என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
    சென்னை :

    கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர்மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி அனைத்து மறை மாவட்ட ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஞாயிறு திருப்பலியை முந்தைய நாளான இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றுமாறு பங்குத் தந்தையர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருப்பின் இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நிகழ்வுகள் ஏதும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளி வைப்பது அல்லது சனிக்கிழமைக்கு மாற்றியமைப்பது சிறந்தது.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆயர் பேரவையின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படுகிறது.

    இது தொடர்பாக அந்தந்த பங்குத் தந்தையர்கள் இறை மக்களுக்கு வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். மூலமாக நேற்று தகவல் அனுப்பினர்.
    இன்று இரவு அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

    மதுரை, ஏப். 24-

    மதுரை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாதான். அதிலும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்த திருவிழா பாதிக்கப் பட்டது.

    இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோவில் விழாக்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. சிறப்புமிக்க விழாக்களை பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்தில் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந் தருளி கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் உலா வந்தனர்.

    அந்த நேரத்தில் பக்தர் கள் கோவிலுக்குள் அனு மதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம் 22-ந்தேதி நடந்தது. அன்று மதுரையின் அரசியாக மீனாட்சி அம் மனுக்கு பட்டம் சூட்டப்பட் டது.

    இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசு வரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நடந்தது. இவை அனைத்தும் கோவிலின் ஆடி வீதியில் பக்தர்கள் இன்றி நடந்தது.

    சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி யான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.

    வழக்கமாக இந்த விழா வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கோவிலில் உள்ள பழைய திருக்கல் யாண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதற்காக அந்த மண்ட பம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந் தது. வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மலர்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. யாகசாலை பூஜை களும் நடைபெற்றன.

    அதிகாலை யில் சுவாமி- அம்மன் புறப்பட்டு ஆடி வீதிகளில் வலம் வந்தனர். அதன் பிறகு கன்னி ஊஞ்சலாகி வைபவம் நடைபெற்றது. பின்னர் மீனாட்சி அம்மன்-பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓத திருமண சடங்குகள் தொடங்கின. காலை 8.35 மணி முதல் 8.50 மணிக்குள் சிவாச்சாரியார்கள் மாலை மாற்றி மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தை நடத்தினர்.

    மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து ராயர் வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பொதிந்த மாலைகள் அணிந் திருந்தார். சுந்தரேசுவரர் பட்டாடை அணிந்து ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தார்.

    தொடர்ந்து பட்டர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரருக்கு தீபாராதனை காட்டினர். அதன் பிறகு சுவாமியும், அம்மனும் பட்டாடை மாற்றுதல் மற்றும் மாலை மாற்றுதல் வைபவங்கள் நடைபெற்றன. சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பு 3 முறை காட்டப் பட்டது.

    தொடர்ந்து மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாணுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்பு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அப்போது மேடையின் மேல் புறத்தில் இருந்து அம்மன்-சுவாமி மீது மலர்கள் தூவப்பட்டது.

    வழக்கமாக திருக்கல் யாண திருநாள் அன்று கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களும், வீடுகளில் இருந்து தொலைக்காட்சி களில் பார்க்கும் பெண் பக்தர்களும் மீனாட்சி திருக் கல்யாணம் நடைபெறும் போது தாலி கயிற்றை மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டு கோவிலுக்கு வர அனுமதி இல்லாததால் வீட்டில் இருந்து தொலைக் காட்சி, யூ-டியூப் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்த்த திருமணமான பெண்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

    கொரோனா காரணமாக கடந்த வருடமும், இந்த வருடமும் பக்தர்கள் இன்றி மீனாட்சி அம்மன் திருக் கல்யாணம் எளிமையாக நடந்து முடிந்தது.

    முன்னதாக இன்று காலை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஏராளமானோர் அம்மன் சன்னதி புது மண்டபம் முன்பு திரண்டிருந்தனர். இன்று சித்திரை வீதிகளிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    திருமண நிகழ்ச்சிகள் முடிந்து காலை 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு கோவிலுக்குள் அனுமதிக் கப்பட்டனர். பழைய திருக் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இருந்த மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை காண பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அனந்த ராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வரு கிறார்கள்.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 17-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சாமி புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று வந்தன.

    காலசம்ஹார விழாவானது, தீவிர சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16-ல் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின் உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108-வது கோவிலாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மார்க்கண்டேயர் சிவபெருமானை தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார்.

    அப்போது மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசும் பொழுது, அது அவர் மீது மட்டும் விழாமல், சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது. உடனே கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். இதன் மூலம் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அப்போது மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக இருக்க அருள்பாலித்தார்.

    இந்த நிலையில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.
    மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்திஃக்பார்’ - ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவமன்னிப்பு வழங்கப்படும் பகுதியாகவும் அமைந்திருப்பதால், முடிந்தளவு நோன்பாளிகள் பாவத்திலிருந்து மீண்டு புண்ணியம் தேடி புனிதர்களாக மாற முயல வேண்டும்.

    பாவமன்னிப்பு வழங்கப்படும் ரமலான் மாதத்தில் ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறியதோ, பெரியதோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செய்த பாவங்களுக்கும், முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும்.

    ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்?’ (திருக்குர்ஆன் 3:135)

    ‘(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:106)

    ‘ஆதமுடைய மக்கள் யாவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவிகளில் சிறந்தவர்கள் பாவமீட்சி பெறக்கூடியவர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

    பாவமன்னிப்பு தேடுவதால் ஏற்படும் பயன்கள் வருமாறு:-

    1) மன அமைதி ஏற்படுகிறது, 2) உள்ளம் சாந்தம் அடைகிறது, 3) உடல் வலுவடைகிறது, 4) நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, 5) தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது, 6) மழை பொழிகிறது, 7) விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, 8) பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது, 9) பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது, 10) சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றது, 11) ஷைத்தானின் அதிருப்தியும், இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது, 12) கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியும், வசதியும் ஏற்படுகிறது, 13) இறைவனின் அன்பு கிடைக்கிறது, 14) உள்ளம் உயிர் பெறுகிறது, 15) அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, 16) மறுமையில் அபயம் கிடைக்கிறது, 17) வணக்க வழிபாடுகளில் இனிமை கிடைக்கிறது.

    இன்னும் இதுபோல ஏராளமான பலன்கள் கிடைப்பதால், புனித ரமலானில் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டு பலன்களை பெற முன்வரவேண்டும்.

    ‘இறைவா நீயே எனது எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக. உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது’ என்ற பிரார்த்தனையை ஒருவர் பகலில் ஓதி விட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாசியாவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)

    எனவே, புனித ரமலானில் இரவிலும், பகலிலும் பாவமன்னிப்பு வேண்டுவதில் தலைசிறந்த இந்த பிரார்த்தனையை அதிகம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாவங்களில் இருந்து மீட்சி பெற்று சொர்க்கவாசிகளாக மாறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    திருமலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் ஏழுமலையான் கோவிலில் அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    திருமலை

    திருமலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் ஏழுமலையான் கோவிலில் அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    இதனால் ஆர்ஜித சேவையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனமும், தரிசன முன்பதிவை ரத்து செய்த ஒருசிலருக்கு ரீ-பண்டும் வழங்கப்பட்டது.

    இன்னும் பல பக்தர்களுக்கு ஆர்ஜித சேவையில் சாமி தரிசனம் செய்யாமலும், சாமி தரிசனத்தை ரத்து செய்து விட்டு, அதற்குரிய ரீ-பண்டுவை திரும்ப பெறாமலும் காத்திருக்கின்றனர். அந்தப் பக்தர்களுக்கு இந்த (2021) ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் வசந்த விழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், வசந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
    நாகை மாவட்டம் திருகுவளை அருகே உள்ள எட்டுக்குடியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக வசந்த விழா நடைபெற்றது.அப்போது சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுப்பிரமணியர் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

    வசந்த விழாவில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், வசந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
    அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் வருகிற 30-ந் தேதி நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் ஆராதனையும், மே 1-ந் தேதி அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.
    அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் மாலை ஆராதனையும், மே 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.
    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலையில் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்வுகளை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கொரோனா பரவல் காரணமாக உள் திருவிழாவாக நடந்து வருகிறது.

    விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. 9-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைத்ததை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி கோவில் ஆடி வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் மீனாட்சி, சுந்தரேசுவரராக சிறுவர்கள் வேடமணிந்து, வில் வைத்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கும், சுவாமிக்கும் கையில் வில் வைத்திருப்பது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எப்போதும் மீனாட்சி திருக்கல்யாணம் வடக்கு-மேல ஆடி வீதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். ஆனால் இந்த முறை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இ்ந்த வைபவம் நடைபெற உள்ளது. எனவே அங்குள்ள மண ேமடை பல லட்ச ரூபாய் மதிப்பில் வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வரப்பெற்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    திருக்கல்யாண நிகழ்வுகளை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் 10 மணிக்கு மேல் 12.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்யலாம். மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் அனைத்தும் கோவில் இணையதளம் மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவிலை சுற்றிலும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

    முருகனே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூபோட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பொருள் உத்தரவு பெட்டியில் இருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்தநிலையில் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்த பவானி என்ற பக்தரின் கனவில் உத்தரவான குங்குமம் நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவது குறித்து பக்தர்கள் கூறும்போது “ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜிக்கப்படுவதால், அனைவரது இல்லங்களிலும் இனி வரும் காலங்களில் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது” என்றனர்.
    சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது.
    சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்து வந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் சனிப்பிரதோஷம் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.  தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.

    இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். சிவபெருமானுக்கும் அவரின் வாகனமான நந்திதேவருக்கும் உரிய அற்புதமான நாளில், பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வதும் அபிஷேகப் பொருட்களும் மலர்களும் சமர்ப்பித்து தரிசிப்பதும், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள்!

    சனிப்பிரதோ‌ஷத்தையொட்டி சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பிரதோ‌ஷ நாளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்திலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்த பிரதோ‌ஷ நிகழ்ச்சி யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இருப்பினும் சில சிவன் கோவில்களில் இன்று பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பாடி சிவன் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷம் நாள்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

    அதன்படி பிரதோ‌ஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது.

    மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் கொரோனா மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

    இதன் காரணமாகவும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம் சுந்தர சந்தன மகா லிங்கம் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
    சித்தூர் மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதி இல்லாததால் ஏகாந்தமாக நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியை கங்கணப்பட்டர் சீனிவாசபட்டாச்சாரியார் தலைமையில் வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் நடத்தினர்.

    முன்னதாக காலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை மூலவர்களுக்கும், காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 வரை உற்சவர்களுக்கும் அபிேஷகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை அர்ச்சகர்கள், ஊழியர்கள் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாடவீதிகளில் எடுத்துக்கொண்டு வலம் வந்தனர்.

    கொடிமரத்துக்கு கீழே உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோரை அலங்கரித்து வைத்திருந்தனர். உற்சவர்கள் முன்னிலையில் பகல் 11.30 மணியில் இருந்து 12.15 மணிவரை கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியை கங்கணப்பட்டரும், பிரதான அர்ச்சகர்களும் ஏற்றினர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டு குமார், கோவில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×