என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
    சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.

    இந்நிலையில், விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர். அந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.



    இது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தமிழகத்தில் அரசியல் கெட்டுப்போய் விட்டதாக ரசிகர்களுடனான கடைசி நாள் சந்திப்பின் போது, நடிகர் ரஜினி கூறினார்.
    தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவுகிறது.

    1990-களில் ஜெயலலிதாவுடன் திடீர் உரசல் ஏற்பட்ட போதே அவரது ரசிகர்கள், “தலைவா... ... அரசியலுக்கு வா... ... உன் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்று தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பொங்கி எழுந்த தன் ரசிகர்களை ரஜினி அமைதிப்படுத்தினார்.

    இதையடுத்து வந்த சட்ட சபை, பாராளுமன்றத் தேர் தல்களில் ரஜினி “வாய்ஸ்” கொடுத்தார். அந்த வாய்சுக்கு தனி முக்கியத்துவம் கிடைத் தது. என்றாலும் ரஜினி நேரடி அரசியலுக்கு வரவே இல்லை.

    இடையில் அவரது கவனம் முழுவதும் மகா அவதார் பாபாஜி மீது திரும்பியதால் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்தார். என்றாலும் அவரது ரசிகர்கள் சோர்ந்து விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “தலைவா அரசியலுக்கு வா” என்று அழைத்தபடி இருந்தனர்.



    இந்த நிலையில் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

    அதுவும் ரஜினி தனது ரசிகர்களை 2 கட்டமாக சந்தித்து பேச முடிவு எடுத்ததுமே அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அதை அதிகரிக்க செய்யும் வகையில் கடந்த 15-ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின் முதல் நாளன்று அவரது பேச்சு அமைந்தது.

    முதல்நாள் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினி அரசியல் குறித்து நிறைய பேசினார்.

    நான் அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன் என்று பேசியதால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.



    ரஜினியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்தும், எதிர்ப்பு கருத்தும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுடன் சந்திப்பு ரசிகர் களுடன் கடைசி நாளான இன்று மீண்டும் அரசியல் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ரசிகர்கள் இன்று மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இங்கு வருகை தந்துள்ள என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வளவு ஒழுக்கமாக இவ்வளவு கட்டுப்பாடாக இவ்வளவு நல்லா நீங்க வந்து இருந்தது நீங்கள் பழகியது, என்னை பார்த்தது அனைத்துக்கும் முதலில் என் நன்றியை சந்தோ‌ஷத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.



    ஒழுக்கம்தான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். ஒழுக்கம் இல்லை என்று சொன்னால் எந்த காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அதை அப்படியே கடைபிடியுங்கள்.

    நான் இந்த விழாவில் ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் 4, 5 வார்த்தை பேசினாலே சர்ச்சை ஆகிவிடுகிறது. எனவே இன்னும் பேசினால் மேலும் சர்ச்சையாகிவிடும். ஆகவே நேரம் வரும்போது சொல்ல வேண்டியதை சொல்வேன்.

    இங்கு நான் பேசியது 4 வார்த்தை. அது நான் என்னுடைய ரசிகர்களுக்கு சொன்னது. நான் அரசியலுக்கு ஒருவேளை வந்தால் நீங்கள் எப்படி இருக்கனும் என்று சொன்னது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    அதற்கு எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாமல் உலகமே முடியாது. அதில் அரசியலில் எதிர்ப்புதான் முக்கியம்.



    ஆனால் சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டரிலும் சில பேர் எழுதும் போது என்னை திட்டி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார்கள் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

    முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா? அவர் தமிழனா? அப்படிங்கிற கேள்வி எழுகிறது. எனக்கு இப்போது 67 வயது ஆகிறது. 23 ஆண்டுகள் மட்டுமே கர்நாடகத்தில் இருந்தேன். அதைவிட 44 ஆண்டுகள் தமிழகத்தில் தமிழனாகத்தான் இருந்திருக்கிறேன். உங்க கூடத்தான் இருந்தேன். கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும் என்னை நீங்கள் ஆதரித்து அன்பு கொடுத்து பேரும், புகழும், பணம் எல்லாவற்றையும் அள்ளி கொடுத்து என்னை நீங்கள் தமிழனாகவே ஆக்கி விட்டீர்கள்.

    கர்நாடகத்தில் மராட்டியனயாக இருந்த என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சை தமிழன். எனது மூதாதையர்கள், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள்.

    என்னை நீங்கள் எங்கேயாவது போ என்று தூக்கி போட்டால் இமயமலையில் போய்தான் விழுவேன். வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன். தமிழ் மக்கள் நல்ல மக்கள். நல்ல உள்ளங்கள் இருப்பதால் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ வைத்த தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.



    சரி மற்றவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்வது. தளபதி மு.க. ஸ்டாலின் எனது நீண்டகால நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவரை சுதந்திரமாக விட்டால் ரொம்ப நல்லா செயல்படுவார். செயல்பட விடமாட்டேன் என்கிறார்கள்.

    அன்புமணி ராமதாஸ் நல்லா படித்தவர். நல்ல வி‌ஷயம் தெரிந்தவர். நவீன மாக சிந்தனை செய்பவர். நல்ல கருத்துக்கள் சொல்கிறார். திட்டங்கள் வைத்திருக்கிறார்.

    திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். சீமான் போராளி. அவருடைய பல கருத்துக்களை பார்த்து கேட்டு பிரமித்து போய் இருக்கிறேன். எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் சிஷ்டம் (அமைப்பு) கெட்டு போய் இருக்கிறதே? ஜனநாயகமும் கெட்டு போய் இருக்கிறதே? அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. மக்களின் மனதை மாற்ற வேண்டும். அமைப்பை மாற்ற வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.



    ஒரு செடியை வளர்க்க வேண்டும் என்றால் குழி உரம், மண் கலந்து விதையை அதில் போட்டு மண்ணை மூட வேண்டும். நல்லா அழுத்தி அழுத்தி அமுக்க வேண்டும். வேர் நன்கு ஊற்ற வேண்டும். இப்படி செய்தால்தான் செடி நன்கு வளர்ந்து வெளியே வரும். நல்ல விதை வேண்டும்.

    பகவான் புத்தர் பயணம் போய் கொண்டு இருந்தார். அப்போது சிலர் வந்து அவரிடம் கன்னா பின்னா வென்று பேசுவார்கள். ஆனால் புத்தர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பார். அவர்கள் போன பிறகு ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள். என்று புத்தரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், என்னை திட்டினார்கள். என்னை வெறுக்கவில்லை என்றார்.

    பழைய காலத்தில் ராஜாக்கள் படை பலத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். மக்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் போர் என்று வரும் போது மண்ணுக்காக, மானத்துக்காக எல்லோரும் திரண்டு வருவார்கள்.

    எனக்கும் கடமைகள் இருக்கிறது. வேலை இருக்கிறது. அதுபோல் உங்களுக்கும் கடமைகள் இருக்கிறது. ஊருக்கு போங்கள். குடும்பத்தை கவனியுங்கள். போர் என்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    குழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது அவரது கணவர் ஆகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
    நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. இவர் டி.வி. நடிகர் ஆகாசை முதலில் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வனிதா, ஆகாசிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

    பின்னர் அவர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயதில் மகள் உள்ளார்.

    2012-ம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் ஆனந்த ராஜிடம் இருந்தும் வனிதா விவாகரத்து பெற்றார். ஆகாசிடம் இரு குழந்தைகளும் ஆனந்தராஜிடம் ஒரு குழந்தையும் பராமரிப்பில் உள்ளனர்.

    இதையடுத்து வனிதா, நடிகை அல்போன்சாவின் சகோதரர், ராபர்ட் என்பவருடன் காதல் வயப்பட்டு மணந்தார். ராபர்ட்டை நடிகராக அறிமுகம் செய்து “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், ரசிகர் மன்றம்“ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தராஜ், தனது குழந்தையை வனிதா கடத்தி சென்று விட்டதாக ஆல்வால் போலீசில் புகார் செய்து உள்ளார். அதில் திடீரென வீட்டுக்கு வந்த வனிதா குழந்தையை கடத்தி சென்று விட்டார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    நடிகை வனிதா கோவை புறநகர் பகுதியில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் இருந்து குழந்தையை மீட்க ஆந்திரா போலீசார் கோவைக்கு விரைந்து உள்ளனர்.

    நடிகை வனிதா குழுந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரசிகர்களுடனான கடைசி நாள் சந்திப்பின் போது ரசிகர்கள் முன்பு ரஜினிகாந்த் சூசகமாக பேசினார்.
    கடந்த 5 நாட்களாக பரபரப்பாக நடந்த ரஜின யின் ரசிகர்கள் சந்திப்பு இன்றுடன் முடிந்தது.

    முதல் நாள் சந்திப்பையே அதிரடியாக தொடங்கினார் ரஜினி. நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் (ரசிகர்கள்) ஏமாந்து போவீர்கள்.

    ஒரு வேளை ஆண்டவன் கட்டளைபடி அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப் பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியை முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் ரஜினியோ எதற்கும் பிடிகொடுக்காமல் ‘‘எல்லாம் அந்த ஆண்டவன் கையில்’’ என்று கூறி வந்தார்.



    ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதியாலும் அரசியல் களத்தில் வேகமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா வலுவாக காலூன்ற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

    இதற்கு ரஜினியை பயன்படுத்தி கொள்ள அக்கட்சி முடிவு செய்தது. இதற்கான முயற்சிகளும் தீவிரமானது. பா.ஜனதா தலைவர்கள் ரஜினிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி பா.ஜனதாவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுபற்றி ரஜினியிடம் கேட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார். பா.ஜனதாவின் அழைப்பு பதில் எதுவும் சொல்லாமல் ரஜினி பதிலை தவிர்த்திருந்தாலும் நேரடியான இந்த அழைப்பை அவர் ஏற்க மறுப்பதையே இது காட்டுகிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. பா.ஜனதா போன்று காங்கிரஸ் கட்சி ரஜினியை வளைத்து போட திட்டமிட்டுள்ளது.



    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையிலும் ‘‘என் வழி தனி வழி’’ என்று நிரூபிக்கும் வகையிலேயே ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு அமைந்துள்ளது. ரசிகர்களின் சந்திப்பின் முதல் நாளான கடந்த 15-ந்தேதி அன்றே அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சை ஊறுகாய் போலவே ரஜினி தொட்டு இருந்தார். ஆனால் கடைசி நாளான இன்று ரசிகர்கள் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

    இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும், தலைவர்கள் குறித்தும் கருத்துகளை தெரிவித்த ரஜினி, தேர்தலை மனதில் வைத்து தனது பேச்சை முடித்துள்ளார். ‘‘போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்’’ என்று ரஜினி கூறி இருக்கிறார். அவர் போர் என்று தேர்தலையே சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.



    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.

    ரசிகர்களுடனான ரஜினியின் முதல் கட்ட சந்திப்பே முடிந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அடுத்தடுத்து சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து அனைத்து ரசிகர்களின் கருத்துகளையும் கேட்டபின்னரே தனது அரசியல் பயணத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.

    கபாலி படத்தில் இடம்பெற்ற ‘‘வந்துட்டேனு சொல்லு’’ என்கிற ரஜினியின் வசனம் மிகவும் பிரபலம். இதனை ரஜினி ரசிகர்களும் இப்போது முணுமுணுக்க தொடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் 100-க்கு 90 சதவீதம் உறுதியாகி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
    ஷங்கர், சுரேஷ் இணை இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `இணையதளம்' படத்தின் விமர்சனம்.
    படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு இணையதளத்தில் நேரலையில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிரை இழந்து வரும் டெல்லி கணேஷின் உயிர் எவ்வாறு பிரிகிறது என்றால், இணையதளத்தில் அந்த வீடியோவை நேரலையில் பார்க்கும் பயனர்களிகன் எண்ணிக்கை கூட கூட அவர் மரண கட்டத்தை நெருங்குகிறார்.

    இவ்வாறாக அந்த வீடியோவின் வெயிட் அதிகரிக்க, இதுகுறித்த தகவல் அறியும் மாநகர போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடுகிறார். இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவுக்கு (Cyber Crime) உத்தரவு செல்கிறது. அந்த பிரிவின் பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போதே, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார்.



    இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவிற்கான இணைய பார்வையாளர்களும் அதிகரிக்க பத்திரிக்கையாளரும் உயிரிழக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து, ஈரோடு மகேஷ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

    இருந்தாலும் மீண்டும் பணிக்கு திரும்பும் உத்வேகத்தில், இந்த குற்றம் குறித்து கண்டறிய, மகேஷ் தன்னால் இயன்ற உதவியை செய்து வர அடுத்த வீடியோவில் கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவெக்றால், இதுவரை அந்த குற்றம் குறித்து கண்டறிய உதவிய ஈரோடு மகேஷ் மரண மேடையில் நிற்க, இந்த கொலைகளை செய்வது யார் என்பது தெரியாமல் கணேஷ் குழம்பி நிற்கிறார்.



    மகேஷை காப்பாற்றுவதற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஒருபுறம் போராட, அவரது முயற்சி பலிக்காமல், ஈரோடு மகேஷ்-ம் இறந்துவிடுகிறார். அடுத்ததாக மரண மேடைக்கு செல்லும் ஸ்வேதா மேனனை கணேஷ் வெங்கட்ராம் மீட்டாரா? இந்த சம்பத்திற்கு காரணம் யார்? ஏன் வரிசையாக இணைய கொலைகளை செய்கிறார்? அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது படத்தின் மீதிக் கதை.

    பொதுவாக போலீஸ் அல்லது ராணுவ வேடத்திலேயே அதிகளவில் நடித்திருக்கும், கணேஷ் வெங்கட்ராம், இப்படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்வேதா மேனன் தனது முதிர்ந்த நடிப்பால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அழகான போலீஸ் அதிகாரியாக திரையில் ரசிக்க வைக்கிறார்.

    சுகன்யா ஸ்ரீதரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. ஈரோடு மகேஷ் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், காமெடியில் தோல்வியையே சந்தித்திருக்கிறார். படம் முழுக்க காமெடிக்காக அவர் செய்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்திருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ் அவர்களது முதிர்ந்த நடிப்பால் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். படவா கோபி, கௌசிகா உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது.



    ஷங்கர், சுரேஷ் என இரு இயக்குநர்கள் இயக்கியிருந்தும், படம் சொல்லும்படியாக பெயர் வாங்கவில்லை. இணையதளத்தின் மூலமாக நடைபெறும் கொலையை தெளிவாக காட்டியிருந்தாலும், அதற்கான திரைக்கதையை சரிவர அமைக்கவில்லை. அது படத்தை பார்ப்பவர்களுக்கு சுளிப்பை உண்டாக்குகிறது. கொலை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நில இடங்களில் த்ரில்லர், திருப்புமுனைகள் இருந்தாலும் அதை காட்சிப்படுத்துவதில் தவறியது படத்திற்கு பலவீனம். பல இளம் இயக்குநர்கள் அவர்களது முதல் படத்திலேயே சிறிய விஷயங்களை காட்சிப்படுத்தி வெற்றி பெற்று, தமிழ் சினிமாவில் ஒரு நிலையான பெயர் வாங்கும் நிலையில், இரு இயக்குநர்கள் இணைந்தும் படத்திற்கு முழுமையை அளிக்க தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், அரோல் கோரெலியின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `இணையதளம்' வேகமில்லை.
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என நாமக்கல்லில் நடிகர் ராதாரவி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    தமிழகம் முழுவதும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற சினிமா படம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்து உள்ளார். இயக்குனர் ஐக் இயக்கி உள்ளார். இந்த படம் வெளியாவதை தொடர்ந்து நடிகர் ராதாரவி மற்றும் இயக்குனர் ஐக், நடிகர் ஜீவா ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தனர். சாமிதரிசனம் செய்த பின்னர் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.



    இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. தற்போது பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வில் இருக்க எனக்கு தகுதி இல்லை என கருதுகிறேன்.

    பொதுமக்கள் கருத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என உள்ளது. அவருக்கு எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே நானும் அந்த கருத்தை சொன்னேன். தற்போது தி.மு.க.வின் கோட்டையில் இருந்து அந்த கருத்தை தெரிவித்து வருகிறேன். அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் யுவன் - ஸ்ராவியா இணைந்து நடிக்க கார்த்திகேயன் சார்பில் மேக் 5 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் முன்னோட்டம்.
    கார்த்திகேயன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விளையாட்டு ஆரம்பம்’.

    இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ் கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத், அனுஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - அருண்மொழி சோழன், இசை - ஸ்ரீகாந்த் தேவா

    கலை - ஏ.எஸ்.சாமி, நடனம் - பாபி, தினேஷ், இருசன் , அபீப், ஸ்டண்ட் - ஹரிதினேஷ், எடிட்டிங் - எஸ்.பி.அகமது .

    கதை - பெரோஸ்கான், தயாரிப்பு - ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன். திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன்.



    படம் பற்றி இயக்குனர்கள் கூறியது..

    “இது சதுரங்க வேட்டை மாதிரியான படம். ஆனால் சதுரங்க வேட்டை ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான வி‌ஷயங்களை பதிவு செய்தது.

    இந்த படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான வி‌ஷயங்களை பதிய வைத்திருக்கிறோம். ஒரு நாடு வல்லரசாக உருவாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர்மறையான வி‌ஷயங்கள் தான் படத்தின் மையக்கரு”.

    படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களிலும், பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன.
    ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று கூறியுள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். 

    ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். 

    அவர் பேசியதாவது:-

    45ஆண்டுகாலமாக என்னை வாழவைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது.

    அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்ப்பார்க்கவில்லை. மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல நிர்வாகி. சீமான் ஒரு போராளி. அவரது சில கருத்துகளை கேட்டு நான் பிரமித்து போயிருக்கிறேன். அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். விவரம் தெரிந்தவர். தலித் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பவர் திருமாவளவன்.

    போர் வரும் போது களத்தில் இறங்குவேன் இந்த மண்ணுக்காக; அதுவரை பொறுமை காப்போம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன.
    பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன.

    உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.  

    இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

    இரு மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவி பக்சந்த்கா வரவேற்பு தெரிவித்துள்ளார். 
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    வருகிற மே 26-ல் உலகெங்கும் வெளியாக இருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாறு படத்தில் `பாகுபலி-2' படத்தின் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
    உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 



    இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார். இதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். என்னை பெரியதாக யோசிக்க வைத்த இரு பிரபலங்களான சச்சின், ஏ.ஆர்ரகுமான் இணைந்துள்ள படத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் `பாகுபலி-2' படத்தின் தமிழ் பதிப்பிற்கு, கார்க்கி வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் மொழியின் சிறப்பினைக் கூறும் படமாக `சங்கமித்ரா' படம் உருவாக இருப்பதாக இப்படம் குறித்த `சங்கமித்ரா' படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா' படக்குழு, அந்த விழாவில் பங்கேற்பவர்கள் அறியும் விதமாக படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



    அதில், 8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம், சங்கமித்ரா என்னும் பதுமையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சங்கமித்ரா என்ற அழகி, அவளது ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவள் மேற்கொள்ளும் பிரச்சனைகள், துயரங்களை கூறும் கதையாக இப்படம் உருவாக உள்ளது.

    அதுமட்டுமின்றி அவளது நாட்டை சுற்றியுள்ள ராஜ்ஜியங்கள், அதன் பெருமைகள், உறவுகள், அதன் பாரம்பரியத்தை உள்ளடக்கிய இப்படம் இரண்டு பாகமாக உருவாக இருக்கிறது. தொன்மையான தமிழ் மொழிக்கு இப்படம் சமர்ப்பணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



    இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ×