என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாடெங்கும் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    காரைக்கால் :

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதையொட்டி அந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம். அதேசமயம், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன் தெரிவித்துள்ளார்.
    எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.
    எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.
    மதிப்பைத் தந்தருளும் ஸ்லோகம் :

    ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
    ஜஹ்நுர் நாராயணோநம:

    முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.

    ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
    ஸித்தித: ஸித்தி ஸாதன:

    வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.

    காமஹா காமக்ருத் காந்த:
    காம: காமப்ரத: ப்ரபு:

    வாழ்வில் வேலை வேலை, உத்தியோகம் உத்தியோகம், சம்பளம் குடும்பம் என்றெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு கம்பீரமான உயர்ந்தபதவி கிடைப்பதற்குத்தானே எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். அப்படிப் பதவி உயர்வைத் தரும் மகாவிஷ்ணு ஸ்லோகம் இது:

    வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
    ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

    செல்வம் தேவை. அது அழியாத செல்வமாக வளர்ந்திருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் வேண்டுதலும் பிரார்த்தனையும். அப்படி சம்பாதித்த செல்வத்தை அழியாத செல்வமாக்கும் அற்புத ஸ்லோகம் இது :

    அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
    மஹாபோகோ மஹாதந:
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திருவண்ணாமலை :

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்து சித்ரா பவுர்ணமியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சித்ரா பவுர்ணமி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.16 மணிக்குதொடங்கி 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை உள்ளது.

    இந்த சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கலெக்டர்சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வருவர்.
    மதுரை

    கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வருவர். மேலும் மீனாட்சி பட்டாபிஷேகம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கி, பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது.

    அதன் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வருவார். இவ்வளவு சிறப்பாக நடைபெறும் பட்டாபிஷேக விழாவை காண பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை. மேலும் இன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை, சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு மீனாட்சி அழைக்கும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் பிரசித்திபெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் வடக்கு திசை நோக்கி மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.

    வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
    இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும்.
    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார்.

    அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.

    இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு காலை 11.30 மணிமுதல் பகல் 1.30மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
    புனித ரமலானுக்கு ஷஹ்ரு ளியாபதுல்லாஹ்- இறைவனின் விருந்தினர் மாதம் என்ற தத்துவப்பெயரும் உண்டு.

    அரபி வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் புனித ரமலான் எல்லாம் வல்ல இறைவனின் விருந்தாளி மாதம் எனும் சிறப்பு பெயரை பெறுகிறது. விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.

    விருந்தாளிக்கென ஒரு மரியாதை இஸ்லாத்தில் உண்டு. புனித ரமலான் சாதாரண விருந்தாளியாக வரவில்லை. இறைவனின் விருந்தாளியாக நம் வசம் வந்துள்ளது. . அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை என்ன தெரியுமா? அந்த மாதம் முழுவதும் பகல் காலங்களில் நோன்பிருந்து இரவு நேரங்களில் நின்று வணங்குவதாகும்.

    அரபு இலக்கியத்தில் மூன்று வகையான விருந்தோம்பல்கள் உண்டு.

    1. தஃவதுல் அரப்: அரபிகளின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது

    2. தஃவதுல் அஷ்ராப் : கண்ணியமானவர்களின் விருந்து இது விருந்தினருக்கு முன்னிலையில் உணவை வைத்து விட்டு சென்று விடுவது. அவர்கள் விரும்பியவாறு சாப்பிட வசதியாக.

    3. தஃவதே கிலாப் : நன்றியுள்ள பிராணி (நாய்)யின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. உணவை வைத்து விட்டு செல்வதுமில்லை. மிஞ்சினால் உண்ணுவது.

    விருந்தினருக்கு மரியாதை செய்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம் என்பது நபிமொழியாகும்.

    இறைவனையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது விருந்தினருக்கு சங்கை செய்யட்டும் என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)

    விருந்தளிப்பது மூன்று நாட்களாகும். அதற்கு பிறகு அது தர்மமாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைஸ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) (நூல்:புகாரி)

    இப்ராகீமின் (அலை) கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (திருக்குர்ஆன் 51:24) என்று கூறி இறைவன் விருந்தின் மேன்மையையும் சொல்ல தவறவில்லை. விருந்தினரின் மகிமை அறிந்து புனித ரமலானில் மரியாதை செலுத்திடுவோம்.

    இறைவனின் விருந்தாளியாக வலம் வரும் மாதங்கள் இரண்டு. 1. பொது விருந்தாளி, 2. சிறப்பு விருந்தாளி. பொது விருந்தாளி மாதம் என்பது புனிதரமலான் மாதம் ஆகும். சிறப்பு விருந்தாளி என்பது புனித ஹஜ் மாதம் ஆகும்.

    நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அரை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி(ஸல்)அவர்கள் அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மை சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி)

    இறைவிருந்தினர் மூவர் ஆவர். 1. இறைவழியில் போராடும் போராளி, 2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜி, 3. உம்ரா பயணம் செய்யும் பிரியாணி என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : நஸயீ).

    புனித ரமலான் காலத்தில் நோன்பாளிகளையும், விருந்தினர்களையும் உபசரித்து இறையருள் பெறுவோம்.

    மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு உள் பிரகார தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை ராமர், லட்சுமணர், சீதாதேவி, அனுமன் உள்ளிட்ட உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு ராமர் லட்சுமணர் சீதாதேவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். கொரோனா பரவலை முன்னிட்டு தேர் பவனி கோவிலின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டம் களியக்காவிளை சிவபுரம் குந்நம் விளாகத்தில் ஆதிசிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டம் களியக்காவிளை சிவபுரம் குந்நம் விளாகத்தில் ஆதிசிவன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை, சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பர் சேரமான் பெருமாள் நாயனார் வந்து வழிபட்ட பெருமைக்குரிய கோவில் ஆகும்.

    கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 11 மணிக்கு மேக்கோடு ஹரீஷ் ஆன்மிக சொற்பொழிவு, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணி முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம்கால யாகசாலைபூஜை, மாலை 4 மணிக்கு யானை மீது பன்னிருதிருமுறை பெட்டகத்தை வைத்து களியக்காவிளை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமும், இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 8 மணிக்கு திருக்கைலாய செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தீபாராதனை, அன்னதானமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    ராமபிரானின் தூதராகவும், அவரது முதன்மை பக்தனாகவும் அறியப்படுபவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பல புராணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
    ராமபிரானின் தூதராகவும், அவரது முதன்மை பக்தனாகவும் அறியப்படுபவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பல புராணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் ஆஞ்சநேயர் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுப்பவராக அனுமன் அருள்செய்கிறார்.

    ‘ராமா’ என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னிதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் நைவேத்தியம் படைத்து ஆராதிக்க வேண்டும்.

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

    அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணி வித்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.
    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையான இக்கோவிலில் ராம நவமி உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இதனை தொடர்ந்து ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று ராமநவமியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரத்தில் 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பிரசன்ன வரதராஜபெருமாள் கோவிலில் சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து ஏகாந்தமாக நடந்தது.
    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பிரசன்ன வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி விழா நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ராம மந்திரத்தில் சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து ஏகாந்தமாக நடந்தது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன் ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் வேதப் பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×