search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருந்தாளியை உபசரிப்பது
    X
    விருந்தாளியை உபசரிப்பது

    விருந்தினர்களை சிறப்பிப்போம்

    விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.
    புனித ரமலானுக்கு ஷஹ்ரு ளியாபதுல்லாஹ்- இறைவனின் விருந்தினர் மாதம் என்ற தத்துவப்பெயரும் உண்டு.

    அரபி வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் புனித ரமலான் எல்லாம் வல்ல இறைவனின் விருந்தாளி மாதம் எனும் சிறப்பு பெயரை பெறுகிறது. விருந்தாளியை உபசரிக்கும் விஷயத்தில் நல்லதொரு பண்பாட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. விருந்தாளியை உபசரிப்பது போன்று இறைவனின் விருந்தாளியான புனித ரமலான் மாதத்தையும் உபசரித்து சங்கை செய்திட வேண்டும்.

    விருந்தாளிக்கென ஒரு மரியாதை இஸ்லாத்தில் உண்டு. புனித ரமலான் சாதாரண விருந்தாளியாக வரவில்லை. இறைவனின் விருந்தாளியாக நம் வசம் வந்துள்ளது. . அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை என்ன தெரியுமா? அந்த மாதம் முழுவதும் பகல் காலங்களில் நோன்பிருந்து இரவு நேரங்களில் நின்று வணங்குவதாகும்.

    அரபு இலக்கியத்தில் மூன்று வகையான விருந்தோம்பல்கள் உண்டு.

    1. தஃவதுல் அரப்: அரபிகளின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது

    2. தஃவதுல் அஷ்ராப் : கண்ணியமானவர்களின் விருந்து இது விருந்தினருக்கு முன்னிலையில் உணவை வைத்து விட்டு சென்று விடுவது. அவர்கள் விரும்பியவாறு சாப்பிட வசதியாக.

    3. தஃவதே கிலாப் : நன்றியுள்ள பிராணி (நாய்)யின் விருந்து. இது விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. உணவை வைத்து விட்டு செல்வதுமில்லை. மிஞ்சினால் உண்ணுவது.

    விருந்தினருக்கு மரியாதை செய்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம் என்பது நபிமொழியாகும்.

    இறைவனையும் மறுமை நாளையும் நம்புபவர் தனது விருந்தினருக்கு சங்கை செய்யட்டும் என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)

    விருந்தளிப்பது மூன்று நாட்களாகும். அதற்கு பிறகு அது தர்மமாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைஸ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) (நூல்:புகாரி)

    இப்ராகீமின் (அலை) கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (திருக்குர்ஆன் 51:24) என்று கூறி இறைவன் விருந்தின் மேன்மையையும் சொல்ல தவறவில்லை. விருந்தினரின் மகிமை அறிந்து புனித ரமலானில் மரியாதை செலுத்திடுவோம்.

    இறைவனின் விருந்தாளியாக வலம் வரும் மாதங்கள் இரண்டு. 1. பொது விருந்தாளி, 2. சிறப்பு விருந்தாளி. பொது விருந்தாளி மாதம் என்பது புனிதரமலான் மாதம் ஆகும். சிறப்பு விருந்தாளி என்பது புனித ஹஜ் மாதம் ஆகும்.

    நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அரை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி(ஸல்)அவர்கள் அதிகமதிகம் வாரிவாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மை சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி)

    இறைவிருந்தினர் மூவர் ஆவர். 1. இறைவழியில் போராடும் போராளி, 2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜி, 3. உம்ரா பயணம் செய்யும் பிரியாணி என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : நஸயீ).

    புனித ரமலான் காலத்தில் நோன்பாளிகளையும், விருந்தினர்களையும் உபசரித்து இறையருள் பெறுவோம்.

    மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×