறையின் பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க இயலாது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தாலும் கூட வீடுகளை இடிக்கக் கூடாது.

    குற்றம் சாட்டினாலே வீடுகளை எப்படி இடிக்கலாம்? குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வீடுகளை இடிப்பது, ஒரே இரவில் தெருவில் பெண்கள், குழந்தைகளை பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியாக இல்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு சில உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் வெளிச்சத்தில் பாதுகாப்புகள் உள்ளன.

    பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கோர்ட்டால் இடிப்பு உத்ரதரவு பிறப்பிக்கப்பட்டாலோ அதன் உத்தரவுகள் இதற்கு பொருந்தாது.

    முன் அறிவிப்பு இல்லாமல் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது. இடிப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்க வேண்டும்.

    சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியா முழுவதற்கும் வகுத்துள்ளோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    • குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.
    • குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது.

    பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது.

    * குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.

    * குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுவது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது.

    * குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது. அதேபோல் கிரிமினல் சட்டத்தின் கீழும் உள்ளது.

    * ஒரேநாள் இரவில் பெண்கள், குழந்தைகள் தெருவிற்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இல்லை.

    * வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்.

    * பலவருடங்கள் கடினமாக உழைத்து சராசரி மனிதன் வீடு கட்டுகிறான். இது அவனுடைய கனவு, அபிலாசைகள். பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக கட்டுகிறான். அதை அவர்களிடம் இருந்து பறித்து விட்டால், அது அதிகாரிகளை திருப்பிப்படுத்துவதற்காக மட்டுமே.

    • பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டது
    • கடந்த 2-ந்தேதி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "6 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இந்த மனு தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, "நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. டெல்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் (100%) மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன" என்று தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கட்கிழமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கடந்த கடந்த 2-ந்தேதி ஒப்புதல் அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

    • மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.
    • அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது.

    அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.

    உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.

    எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.

    மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 1 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்தவகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த வங்கிக்கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மேற்படி வங்கிக்கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர்.

    அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர். அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக்கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 4½ லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

    இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும்.

    இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

    • தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
    • நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்

    இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

    இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
    • டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.

    டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழா நடைபெற்றது.

    உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.

     

    சஞ்சீவ் கன்னா கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்து 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.

    பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். மேலும் சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்ளில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    அவரது மாசற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

    டெல்லி கணேஷ் ஏற்று நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களால், அவர் என்றும் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர்.

    அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    ஓம் சாந்தி..!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×