என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் தான் இந்த அவினாசி. இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்தக் கோவிலில் தேவி கருணாம்பிகை, அவிநாசியப்பருக்கு வலதுபுறம் இருப்பது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. தேவாரத் திருத்தலங்களுல் அவினாசி அப்பர் கோவிலும் அடங்கும்.

    சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இத்தலத்தில்தான். மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து விட்ட பின்பு தான் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை இந்த அவிநாசியப்பர் அருளுகின்றார்.

    தல வரலாறு

    அவிநாசியப்பர் திருக்கோவில் குளத்தங்கரையில் சில அந்தண சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் அந்தக் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்தச் சிறுவனின் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னே ஒரு முதலையானது அந்த சிறுவனை விழுங்கிவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த சமயத்தில் இறைவனின் நண்பனான சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஊருக்கு வருகை தந்தார். இறைவனின் பாடல்களை பாடிக்கொண்டு அங்குள்ள அக்ரகாரம் உள்ளே நுழைந்தார்.

    வேத மந்திரங்கள் முழங்க ஒரு வீட்டில் பூணூல் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டிலேயே ஒரு அழுகைக் குரல் கேட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு தன் மகனை அந்த முதலைக்கு இறையாக கொடுத்த பெற்றோர்களின் அழுகை சத்தம் தான் அது. தன் மகன் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் பூணூல் சடங்கு நடந்திருக்கும் என்று எண்ணி அழுது கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், அங்கிருந்து நேராக அவிநாசியப்பர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடி அந்த குழந்தையை உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று, அந்த சிவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

    சுந்தரரின் வேண்டுதலுக்கு செவி கொடுத்த இறைவன், அந்த முதலைக்கு ‘ஐந்து வயது உடைய சிறுவன் மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேய அந்தப் பாலகன் முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். அவிநாசியப்பரின் கட்டளைப்படி அந்த முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டது. அந்த பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இந்த கோவில். எமன் வாயில் சென்றவனை கூட இந்த தலம் மீட்டுத்தரும் என்பது இதன் பொருள். நீண்ட ஆயுளை கொடுக்கக் கூடியவன் அந்த அவிநாசியப்பர். சிவபெருமானுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அப்படிப்பட்ட இறைவன்தான் அவிநாசியப்பர்.

    பலன்கள்

    தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.

    செல்லும் வழி

    கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி என்னுமிடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
    கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    அழகர்கோவில்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவை பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனாவால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோவிலுக்குள் நடந்து வருகிறது.

    அதே நேரத்தில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா எவ்வாறு நடத்தப்படும்? என்பது பற்றிய விவரம் வெளியிடப்படாமல் இருந்தது.

    மேலும் இந்த ஆண்டு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. இதையொட்டி கோவில் நிர்வாகத்தினர், திருவிழாவை எவ்வாறு நடத்தலாம்? என ஆலோசனை நடத்தினர். இதைதொடர்்ந்து, இந்த வருடமும் கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. வெளி பிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் ஆடிவீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    24, 25-ந் தேதிகளில் கோவில் வளாகத்திலேயே வழக்கமான திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். 26-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் எதிர்சேவை நிகழ்வு, கள்ளழகர் திருக்கோலம் நடைபெறும்.

    27-ந் தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகனம், ஆண்டாள் மாலை சாற்றி கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு குதிரை வாகனத்திேலயே ஆடி வீதியில் வலம் வருகிறார்.

    28-ந் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம் சேவையும், காலை 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும் நடைபெறும். 29-ந் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தலும் நடைபெறும். 30-ந் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கும், மே 1-ந் தேதி அர்த்த மண்டபத்தில் சேவையும், 2-ந் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும்.

    விழா நாட்களில் 30-ந்தேதி வரை, காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

    மேலும் திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், அர்ச்சனை, மாலை சாற்றுதலுக்கு இந்த வருடமும் அனுமதி கிடையாது. மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் தேரோடும் வீதிகள், கோவில் பஸ் நிலையம், தல்லாகுளம் வெங்கடாசலபதி கோவில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் பகுதிகளில் அகண்ட திரை மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான பத்துகாணி காளிமலை காளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் காளி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான பத்துகாணி காளிமலை காளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் காளி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காளிமலையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, தமிழகம் மற்றும் கேரளா பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சித்ரா பவுர்ணமியான வருகிற 27-ந்தேதி காலை 6.30 மணிக்கு தங்கள் வீட்டு வளாகத்தில் காளியம்மன் உருவ படத்தை வைத்து பூஜை செய்து அம்மனுக்கு பொங்கலிடும் வழிபாடு நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    தஞ்சை மேலவீதியில் உள்ள விஜய ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ராமர் கடவுள் அவதரித்த தினத்தை ராமநவமி யாக கொண்டாடி வருகிறார்கள். வியூட்டி ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடும் நேற்று நடைபெற்றது.

    தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஜயராமர் கோவிலில் நேற்று ராமநவமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சைஅரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட 88 திருக்கோவிலில் ஒன்றாக தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஜயராமர் திருக்கோவில் திகழுகிறது. இங்கு ஆண்டு தோறும் ராமநவமி சிறப்பு வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு ராமநவமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று காலை 9மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாலை ராமநவமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தஞ்சைஅரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபான்லே மற்றும் உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் செயல்அலுவலர் மாதவன். கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    தஞ்சை தெற்குவீதியில் உள்ள ஆதி பீமராஜகோஸ்வாமி சதனில் 300ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ராமநவமி விழா நடைப்பெற்று வருகிறது. இவ்வாண்டு ராமநவமி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.. தினமும் காலை ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெறும். மாலை ராமாயண பாராயணம் மற்றும் உபன்யாசம் நடைபெறுகிறது. முக்கிய ராமநவமி தினமான நேற்று சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடைபெற்றது. மாலை ராமரை பற்றிய சங்கீத சொற்பொழிவு நடைபெற்றது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழாவையொட்டி சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேதப் பண்டிதர்கள் உபநிஷத், புருஷாசுக்தம், ஸ்ரீசுக்தம், பூசுக்தம், நீலாசுக்தம், பஞ்ச சாந்தி பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    ராம நவமி விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடந்தது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடந்தது.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை திருப்பலிகள் நடைபெறும்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வழிபாட்டு தலங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு ஏற்ப கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாட்டு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன.

    இதுபற்றி ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை மாலை 5 மணி மற்றும் மாலை 6.15 மணிக்கு திருப்பலிகள் நடைபெறும். இந்த 2 வேளைகளில் ஏதேனும் ஒரு நேரத்தில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு பங்குத்தந்தை ஜான் சேவியர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
    திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும், என தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்தது. அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

    அதன் புத்தக பிரதியை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ெபற்றுக் கொண்டார்.

    அப்போது பன்வாரிலால் புரோகித் கூறியதாவது:-

    ஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என்பதை புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபிக்கிறது. இதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை ராம நவமி தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ராமரின் பிறப்பிடம் அயோத்தி ஆகும். அவரின் பக்தனான அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி ஆகும். ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. நான், அனுமனின் பக்தன். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    அறிஞர்கள் குழு அனுமனின் பிறப்பிடத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளது. அனுமனின் ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து, சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு அறிவேன். அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி கூறியதாவது:-

    அனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி என்பது ராமநவமியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் குழு புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளை சேகரித்து உறுதிப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடகங்களுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் புத்தக வடிவில் கொண்டு வரப்படும்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் அனுமனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது, மேலும் கிஷ்கிந்தா என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அனுமன் ஒரு ராஜ்யத்தை நடத்தியிருக்கலாம் என்றும், அனுமன் அஞ்சனாத்ரி மலையில் இருந்து அங்குச் சென்று சுக்ரீவனுக்கு உதவியிருக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது.

    ஆஞ்சநேயர்

    குஜராத், மராட்டிம், அரியானா ஆகிய மாநிலங்களில் அனுமன் பிறந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆந்திர மாநில அரசு ஆலோசனையின்பேரில் அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் ஒரு கோவில் கட்டப்படும்.

    எஸ்.வி. வேதப் பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான சன்னிதானம் சுதர்சனசர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான முரளிதர சர்மா, பேராசிரியர்கள் ராணி சதாசிவமூர்த்தி, ஜனமதி ராமகிருஷ்ணா ஆச்சாரியார், சங்கரநாராயணா, இஸ்ரோ விஞ்ஞானி குமார், முன்னாள் துணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளரும், எஸ்.வி. பல்கலைக்கழக உயர் இறையியல் துறை திட்ட அலுவலருமான டாக்டர் அகில்லெஸ் விபீஷன் சர்மா ஆகியோருக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-

    அறிஞர்கள் குழு 4 மாதங்களாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. வலுவான ஆதாரங்களை சேகரித்தது. கொரோனா ஆஞ்சநேயரின் பிறப்பிடம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமாறு ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து, ஒரு ஆண்டுக்கு முன்பு யோக வாசிஸ்தம் மற்றும் சுந்தரகாண்டம் ஓதத் தொடங்கினோம்.

    திருமலையில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து கொண்டிருப்பதால் அனுமனின் பிறப்பிடம் ஆதாரங்களுடன் தற்போது நிரூபிக்கப்படுவது ஏழுமலையானின் அருள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதாரா சர்மா கூறியதாவது:-

    சீதாதேவியிடம் அனுமன் கூறினார்

    அனுமனின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலும், பல புராணங்களிலும், வெங்கடச்சால மகாத் மியத்திலும், பல இலக்கியங்களிலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தில் அனுமனே தனது பிறந்த கதையை சீதாதேவியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அனுமான், அஞ்சனாதேவியிடம் தான் வாயுபகவானால் பிறந்தவன், என்று கூறினார்.

    மதங்க மகரிஷியின் கூற்றுப்படி, அஞ்சனாதேவி தவம் செய்ய வெங்கடாச்சலத்துக்குச் சென்றார், அஞ்சநேயசாமியைப் பெற்றெடுத்தார், எனவே மலைக்கு ‘அஞ்சனாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது.

    கம்ப ராமாயணம், வேதாந்த தேசிகன், தாளப்பாக்கம் அண்ணாமாச்சார்யா ஆகியோரால் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ட்டன் என்ற அதிகாரி கி.பி. 1800-ம் ஆண்டில் திருமலை பற்றிய தகவல்களை தொகுத்து, சவால்-இ-ஜவாப் என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அஞ்சனாத்ரி என்ற வார்த்தையை அஞ்சனாதேவி, ஆஞ்சநேயர் பிறப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து, திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கல்வெட்டு 1491-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதியும், 2-வது கல்வெட்டு 1545-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதைக் குறிப்பிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
    அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுரம்
    மாரியம்மன் ! !
    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
    திருவடிகளே சரணம் !

    ஓம் அம்மையே போற்றி
    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
    ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
    ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஆதார சக்தியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் இருள் நீக்குபவளே போற்றி
    ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
    ஓம் இடரைக் களைவாய் போற்றி
    ஓம் இஷ்ட தேவதையே போற்றி
    ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
    ஓம் ஈடிணை இலாளே போற்றி

    ஓம் ஈகை மிக்கவளே போற்றி
    ஓம் உமையவளே தாயே போற்றி
    ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
    ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி

    ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
    ஓம் ஏழையர் அன்னையே போற்றி
    ஓம் ஐங்கரத்தவளே போற்றி
    ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
    ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
    ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
    ஓம் கவுமாரித்தாயே போற்றி
    ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி

    ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
    ஓம் காக்கும் அன்னையே போற்றி |
    ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
    ஓம் குங்கும நாயகியே போற்றி |
    ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
    ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
    ஓம் கை கொடுப்பவளே போற்றி
    ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி

    ஓம் சக்தி உமையவளே போற்றி
    ஓம் சவுந்தர நாயகியே போற்றி
    ஓம் சித்தி தருபவளே போற்றி
    ஓம் சிம்ம வாகினியே போற்றி
    ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
    ஓம் சீதளா தேவியே போற்றி

    ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
    ஓம் செந்தூர நாயகியே போற்றி
    ஓம் செண்பகாதேவியே போற்றி
    ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
    ஓம் சொல்லின் செல்வியே போற்றி

    ஓம் சேனைத் தலைவியே போற்றி
    ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி

    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி
    ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
    ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி

    ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
    ஓம் தீமை களைபவளே போற்றி
    ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
    ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
    ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
    ஓம் தேசமுத்து மாரியே போற்றி
    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
    ஓம் தோன்றாத் துணையே போற்றி
    ஓம் நன்மை அளிப்பவளே போற்றி

    ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
    ஓம் நாக வடிவானவளே போற்றி
    ஓம் நாத ஆதாரமே போற்றி
    ஓம் நாகாபரணியே போற்றி
    ஓம் நானிலம் காப்பாய் போற்றி
    ஓம் நித்ய கல்யாணியே போற்றி
    ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
    ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி

    ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
    ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
    ஓம் நேசம் காப்பவளே போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பவளவாய் கிளியே போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
    ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
    ஓம் பீடை போக்குபவளே போற்றி
    ஓம் பீடோப ஹாரியே போற்றி
    ஓம் புத்தி அருள்வாய் போற்றி
    ஓம் புவனம் காப்பாய் போற்றி

    ஓம் பூமாரித்தாயே போற்றி
    ஓம் பூவில் உறைபவளே போற்றி
    ஓம் பூஜைக்குரியவளே போற்றி
    ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
    ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
    ஓம் மழைவளம் தருவாய் போற்றி
    ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
    ஓம் மந்திர வடிவானவளே போற்றி

    ஓம் மழலை அருள்வாய் போற்றி
    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    ஓம் மகமாயித் தாயே போற்றி
    ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
    ஓம் முத்தாலம்மையே போற்றி
    ஓம் முத்து நாயகியே போற்றி

    ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
    ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
    ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
    ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
    திருவடிகளே சரணம்!
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.

    இதன் காரணமாக இரண்டாவது நாள் நடக்கும் தங்கரதம் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சாமிக்கு திருமஞ்சனமும், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.

    மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    வசந்த உற்சவம் காரணமாக ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
    வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.
    குறுங்காலீஸ்வரர் கோவில் - கோயம்பேடு
    இறைவர் திருப்பெயர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்.
    இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி.

    ஸ்தல வரலாறு :

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர்.

    சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

    சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

    குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் - குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்….  மக்கள் என்ன நினைக்கிறார்கள்”  என்று கேட்டார்  ராமர்.

     ‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.  அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர்  சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.

    அன்று சீதை காட்டில்  விடப்பட்டார்.  அந்த காட்டில்  வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார்.  சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.  சீதையின் புதல்வர்களான லவன் - குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் - குசனும் தடுத்து நிறுத்தினர்.

    ‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு,  குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர்.  அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.

    ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர்  அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர்.

    லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர்.

    தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர்  காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.

    சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.  இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

    கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

    சிறப்புக்கள் :

    வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.

    இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

    காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.

    காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    போன்:  +91-44 - 2479 6237

    அமைவிடம் மாநிலம் :

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. 
    வடலூர் சத்திய ஞானசபையில் இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நேற்று இரவு 7.45 மணி அளவில் நடைபெற்றது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் ஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

    எனவே இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நோய் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜோதி தரிசனத்துக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சரணம் செய்திருந்தார்.
    கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உள்பிரகாரத்தில் நடந்தது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டுக்கான விழா கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக அரசு விதித்த விதிமுறைகளின்படி கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் யானை வாகனம், சிம்ம வாகனம், ரிஷபவாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெறவேண்டும். கொரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா வெளியே நடத்தப்படாமல் அரசின் உத்தரவின்படி உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

    அதன்படி சிறிய அளவிலான சப்பரத்தில் காலை 10.50 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதன்பின் மேளதாளங்கள் முழங்க 11 மணிக்கு சப்பரம் இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து 11.28 மணிக்கு சப்பரம் நிலையை வந்தடைந்தது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வருவார்கள். அதுமட்டுமின்றி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவை காணவருவார்கள்.

    ஆனால் அரசின் தடைஉத்தரவு காரணமாக குறைந்த அளவிலேயே நேற்று பக்தர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடிக்காணிக்கை செலுத்தியும், தெப்பக்குளத்திலிருந்து, அலகுகுத்தியும் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவிலின் முன்புறம் தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். தினமும் வரும் பக்தர்களின் கூட்டத்தை விட குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்ததால் சமயபுரம் நேற்று களைஇழந்து காணப்பட்டது.
    ×