என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை ரித்திகா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


    இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தின் படப்பிடிப்பின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரித்திகா சிங், "ஓநாய் மனிதனுடன் சண்டை போட்டது போலாகி விட்டது. படப்பிடிப்பின்போது கண்ணாடி இருக்கிறது என்று அனைவருமே எச்சரித்த போதிலும், நிலைதடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன்.


    காயமடைந்த ரித்திகா சிங்

    கண்ணாடி துகள்கள் ஆழமாக இறங்கிவிட்டன. சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.
    • வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    'மிச்சாங்' புயலால் மழை வெள்ளத்தில் சென்னையே நிலைகுலைந்தது. நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. இந்தநிலையில் நடிகர் விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

    அதில், 'அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015-ம் ஆண்டை விட இது மோசமாக இருக்கிறது. மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தயவு செய்து வெளியில் வந்து பிரச்சினைகளை சரி செய்து கொடுங்கள். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்துவிடாதீர்கள்', என்று விஷால் காட்டமாக பேசியிருந்தார். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயற்சிக்காமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    • நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
    • தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.

    இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

    ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • சென்னையில் உள்ள அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்து பொதுமக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
    • மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்கள் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில், 'எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் உள்ள என் வீட்டில் கூட ஒரு அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு இந்த நிலைமை என்றால் தாழ்வான பகுதிகளில் இதை விட மோசமானதாக இருக்கும்.

    2015ல் நடக்கும்போது எல்லாரும் ஒன்றாக இணைந்து இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடங்களுக்கு பிறகு அதைவிட மோசமான ஒரு நிலை ஏற்பட்டிருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அது எங்கே தொடங்கி எங்கே முடித்தார்கள் என்று தெரியவில்லை. நான் இதை ஒரு நடிகனாக கேட்கவில்லை, வாக்காளராக கேட்கிறேன்.

    சென்னையில் உள்ள அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்து பொதுமக்களுக்காக சேவை செய்ய வேண்டும். உங்கள் தொகுதிக்கு நீங்கள் உதவினால் பொதுமக்களுக்கு அது ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஏனென்றால் வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் என எல்லாரும் பயந்து இருப்பார்கள். இது அரசியல் தொடர்பான குற்றச்சாட்டு அல்ல, இது ஒரு தர்மசங்கடமான கேவலமான விஷயமாக நான் பார்க்கிறேன்.

    இது ஒரு முக்கியமான பதிவு. தயவு செய்து அரசாங்க அதிகாரிகள் வேலை செய்து மக்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் நாங்கள் வரி கட்டுகிறோம். நாங்கள் எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்து விடாதீர்கள். மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக இந்த நேரத்தில் உங்கள் முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • வரும் நாட்களில் பிற ஹீரோக்களின் சாதனைகளை அனிமல் முறியடித்து விடும்
    • இது கடவுளின் கருணை என உணர்ச்சிகரமாக பாபி தியோல் பதிவிட்டுள்ளார்

    கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தி திரையுலகில் தீபாவளி, பக்ரீத் போன்று விடுமுறை நாட்களில்தான் முன்னணி கதாநாயகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இது அவற்றின் வெற்றிக்கும் பெரிதும் உதவி வந்தது.

    ஆனால், அனிமல் திரைப்படம், விடுமுறை இல்லாத சாதாரண வார நாளில் வெளியிடப்பட்டும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த சில நாட்களில், இந்தி திரையுலகின் பிற முன்னணி ஹீரோக்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரின் இவ்வருட வெற்றி படங்களின் வசூலை அனிமல் தாண்டி விடும் என திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இது குறித்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பாபி தியோல் கண் கலங்கி தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.

    தென்னிந்தியா, வட இந்தியா என பேதங்கள் இன்றி மக்கள் விரும்பும் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவை வசூலை அள்ளி குவிப்பதும் நல்ல முன்னேற்றம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள திரைப்படம் 'பைட் கிளப்' .
    • இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'பைட் கிளப்'(Fight Club) திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




    • நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார்.
    • விஜயகாந்திற்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

    80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.


    நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த நாசர், "விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக 'விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்' என்று சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறினார்.

    • வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்' (Train). இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


    விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


    இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் ‘பருத்திவீரன்’.
    • அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்திவீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. 'பருத்திவீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.


    'பருத்திவீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி என பலர் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.


    பருத்திவீரன் தணிக்கை சான்றிதழ்

    இந்நிலையில் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் படத்தின் தயாரிப்பாளர் பெயர் இடம்பெரும் இடத்தில் இயக்குனர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம்பெரும் இடத்தில் டீம் ஒர்க் புரொடக்ஷன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

    இதனை பார்த்த ரசிகர்கள் தணிக்கை சான்றிதழில் ஞானவேல்ராஜாவின் பெயரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாததால், அமீர்தான் படத்தின் தயாரிப்பாளரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் இந்த புகைப்படத்திற்கு ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    • திரைத்துறையின் ஆளுமையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.
    • சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.


    சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி போஸ்டர்

    'சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'.
    • இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.


    சலார் போஸ்டர்

    இந்நிலையில், 'சலார்' படத்தின் டிரைலர் வெளியான 18 மணிநேரத்திற்குள் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 'சலார்' டீசரும் இதுபோன்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.


    • அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பருத்தி வீரன்’.
    • இப்படம் தொடர்பான பிரச்சனை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்தி வீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்தி வீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.


    இப்படம் தொடர்பாக இயக்குனர் அமீர்- ஞானவேல் இடையே கடந்த 16 வருடங்களாக பிரச்சனை புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு, சிவகுமார் குடும்பம் அமீர் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.


    உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு ஞானவேல் சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் ஏன் பொய் கணக்கு காட்டப் போகிறார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார்.

    சூர்யா, கார்த்தி எனக்கு வாழ்வு கொடுக்கவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தது அமீரும், பாலாவும் தான். உன்னை பற்றி நான் பேசப்போவது இல்லை. சூர்யா தான் பருத்தி வீரனில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கார்த்தி தாடி வைத்து வந்ததால் அவர் நடித்தார். நான் ஒரு டேக்கில் நடிப்பேன். ஆனால், கார்த்தி 15 டேக்கில் நடிப்பார். 15 டேக்கிற்கு யார் காரணம் கார்த்தி தான் காரணம்.


    அமீர் வீட்டு காசை சிவகுமார் குடும்பமும், சூர்யா குடும்பமும், கார்த்தி குடும்பமும் ஆட்டையை போட்டுள்ளது. இது அவர்களுக்கு தெரிய வேண்டும். ஏன் இப்படி வஞ்சகம் வைத்துள்ளீர்கள். ஞானவேல் ராஜா, அமீரின் பணத்தை கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசினார்.

    ×