என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • 4-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
    • ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    மான்செஸ்டர்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.

    இருப்பினும் அவரால் இங்கிலாந்துக்கு 5-வது போட்டியில் விளையாட முடியாது. அதன் காரணமாக அந்த போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு கிடைத்த அன்பையும், வாழ்த்துகளையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு உண்மையான பலத்தை அளித்துள்ளது. தற்போது எனது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்காக ஓய்வில் இருக்கிறேன்.

    என்னுடைய காயம் குணமடைந்து வருகிறது. இருந்தாலும் பொறுமையுடன் இருந்து முழு உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன். நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் என் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணமாகும். மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.

    என்று பதிவிட்டுள்ளார்.

    • மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
    • உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான கருத்து வரலாம். உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல. அப்படி எதிர்க்கவில்லை என்பதற்காக இந்துக்கள் இல்லை அர்த்தம் கிடையாது. நாம் இந்துக்கள். ஆனால், அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    • தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.
    • தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம்.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் மோதல் வெடித்தது. இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் தொலை பேசியில்நீண்ட நேரம் பேசினார்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சவார்த்தையில் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயா அந்நாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

    கம்போடியா பிரதமர் ஹூன் மானெட் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

    இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகள் இடையே அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

    மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது.
    • வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு.

    மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.

    வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.

    இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது.
    • இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலிற்கு என்ன சுகம் என பெயர் வைத்துள்ளனர். இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார் இவருடன் சேர்ந்து ஷ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடினார். 1000 ரசிகர்களுக்கு விருந்தளித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

    • பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.
    • வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    பதுமி:

    3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.

    இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் 'டிரா' செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் திவ்யா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.

    திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    • நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.
    • குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    சென்னை:

    எந்திர மயமான சென்னை மாநகரில் பஸ் போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் எளிமையான போக்குவரத்தாக பஸ் போக்குவரத்து திகழ்கிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3 ஆயிரத்து 233 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தினசரி சுமார் 40 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

    பெரும்பாலும் மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பஸ்களில் கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும். இத்தகைய நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.

    இவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 மகளிர் சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்று ஆலோசித்து உள்ளது.

    இதே போன்று, மாணவ-மாணவிகள் பஸ்களில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பஸ் சேவை இயக்கவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தேசித்துள்ளது.

    அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பஸ் சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பஸ் சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

    இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 4 கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பஸ் சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது தமிழக அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
    • இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இப்போட்டியில் 2 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

    • பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    பாலகசார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.
    • அவர்களுக்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர், பிரிட்டனில் 323 பேர், பஹ்ரைனில் 261 பேர் மற்றும் பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் சிறைகளில் உள்ளனர்.

    மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது.
    • சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

    5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசி களைத்துப் போயினர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    • தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு சென்றனர்.

    இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வீடு திருபெமினார்.

    மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×