என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்த ஆண்டு தேவநாதசுவாமி கோவிலில் நடக்க இருந்த சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும்.
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவதும், அதில் சித்ரா பவுர்ணமியன்று தேர் உற்சவம் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இதில் 26-ந் தேதி தேரோட்டம் நடக்க இருந்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-வது அலை காரணமாக தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடனும், பக்தர்கள் நலன்கருதியும், கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டு, அதனை தவறாது கடைபிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனால் இந்த ஆண்டு தேவநாதசுவாமி கோவிலில் நடக்க இருந்த சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான நித்திய பூஜைகள் மட்டும் நடைபெறும். மேலும் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், மறுநாள் (திங்கட்கிழமை) சித்ரா பவுர்ணமி என்பதாலும் பக்தர்கள் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்துதல், சுவாமி தரிசனம் ஆகியவற்றுக்காக கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
    மூலவர்:வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)
    அம்மன்/தாயார்:சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
    தல விருட்சம்:வில்வம்
    தீர்த்தம்:பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
    ஆகமம்/பூஜை :காமிக ஆகமம்
    புராண பெயர்:கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
    ஊர்:திருக்கொள்ளம்புதூர்

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.

    பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.

    பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே’ எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

    கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.

    பிரார்த்தனை

    சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    திருவிழா

    சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.

    திறக்கும் நேரம்

    காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் – 613 705 குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.
    போன்

    +91- 4366 – 262 239.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் கோவில் உள்ளேயே உற்சவர்கள் வலம் வந்தனர். அதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் கோவில் உள்ளேயே உற்சவர்கள் வலம் வந்தனர். கோவிலின் பிரதான அர்ச்சகர் ஆனந்ததீட்சிதர் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார்.

    முன்னதாக கோவிலில் புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், விசேஷ ஆராதனை ஆகியவை நடந்தது. இதையடுத்து ரக்‌ஷாபந்தனம், அக்னி பிரதிஷ்டை, மதுபர்கம், கன்யா தனம், மகாசங்கல்பம், மாங்கல்ய பூஜை ஆகியவை நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. கொரோனா வழிகாட்டுதல் படி நடந்தது.

    திருக்கல்யாண உற்சவத்தில் திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ்ரெட்டி, சூப்பிரண்டு என்ஜினீயர் ஜகதீஷ்வர்ரெட்டி, கோவில் சிறப்பு நிலைய துணை அதிகாரி பார்வதி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை வைபவ மண்டபத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவை நடந்தது. பின்னர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க வாசலில் ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.

    வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் முதல் பட்டாபிஷேகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சர்கா பாராயணம் செய்யப்பட்டது. அன்னப்பிரசாதம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
    பாடி சிவன் கோவில், கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை

    சனிப்பிரதோ‌ஷத்தையொட்டி சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பிரதோ‌ஷ நாளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்களின் போது 100 பேருக்கு மேல் கூடக் கூடாது அனைத்து கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து நாளை நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோ‌ஷ விழா எப்பொழுதும் வெகு சிறப்பாக நடத்தப்படும். ஆனால் நாளை நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவில் நாளை மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்த பிரதோ‌ஷ நிகழ்ச்சி யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இருப்பினும் சில சிவன் கோவில்களில் நாளை பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பாடி சிவன் கோவிலில் நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் ஆண்டாள்-பெருமாள் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் கடந்த 16-ந்தேதி சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி அரசு விதிமுறைகளின்படி உள்திருவிழாவாக நடத்தப்படுகிறது. நேற்று ஆண்டாள்-பெருமாள் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதையொட்டி ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்று வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ஆண்டுதோறும் பூரம் விழாவை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திருவனந்தபுரம், ஏப். 23-

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் பூரம் விழா நடைபெற்று வருகிறது. திருச் சூரில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவில் பூரம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதா கும்.

    ஆண்டுதோறும் நடை பெறும் பூரம் விழா கடந்த ஆண்டு கொரோனா பர வல் காரணமாக நடை பெற வில்லை. இந்த ஆண்டு கடு மையான கட்டுப் பாடுகளுடன் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்த முடிவு செய் யப்பட்டது.

    இதற்கான பட்டாசு வெடிப்பு ஒத்திகைகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதி காலை கோவில் பூரம் விழா தொடங்கியது.

    இதில் நெய்தில காவு பகவதி அம்மன் சிலையை தாங்கிய எர்ணாகுளம் கோவில் யானை கஜவீரன் சிவ குமார், வடக்கு நாதன் சிவன் கோவி லுக்குள் தெற்கு நடை வழியாக தும்பிகையால் தட்டி திறந்து உள்ளேச் சென்றது.

    இந்த ஆண்டு பூரம் விழாவில் வழக்கமாக நடைபெறும் யானை ஊர்வலங்கள் நடத்தப் படவில்லை. பூரம் விழாவில் பங்கேற்க வந்தவர்கள், கோவில் நிர்வாகிகள் அனை வரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்பித்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

    ஆண்டுதோறும் பூரம் விழாவை காண ஆயிரக் கணக்கானோர் வருவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். * * * திருச்சூர் பூரம் விழாவில் யானை மீது சாமி பவனி வந்த காட்சி.

    சிவனின் ரூபமான பைரவரை வழிபட்டால் நீங்கும் தோஷம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்து காணலாம்.
    பைரவரின் திருவுருவத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு ராசி என பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. அவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

    பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

    பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.

    பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்ன கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்ன கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
    இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
    “கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.

    ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)

    கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)

    நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.

    இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
    மதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர்கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. நாளை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடந்து வருகிறது.

    விழாவின் 8-ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு மீனாட்சி- சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு மேல் பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சை பட்டு உடுத்தி மரகத மூக்குத்தியுடன் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு, மனோரஞ்சித மலர் மாலை சாற்றி, தங்க, வைரத்தால் ஆபரணங்கள் பூட்டி சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    அதை தொடர்ந்து ஸ்தானிக பட்டர்கள் செந்தில், ஹாலஸ் ஆகியோர் வேத மந்திரங்களை ஓதினர். வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் என்னும் வைர கிரீடத்திற்கு காப்பு கட்டிய ரமேஷ் பட்டர் புனித நீரால் அபிஷேக தீபாராதனைகள் செய்தார். பின்பு 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல், பட்டத்து அரசியின் பிரதிநிதியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் மீனாட்சிஅம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

    அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு ஆடி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதன் மூலம் மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.

    பட்டாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் இந்த விழாவை காண வேண்டும் என்பதற்காக கோவில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்தனர். மேலும் பட்டாபிஷேகத்தில் மீனாட்சி அம்மனை நேரில் காண முடியாத ஏக்கத்தில் ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் காத்திருந்தனர்.

    பின்னர் ராணியான மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைத்ததை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் இன்று இரவு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (சனிக்கிழமை) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் பரகத்’ - ‘அபிவிருத்தி நிறைந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    இஸ்லாத்தின் பார்வையில் ‘அபிவிருத்தி’ என்பதற்கு அர்த்தம் ‘பொருள் குறைவு-பயன் அதிகம்’ அல்லது ‘சேவை குறைவு-நன்மை அதிகம்’, ‘வணக்கம் குறைவு-பிரதிபலன் அதிகம்’ என்பதாகும். இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும், ஒவ்வொரு தர்மத்திற்கும், ஒவ்வொரு நற்கருமத்திற்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது:

    ‘ஆதமின் மகன் நிறைவேற்றும் ஒவ்வொரு செயலுக்கும் பன்மடங்கு நன்மை வழங்கப்படும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கிலிருந்து ஏழு நூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படும். எனினும் நோன்பைத் தவிர. அது எனக்கு மட்டுமே உரியது. எனக்காக அவன் தமது உணவையும், தமது இச்சையையும் விட்டுவிடுகின்றான். அவனுக்கு நானே நேரடியாக கூலி வழங்குகிறேன்’ என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எவர் ரமலானில் நன்மைகளில் இருந்து ஏதேனும் ஒரு நன்மையை உபரியாக செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் ஒரு (பர்ளை) கடமையை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார். எவர் ரமலானில் ஒரு கடமையை நிறைவேற்றுகிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார்’. (நபிமொழி)

    அத்தகைய அபிவிருத்தி நிறைந்த இந்த மாதத்தில் ‘ஸஹர் நேரம்’ ஒரு அபிவிருத்தி நிறைந்த நேரமாக இருக்கிறது.

    ‘ஸஹர் உணவை உண்ணுங்கள். நிச்சயமாக ஸஹர் உணவுகளில் அபிவிருத்தி நிறைந்துள்ளதாக நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    ‘எவர் நோன்பு நோற்க நினைக்கிறாரோ அவர் ஏதேனும் ஒரு உணவைக் கொண்டு ஸஹர் செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)

    மேலும், ஸஹர் நேரத்தில் நிறைவேற்றப்படும் ‘தஹஜ்ஜத்’ எனும் நடுநிசி நேரத் தொழுகையும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. நோன்பு திறக்கும் நேரமான இப்தார் நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அந்தநேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் மறுக்கப்படாமல் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், பாங்கு மற்றும் இகாமத் இடையே உள்ள நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

    மொத்தத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது. ஒரு நன்மைக்கு பல மடங்கு நன்மை தரும் இந்த அபிவிருத்தி ரமலான் முழுவதும் வியாபித்திருக்கிறது.

    ‘எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 6:160)

    எனவே இந்த ரமலானில் அதிக நன்மைகளைச்செய்து அதற்கு பலனாக பல மடங்கு நற்கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்வோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
    ×