என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்காக கவிஞர் வைரமுத்து ரத்தம் என் ரத்தம் என்ற அறிமுக பாடலை எழுதியிருக்கிறார்.
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்து வரும் படம் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட 3 பேர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

    இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ல் வெளியாக இருக்கிறது.
    இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.

    இப்படத்தின் இரு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டப்பிங் பணிகளில் சிம்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சிம்புவின் அறிமுக பாடலை 7 முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

    "ரத்தம் என் ரத்தம்" என்ற வரிகளுடன் தொடங்கும் அப்பாடல் `படையப்பா' படத்தில் இடம்பெறும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு" என்ற பாடல் போன்று ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் என்று படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இப்பாடலுக்கான படிப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
    எஸ்.சாம் இம்மானுவேல் இயக்கத்தில் சபாபதி - லுகுனா அஹமது - பிளாக் பாண்டி நடிப்பில் உருவாகியிருக்கும் `கேக்கிறான் மேய்க்கிறான்' படத்தின் விமர்சனம்.
    பிளாக் பாண்டி தன் நண்பர்களோடு இணைந்து, தான் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பென்சன் வாங்கித் தருவதாகவும் கூறி, ஜோதிலட்சுமியை முன்னிருத்தி பலரிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டு ஊரை காலி செய்கின்றார். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஜேதிலட்சுமியை திட்ட அவமானம் தாங்காமல் ஒருகட்டத்தில் அவர் இறந்து விடுகிறார்.

    அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்ற பாண்டி மற்றும் அவனது நண்பர்கள், அந்த பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்க முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை அதே ஊரில் வசிக்கும் நாயகனான சபாபதியிடம் தெரிவிக்க, போட்டோகிராபி மீது ஈர்ப்புக் கொண்டிருக்கும் சபாபதி, அந்த பணத்தை வைத்து ஒரு ஸ்டூடியோ தொடங்கலாம் என்று கூற ஒரு ஸ்டூடியோவை தொடங்குகின்றனர்.



    ஆனால் மக்களிடையே அந்த ஸ்டூடியோ வரவேற்பை பெறாததால், ஒரு மாடலை அவர்களின் ஸ்டூடியோ விளம்பரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்கின்றனர். இவ்வாறாக பெரிய மாடலை தேர்ந்தெடுத்தால் அதிக பணம் செலவாகும் என்பதால், உள்ளூர் பூக்காரியான ஜாங்கிரி மதுமிதாவை மாடலாக நடிக்க வைத்து பிரபலப்படுத்துகின்றனர்.

    மாடலிங்கில் நாட்டத்துடன் இருக்கும் நாயகி  லுகுனா அஹமதின் தோழி அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள். இதையடுத்து லுகுனா அஹமதுடன் சென்ற அவளது தோழி அந்த ஸ்டூடியோவில்  போட்டோ எடுத்துக் கொள்கிறாள். லுகுனா
    அமீரை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது காதல் கொண்ட சபாபதி, லுகுனாவுக்கு தெரியாமலேயே அவளையும் போட்டோ எடுத்து அனுப்பிவிடுகிறான். இதையடுத்து அந்த போட்டோ குறித்து சபாபதியிடம் லுகுனா கேட்கும் போது, லுகுனாவை காதலிப்பதாக சபாபதி கூற, ஒரு கட்டத்தில் நாயகியும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.



    இந்நிலையில், லுகுனாவின் தந்தையும், காவல்துறை ஆணையருமான ஆடுகளம் நரேனிடம் தனது காதல் பற்றி லுகுனா கூறுகிறாள். இதையடுத்து நரேன், சபாபதியை நேரில் அழைத்து வர சொல்கிறார். நரேனை பார்க்க சபாபதி, பாண்டியுடன் செல்கிறார். அங்கு பாண்டியை பார்த்த நரேன், இவனால் தான் தனது அம்மா ஜோதிலட்சுமி இறந்துவிட்டதாகக் கூறி அவனை பிடிக்க செல்லும் போது, பாண்டி அங்கிருந்து தப்பித்து செல்ல, சபாபதியை பிடித்து நரேன் விசாரிக்கிறார்.

    அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கதறியும், சபாபதியின் பேச்சைக் கேட்காத நரேன் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாரா? சபாபதி - லுகுனா அஹமதின் காதல் வெற்றி பெற்றதா? பாண்டி என்ன ஆனான்? கடைசியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.



    நாயகன் சபாபதி கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லுகுனா அஹமது அழகான தேவதையாக திரையில் பளிச்சிடுகிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுக்க காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். எனினும் ஒரு சில இடங்களிலேயே அவரது காமெடி பலித்திருக்கிறது. ஆடுகளம் நரேன், ரேகா சுரேஷ், ஷாலு, ஜாங்கிரி மதுமிதா என மற்ற அனைவரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    இப்படத்தின் மூலம் நட்பு வேண்டும், நல்ல நட்பு வேண்டும், நம்மை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் நட்பினை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சாம் இம்மானுவேல்.

    டி கார்த்திக் பாலாவின் ஒளிப்பதிவும், ஆதித்யா மகாதேவனின் இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக அஷ்மிதா ஆடும் அந்த பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `கேக்கிறான் மேய்க்கிறான்' ஏமாற்றுகிறான்.
    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை குறி வைத்தே ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    அரசியல்வாதியாக இல்லாமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினி.

    1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. பாட்ஷா படவெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கள் புயலை கிளப்பியது.

    அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ஆதரித்து ரஜினி கொடுத்த வாய்ஸ் அக்கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் அரசியல் களத்தில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ரஜினி பேசப்படுபவராகவே இருந்து வந்துள்ளார்.

    இதனால் தேர்தல் நேரங்களில் ரஜினியின் வாய்ஸ் யாருக்கு? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகளும் ரஜினியின் ஆதரவை பெறுவதற்கு துடியாய் துடித்தன. இதனை புரிந்து கொண்ட ரஜினி, தேர்தல் நேரங்களில் ஊடகங்களை சந்திப்பதையே தவிர்த்தார்.

    ஆனால் திரைப்படங்கள் மூலமாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வந்தார். ‘‘என் வழி... தனி வழி’’, ‘‘நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’’ என்பது போன்ற அரசியல் அனல் தெறித்த வசனங்களே இதற்கு உதாரணமாகும். இப்படி திரைப்படங்கள் மூலமாக ரஜினி தனது நீண்ட அரசியல் பயணத்தை தொடந்து கொண்டே இருந்தார்.


    ஒவ்வொரு முறையும் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதெல்லாம் எல்லாம் அந்த ஆண்டவன் கையில் இருக்கிறது என்றே ரஜினி பதில் அளித்து வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லப்பா... அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன்னு தெளிவா சொல்லிட வேண்டியது தானே என்று பொதுமக்களே சலித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது ரஜினியின் பலவீனமாகவே பார்க்கப்பட்டது.

    இப்படி 1996-ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்த ரஜினி தற்போது அரசியலில் குதிக்க ஆயத்தமாகி விட்டார்.

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதே போல தி.மு.க. தலைவர் கருணாநிதியும் முதுமை... உடல் நல கோளாறு ஆகியவற்றால் செயல்படாமல் இருக்கிறார்.

    இப்படி அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் இடம் காலியாகவே உள்ளது. அந்த இடத்தை பிடிக்கப்போவது யார்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. தங்களது புதிய தலைவரை தமிழகம் தேடிக் கொண்டிருக்கிறது என்று கூறினால் நிச்சயம் அது மிகையானதாக இருக்காது.


    இந்த இடத்தை பிடிப்பதற்கே ரஜினி இத்தனை நாட்களாக காத்திருந்தது போலவே தெரிகிறது.

    முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி ஒன்றில் என்ன கட்சி? நம்ம கட்சி? என்று ஹீரோயின் மீனா பாட்டிலேயே கேள்வி கேட்பார். இதற்கு கட்சியெல்லாம் நமக்கெதுக்கு. காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி பாட்டாலேயே பதில் அளிப்பார்.

    அந்த காலமும் நேரமும் இப்போது வந்து விட்டதாகவே ரஜினி எண்ணியுள்ளார். அந்த எண்ணமே அவரை அரசியல் பாதைக்கு இழுத்து வந்துள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் இருந்து அரசியல் பாதையை தொடங்கியவர் ஜெயலலிதா.

    இதனால் எம்.ஜி.ஆருக்கு பின்னர் அரசியல் வானில் ஜொலிக்கும் நட்சத்திரமானார். அவரது தனிப்பட்ட திறமையும், உழைப்பும் ஜெயலலிதாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியின் பின்புலமே அதற்கு மூலதனமாக அமைந்திருந்தது என்பதே உண்மையாகும்.

    எம்.ஜி.ஆர். தனிக்கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்த காலகட்டம் வேறு மாதிரியாக இருந்தது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அ.தி.மு.க.வை அவர் தொடங்கிய நேரத்தில் இப்போது இருப்பது போன்று ஏராளமான கட்சிகள் கிடையாது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏகப்பட்ட கட்சிகள், கொடிகள். ஒரு கட்சியை வழி நடத்திச் செல்வது சாதாரண வி‌ஷயம் அல்ல. எனவே ரஜினி தனிக்கட்சி கனவெல்லாம் பலிக்காது என்று பலர் கூறி வருகிறார்கள்.

    ஆனால் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சியை தொடங்குவதற்கே ரஜினி திட்டமிட்டிருப்பது போன்ற தோற்றங்களே காணப்படுகின்றன.

    ரஜினியை வளைத்து போட தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்ட நிலையில், யாருடைய தயவும் தனக்கு தேவையில்லை என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக உணர்த்தியுள்ளார்.

    அரசியல் அமைப்பு கெட்டுப்போய் விட்டது என்று சாடியுள்ள ரஜினி, அரசியலில் எதிர்ப்பே மூலதனம் என்கிற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அரசியலில் தனது எதிர்ப்பாளர்களை நேருக்கு நேர் சந்திக்க ரஜினி தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது.

    அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்பதையும் ரஜினி சூசகமாக கூறி இருக்கிறார். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று கூறி இருப்பதன் மூலம் அரசியலில் குதித்து எதிரிகளுடன் மோதுவதற்கு ரஜினி தயாராகி விட்டதும் உறுதியாகி இருக்கிறது.

    முதல் கட்ட சந்திப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

    இதன் பின்னர் ரஜினி அதிரடி அரசியல் பயணத்தை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படமும் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.



    கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம், தொடர்ந்து தள்ளிப்போகும்ம் நிலையில், படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என்று செல்வராகவன், அவரது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

    ஜுன் 2-ல் முன்னோடி என்ற ஒருபடம் மட்டுமே வெளியாக இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. அதற்கு அடுத்த வாரமான ஜுன் 9-ல் மீசைய முறுக்கு, ரங்கூன் உள்ளிட்ட படங்களும், அதன் பின்னர் ஜுன் 23-ல் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஜெயம் ரவியின் வனமகன், விஷ்ணு விஷாலின் கதாநாயகன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின்றன.



    எனவே ஜுன் 2-ந் தேதி படம் வெளியானால் தொடர்ந்து 3 வாரங்கள் எந்த நெருக்கடியும் இன்றி வசூலை அள்ளலாம். ஆனால் படத்தை ரலீஸ் செய்வது குறித்து படக்குழு என்ன முடிவு செய்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.
    கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா கவலைக்கிடமான நிலையில், பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா கவலைக்கிடமாக உள்ளார்.

    பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பர்வதம்மா 77 வயதாகும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு சிறுநீரக கோளாறு, மூச்சுத் திணறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு புற்றுநோய் குணம் அடைந்த நிலையில் கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது.

    அவரது உடல் நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயிர்காக்கும் உபகரணங்களால் செயற்கை சுவாசம், டயாலிசிஸ் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.



    பர்வதம்மா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பர்வதம்மாவின் மகனும் நடிகருமான சிவராஜ்குமார், ராஜ்குமாரின் சகோதரி நாகம்மா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.

    பர்வதம்மாவின் கணவர் நடிகர் ராஜ்குமார் 2000-வது ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பனால் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டார். 100 நாட்களுக்கு பின் பெரும் தொகை கொடுத்து மீட்கப்பட்டார். 2006-ம் ஆண்டு ராஜ்குமார் மரணம் அடைந்தார்.

    அதன் பிறகு பர்வதம்மா தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொண்டார். 80-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.



    பர்வதம்மா ராஜ்குமாருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சிவராஜ்குமார் கன்னட பட உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பங்காரப்பாவின் மகளை திருமணம் செய்தார்.

    பர்வதம்மாவின் 2-வது மகள் ராகவேந்திரா ராஜ்குமாரும், படங்களில் நடித்து வருகிறார். 3-வது மகன் லோகித் இவர் தனது பெயரை புனித்ராஜ்குமார் என மாற்றிக் கொண்டார்.. பர்வதம்மாவின் மகள்கள் பூர்ணிமா, லட்சுமி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
    ரஜினியின் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி நெட்டிசன்களால் பல கேள்விகள் கிசுகிசுகப்பட்டு வருகின்றன.
    தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வருகிறது. 1990-களில் ரஜினி அரசியலுக்கு வருவார்... என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியலில் ஈடுபடாமல் ஆன்மீகம் பக்கம் திரும்பினார். அதுமுதல் தொடர்ந்து பலமுறை இமயமலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில், அவ்வப்போது அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்தால், ரஜினி அந்த கட்சியில் இணையப் போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் இல்லை. யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று ரஜினி கூறி வந்தார்.

    இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் ரஜினி ரசிகர்களும் “தலைவா... அரசியலுக்கு வா.. தலைவா வா" என்று அழைத்தபடி இருக்கின்றனர்.



    அவர்களின் அழைப்பினை ஏற்கும் விதமாக ரஜினி அரசியிலில் ஈடுபட விரும்புவது போல் பேசி வருகிறார். அதாவது கடந்த 5 நாட்களாக ரஜினியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்கள் முன்பு உரையாற்றிய ரஜினி, இப்போது நான் நடிகன், நாளை நான் யார் என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும், நாளை நான் அரசியலுக்கு வந்தால் அதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ரஜினியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்தும், எதிர்ப்பு கருத்தும் வலுத்து வருகிறது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட இணைய தளங்களில் கிண்டலான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை பார்க்கலாம்.



    * பாகுபலி படத்துல மாதிரி போர் வந்தாதான் வருவேன்னு சொன்னீங்களே, அப்போ காளகேயர்கள் யாரு?

    * ரஜினி சார். அரசியலில் குதிப்பது என்பது குளத்தில் குதிப்பது போல் அல்ல.... சமாதியில் போய் தியானம் செய்ய வேண்டும். அதவிட்டுட்டு இமயமலைக்கு போனால் ஆத்தா கோபத்திற்கு ஆளாயிடுவீங்க.

    * ஆளு பாக்க கருப்பாதானே இருக்கீங்க... தமிழன்னு சொன்னாலே போதுமே! அப்புறம் எதுக்கு பச்சை தமிழன்னு பொய் சொல்றீங்க.

    * ‘‘கடவுள் கையிலே என் வாழ்க்கை’’ இன்று நான் நடிகன். நாளை நான் யார்? என்பதை கடவுளே முடிவு செய்வார்.

    * 25 வரு‌ஷமா இந்த ஒரே டயலாக்க இந்த ஆளு சொல்லி ஏமாத்துறார். அது தெரியாம புதுசா பேசுற மாதிரி. கைதட்டி விசில் அடிக்கிறாங்க.

    * எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன்.

    * இது எல்லாம் அண்ணாமலை படத்திலே பாத்துட்டோம். இப்ப போய் சீன் போட்டுக்கிட்டு.... தண்ணிய குடி.. தண்ணி குடி.

    * புது படம். ரிலீஸ் ஆகும் போது அரசியலுக்கு வருவேனு ரஜினி சொல்றதும் அப்ரம் கம்முன்னு இருக்கிறதும் சகஜம்.

    * அவரு வருவாரு ஆனா.... வரமாட்டாரு...



    இவ்வாறு நெட்டிசன்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் அவரை கலாய்த்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரப்படும் கருத்துக்களை தான் பார்த்ததாக கூறிய ரஜினி, சில தரக்குறைவான கருத்துக்களால் தான் வேதனை அடைந்ததாக நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தனது ரசிகர்களும் கவலைப்பட்டிருப்பார்கள். இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு அவர் கூறியிருந்ததாவது, எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று நேற்று ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    என்னை கைது செய்தாலும் கவலை இல்லை என்றும் 2-வது கணவரிடம், குழந்தையை ஒப்படைக்க மாட்டேன் எனவும் நடிகை வனிதா கூறினார்.
    நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே டெலிவிஷன் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.

    இரண்டாவதாக 2009-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். 2012-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற 8 வயது மகள் இருக்கிறார்.

    குழந்தை ஜெயனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்தார். இந்த நிலையில் குழந்தையை, வனிதா கடத்திச்சென்று விட்டதாக ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலம் அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    வனிதா மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து வனிதா அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    “நான், குழந்தையை கடத்தியதாக போலீசில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனந்தராஜை நான் விவாகரத்து செய்தபோது குழந்தையை, திங்கள் முதல் வியாழன் வரை அவர் பார்த்துக்கொள்வது எனவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது.

    ஆனால் 3 வருடத்துக்கு பின் திடீரென ஆனந்தராஜ், என்னிடம் தெரிவிக்காமல் குழந்தையுடன் ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரி, செல்போன் எண் விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

    குழந்தையை பார்க்க முடியாமல் தவித்தேன். ஆனந்தராஜின் இ-மெயில் முகவரி என்னிடம் இருந்ததால் அதில் குழந்தை பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த இ-மெயிலில் இருந்த எனது போன் நம்பரை எடுத்து ஜெயனிதா என்னிடம் பேசினாள். அப்போது ஐதராபாத்தில் பாதுகாப்பாக இல்லை. என்னை அழைத்துச்சென்று விடுங்கள் என்று கதறி அழுதாள். இதனால் உடனடியாக ஐதராபாத் சென்று அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு குழந்தையை என்னுடன் அழைத்து வந்து விட்டேன்.

    எனது மகள் என்னுடன் விரும்பி வந்ததை கடத்தல் என்று எப்படி சொல்ல முடியும்.? என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. குழந்தையை ஆனந்தராஜிடம் ஒப்படைக்க மாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி குழந்தையை மீட்பேன்.

    இவ்வாறு வனிதா கூறினார்.
    திரிஷா வழியில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள நடிக தீக்‌ஷிதா படங்களில் நடிக்க பல நிபந்தனைகளை போடுகின்றார்.
    தோழியாக நடித்து நாயகி ஆனவர் திரிஷா. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒருவர் நாயகி ஆகி இருக்கிறார். அவர் பெயர் தீக்ஷிதா மாணிக்கம். ‘திருமணம் என்னும் நிஹ்கா’, ‘ஆகம்’, படங்களில் நடித்த தீக்ஷிதா ‘நகர்வலம்’ படத்தின் நாயகி ஆனார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

    சென்னையை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மாடலிங் செய்தார். 2012-ல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதி போட்டி வரை வந்தார். நாயகியாகிவிட்ட தீக்ஷிதாவின் விருப்பம் பற்றி கேட்டபோது...



    “சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்திருக்கிறேன். பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால், கடுமையான போராட்டத்துக்குப் பிறகே சினிமாவில் நடிக்க அனுமதி கொடுத்தார்கள்.

    நான் குடும்பத்தோடு பார்க்கும் விதமான படங்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல வேடம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நடிப்பில் மட்டுமல்ல, காஸ்டியூம், டிசைனிங், இயக்கம் ஆகியவற்றின் மீதும் எனக்கு ஆர்வம் இருக்கிறது” என்றார்.

    தடம்மாறுபவன் சந்திக்கும் சவால்களை சொல்லும் ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகி வரும் `செய் (அ) செத்துமடி' படத்தின் முன்னோட்டம்.
    வியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் `செய் (அ) செத்துமடி'.

    இதில் போஸ் வெங்கட், ரத்தன் மவுலி, வடிவுக்கரசி, அழகு, மீசை ராஜேந்திரன், ராஜதுரை, சிம்மா, சரத், நாயகிகளாக பெங்களூர் மாடல் அழகிகள் தீப்தி, பிரியங்கா மல்நாட் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இசை - வேலன் சகாதேவன், பாடல்கள் - பூமி, எடிட்டிங் - கோபாலகிருஷ்ணன், வினோத், நடனம் - சிவா, ராக் சங்கர், சண்டை பயிற்சி - சென்சாய் சேசு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வி.கே.பூமி.

    `செய் (அ) செத்துமடி' படம்  பற்றி இயக்குனர் பூமியிடம் கேட்டபோது, "இந்த படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருக்கிறது. நம்ம ஒவ்வொருத்தர் குள்ளேயும் ஒரு நல்லவன் இருக்கான். ஒரு கெட்டவன் இருக்கான். நல்லவன் வழியில் கெட்டவன் போனா நன்மை. தடம் மாறினா அவன் வாழ்க்கை `டூ ஆர் டை'. இந்த வசனத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது'' என்றார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், சேலம் நகரங்களில் முழுவதுமாக நடந்து முடிந்தது. தொழில் நுட்ப பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் டிரைலர் வெளியாகிறது.
    ஐக் இயக்கத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி - தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் விமர்சனம்.
    ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர் இறந்த நிலையில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டம் காரணமாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஜீவாவை ஊக்கப்படுத்தும் தாயாக வருகிறார் ராதிகா.

    தனது தாயின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ஜீவா, ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் பேய் இருப்பதாக வதந்தியை பரப்ப வைக்கிறார். இதனால் அந்த வீட்டை வாங்க யாரும் முன்வராததால், குறைவான காசு கொடுத்து அந்த வீட்டை தானே வாங்கி, தனது அம்மா ராதிகா, மாமா இளவரசன், அவரது மகள், நண்பன் சூரி உள்ளிட்டோருடன் அங்கு குடிபெயர்கிறார்.



    அதேநேரத்தில், அந்த வீட்டை உரிமை கொண்டாடி தம்பி ராமைய்யா, அவரது மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யா அதே வீட்டில் இருக்கின்றனர். முன்னதாக வீடு விற்க வந்த போது ஜீவாவை பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. தனது காதலை ஜீவாவுக்கு புரிய வைத்த பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் காதலித்து வருகின்றனர். இருந்தாலும் ஜீவாவுக்கும் - தம்பி ராமைய்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட வீடு யாருக்கு சொந்தம் என்ற முடிவு தெரியும் வரை, இரு குடும்பமும் ஒரே வீட்டிலேயே தங்கும் நிலைக்கு வருகின்றனர்.

    தம்பி ராமைய்யா குடும்பத்தை அந்த வீட்டை விட்டு விரட்ட பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்யும் ஜீவா மற்றும் சூரி, அந்த வீட்டில் பேய் இருப்பது போல சூழ்நிலைகளை உருவாக்கி, பயமுறுத்துகின்றனர். ஆனால் அந்த வீட்டில் உண்மையிலேயே ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து, பேய் இருப்பதை உறுதி செய்ய ஜீவா, சூரி இணைந்து அரசு ஊழியரான கோவை சரளாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதில் பேய் இருப்பது உறுதி ஆவதுடன், அவர்கள் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் நிலைக்கு அந்த அமானுஷ்ய சக்தி அவர்களை உந்துகிறது.

    அந்த பேயின் முந்தைய கதை என்ன? அந்த பேயை விரட்ட ஜீவா என்ன செய்தார்? ஜீவா - ஸ்ரீதிவ்யா காதல் வெற்றி அடைந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.



    தொடர் சரிவுகளை சந்தித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் சற்றே மேலே வந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவரது இயல்பான நடிப்பும், காமெடி கலந்த பேச்சுமே அவரை ரசிக்க வைக்கிறது. ஒரு மகனாகவும், காதலானகவும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வரும் ஸ்ரீதிவ்யா, காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆடைகுறைப்பு நடிகைகளுக்கிடையே முழுக்க போத்திக் கொண்டு வந்தாலும், ரசிக்கர்களை கவரும் ஸ்ரீதிவ்யாவுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஜீவா - ஸ்ரீதிவ்யா இருவருக்கும் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது.

    ஒரு அம்மாவாகவும், வீடு வாங்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனும், சாதாரண குடும்பப் பெண்ணாகவும் ராதிகா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக்கில் வரும் ராதாரவி ஒரு தந்தையாகவும், பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். ஜீவாவுடன் இணைந்து படம் முழுக்க வரும் சூரி, வெகு நாட்களுக்கு பிறகு தனது ஸ்டைலில் காமெடி வசனங்களை உதிர்த்திருக்கிறார். திரையில் அவரது நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருக்கிறது. அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தம்பி ராமைய்யாவும், தேவதர்ஷினியும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.



    பேய் படம் என்றாலே கோவை சரளா இல்லாமல் இருப்பதில்லை. அதற்கேற்றாற்போல் கோவை சரளா, இப்படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரது பாணியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இளவரசு, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்டோரும் தங்கள் பங்குக்கு காமெடிக்கு கைக் கொடுத்திருக்கின்றனர்.

    புதுமுக இயக்குநர் ஐக் ஒரு புதுவிதமான காமெடி த்ரில்லர் கதையை முயற்சி செய்திருக்கிறார். பேய் படங்கள் என்றாலே ஒரே மாதிரி தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில், இவரின் புதிய முயற்சி ரசிக்கும்படி இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். சுயநலத்துடன் பிரிந்து சென்று தனித்தனியே வாழ வரும்புபவர்களை கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை பேய் மூலமாக உணர்த்தி இருப்பது சிறப்பு.

    சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு தத்ரூபமாக இருக்கிறது. குறிப்பாக பேய் வரும் காட்சிகளை காட்டுவதில் சிறப்பாக கேமராவை பயன்படுத்தி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டி இருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பிரேம்ஜி பாடியிருக்கும் பாடல் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.

    மொத்தத்தில் `சங்கிலி புங்கிலி கதவ தொற' சற்றே தொறந்துள்ளது.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க இருக்கும் பாலிவுட் பிரபலம் குறித்து பாலிவுட்டில் வதந்திகள் பரவி வருகின்றன.
    ரஜினியின் புதிய படம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். இந்தி பட உலகில் இவர் பற்றி பல்வேறு புரளிகள் கிளம்பி உள்ளன.

    இந்தி நடிகர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹீமா குரோஷிக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் பேசப்பட்டது. பின்னர் நடிகர் சல்மான்கானின் தம்பி சொஹைல் கானுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சில மாதங்களாக பேசப்படுகிறது. ஹீமாவின் இந்த தொடர்பால் சொஹைல் கானுக்கும் அவரது மனைவி சீமாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ள ஹீமோ, “சொஹைலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் எனக்கு சகோதரர் போன்றவர். என்னால் அவருடைய வீட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.



    இது பற்றி கூறிய சொஹைல், “எனக்கும் ஹீமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஏதாவது இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த சல்மான்கான் பிறந்தநாள் விழாவுக்கு ஹீமா சென்றார். ஆனால் அவரை சல்மான்கான் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஹீமா குரோஷி பற்றிய வதந்தி இந்தி திரை உலகில் சூடு பிடித்திருக்கிறது.
    தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டரில் இருந்து தற்போது ஸ்டண்ட் மாஸ்டராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
    பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. இதில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு பிரபுதேவா, மு.ரவிகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.

    கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ்.அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.



    ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும், அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் மாறியுள்ள பிரபுதேவா இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமாக ‘யங் மங் சங்’ படம் வளர்ந்து வருகிறது.
    ×