என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அலட்சியமாக இருக்க வேண்டாம். கொரோனா 2-வது அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை கூறினார்.
    கடலூர் :

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2-வது அலை வீரியத்துடன் காணப்படுகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, டீக்கடைகள், காய்கறி, மளிகைக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். முன்பு கொரோனாவுக்கு வயதானவர்கள் பலியாகி வந்தனர்.

    தற்போது பரவும் 2-வது அலை இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. நேற்று 35, 45 வயதுள்ள 2 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்திலும் 35, 40 வயதுள்ள நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இது பற்றி கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட சற்று வீரியத்துடன் காணப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல், இருமல், சளியை விட தலைவலி அதிகமாக இருக்கிறது. உடல் சோர்வு அதிகம் காணப்படுகிறது. முதல் அலை அதிகம் நுரையீரலை பாதித்தது. 2-வது அலை நுரையீரலை பாதித்தாலும், அதிகம் இதயத்தை தான் பாதிக்கிறது.

    கொரோனா வயதானவர்களை மட்டும் தாக்கும். நாம் உடல் தகுதியாக இருக்கிறோம். இதனால் நம்மை தாக்காது என்று இளைஞர்கள் நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கிறார்கள். தற்போது பரவும் கொரோனாவில் இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இதயத்தை செயலிழக்க செய்து உயி ரிழப்பை ஏற்படுத்துகிறது.

    ஆகவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு சிலர் காய்ச்சல், இருமல் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. உடனே அருகில் இருக்கும் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்து, நோய்த்தொற்று அதிகம் ஆகி வரும் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் போய் விடும்.

    ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்தால், நம்மை ஆம்புலன்சில் ஏற்றிச்செல்வார்கள் என்ற பயம் வேண்டாம். ஆகவே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
    ஒன்றிரண்டாக உடைத்த மிளகு - அரை டீஸ்பூன்
    ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
    தண்ணீர் - ஒன்றரை கப்
    எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

    செய்முறை:

    அவலை நன்கு கழுவி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயைச் சேர்க்கவும்.

    இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு, அவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    கலவை நன்கு வெந்ததும் கீழே இறக்கி பிடிகொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

    அவ்வளவு தான் கேழ்வரகு அவல் கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு காசநோய் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம்.
    பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது. குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது. ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.

    இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை ‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.

    இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

    குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்கு காசநோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.

    அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.

    இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும். பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும், கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகாத வண்ணம் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    வெயிலைச் சமாளிக்க வீட்டுக்குள் குளிர்ச்சியாகச் சிறு தாவரங்களை வளர்க்கலாம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.
    கோடை வெயில் உச்சத்துக்கு ஏறிவருகிறது. பசுமையாகச் சிறிய நிழல் கிடைத்தாலும் மனம் குதூகலிக்கிறது. இந்த வெயிலைச் சமாளிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மண் பானைத் தண்ணீர், கூழ் என உணவு முறையையும் மாற்றிப் பார்க்கலாம். அதுபோல வீட்டுக்குள் குளிர்ச்சியாகச் சிறு தாவரங்களை வளர்க்கலாம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.

    மணி பிளாண்ட்

    பலவிதமான செடிகள் சந்தையில் கிடைக்கின்றன. மணி பிளாண்ட், அவற்றுள் ஒன்று. வீட்டில் உள்ள காற்றைச் சுத்தமாக்க இந்தச் செடி உதவுவதாகச் சொல்லப்படுகிறது. மணி பிளாண்ட், பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இப்போது உலகத்தில் பல நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது வெறும் தண்ணீரில் வளரக்கூடியது.

    சீன மூங்கில்

    சீன மூங்கில் என அழைக்கப்படும் இது பார்ப்பதற்கு மூங்கிலைப் போல் இருக்கும். ஆனால் இதற்கும் மூங்கிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு அதிர்ஷ்ட மூங்கில் என்ற பெயரும் உண்டு.

    சைங்கோனியம் பிங்க்

    சைங்கோனியம் பிங்க் எனப்படும் இந்தச் செடி குரோட்டன் செடியைப் போல் இருக்கும். இது லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வீட்டுக்குள் வளர்க்கும் செடியாக உள்ளது. இது மண்ணில் வளரக்கூடியது. அதேபோல் இதற்கு நேரடியாக சூரிய வெளிச்சமும் அவசியமல்ல. இதன் இலைகள் இளஞ் சிவப்பு நிறத்திலிருக்கும்.

    ஜேடு பிளாண்ட்

    தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி, தடிமனான இலைகளைக் கொண்டது. இந்தச் செடியும் மண்ணில் வளரக்கூடியது. நேரடியான சூரிய வெளிச்சம் தேவை இல்லை. அதனால் இந்தச் செடியை வீட்டுக்குள் வளர்க்கலாம்.

    அரக்கா பனை

    தென்னை மரத்தைப் போன்று உள்ள இந்தச் செடி வீட்டுக்குள் வளர்க்கும் செடியில் மிகப் பிரபலமானது. இதன் பூர்வீகம் மடகாஸ்கர். ஆனால், அந்தமான் பகுதிகளிலும் இது காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குட்டைத் தென்னையைப் போல் 4,5 அடிகள் வளரக் கூடும். அதனால் பெரிய தொட்டியில் வளர்க்க வேண்டும். இதன் விலை மற்ற மேஜைத் தொட்டிச் செடிகளைக் காட்டிலும் சற்று அதிகம்.

    பீஸ் லில்லி

    அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி அழகாக வெள்ளை நிறத்தில் வளரக் கூடியது. அதனால் இது அமைதி லில்லி (Peace lilly) என அழைக்கப்படுகிறது. இது மேஜைத் தொட்டிச் செடிதான்.
    பலர் போலீசுக்கு பயந்துதான் முகக்கவசம் அணிகிறார்கள். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்தாலே இந்த நோயை கட்டுப்படுத்தலாம். அதேபோல தடுப்பூசி போட்டவர்களில் நிறைய பேருக்கு கொரோனா வரவில்லை.
    கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றால், சின்ன, சின்ன காய்ச்சல், இருமல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    85 சதவீத மக்களுக்கு காய்ச்சல், சளி போன்று கொரோனா தொற்று வந்து விட்டு சென்று இருக்கும். மீதமுள்ள 15 சதவீதம் பேருக்குத்தான் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படும்.

    எனவே சிறிய காய்ச்சல் வந்தவுடன் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

    பலர் போலீசுக்கு பயந்துதான் முகக்கவசம் அணிகிறார்கள். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்தாலே இந்த நோயை கட்டுப்படுத்தலாம். அதேபோல தடுப்பூசி போட்டவர்களில் நிறைய பேருக்கு கொரோனா வரவில்லை.

    அதையும் மீறி வந்தாலும் அவர்கள் இறக்கவில்லை. எனவே தடுப்பூசியை கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனா 2-வது அலையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார் டாக்டர் பிரின்ஸ் பயஸ்.
    இரண்டாவது அலை மூலம் பரவும் கொரோனா வைரஸ் முந்தைய அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது. சளி, காய்ச்சல் தவிர வேறுவிதமான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது.
    கொரோனா வைரஸின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து தரப்பினரும் சுய பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இரண்டாவது அலை மூலம் பரவும் கொரோனா வைரஸ் முந்தைய அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தனி நபரின் உடல் மற்றும் உளவியல் நலனை பாதிக்கக்கூடியது. சளி, காய்ச்சல் தவிர வேறுவிதமான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது.

    சிவப்பு நிற கண்: சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பது, வெண்படல அழற்சி போன்றவையும் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் கண் காட்சியளித்தால் நீர்க் கோர்த்திருப்பது, வீக்கம் போன்றவைகளும் உருவாகலாம். புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் இந்த அறிகுறிகளை கொண்டிருந்தது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

    சோர்வு: வைரஸ் சார்ந்த நோய் தொற்றோ, வேறு விதமான நோய் பாதிப்போ ஏற்பட்டு குணமடைந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதுவரை சோர்வு இருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த நோயாளி கள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும். கொரோனா சிகிச்சைக்கு பிறகு சோர்வு, பலவீனம், தசை வலி போன்ற பாதிப்புகள் 63 சதவீதம் பேருக்கு 6 மாதங்கள் வரை நீடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நரம்பு பாதிப்பு: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் நரம்பியல் பாதிப்புக்கான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறார்கள். நீண்ட கால கொரோனா நோயாளிகளில் 58 சதவீதம் பேர் மூளை பாதிப்பு அல்லது மன குழப்பத்திற்கான அறிகுறிகளை கொண்டிருந்திருக்கிறார்கள். அத்துடன் ஞாபக மறதி, தூக்கமின்மை உள்பட நரம்பியல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    வயிற்று பிரச்சினை: இரைப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஏதேனும் செரிமான அசவுகரியத்தை எதிர்கொண்டால், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நிவாரணம் பெறுவது நல்லது.

    மூச்சுவிடமுடியாத நிலை: மூச்சு விட சிரமப்படுவது, இதயம் படபடப்புடன் துடிப்பது, மார்பில் அசவுகரியம் ஏற்படுவது போன்றவையும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். டிஸ்பினியா எனப்படும் மூச்சுத்திணறல் பிரச்சினையும் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை தற்காலிகமாக ஏற்படலாம். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்புக்கு திரும்பிவிடலாம். நீண்ட நேரம் நீடித்து உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். டிஸ்பினியா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.

    இதய துடிப்பு: இதயம் வேகமாக துடிப்பது அல்லது இதய படபடப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 78 சதவீதம் பேர் இதயம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டிருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

    வழக்கத்திற்கு மாறான இருமல்: கொரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறியாக இருமல் அமைந்திருக்கிறது, ஆனால் வழக்கமான இருமலில் இந்து வேறுபட்ட ஒலியுடன் தொடர்ச்சியாக இருமல் இருந்து கொண்டிருந்தால் விழிப்பாக செயல்பட வேண்டும்.
    கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும்.
    தாய்மையடையும் பெண்கள் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. துரதிருஷ்டவசமாக நடக்கும் அந்த நிகழ்வில் இருந்து தாய்மார்கள் மீண்டு வருவது கடினம். கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். கருப்பையும் பாதிப்பிற்குள்ளாகலாம்.

    மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.

    நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
    திருமணம், பெண்களின் வாழ்க்கையில் மலரப்போகும் பூஞ்சோலை. அந்த புதிய வாழ்க்கையில் அவர்கள் இணைந்து மலர்ந்து மணம்வீச தாய்மார்கள் நேர்மறையான கருத்துக்களை மட்டும் கூறி இல்லறத்தில் கலந்து மகிழ ஊக்குவிக்கவேண்டும்.
    ``மகள்களை மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தயார்ப்படுத்த வேண்டியது தாய்மார்களின் மிகப்பெரிய கடமை’’

    “நான் தைரியமான பெண் என்பதை என் வாழ்க்கையில் பலமுறை நிரூபித்திருக்கிறேன். என் கல்லூரித் தோழிகள் சைக்கிள் ஓட்டவே பயந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நான் புல்லட் ஓட்டினேன். அதிலே தனியாக பயணித்து, மாநிலம் விட்டு மாநிலம் சென்றிருக்கிறேன். 16 வயதிலே எந்த பயமும் இன்றி துள்ளித்திரிந்த நான் இந்த 26-வது வயதில், மிக முக்கியமான தருணத்தில் ஏகப்பட்ட பயத்தோடு என்ன செய்வதென்றே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..” என்ற அவள் கட்டுக்கோப்பான உடலுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் காணப்பட்டாலும், அவள் மனதில் கவலை சூழ்ந்திருப்பதை முகம் காட்டியது.

    பிரபல நிறுவனம் ஒன்றில் எச்.ஆர். பிரிவில் அதிக சம்பளத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் பணியாளர்கள் பலரது பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் பொறுப்பில் இருந்துகொண்டிருக்கிறாள். தற்காப்புக் கலைகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

    ‘வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் பயத்தோடு இருந்துகொண்டிருப்பதாக சொன்னாயே! அந்த முக்கிய தருணம் என்பது என்ன?’ என்று அவளிடம் கேட்டேன்.

    அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாகவும், அவள் கல்யாணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அப் போதுதான் சொன்னாள்.

    ‘எப்போது திருமணம்?’

    “இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன..” என்றாள்.

    இவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் இளைஞனின் படத்தை தனது செல்போன் ஸ்கிரீனில் வைத்திருக்கிறாள். அவனது தோற்றம் இவளைபோல் கம்பீரம் இல்லாமல், சாப்ட் ஆக இருந்தது. ‘அவரை உனக்கு பிடிக்கவில்லையா?’ என்று கேட்டபோது, அவள் கண்களில் இருந்து கண்ணீர் கவிழ்ந்தது.

    “இப்படி ஒரு ஆணை நான் கற்பனைசெய்துகூட பார்த்ததில்லை. அவரிடம் பேசும்போதும், அவர் அருகில் அமர்ந்திருக்கும்போதும் என்னை நானே மறந்துவிடுகிறேன். அந்த அளவுக்கு அவர் என் மீது அன்பு செலுத்துகிறார். அப்படிப்பட்ட அன்பை என் தாயிடம், தந்தையிடம் இருந்துகூட நான் பெற்றதில்லை..” என்று நெகிழ்ச்சியாகக்கூறி ஆச்சரியப்படுத்தினாள்.

    இவ்வளவு அன்பு செலுத்தும் ஒருவர் எந்த பெண்ணுக்கு கணவராக அமைந்தாலும் அவள் மகிழ்ச்சியின் உச்சத்திற்குதான் செல்ல வேண்டும். ஆனால் இவளோ பயத்தின் உச்சத்தில் அல்லவா நின்றுகொண்டிருக்கிறாள். அதற்கு காரணம் தனது அம்மாதான் என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.

    “எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கின்றன. நிச்சயதார்த்தம் நடந்த இரண்டொரு நாளிலே அம்மா என்னை பயங்காட்ட தொடங்கிவிட்டார். கடைசி நேரத்தில் திரு மணம் நின்றுபோகும் பத்திரிகை செய்திகளையும் மற்றும் அது போன்ற காட்சிகள் இடம்பெறும் டெலிவிஷன் நாடகங்களையும் பார்த்துவிட்டு, ‘உன் வாழ்க்கையிலும் அதுபோல் நடந்துவிட்டால் என்ன செய்வாய்?’ என்று என்னிடம் கேட்கிறார். திருமணத்திற்கு முதல்நாள் வரன் திருமணம் வேண்டாம் என்று நிராகரிப்பது, தனது காதலியோடு திருமணத்திற்கு முன்பு ஓடிப்போவது, திருமணத்திற்கு முன்பு காரணம் சொல்லிக்கொள்ளாமல் தற்கொலை செய்வது போன்ற செய்திகளை எல்லாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி என்னிடம் திருமணத்தை பற்றிய அச்சத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தார்..” என்று பயம் உருவாகிய விதத்தை விளக்கிய அவள், அம்மாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தனக்குள் கூடுதல் அதிர்ச்சி அலைகளை உருவாக்குவதாக தெரிவித்தாள்.

    எப்படி?

    “உனது கணவன் உன் மீது எவ்வளவு அன்புகாட்டினாலும், அவரை நம்பிவிடாதே. எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது. அதனால் அவரை நம்பி உன்னை முழுமையாக ஒப்படைத்துவிடாதே. படிப்பையும், புத்திசாலித்தனத்தையும்வைத்து வேலைபார்த்து பணம் சம்பாதிக்க மட்டுமே உனக்கு தெரியும். ஆணை புரிந்துகொள்ள என் அனுபவம்தான் உதவும். அதனால் திருமணத்திற்கு பின்பு தினமும் காலையில் என்னிடம் நீ பேசவேண்டும். நான் சொல்வதுபோல்தான் நீ நடந்துகொள்ளவேண்டும்.

    உன்னிடம் அவன் (வருங்கால கணவன்) அதிர்ந்து பேசினாலோ, அடிக்க கையை ஓங்கினாலோ, நீ ஆசைபட்டபடி நடந்துகொள்ளாமல் இருந்தாலோ, உடனே நீ இங்கே நம் வீட்டிற்கு ஓடிவந்துவிடவேண்டும். நீ உன் கணவனை பிரிந்துவந்தால் நான் உன்னிடம் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன். உடனடியாக அவனை விவாகரத்து செய்துவிட்டு, உனக்கு அவனை விட சிறந்தவனை தேடிப்பிடித்து மறுமணம் செய்துவைப்பேன் என்று என் அம்மா புலம்பிக்கொண்டே இருக்கிறாள்..” என்றாள்.

    தாயின் இந்த புலம்பல், அவளிடம் திருமண வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை இழக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ‘எந்த ஆணையும் நம்பாதே!’ என்ற வார்த்தை அவளது மனதுக்குள்ளே சுற்றி சுழன்றடித்து, தனது வருங்கால கணவனை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. அதனால் வருங்கால கணவர் தன்னிடம் காட்டுவதெல்லாம் போலித்தனமாக அன்பு என்பதுபோல் கருத தொடங்கியிருக்கிறாள்.

    “யாரை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. இப் படியே நான் இருந்தால் திருமணமான நான்காவது நாளே நான் என் கணவரை பிரிந்து என் தாயிடம் போய் சேர்ந்துவிடும் நிலை உருவாகிவிடும்” என்று அவள் தலையை பிடித்துக்கொண்டு மேஜை மீது கவிழ்ந்தபோது, அவளது பொறுப்பற்ற தாயாரை நினைத்து வேதனைகொள்ளும் நிலை ஏற்பட்டது.

    எரிகிற கொள்ளியை இழுத்து அணைத்தால்தான் கொதிப்பது அடங்கும் என்பதுபோல், தாயாருக்கு கவுன்சலிங் கொடுத்து அவரது எதிர்மறையான கருத்துக்களை தடுக்கவேண்டியதிருந்தது. பின்பு வருங்கால கணவன் மூலம் அவளுக்கு அதிக நம்பிக்கை ஊட்டப்பட்டது. தியானம் மற்றும் மியூசிக் தெரபி மூலம் அவள் மனமும் இயல்புக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் எதுவும் அத்தனை எளிதாக இருக்கவில்லை என்பதை சமூக நலன் கருதிகூற வேண்டியதிருக்கிறது.

    பெரும்பாலான இளம்பெண்கள் வெளிஉலகத்தில் தைரியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் தாயாரின் முந்தானையை பிடித்துக்கொண்டு நடக்கும் எடுப்பார் கைப்பிள்ளை போன்ற மனநிலையில்தான் இன்றும் இருந்துகொண்டிருக்கிறார்கள். சில தாய்மார்கள், தங்கள் மகள்கள் எப்போதும் தங்கள் கைப்பிள்ளை போல்தான் இருக்கவேண்டும் என்று கருதி, அவர்களை பயப்படுத்தியே தங்கள் காலடிக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

    அம்மாக்களின் அனுபவம் என்பது பழைய புத்தகம். அதில் பலன்தரும் கருத்துக்கள் நிறைய உண்டு. ஆனால் அதுவே காலத்தின் கண்ணாடி அல்ல. அம்மாக்களின் கருத்துக்களை எல்லா தருணங்களிலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இ்ல்லை. புதிய கருத்துக்களும், புதிய சிந்தனைகளும் பெண்களிடம் இருக்கவேண்டும். தைரியத்தைவிட தன்னம்பிக்கை இன்றைய இளம்பெண்களுக்கு அதிகம் தேவை.

    இந்த உலகமும், உலக மக்களின் வாழ்க்கையும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கைதான். அதை சிதைக்கும் விதத்தில் அம்மாக்கள் நடந்துகொள்ளக்கூடாது. நம்பிக்கையையூட்டி நல்வாழ்க்கைக்கு தான் வழிகாட்டவேண்டும்.

    இன்று சில இளம்பெண்கள் திருமணம் வேண்டாம் என்று கூறும்போதும், பருவம் கனிந்த பின்பும் திருமணம் இப்போதுவேண்டாம் என்று பல வருடங்கள் தள்ளிவைக்கும்போதும், திருமணம் செய்து கொள்ளாமலே வாழப்போகிறேன் என்று களமிறங்கும்போதும், அந்த இளம்பெண்களை தான் பலரும் குறை சொல்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு முடிவை அந்த பெண்கள் எடுக்க அவர்களது அம்மாக்களும் ஏதாவது ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள்.

    திருமணம், பெண்களின் வாழ்க்கையில் மலரப்போகும் பூஞ்சோலை. அந்த புதிய வாழ்க்கையில் அவர்கள் இணைந்து மலர்ந்து மணம்வீச தாய்மார்கள் நேர்மறையான கருத்துக்களை மட்டும் கூறி இல்லறத்தில் கலந்து மகிழ ஊக்குவிக்கவேண்டும். எதிர்மறையான கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதை தவிர்க்கவேண்டும்.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - கால் கப்
    ப்ரோக்கோலி - 2 மொட்டுகள்
    ஓமம் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    பிரிஞ்சி இலை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பால் - அரை கப்
    சர்க்கரை - அரை டீஸ்பூன்
    தனியாதூள், மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய்யை ஊற்றி அது சூடானதும் ப்ரோக்கோலி மொட்டுகள், பிரிஞ்சி இலையை போட்டு கிளறவும்.

    பின்பு பால், ஓட்ஸ், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி வேகவைக்கவும்.

    ஒரு விசில் வந்ததும் இறக்கி மிளகாய், இஞ்சி ஆகியவற்றை தனியாக எடுத்துவிட்டு மற்றவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அவற்றை வடிகட்டிக்கொள்ளவும்.

    பின்னர் வடிகட்டிய கலவையை குக்கரில் கொட்டி அதனுடன் உப்பு, ஓமம், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    அதனுடன் தனியாதூள், மிளகு தூள் தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் குழந்தைகளிடம் பொறாமை குணம் ஏற்பட்டிருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து, எடுத்துச்சொல்லி அந்த உணர்வை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள்.
    ‘குழந்தைகள் கண்ணாடி போன்ற மனநிலை கொண்டவர்கள். எதையும் அப்படியே பிரதிபலித்துவிடுவார்கள். பொறாமை, குரோதம் போன்ற தேவையற்ற குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்காது’ என்ற கருத்து பொதுவாக நிலவிவருவதுண்டு. ஆனால் குழந்தைகளிடம்கூட பொறாமை குணம் இருக்கிறது. ஆனால் அது பெரும்பாலும் அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவு களையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

    குழந்தைகளிடம் ஏற்படும் எண்ணச்சிக்கல்களை சரிசெய்யவேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உங்கள் குழந்தைகளிடம் பொறாமை குணம் ஏற்பட்டிருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து, எடுத்துச்சொல்லி அந்த உணர்வை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் குழந்தைகளிடம் பொறாமை குணமும் வளர்ந்து, அவர்களது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிவிடும்.

    பெரியவர்களிடம் இருக்கும் பொறாமை குணத்தை கண்டறிவது கடினம். அப்படி ஒரு குணமே தங்களிடம் இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். ஆனால் குழந்தை களிடம் பொறாமை குணம் இருந்தால் அதை தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திவிடுவார்கள். இதனால் ஏற்படும் நெருக்கடி என்னவென்றால், பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும்போது, அது அந்த குழந்தைகளுக்குள் வெறுப்பை உருவாக்கும். அந்த வெறுப்பால் அவைகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சூழ்நிலைகள் தோன்றும்.

    குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோருக்கு தெரியாமல் குழந்தைகளிடம் எப்படி பொறாமை உணர்வு ஏற்படும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும். உண்மையில் குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருப்பதாக வைத்துக்கொண்டால், பின்விளைவு களைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறார்கள். ஆரோக்கியமற்ற போட்டியே பொறாமையாக உரு வெடுத்துவிடுகிறது.

    குழந்தைகளின் வேகத்தையும், திறமை களையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். அது வெற்றிபெற்ற குழந்தை மீது தோல்வியடைந்த குழந்தைக்கு பொறாமை உணர்வு ஏற்பட காரணமாகிவிடும்.

    வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும் என்பதும், தோல்வியில் இருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதும் பெரியவர்களுக்குதான் தெரியும். சிறுவர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளின் மன நிலையை இயல்பாக்கி, உற்சாகப்படுத்தவேண்டும்.

    தங்களுக்கும், பக்கத்து வீட்டு பெற்றோர் களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது எல்லா பெற்றோருக்கும் தெரியும். தங்களை போன்று பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சிந்திப்பதும், செயல்படுவதும் இல்லை என்பதும் அவர் களுக்கு தெரியும். ஏன்என்றால் எல்லா மனிதர் களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மனிதருக்கு மனிதர் மன இயல்புகளில் மாற்றங்கள் இருக்கும் என்பதை பெற்றோர்கள் உணர்ந் திருந்தாலும், படிப்பிலோ- விளையாட்டிலோ பக்கத்து வீட்டு குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டால், அது போல் தங்கள் குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. அவமரியாதை செய்யப்படும் குழந்தைகளிடம் கோபம், பிடிவாதம், பொறாமை போன்ற பல வகையான எதிர்மறை உணர்வுகளும் உரு வாகிவிடக்கூடும்.

    முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வளரும் வீடுகளில்தான் அவர்களிடம் போட்டி, பொறாமை உருவாகும் என கூறப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு குழந்தையைதான் பெற்று வளர்க்கிறார்கள். அந்த குழந்தை களிடமும் பொறாமைக்குணம் காணப்படுகிறது. அதனால் எத்தனை குழந்தைகள் ஒரு வீட்டில் வளர்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதே முக்கியம்.

    குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித் தனியாக செய்ய வேண்டும். ‘உன்னைவிட அவன் சிறந்தவன்’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளிக்காட்டினால் அது குடும்பத்துக்குள்ளே பெருங்குழப்பத்தை உருவாக்கிவிடும். எல்லா குழந்தை களுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற் படுகிறது.

    பெரும்பாலான குடும்பங்களில் மூத்தபிள்ளைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும், இளைய குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தொடர்கிறது. இத் தகையபோக்கும் மாற்றப்படவேண்டும். குழந்தைகளாக இருப்பவர்கள் வளர வளர வயதுக்கு தகுந்த அளவு முக்கியத்துவம் தரபடவேண்டும். அவர்கள் திறமை குறைந்தவர்களாக இருந்தாலும் அங்கீகரித்து ஊக்கப்படுத்தவேண்டும். பெற்றோர் வாழ்ந்து காட்டும் முறையிலும், வளர்க்கும் முறையிலும் குழந்தைகளை பொறாமை இல்லாதவர்களாக உருவாக்கலாம். குழந்தை களுக்கு பணம் சேர்த்துவைப்பதைவிட, அவர்களை நல்ல குணமிக்கவர்களாக உருவாக்குவதே பெற்றோரின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.
    கலாச்சார விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணம், பிறந்தநாள் விழா, கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வரிசையில் முதலிடத்தில் பட்டுப்பாவாடைகள் இருக்கின்றன.
    பட்டுத்துணிகளால் வடிவமைக்கப்படும் பாரம்பரியத் தென்னிந்திய உடை என்று இவற்றைச் சொல்லலாம். சிறிய பெண் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடைகளை அணிவித்து அழகு பார்ப்பது பொதுவாகவே தென்னிந்தியாவில் வழக்கமான ஒரு நிகழ்வாகும்.

    கலாச்சார விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணம், பிறந்தநாள் விழா, கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வரிசையில் முதலிடத்தில் பட்டுப்பாவாடைகள் இருக்கின்றன.

    முழுநீளப் பாவாடை மற்றும் ஸ்கர்ட் போன்றவை பட்டுத்துணிகளில் பெண் குழந்தைகளுக்காகத் தைக்கப்படும் பிரபலமான ஆடைகளாகும். பிறந்த குழந்தைகளுக்கு பட்டுப்பாவாடையை அணிவிக்க முடியாது என்பதால் பட்டுத்துணியை ப்ராக் பாணியில் தைத்து விற்பனை செய்கிறார்கள்.

    நடக்கும் வயதிலிருக்கும் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை துணியாகவோ அல்லது ரெடிமேடாகவோ கிடைக்கின்றன. பட்டுப் பாவாடைகளுக்கு மேல் கையில்லாத குட்டைச் சட்டை அல்லது சோளி மற்றும் தாவணி அணிவதும் வழக்கத்தில் உள்ளது. முழுக்கை, முக்கால் கை மற்றும் குட்டைக் கைகளுடனும் சட்டைகளானது பட்டுப் பாவாடைகளின் மேல் அணிய்ப படுகின்றன. குழந்தைப் பருவம் முதல் திருமணமாகும் வரை பெண்கள் பட்டுப் பாவாடைகளை அணிகிறார்கள்.

    தமிழகத்தில் பட்டுப்பாவாடை என்ற பெயருடனும், கர்நாடகத்தில் லங்கா தாவணி என்றும், ஆந்திராவில் லங்காவோனி என்றும் மக்கள் இந்த ஆடையை அழைக்கிறார்கள்.

    அடர்த்தியான வண்ணங்களில் செல்ப் பார்டர்கள், கான்ட்ராஸ்ட் பார்டர்கள், பெரிய பார்டர், சின்ன பார்டர், பாவாடையின் புற த்தில் ஜரிகை புட்டாக்கள், பாவாடை முழுவதுமே ஜரிகைக் கோடுகள் அல்லது கட்டங்கள் என மிகவும் அருமையாக வடிவமைக்கப்படுகின்றன.

    அடர் பச்சை நிறத்திற்கு மெரூன் பார்டர், மாம்பல நிறத்திற்கு பச்சை பார்டர், சிவப்பு நிறத்திற்கு நீல வண்ண பார்டர், மயில் கழுத்து நிறத்திற்கு மெஜந்தா பார்டர், வெண் பட்டு நிறத்திற்கு சிவப்பு பார்டர், கத்தரிப்பு வண்ணத்திற்கு ஆரஞ்சு பார்டர் போன்றவை பட்டுப் பாவாடைகளில் காலம் காலமாக பிரபலமாக இருக்கும் நிறங்களாகும்.

    சமீப காலங்களில் இரண்டு மூன்று வண்ணங்கள் இணைந்து வருதும், மென்மையான வண்ணங்களுக்கு அடர்ந்த நிறத்தில் பார்டர்கள் வருவதும் பிரபலமாகி வருகிறது.

    பட்டுப் பாவாடை என்றாலே காஞ்சிபுரம் பட்டு என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும். அதுபோல் தர்மாவரம் பட்டு, இளம் பிள்ளைபட்டு, சிறு முகை பட்டு, பனாரஸ் பட்டுத் துணிகளிலும் பட்டுப் பாவாடைகளைத் தைத்து அணிகிறார்கள்.

    காஞ்சிப் பட்டில் இருப்பது போலவே பனாரஸ் பட்டிலும் பலவிதமான டிசைன்கள் உள்ளன. பூ டிசைன்கள், ஜ்யாமெட்ரிகல் டிசைன்கள், யானை, மான், அன்னம், மயில் என அனைத்தும் அழகான ஜரி வேலைப்பாட்டுடன் பாவாடைகள் அலங்கரிக்கின்றன.

    பட்டுப் பாவாடைகளின் பார்டர்கள் இரண்டு விரல் அகலத்திலிருந்து முழங்கால் வரை உயரமான பார்டர்களாகவும் கிடைக்கின்றன.

    கை நெசவு செய்யப்படும் பட்டுப் பாவாடைகளுக்கு தனி மவுசு என்றே சொல்லாலம்.

    ஆரி வேலைப்பாடு, ஜரி வேலைப்பாடு மற்றும் பாவாடைகளில் கற்கள் பதிப்பது, முத்துக்கள், ஜர்தோஸி வேலைப்பாடுகளுடனும் பட்டுப் பாவாடைகள் அணியப்படுகின்றன.

    பாவாடைகளுக்குத் தைக்கும் ஜாக்கெட்டுகளானது புது வித டிசைன்களுடன் அழகாக வடிவமைக்கப்படுகின்றன.

    “பட்டோலா பட்டு, சந்தேரி பட்டு, டிசைனர் பட்டு என பட்டுப் பாவாடைகளில் அட்டகாசமான கலெக்‌ஷன்கள் வந்துள்ளன.

    தென்னிந்தியப் பெண்களிடம் ஒரேயொரு பட்டுப் பாவாடைத் தாவணி செட் என்பது கட்டாயம் இருக்கும். பட்டுப் பாவாடைத் துணிகளை எடுக்கும் பொழுது அத்துடன் இணைந்த பட்டுச் சட்டைகளும் வருகின்றன.

    குட்டிப் பெண் குழந்தைகள் வண்ணமயமான பட்டுப் பாவாடைகளை அணிந்து கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வது வண்ணத்துப் பூச்சியானது இங்கும் அங்கும் பறப்பது போலத் தோன்றுகிறது.

    பட்டுப் பாவாடைகளைத் தைப்பதிலும் பல புதிய பாணிகள் வந்து விட்டன.

    நாகரீக மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும் பட்டுச் சேலைகளும், பட்டுப் பாவாடைகளும் அணிந்து கொள்வதில் மாற்றம் இருக்காது.

    பட்டுப் பாவாடைகள் பராமரிப்பு:

    பட்டு பாவாடைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு கொடிகளில் காற்றாட உலர்த்த வேண்டும்.

    பட்டுப் பாவாடையை துவைப்பதாக இருந்தால் முதல் முறை ட்ரை வாஷ் கொடுப்பது நல்லது.

    வீட்டில் துவைப்பதாக இருந்தால் ஒரு பக்கெட் நீரில் மென்மையான ஷாம்புவைக் கலந்து அதை நுரை வரும்வரை கலந்து பின்பு பட்டுப் பாவாடையை அந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் இரண்டு மூன்று பாவாடைகள் அல்லது பாவாடைச் சட்டை இரண்டையும் ஒரே சமயம் ஊற வைக்காமல் தனித்தனியாக ஊற வைத்துத் துவைப்பது நல்லது.

    அதேபோல் பாவாடையையும் அதிக நேரம் வரை ஷாம்பூ நீரில் ஊற வைக்கக்கூடாது. பாவாடையை மிகவும் மென்மையாக கசக்கி பின்பு மற்றொரு தண்ணீர் நிரப்பிய பக்கெட்டுகளில் ஐந்தாறு முறை ஷாம்பூ நுரை போகும் வரை அலச வேண்டும்.

    மற்ற துணிகளை இறுக்கிப் பிழிவது போல் பட்டுப் பாவாடையை இறுக்கிப் பிழியக்கூடாது.

    சுருக்கம் இல்லாமல் நிழலில் பட்டுப் பாவாடையைக் காய வைக்க வேண்டும்.

    உலர்ந்த பட்டுப் பாவாடைகளை சாதாரணமாக மடித்து பருத்தித் துணிகளில் சுற்றி வைக்க வேண்டும்.

    எப்பொழுது பட்டுப் பாவாடையை உபயோகிக்கப் போகிறோமோ அப்பொழுது இஸ்திரி செய்வது நல்லது.
    லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்.
    புதுடெல்லி :

    நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×