search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோதண்டராமசாமி
    X
    கோதண்டராமசாமி

    சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சித்தூர் மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதி இல்லாததால் ஏகாந்தமாக நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியை கங்கணப்பட்டர் சீனிவாசபட்டாச்சாரியார் தலைமையில் வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் நடத்தினர்.

    முன்னதாக காலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை மூலவர்களுக்கும், காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 வரை உற்சவர்களுக்கும் அபிேஷகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை அர்ச்சகர்கள், ஊழியர்கள் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாடவீதிகளில் எடுத்துக்கொண்டு வலம் வந்தனர்.

    கொடிமரத்துக்கு கீழே உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோரை அலங்கரித்து வைத்திருந்தனர். உற்சவர்கள் முன்னிலையில் பகல் 11.30 மணியில் இருந்து 12.15 மணிவரை கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியை கங்கணப்பட்டரும், பிரதான அர்ச்சகர்களும் ஏற்றினர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டு குமார், கோவில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×