search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் உள்பிரகாரத்தில் வலம் வந்த போது எடுத்த படம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் உள்பிரகாரத்தில் வலம் வந்த போது எடுத்த படம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா: சப்பரத்தில் அம்மன் வலம் வந்தார்

    கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உள்பிரகாரத்தில் நடந்தது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டுக்கான விழா கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக அரசு விதித்த விதிமுறைகளின்படி கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் யானை வாகனம், சிம்ம வாகனம், ரிஷபவாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெறவேண்டும். கொரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா வெளியே நடத்தப்படாமல் அரசின் உத்தரவின்படி உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

    அதன்படி சிறிய அளவிலான சப்பரத்தில் காலை 10.50 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதன்பின் மேளதாளங்கள் முழங்க 11 மணிக்கு சப்பரம் இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து 11.28 மணிக்கு சப்பரம் நிலையை வந்தடைந்தது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வருவார்கள். அதுமட்டுமின்றி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவை காணவருவார்கள்.

    ஆனால் அரசின் தடைஉத்தரவு காரணமாக குறைந்த அளவிலேயே நேற்று பக்தர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு முடிக்காணிக்கை செலுத்தியும், தெப்பக்குளத்திலிருந்து, அலகுகுத்தியும் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவிலின் முன்புறம் தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். தினமும் வரும் பக்தர்களின் கூட்டத்தை விட குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்ததால் சமயபுரம் நேற்று களைஇழந்து காணப்பட்டது.
    Next Story
    ×