என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல டயட்டில் இருப்பவர்களும் இந்த உணவை சாப்பிடலாம். அதை டிபனாகவும் சாப்பிடலாம். ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    கடலை பருப்பு - கால் கப்
    காய்ந்த மிளகாய் ? 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    வெறும் வாணிலியில் கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை, அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.
    குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அவர்களின் ஒவ்வொரு அடுத்த கட்ட முன்னேற்றங்களும், இயக்கங்களும் நம்மை வியக்க வைக்கும். இதில் அம்மாக்களுக்கு நம் குழந்தை வளரும் போது இன்னும் குப்புற விழவில்லையே, தவழவில்லையே, நடக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.

    குழந்தை ஒன்பதாம் மாதத்தை கடந்து செல்லும் போது பல அறிகுறிகள் காணலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால், அறிகுறிகள் மாறுபடலாம்.

    * உங்கள் குழந்தை நடை போட முயற்சிக்கும் போது, அருகில் உள்ள மர பெஞ்ச், கட்டில் போன்ற மரச்சாமான்களை பிடித்து கொண்டு எழுந்து நிற்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் குழந்தை ஒரு மாத காலத்திற்குள் நடக்க முயற்சிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

     * உங்கள் குழந்தை 7 அல்லது 8 மாதம் இருக்கும் போது சுற்றுவார்கள் அதாவது வட்டம் அடிப்பார்கள். இது குழந்தைகள் நடை பழக தொடங்குவதற்கான அறிகுறிகளில் ஒன்று. சில குழந்தைகள் 10 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    * சில குழந்தைகள் தங்கள் கைகளை பயன்படுத்தி மாடிப்படிகளில் ஏற முயற்சி செய்வார்கள். இந்த குழந்தைகள் தங்கள் கால்களை வைத்து வேகமாக நகர்வார்கள். இதை நீங்கள் காணும் போது உங்கள் குழந்தை சீக்கிரமே முதல் படி எடுத்து வைக்க போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    * குழந்தை அருகில் இருக்கும் நாற்காலி அல்லது சோஃபா போன்ற பொருட்களை பிடித்து இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பார்கள். கனமான பொருட்களை பிடித்து முன்னேறி செல்ல தொடங்குவார்கள்.

    *  பல குழந்தைகள் தங்களின் முழங்கால்களை வைத்து சமநிலையாக்கி குனிந்து எழுந்து நின்று நடக்க தொடங்குவார்கள். முதல் ஒரு காலை வைத்து ஊன்றி நின்று பின்பு அடுத்த காலை அடி எடுத்து வைத்து நடக்க பழகுவார்கள்.

    * குழந்தை நண்டு போல் ஊர்ந்து செல்லும் என்று சொல்வார்கள். அது தான் கிராப் வாக். அவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் பயன்படுத்தி ஊர்ந்து வேகமாக ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுவிடுவார்கள். சீக்கிரமே உங்கள் குழந்தை நடை பயில தொடங்க போகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

    * சுவற்றை பிடித்து அல்லது பெரியவர்கள் கையை பிடித்து நடக்க தொடங்குவார்கள். இது அவர்களுக்குள் நடப்பதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அவர்களின் இரண்டு கைகளையும் நாம் பிடித்து நடக்க உதவி செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் எண்ணுவார்கள். அதன் பிறகு ஒரு கையை விட்டு விட்டு நடக்க விட வேண்டும் இப்படியே தொடரும் போது அவர்கள் தாங்களாகவே நடை பயில தொடங்கிவிடுவார்கள்.

    ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் தெரிந்த உடன் முதல் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் பூரண குணம் அடைய முடியும். நினைவிருக்கட்டும் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும்.
    ஸ்ட்ரோக் அல்லது பக்க வாதம் ஒரு குடும்பத்தையே வேதனைக்குள்ளாக்கும் ஒரு கொடிய நோய். இருதய நோய்களுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கியமான உயிர்க்கொல்லி நோயாகவும் இது இருக்கின்றது.

    மூளையில் உள்ள ஒரு இரத்தக்குழாய் அடைபடும் போது ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் போது நிமிடத்திற்கு 19 லட்சம் நியூரான்கள் (நரம்பு செல்கள்) இறந்து போகின்றன. இதனாலேயே ஸ்ட்ரோக் வந்தவுடன் அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    ஸ்ட்ரோக்கில் பொன்னான நேரம்:

    ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் தெரிந்த உடன் முதல் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் பூரண குணம் அடைய முடியும். நினைவிருக்கட்டும் 3 முதல் 4.5 மணி நேரத்திற்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட்ட பின் இந்த காலத்தை நாம் பொன்னான நேரம் என கூறுகிறோம்.

    பொன்னான நேரத்தில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

    த்ரோம்போலிசிஸ் (Thrombolysis): த்ரோம் போலிசிஸ் என்பது மருந்துகள் மூலம் மூளையில் உள்ள அடைப்பை நீக்கும் ஒரு சிகிச்சையாகும். இதில் அல்டிபிலேஸ் (Alteplase) அல்லது டெனெக்டடி பிலேஸ் (Tenectelase) போன்ற மருந்துகள் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    த்ரோம்பேக்டமி (Throm bactomy): த்ரோம்பேக்டமி என்னும் சிகிச்சை ஆன்ஜி யோக்ராம் மூலம் மூளையில் உள்ள இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஒரு சிகிச்சையாகும். இது ஸ்ட்ரோக் வந்து 6 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டிய சிகிச்சை ஆகும்.

    ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்: 1. ஒரு கை அல்லது காலில் பலக்குறைவு / செயலிழப்பு. 2. வாய் கோணி போகுதல், 3. தலைச்சுற்று மற்றும் நடையில் தடுமாற்றம், 4. பேச்சு குளறுதல், 5. கண் பார்வை மங்குதல் / இரண்டு இரண்டாக தெரிதல் ஆகியவை ஆகும். இவற்றுள் ஏதேனும் ஒன்று திடீரென வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்.

    டாக்டர் P.முத்துக்குமரன்MD, DM, FSIN, PSநியூரோ சென்டர், திருநெல்வேலி-2. செல்: 8803788027.

    திராம்போலைசிஸ் (Thrombolysis) மற்றும் திரோம்பேக் டமி (Thrombectomy) 24 மணி நேரமும்
    சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.
    நீரிழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாரு மில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரிழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்து கின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.

    அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

    மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும். உதாரண மாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவை யாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தை யினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண் டும்.

    உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக் கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
    வீட்டின் கூரைமீது சுடுமண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வளர்க்கலாம். இப்படி கட்டுமான பொருட்களை கையாளும்போது வீட்டில் வெயிலின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
    வெயில் காலத்தில் வீட்டுக்குள் வசிப்பதே சிரமமான காரியம்தான். பகலில் சூரியனின் நேரடியான தாக்கம் இருக்கும். இரவில் நம் கான்கிரீட் கட்டிடங்கள் வெயிலை வாங்கிக் கொண்டு இரவில் உமிழும். அதனால் இரவு பகலைவிட சமாளிக்க முடியாததாக இரவு இருக்கும். இந்த வெயிலை முன் உணர்ந்து, அதைச் சமாளிக்கும் விதத்தில்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கைக்கு ஒத்துப்போகும் கட்டிடங்கள் கட்டினர்.

    நம் பகுதிகளிலேயே கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை கட்டுமானப் பொருட்களாக பயன்படுத்தினார்கள். அவைதான் முன்மாதிரியான பசுமை வீடுகள். வீட்டின் கழிவுகளைச் சேமித்து வைத்து வயலுக்கு உரமாகப் பயன்படுத்தினார்கள். இயல்பாகவே நம் முன்னோர்கள் உருவாக்கிய பசுமை இல்லம் இன்று புதிய தொழில் நுட்பமாகி இருக்கிறது. உலகம் முழுவதும் இயற்கைக்கு நெருக்கமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கும் படியான வீடுகளைக்கட்டி தங்கள் வாழ்வை நடத்திவந்தார்கள். வீடுகளின் பல பகுதிகளை மரங்கள் ஆக்கிரமித்து இருந்தன. கதவுகள், சன்னல்கள், வீட்டின் கூரைகள், வீட்டைப் பிரிக்க மரத்தடுப்புகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு மரங்கள் உதவின. மரப்பலகைகள் வெப்பத்தை கடத்தாது, அதைத் தடுத்து நிறுத்திவிடும்.

    எனவே அதிகமான வெயிலின் காரணமாக வெளியே வெப்பம் அதிகமாக இருந்தாலும்கூட வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் குளுகுளுவென்றிருக்கும். அதே போல் குளிர்காலத்தில் வீட்டின் வெளியே கடுமையான குளிர் நிலவும்போதும் வீட்டுக்குள் பெரிய அளவில் குளிர் தெரியாது. ஓரளவு கதகதப்பாகவே வீட்டின் தட்பவெப்பம் இருக்கும்.

    இப்போது நமது இல்லத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. நவீனக் கட்டுமான பொருட்களும் பெருகிவிட்டன. அதிகமான பணத்தைச் செலவு செய்து, கான்கிரீட்டையும், இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தி நமக்கான வீடுகளை கட்டுகிறோம். மரங்களின் பயன்பாட்டை குறைத்துவிட்டோம். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் சில வசதிகளைப் பெற்றுள்ளோம் என்றாலும் வெப்பத்தில் இருந்து விடுதலை பெற மறந்துவிட்டோம்.

    ஆனால் மரங்களாலான அந்தக் கால வீடுகளைக்கடந்து செல்லும்போது ஏதோ ஓர் ஏக்கம் வந்துசெல்கிறது. அந்தப் பழங்கால உத்தியைப் பயன்படுத்தி பலர் இப்போதும் வீடுகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டின் கூரைமீது சுடுமண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். தேவைக்காக அறைகளை பிரிக்க பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வளர்க்கலாம். இப்படி கட்டுமான பொருட்களை கையாளும்போது வீட்டில் வெயிலின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
    பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
    முடிமாற்று அறுவை சிகிச்சை (Hair Transplantation)

    தோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும். காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத எளிமையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ள லாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசிய மில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடி யின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.

    லேசர் முடிநீக்கம்:

    பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.

    இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள் ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும்். இது ஆண் பெண் இரு பாலருக்கும் செய்யகூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடை யாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.

    பரு தழும்பு நீக்குதல்:

    முகத்தில் வரக்கூடிய பரு தழும்புகள் இளம் வயதினருக்கு பெரும் கவலை அளிக்ககூடிய ஒரு பிரச்சனையாகும். (Fraxel 1550nm Erbium Glass) என்ற அதிநவீன சிகிச்சை முறைபடி முழுமையாக பரு தழும்புகளை நீக்கி விடலாம். இதற்கு 3 முதல் 5 முறை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. வலி மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது. மயக்க மருந்து தேவையில்லை.

    நரம்பு முடிச்சு நீக்குதல்:

    Varicose vein என்ற காலில் தோற்றும் தடித்த நரம்பு முடிச்சு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகுந்த உபாதை அளிக்க கூடிய ஒரு பிரச்சினையாகும்.

    இதற்கு எளிமை யான நிரந்தர தீர்வு லேசர் மூலமாக செய்யப்படும். இந்த லேசர் சிகிச்சை முறையானது அறுவை சிகிச்சை முறையில் நரம்பு முடிச்சுகளை நீக்குவதை விட பல வழிகளில் உயர்ந்த சிகிச்சை முறையாகும்.

    இந்த சிகிச்சை முறைக்கு Endovenous Laser Ablation என்ற பெயர் உண்டு. இந்த முறையில் நிரந்தரமாக பக்க விளைவுகள் இன்றி நீக்கிவிடலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவ மனையில் தங்க வேண்டியதில்லை. அறுவை சிகிச்சை முறையில் செய்யும்போது மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் மற்றும் வலி, விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. OP (Out patient) முறையில் இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். சில மணி நேரங்களே ஆக கூடிய இந்த சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம்.

    லேசர் முறையில் பச்சை குத்தியது நீக்குதல்:

    கருப்பு மற்றும் பல நிறங்களில் இருக்ககூடிய பச்சை குத்தியதை Q-Switched Nd Yag (Revlite, Spectra) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். 2 மற்றும் 3 முறை இந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் முழுமையாக பச்சை குத்தியதை நீக்கலாம். இந்த சிக்சைக்கு பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

    வலி கிடையாது மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    பிறப்பு மச்சம் நீக்குதல்:

    இரத்த குழாயில் உருவாகக் கூடிய சிகப்பு மச்சத்தை (Hemangioma) இதனை Pulsed dye Laser (V-beam) சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். இந்த சிகிச்சையை 1 அல்லது 2 முறை எடுக்கவேண்டும். இந்த சிகிச்சை பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சை முறைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

    Stretch marks மற்றும் ஆபரேஷன் தழும்பு நீக்குதல்

    ஆபரேஷன் தழும்புகள் மற்றும் உடலில் தோன்றும் Stretch marks பெண்களுக்கு டெலிவரிக்கு பின் ஏற்படக் கூடிய தழும்புகள் (டெலிவரி மார்க்ஸ்) இவற்றை Fraxel 1550nm Erbium Glass சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

    இந்த சிகிச்சையை 4 முதல் 5 முறை எடுக்கவேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் வலி கிடையாது. இ்ந்த சிகிச்சை முறை பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாகும்.

    அழகிய உடலமைப்பு மற்றும் உடல் கொழுப்பு நீக்குதல்

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் தோன்றும் தேவையற்ற கொழுப்பு மற்றும் உடலமைப்பு பெற Cryolipolysis சிகிச்சை முறையில் சிறந்த பலனை பெறலாம்.

    அறுவை சிகிச்சை இல்லாத அதிநவீன லேசர் சிகிச்சையின் மூலமாக வயிறு மற்றும் கை கால்களில் பகுதிகளில் உள்ள கொழுப்பு மற்றும் உடல் பருமனையும் அகற்றலாம். இந்த லேசர் சிகிச்சையின் மூலம் அழகிய உடலமைப்பு பெறலாம்.

    இந்த லேசர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க அவசியமில்லா இந்த சிகிச்சையை OP (Out patient) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம் . வலி இல்லாத பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத லேசர் சிகிச்சை முறையாகும்.

    மேலும் தொடர்புக்கு:-

    AKJN SKIN & LASER CENTRE, வண்ணார்பேட்டை திருநெல்வேலி. 0462- 2502718, 2501730.
    நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும்.
    தேவையான பொருட்கள்:
     
    பச்சரிசி - 100 கிராம்
    பயத்தம் பருப்பு - 25 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    கேரட் - 1
    தக்காளி - 1
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பிரியாணி இலை - 1
    கொத்தமல்லி - சிறிது
    புதினா - சிறிது
    தேங்காய் பால் - அரை கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

     
    கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து  கொள்ள வேண்டும்.
     
    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு  10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
     
    தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி  இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை  ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    சுவையான நோன்பு கஞ்சி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன.
    பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை கற்று தேர்ந்து வேலை கிடைப்பதற்கான போட்டா போட்டியில் இருந்து விடுபட்டு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி சம்பாதிக்கலாம். அத்தகைய படிப்புகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    * உணவு தொழில்நுட்பம்:

    அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளின் தன்மையை மதிப்பீடு செய்யும் படிப்பு இது. உணவை பதப்படுத்துதல், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல், பாதுகாப்பான முறையில் சேகரித்து வைத்தல், வினியோகம் செய்தல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். படிப்பை முடித்த பின்பு உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், ஓட்டல்கள், குளிர்பான தொழிற் சாலைகள், அரிசி ஆலைகள், மதுபான தொழிற் சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம்.

    * பால் தொழில்நுட்பம்:

    ‘டெய்ரி டெக்னாலஜி’ எனப்படும் இது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்ட படிப்பாக பார்க்கப்படுகிறது. பால் பொருட் களின் உற்பத்தி, தர பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பை முடித்ததும் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கலாம். மேலும் பால் பொருட்களை தயார் செய்து சொந்தமாக தொழில் செய்தும் வருமானம் ஈட்டலாம்.

    * நிகழ்ச்சி மேலாண்மை:

    எந்தவொரு விழாவாக இருந்தாலும் சரியான திட்டமிடுதலுடன் நேர்த்தியாக அதனை வழிநடத்தி செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. விழா வைபவங்களை சிறப்பாக நடத்தி முடிக்க கற்றுத்தரும் கல்வியாக அமைந்திருக்கிறது, ‘ஈவண்ட் மேலாண்மை’. திருவிழாக்கள், மாநாடுகள், வீட்டு விசேஷங்கள், சங்க நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என எந்த விழாவாக இருந்தாலும் மற்றவர்கள் நடத்து வதில் இருந்து தனித்துவமாக மிளிர வைக்கும் நுணுக்கங்களை மூன்று ஆண்டு படிப்பாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

    * பெட்ரோலியம் என்ஜினீயரிங்:

    இயந்திர யுகத்தை இயக்கும் இன்றியமையாத பொருளாக எரிபொருள் மாறிவிட்டது. அதுசார்ந்த படிப்புகளுக்கு தனி மவுசு இருக்கிறது. கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவாக இருக்கக் கூடிய ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தி தொடர்பான படிப்பு, பெட்ரோலியம் என்ஜினீயரிங். 4 ஆண்டு கால இந்த படிப்பை முடித்ததும் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிபொருள் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரியலாம்.

    * செல்ல பிராணிகள் பராமரிப்பு:

    வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் காட்டுபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய படிப்பு, ‘பெட் குரூமிங்’. சில பிராணிகள் சுகாதார குறைபாடு பிரச்சினையால் பரிதவிக்கும். அவற்றின் உணர்வுகளை வளர்ப்பவர் களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். செல்ல பிராணிகளை எப்படி வளர்த்து, பராமரிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் இந்த படிப்புக்கு இந்தியாவில் இப்போதுதான் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

    * தேநீர் ருசிபார்த்தல்:

    உலகம் முழுவதும் மக்கள் விரும்பி பருகும் பானங்களில் தேநீருக்குத்தான் முதலிடம். எந்த டீ ருசியாக இருக்கும் என்பதை அறிய நாவின் தேடுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கு தயாரிக்கப்படும் தேநீர் வகைகளை ரசித்து ருசித்து பார்க்க பலரும் தவறமாட்டார்கள். ‘டீ டேஸ்டிங்’ படிப்பு தேநீரை பருகி அதன் சுவையை மதிப்பீடு செய்யும் விதத்தை கற்றுத்தருகிறது.

    * தோட்டக்கலை திட்டம்:

    இதில் நர்சரி மற்றும் பண்ணை வீட்டு மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளடங்கி இருக்கின்றன. குறுகிய காலகட்டத்தை கொண்ட இந்த படிப்பில் பல்வேறு விதமான செடிகளை வளர்க்கும் விதம் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த செடிகளை எந்ெதந்த பருவ காலங்களில் வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக செடிகளை வளர்க்கும் தோட்டக்கலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று எண்ணும் அளவிற்கு சுவாரசியமிக்க பல்வேறு விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளலாம்.

    * மலையேற்ற படிப்பு:

    இயற்கையை நேசிப்பவர்கள் மேற்கொள்ளும் சாகச பயணமான மலையேற்றத்தை எப்படி மேற்கொள்வது என்பதை கற்றுத்தருகிறது, ‘மவுண்டெய்னரிங்’. இதில் பலகட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மலையேற்ற பயணத்தின்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கமாக கற்றுக் கொடுக்கிறார்கள். இதனை படித்து முடிப்பவர்கள் பயிற்சியாளராக பணிபுரியலாம்.
    சமையலறை பராமரிப்பு பணிகளை இல்லத்தரசிகள் எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
    சமையலறை பராமரிப்பு என்பது இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே சலிப்பை தருகிறது என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.

    சமையல் ‘பிளாட்பார்ம்’

    வீட்டின் கட்டுமான பணிகளின்போதே டிசைனர் மூலம் மாடுலர் கிச்சனில் அமைக்கவேண்டிய ‘கன்சீல்டு’ அதாவது சுவருக்குள் பொருத்த வேண்டிய பகுதிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெறுவது நல்லது. கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் வைக்க முடிவெடுக்கும் நிலையில் முதலிலேயே கிச்சன் மேடை அமைப்பது கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் ஆகியவற்றை அமைத்த பின்னரே கிச்சன் மேடை அமைக்கப்பட வேண்டும்.

    கியாஸ் சிலிண்டர்

    ஸ்டோரேஜ் அமைப்புக்கான பிளைவுட் கேபின்களை ஒன்றரை அங்குல அளவுக்கு வெளிப்புறம் நீண்டிருக்குமாறு சமையலறை கிரானைட் மேடையை அமைத்தால், சுத்தம் செய்யும்போது கசியும் நீர் காரணமாக பாதிப்புகள் உருவாகாது. மேலும், ‘கியாஸ் ஹப்புக்கு’ வரும் இணைப்பு குழாய் அடிக்கடி செக்-அப் செய்யும் வகையில் இருக்கவேண்டும். ஹப்புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமலும், கியாஸ் சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.

    ‘சிங்க்’ கவனம்

    பொதுவாக, மாடுலர் சமையலறை அமைப்புகளில் பூச்சிகள் மற்றும் எலிகள் நுழைவதற்கான வாய்ப்பு ‘சிங்க்’ மூலம் ஆரம்பிக்கிறது. அதனால், சமையலறை சிங்க் அமைப்பிலிருந்து வெளிப்புறம் செல்லும் பைப்புகளை கொசு வலை கொண்டு மூடிவிடலாம். அதன் குழாய் மூலமாக சாக்கடையில் இருந்து பூச்சிகளும் எலிகளும் சமையலறைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அனுபவமிக்க பிளம்பர் மூலம் ‘சிங்க் ஹோஸ்களில்’ கசிவுகள் ஏதும் இல்லாதவகையிலும், வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும்படியும் கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    வழக்கமாக சிங்க் அமைப்புக்கு கீழ்ப்புறம் உள்ள குப்பை தொட்டியை தினமும் அகற்றுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய ‘டஸ்ட்பின்’ கேபின் வழியாக நுண்கிருமிகள் உருவாகி ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு உண்டு. பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பலரது மாடுலர் சமையலறைகளை ‘டிஷ் வாஷர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. உள் அமைந்த ‘இன் பில்ட்’ வகை ‘டிஷ் வாஷர்’ பொருத்தும்போது சமையலறையின் பராமரிப்பு எளிதாக இருப்பதுடன் தண்ணீர் கசிவையும் தவிர்க்க இயலும்.

    சிம்னி பாராமரிப்புகள்

    சமைக்கும்போது பெரும்பாலானோர் சிம்னியை இயக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால், உருவாகும் பிசுபிசுப்பு சிம்னியில் படிந்து அழுக்காக மாறுகிறது. அதனால், ‘கேஸ் ஹப்புக்கு’ மேற்புறம் உள்ள சிம்னியை சுத்தம் செய்வது சிக்கலாக மாறி விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது சந்தையில் ‘ஆட்டோ கிளன் சிம்னி’ (Auto Clean Chimney) வகைகள் கிடைக்கின்றன.

    பொதுவாக, சிம்னியில் இருக்கும் ‘பில்டர்களை’ வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவிய பின்னரும், அவற்றில் பிசுபிசுப்பு இருக்கும் பட்சத்தில் திரவ கிளனர் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.

    பிளைவுட் அலமாரிகள்

    சமையலறையில் உள்ள கேபின்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாக இருந்தால், பாத்திரங்களை கழுவிய பின்னர் அவற்றை உலர்வதற்கு முன்னரே அடுக்கி வைப்பதால் அவை துரு ஏற்படலாம். அதனால், பிளைவுட் கப்போர்டுகளை அமைப்பதே நல்லது. கேபின் கதவுகளுக்கு பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கைப்பிடிகளின் தரத்தையும், பொருத்திய விதத்தையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீரின் ஈரப்பதம் காரணமாக கைப்பிடியில் துரு ஏறாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.

    சமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.
    இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் பணத்தை எடுத்து செல்வதில்லை என்பதால், கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கின்றன, வர்த்தக நிறுவனங்கள்.
    பொதுவாக ஒரு பொருளை வாங்குகிறபோது அதன் விற்பனை விலையில் இருந்து சற்றே விலை குறைத்து வாங்கினால்தான் இந்திய நுகர்வோருக்கு நிம்மதி. சிறிய கொள்முதல் என்றாலும் இந்திய மனங்கள் இதை எதிர்பார்க்கிறது. இந்திய வர்த்தகத்தில் இது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நுகர்வு கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஒரே விலை விற்பனை முறை. விலையில் பேரம் பேச இந்த விற்பனை முறையானது, வாய்ப்பு வழங்கவே இல்லை. பேரம் பேசி விலையை குறைக்கும் முறையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த நுகர்வு அனுபவமும், பலனும் தள்ளுபடி விற்பனையில் கிடைப்பதில்லை என்கின்றனர், நுகர்வோர். நமது பேரம் பேசும் திறனுக்கு ஏற்ப லாபத்தில் விட்டுக்கொடுக்கிறார்கள் வர்த்தகர்கள். அதாவது அவர்களது லாபத்தில் நாமும் பங்கு போட்டுக் கொள்கிறோம்.

    தரமான பொருளை பேரம் பேசி வாங்குவது எப்போதும் லாபகரமானதே என்கின்றனர், அனுபவசாலிகள். இந்த லாபம் மொத்தமாக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டும், அதுவும் சிறிய நிறுவனமாக இருந்தால் கிடைக்கும். பேரம் பேச வாய்ப்பில்லாத பெரிய நிறுவனங்களில் கிடைக்காது. ஆனால் பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வேறு வகையில் இழுக்கத்தான் செய்கின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு இந்த ஆதாயம் சென்று சேர்கிறது.

    இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் பணத்தை எடுத்து செல்வதில்லை என்பதால், கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கின்றன, வர்த்தக நிறுவனங்கள்.

    கேஷ் பேக் ஆபர், ரிவார்டு பாயிண்ட் என்கிற பெயர்களில் இந்த சலுகைகள் கிடைக்கின்றன. இதில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும், வர்த்தக நிறுவனங்களுக்கும் கூட்டு உள்ளது. விற்பனையில் இத்தனை சதவீதம் பணத்தை திரும்ப அளிக்கும் ஆபர்களால், வாடிக்கையாளரைகளை ஈர்த்து தங்கள் வர்த்தகத்தை நிறுவனங்கள் அதிகரித்துக் கொள்கின்றன.

    குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தில் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப, கிப்ட் வவுச்சர்களை சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணமாக குறிப்பாக சில பல்பொருள் அங்காடியில் 3500 ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், 500 ரூபாய் கிப்ட் வவுச்சர் என்றெல்லாம் அறிவிக்கப்படுகின்றன. இப்படி செலவு செய்யும் தொகையை பொறுத்து, கிரெடிட் கார்டு வகைக்கு ஏற்ப கிப்ட் வவுச்சர்கள் கிடைக்கும். இந்த கிப்ட் வவுச்சர் விவரங்களை சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவன இணைய தளங்களில் கொடுத்துள்ளனர். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது நமது எதிர்கால வருமானத்தை நம்பி கடன் வாங்குகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தான் வேண்டும்.
    கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் விழிப்புடன் இருக்க அனைவரும் வலியுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் தூங்கும் முறை பற்றிய சில தகவல்களை உங்களோடு இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
    முதல் ட்ரைமெஸ்டர்

    முதல் மூன்று மாதம் - கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருந்ததால் படுத்து உறங்க சிரமமின்றி இருந்தது. நான்கு மாதங்கள் தொடங்கியதிலிருந்து முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது ஏனென்றால் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். நான் சாதாரணமாக குப்புறப்படுத்து தூங்குவது வழக்கம். கர்ப்ப கால தொடக்கத்தில் குப்புற படுக்காமல் தூங்க சிரமப்பட்டேன். குப்புற படுப்பதால் கர்ப்பப் பையில் அழுத்தம் ஏற்படும் அதனால் கருவுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் அதை தவிர்ப்பது சிறந்து. அதே போல் மாதங்கள் கூட கூட அடிக்கடி புரண்டு படுப்பதும் நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து திரும்புவதே சிறந்தது.

    இரண்டாம் ட்ரைமெஸ்டர்

    நான்கு முதல் ஆறு மாதம் - நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.
    வயிறும் சற்று பெரிதாக இருக்கும். சிலருக்கு மல்லாந்து படுப்பது வழக்கம் கர்ப்ப காலத்தில் படுக்கும் பொழுது கருப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சு திணறல் மற்றும் ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. படுக்கும் பொழுது நம்முடைய உடம்பிலுள்ள முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய இடம் இல்லாமல் தவிக்க வாய்ப்புள்ளது. குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அதிக அழுத்தம் ஏற்படும் இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாகும்.

    மூன்றாம் ட்ரைமெஸ்டர்

    ஏழு முதல் ஒன்பது மாதம் - இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் கடைசி மூன்று மாதங்கள் அதிலும் முக்கியமாக 9 ஆம் மாதம் இடதுபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள். அதே போல் மாதங்கள் கூட கூட புரண்டு படுப்பதை தவிர்த்து எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் திரும்பி படுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது.

    சரியான முறை

    கர்ப்ப காலத்தில் உறங்குவதற்கு சரியான முறையை அறிந்து கொள்வதற்கான சில குறிப்புகளை காணலாம்.

    * கர்ப்பிணிகளுக்கு பக்கவாட்டில் படுப்பது சிறந்த நிலை. அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை இன்றி கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும். இடதுபுறம் சாய்ந்து படுப்பது ஏற்றது. ஒரே புறம் படுத்து உறங்கும் பொழுது கை தோள்பட்டை வலி வர  வாய்ப்பு உள்ளது. அதனால் மற்றொருபுறம் திரும்பிப் படுக்கும் பொழுது எழுந்து மீண்டும் மற்றொருபுறம் படுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் திரும்பி படுக்கும் பொழுது எழுந்து திரும்பி படுப்பது  அவசியம். தூக்கத்தில் இது மிகவும் கடினமான செயல் இருப்பினும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு கொடி சுற்றாமல் இருக்கும். அதேபோல் கால்களுக்கிடையில் ஒரு மிருதுவான தலையணையை வைத்து கொள்ளலாம்.

    * பக்கவாட்டில் படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல போர்வை போன்ற துணியை வயிற்றுக்கு அடியில் வைத்து சப்போர்ட் கொடுக்கலாம். முதுகிலும் பெரிய தலையணை ஒட்டி உறங்கும் பொழுது ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

    * உறக்கத்தில் மல்லாந்து படுத்துவிடுமோ, அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று அதிகமாக பயம்கொள்ள வேண்டாம். எப்போதுமே ஒரு விஷயத்தை பழகினால நம்மை அறியாமலேயே தூக்கத்தில் கூட நாம் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுப்போம். நானும் அப்படித்தான். பழக பழக நம்முடைய ஆழ்மனதில் பதிந்துவிடும். மற்றும் இதெல்லாம் நம் குழந்தைக்காக தானே செய்கிறோம் என்று நினைக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வோடு இருப்போம். அதனால் தூங்கும் போது பயம் கொள்ளாமல் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் தானாகவே வரும்.
    வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
    பெண்களால் விரும்பி அணியப்படும் அணிகலன்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவை வளையல்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வளையல்கள் வட்ட வடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் பல அற்புதமான வடிவங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட வளையல்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். பதினெட்டு, இருபத்திரெண்டு மற்றும் இருபத்தி நான்கு கேரட் தங்கத்தில் வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன.

    * கடாஸ்:- இவ்வகை வளையல்கள் மிகவும் சிக்கலான வடிவம் மற்றும் பாணியில் மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் இருப்பது போல் தயாரிக்கப்படுகின்றன. இவை முழுவதுமே தங்கத்தால் மட்டுமல்லாம் வைரம், ரூபி, புஷ்பராகம், முத்து மற்றும் எமரால்டு போன்ற விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு பார்வைக்கு கம்பீரமான தோற்றத்தை தருவதாகவும் பாரம்பரிய மற்றும் நவநாகரீக பாணியின் கலவையாகவும் காட்சியளிக்கின்றன.

    * பழங்கால வளையல்கள்:- இவ்வகை வளையல்கள் அணிவதையே பெருமையாகவும் கெளரவமாகவும் நினைக்கும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. பழங்கால ஆன்டிக் வளையல்களின் விலையானது மிக மிக அதிகம் என்பதால் அதைப்போலவே ஆன்டிக் வளையல்களை மிகவும் திறமையான பொன்நகை கைவினைக்கலைஞர்களை கொண்டு இப்பொழுது மிகப்பெரிய நகைக்கடைகள் தயாரித்து விற்பனை செய்கின்றன. பழங்கால வளையல்களின் வடிவமைப்பு வேலைப்பாடு மற்றும் அதில் பதித்திருக்கும் விலையுயர்ந்த கற்கள் இவற்றை கருத்தில் கொண்டு அவை உண்மையான ஆன்டிக் நகைகளா என்பதை அத்துறையில் பல வருடங்கள் அனுபவம் மிக்க நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

    * பாரம்பரிய வளையல்கள்:- திருமணங்கள், விழாக்கள் என்று வந்து விட்டால் பாரம்பரிய வடிவங்களில் வரும் வளையல்களையே பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இவை நேர்த்தியான தோற்றத்தை தருகின்றன. வளையல் முழுவதும் பெரிய பெரிய ஒற்றை கற்களைப் பதித்தும், சிறிய கற்கள் இரண்டு மூன்று வரிசைகளாக பதித்தது போன்றும், ரூபி மற்றும் மரகத கற்கள் பதித்து பூக்கள் டிசைனிலும், வளைவு டிசைன்களிலும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மயில்கள் இரண்டு இணைந்தும் அன்னப்பறவைகள் இரண்டு இணைவது போலவும் வரும் வளையல்கள் இன்றளவும் பெண்களிடையே விரும்பி வாங்கப்படும் பாரம்பரிய வளையல்களாகும்.

    * கங்கணங்கள்:- இன்றளவும் யார் கையில் அணிந்திருந்தாலும் ஒரு நிமிடம் அவர்கள் கைகளை திரும்பி பார்க்கத் தூண்டுபவை கங்கன்கள் என்று சொல்லலாம். மணிக்கட்டில் அழகாகப் பொருத்தி பெரும்பாலும் திருகு கொண்டு இரண்டு முனைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

    கம்பி வளையல்கள், பட்டை வளையல்கள், மெஷின் கட்டிங் வளையல்கள், கெட்டி வளையல்கள், முழுவதும் வைரம், ரூபி மற்றும் மரகதக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் ரூபி மட்டுமே பதிக்கப்பட்ட வளையல்கள் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள், முத்து வளையல்கள், பவள வளையல்கள், நவரத்தினம் பதித்த வளையல்கள், விலையுயர்ந்த வண்ணக்கற்கள் பதித்த வளையல்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கென்றே பிரத்யேகமாக வந்திருக்கும் வளையல்கள், சிமெட்ரிகல் வடிவ வளையல்கள் என்று வளையல் வகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

    இது போன்ற நகைகளை வாங்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

    * நகையின் தரத்தை பரிசோதித்த பின்பு வாங்குவது சிறந்தது.

    * நகை வாங்கும் கடையானது நம்பிக்கையான கடையாகவும், மக்களின் நம்பிக்கையை பெற்ற கடையாகவும் இருக்க வேண்டும்.

    * ஹால்மார்க் நகைதானா என்பதை கடைக்காரரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * அதே போல் வாங்கும் நகைகளை உபயோகப்படுத்தியபின் அதற்குரிய பெட்டிகளில் வைத்து எடுத்தால் அவை உடைந்து, வளைந்து போகாமல் வைத்து கொள்ள முடியும். குளிக்கும் பொழுது விலையுயர்ந்த நகைகளை கழற்றி வைத்து விட்டு குளித்தால் எண்ணெய், சோப்பு போன்றவை படியாமல் வைத்திருக்க முடியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நகைகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
    ×