என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பருத்தி வீரன்’.
    • இப்படம் தொடர்பான பிரச்சனை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்தி வீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்தி வீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.


    இப்படம் தொடர்பாக இயக்குனர் அமீர்- ஞானவேல் இடையே கடந்த 16 வருடங்களாக பிரச்சனை புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு, சிவகுமார் குடும்பம் அமீர் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.


    உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு ஞானவேல் சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் ஏன் பொய் கணக்கு காட்டப் போகிறார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார்.

    சூர்யா, கார்த்தி எனக்கு வாழ்வு கொடுக்கவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தது அமீரும், பாலாவும் தான். உன்னை பற்றி நான் பேசப்போவது இல்லை. சூர்யா தான் பருத்தி வீரனில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கார்த்தி தாடி வைத்து வந்ததால் அவர் நடித்தார். நான் ஒரு டேக்கில் நடிப்பேன். ஆனால், கார்த்தி 15 டேக்கில் நடிப்பார். 15 டேக்கிற்கு யார் காரணம் கார்த்தி தான் காரணம்.


    அமீர் வீட்டு காசை சிவகுமார் குடும்பமும், சூர்யா குடும்பமும், கார்த்தி குடும்பமும் ஆட்டையை போட்டுள்ளது. இது அவர்களுக்கு தெரிய வேண்டும். ஏன் இப்படி வஞ்சகம் வைத்துள்ளீர்கள். ஞானவேல் ராஜா, அமீரின் பணத்தை கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசினார்.

    • நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரத்னம் போஸ்டர்

    ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'ரத்னம்' படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வைரலானது.


    ரத்னம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷத்துடன் விஷால் நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரத்னம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை ஷீலா ராஜ்குமார் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களில் நடித்துள்ளார்.


    ஷீலா, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 'டூ லெட்', 'திரெளபதி', 'மண்டேலா', 'நூடுல்ஸ்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான 'கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.


    தம்பி சோழன் - ஷீலா ராஜ்குமார்

    இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்" என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சலார்'.
    • 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் 'நம்ம ரத்தத்திலேயே Violence இருக்கு' போன்ற வசனங்களுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன்.
    • இப்படம் டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

    அறிமுக இயக்குனர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.



    இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், certified rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

    அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இப்படம் டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'தலைவர் சொன்னாருனு சொன்னியே.. இன்னைல இருந்து நான் கமல்ஹாசன் Fan'போன்ற காமெடியான வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ரத்னம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான டீசரையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.
    • திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர்.

    நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டன குரல் எழுப்பினர்.

    இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.


    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா, "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.


    இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

    இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

    • நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    • இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்போது அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளையில் நிற புடவையில் அவர் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் 'அவள் என்னை சாய்த்தாலே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் மிஷ்கின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.


    இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின்' திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


    இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நடிகை சுப்புலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    கேரளாவில் பிறந்த ஆர்.சுப்புலட்சுமி, அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், திரைத்துறையில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


    முதன்முறையாக மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான சுப்புலட்சுமி அதன்பின்னர், கல்யாணராமன், ராப்பகல் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், விஜய்யின் பீஸ்ட், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


    87 வயதான நடிகை சுப்புலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் சமூக வலைதளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியதன் பேரில் மன்சூர்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் திரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என்று பல்டி அடித்தார். திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    மன்சூர்அலிகானின் பேச்சு தொடர்பாக திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கடிதம் அனுப்பி உள்ளார்.



    அதில் மன்சூர்அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டியதுள்ளது. எனவே நீங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, தாங்கள் அனுப்பியுள்ள கடித்தை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதா? இல்லை எழுத்துப்பூர்வமாக தபாலில் விளக்கம் அளிப்பதா? என்பது திரிஷாவின் விருப்பமாகும் என்று தெரிவித்தனர். இந்த கடிதத்தை அனுப்பி சில நாட்கள் ஆகிவிட்டது என்றும், இதற்கு திரிஷா விளக்கம் அளிக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்று திரிஷா விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • ’அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' என்பது குறிப்பிடத்தக்கது.


    ×