என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `சிறுத்தை' சிவா இயக்கும் `விவேகம்' படத்தை தொடர்ந்து தல அஜித் தனது அடுத்த படத்தில் யாருடன் இணையவிருக்கிறார் என்பது தெரியுமா?
    அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர், ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், `விவேகம்' படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த பரபரப்பில் அவரது ரசிகர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதன்படி அஜித் அவரது அடுத்த படத்தில் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அஜித் தற்போது `விவேகம்' படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட இருப்பதாகவும், தனது அடுத்த படம் குறித்து அவர் இன்னமும் யோசிக்கவில்லை என்று அஜித்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இது ஒருபுறம் இருக்க அஜித் தனது அடுத்த படத்தில் `பில்லா', `ஆரம்பம்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த விஷ்ணு வர்தன் உடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சோழர் கால கதையை மையமாக வைத்து எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள புதிய கதையை விஷ்ணு வர்தன் இயக்க இருக்கிறாராம். அந்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

    அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. `விவேகம்' படம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் இந்த அறிவிப்பு வெளியானால், அது அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    அரசியலுக்கு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எனது கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின்பு ரசிகர்களை சந்தித்து வரு கிறார் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமணமண்டபத்தில் கடந்த 15- ந்தேதி ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி தொடங் கியது. தொடர்ந்து 3 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

    அப்போது ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வர வழைத்து தனது அருகில் வைத்து அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக் கொண் டார். தொடக்க நாளில் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ‘ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு வந்தால் அவரை வரவேற்போம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

    இது பற்றி நிருபர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு ரஜினி பதில் கூறுகையில் ‘அரசியலுக்கு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எனது கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன் என்றார்.

    நடிகர்-நடிகைகளுக்கு தாயாக நடித்த பிரபல இந்தி நடிகை ரீமா லகு மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
    இந்தி நடிகை ரீமா லகு மும்பையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    பிரபல இந்தி நடிகை ரீமா லகு. ஏராளமான இந்திப் படங்களில் முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு தாயாக, சகோதரியாக நடித்து புகழ் பெற்றவர். தாய் கேரக்டரில் இயல்பான நடிப்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

    அமீர்கான் - ஜுகி சாவ்லா நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்‘ படத்தில் ஜுகி சாவ்லாவுக்கு தாயாக நடித்து பாராட்டு பெற்றார். தொடர்ந்து சல்மான்கான், ஸ்ரீதேவி, அக்‌ஷய்குமார், சஞ்சய்தத் உள்பட பலருக்கு தாயாக நடித்துள்ளார்.

    மாடலிங்கும் செய்து வந்தார். தூர்தர்‌ஷன் தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் ஒளிபரப்பான காந்தன், ஸ்ரீமான் - ஸ்ரீமதி, தூதூ மெயின் மெயின் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.



    59 வயதான ரீமா லகு மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீர் என்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

    அதிகாலை 1 மணிக்கு அவர் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மும்பை திரை உலக பிரபலங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
    பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

    தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.



    இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

    ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 7 கோடி தமிழர்களை அவர் ஏமாற்ற மாட்டார் என நண்பர் ராஜ்பகதூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினியின் நீண்ட கால நண்பர்களில் ராஜ்பகதூர் முக்கியமானவர்.

    1970-களில் ரஜினியும், ராஜ் பகதூரும் ஒன்றாக கர்நாடக மாநில அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றினார்கள்.

    மெஜஸ்டிக்கில் இருந்து ஸ்ரீநகரா செல்லும் 10ம் எண் பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராகவும், ரஜினி கண்டக்டராகவும் இணைந்து பணியாற்றினார்கள்.

    ரஜினி கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, நடிகராகவதற்காக அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்த போது, நண்பர் ராஜ்பகதூர் மிகவும் உதவியாக இருந்தார். அதை மறக்காத ரஜினி, அதற்கு நன்றிக் கடனாக ராஜ்பகதூரை வள்ளி படத்தில் நடிக்க வைத்து பெரும் அளவில் பண உதவி செய்தார்.

    ரஜினி, ராஜ்பகதூர் இடையிலான நட்பு சுமார் 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் முன்பு போல நீடிக்கிறது. ரஜினி எப்போதெல்லாம் பெங்களூருக்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் தனது நண்பர்களை சந்தித்து பேச தவறுவதில்லை.


    இந்த மாத தொடக்கத்திலும் ரஜினி பெங்களூர் சென்றிருந்தார். அப்போது அவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் அரசியல் பிரவேசம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினி ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 8-ந்தேதி பெங்களூர் வந்தார். அப்போது நான் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் மிகுந்த டென்‌ஷனுடன் காணப்பட்டார்.

    அவ்வளவு டென்‌ஷனாக நான் இதுவரை ரஜினியைப் பார்த்ததே இல்லை. அரசியலில் ஈடுபடுவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பமான மன நிலையில் அவர் இருக்கிறார். இரு தலைக்கொள்ளி எறும்பாக அவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழக மக்களை நல்வழியில் நடத்துவது யார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை நினைத்து அவர் தனது வேதனையையும் கவலையையும் வெளியிட்டார்.

    அவரை தற்போதைய சூழ்நிலையில் உடனே அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் மிகவும் விரும்பி அழைப்பு விடுத்தபடி உள்ளனர். பொதுவாக தமிழக மக்களும் அவரை அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

    நடிகர் ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. நானும் அதையே விரும்புகிறேன்.

    தற்போது ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்து வருகிறார். கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அவர் சூசகமாக கூறியுள்ளார்.

    அவரது ஆன்மீகக் குரு மகா அவதார் பாபாஜி நிச்சயம் நல்ல வழியை காட்டுவார். அப்போது ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார்.

    அவர் சூசகமாக வெளியிட்டுள்ள கருத்தை வைத்துப் பார்க்கும்போது, 7 கோடி தமிழ் மக்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்றே நினைக்கிறேன்.

    இவ்வாறு ரஜினி நண்பர் ராஜ்பகதூர் கூறினார்.
    நாக சைதன்யாவை காதலிப்பதால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று நடிகை சமந்தா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

    “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு.

    நாக சைதன்யா மனம் நிறைய நான்தான் இருக்கிறேன். எனக்கும் அவருக்குமான காதல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த காதலால் எனது நடிப்புத் தொழில் கொஞ்சமும் பாதிக்கவில்லை. நடிப்பு மீதுள்ள காதலும் குறையவில்லை. நடிப்பு என்பது எனது உயிர் போன்றது. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் நடித்துக்கொண்டு இருக்கவில்லை. அதன்மீது இருக்கும் காதலால் நடிக்கிறேன்.



    சினிமாவுக்கும் எனக்கும் நல்ல பந்தம் இருக்கிறது. நடிகையாக இருக்கும் இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. சினிமாவிலும் கஷ்டம் இல்லாமல் இல்லை. நானும் சில கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். சில பிரச்சினைகளிலும் சிக்கி இருக்கிறேன். ஆனால் அவற்றை மறக்கும் அளவுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் சினிமாவிலேயே எனக்கு கிடைத்து இருக்கிறது.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று நடிக்க வேண்டும் என்ற பதற்றம் ஒவ்வொரு படத்திலும் ஏற்படுகிறது. எனது நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஓய்வில்லாமல் நடிக்கவும் செய்கிறேன். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நடிக்கும்போது இதுமாதிரி சில சங்கடங்கள் இருந்தாலும் படம் திரைக்கு வந்து நன்றாக நடித்து இருப்பதாக பலரும் பாராட்டும்போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்து விடுகிறது.

    மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தற்போது தயாராகி வரும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.”

    இவ்வாறு சமந்தா கூறினார்.
    தமிழ் திரைப்பட வர்த்தகசபை தலைவராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தகசபை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.தாணு, பட அதிபர்கள் அன்புசெழியன், டி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர்கள் அருள்பதி, செல்வின்ராஜ், திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
    ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி - தான்யா - விவேக் கூட்டணியில் உருவாகி இருக்கும் `பிருந்தாவனம்' படத்தின் முன்னோட்டம்.
    வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் வழங்கும் படம் `பிருந்தாவனம்'.

    இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தான்யா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - எம்.எஸ்.விவேகானந்தன், கலை - கே.கதிர், வசனம் - எம்.ஆர்.பொன்பார்த்திபன், பாடல்கள் - கார்க்கி, தயாரிப்பு - ஷான் சுதர்சன்.

    கதை, திரைக்கதை, இயக்கம் - ராதாமோகன்.

    `மொழி', `அபியும், நானும்', `பாலைவனம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் `பிருந்தாவனம்' படம் பற்றி கூறும்போது.... `பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒரு சந்தோஷம் இருக்கும். குதூகலம் காணப்படும். அதுபோன்ற கதை என்பதால் இதற்கு `பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். ஊட்டியில் நடக்கும் கதை.



    அருள்நிதி இதில் காது கேட்காத, வாய்பேசாத சவாலான வேடத்தில் நடித்திருக்கிறார். விவேக் நடிகராகவே வருகிறார். அருள்நிதி அவருடைய ரசிகர். இருவரும் நண்பர்களாக இந்த படத்தில் வருகிறார்கள். நாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.

    அன்பு, மனிதநேயம், மன்னிப்பு கொண்ட அருமையான திரைக்கதையுடன் கமர்ஷியல் படமாகவே இது உருவாகி இருக்கிறது. விவேக் நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. என்றாலும் அவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் கண்கலங்க வைக்கிறார். `பிருந்தாவனம்' குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படம்'' என்றார்.
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் `சாமி-2' படத்திற்கு இசையமைக்க தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகிற  ஜுலை முதல் தொடங்க இருக்கிறது.

    இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். அவர்கள் தவிர்த்து `சாமி' படத்தில் நடித்திருந்த பலரும் இப்படத்தில் தொடர்கின்றனர். பிரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை `இருமுகன்', `புலி' படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.



    இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் `சாமி-2' படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கிய `சிங்கம்' மற்றும் `சிங்கம் 2' படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத்  இசையமைத்திருந்தார். அதேபோல் விக்ரம் நடித்த `கந்தசாமி' படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்கள்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசயமாக உயிர் தப்பினார்கள்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

    இளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அந்த "மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா

    கூறியதாவது:-

    நாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய "ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.

    ஸ்ரீதேவி படத்தில் ஒரு "டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்

    அமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். "ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.

    ட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணே! இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே!'' என்றேன்.

    "ஏன்டா! அவன் நன்றாகப் பாடுவானா? இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா!'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அண்ணே! இது இளம் ஜோடி பாடும் பாட்டு! இதற்கு ஏன் பழைய பாடகர்? பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்!''

    "எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்!''

    "அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை? பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா?'' என்றேன்.

    "சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்!'' என்றார், ஜி.கே.வி.

    பாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.

    "ஓ.கே.! பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.

    சினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.

    எஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.

    இதை மனதில் வைத்து, "நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், "நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன்? யாரை வைத்து என்ன செய்ய முடியும்?'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.

    எழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று கணக்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ! பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.

    ஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.

    ஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.

    `சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.

    இரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.

    `அப்பாடா! வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.

    காரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.

    டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.

    தூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது!

    நான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா!' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.

    கார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன! சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது! முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.

    டிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம்! அவர்கள், "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை!

    கார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.

    "செத்துப் பிழைத்தவன்டா!''

    எப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், "நான் செத்துப் பிழைச்சவன்டா!'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்!

    உண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.

    பின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.

    இந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.

    ரஜினியின் அரசியல் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவருக்கு நெருக்க மானவர்கள் கூறியதாவது:-

    கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு.

    இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

    தனிக்கட்சி ஆரம்பித்து விட்டு, அக்கட்சியை, தேசிய கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில், பா.ஜ.க.வும் தனக்கு முழு மரியாதை கொடுத்து, தமிழகத்தை ஆள அனுமதிக்கும்பட்சத்தில், புதிய கட்சியை பா.ஜ.க.வோடு இணைத்து விடலாம் என்றும், அந்த ஜோதிடர், நம்பிக்கை வாக்கு கொடுத்துள்ளார்.


    ஜோதிடர் சொல்லும் பாதையில் பயணிக்ககும் முடிவு செய்துள்ள ரஜினி இப்படியொரு யோகம் தனக்கு இருக்கிறதா? என, தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஜோதிடர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

    ரஜினிக்கு 1996 முதலே தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என ஆசை இருந்தது. எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தமிழக அரசியல் முதல் தேசிய அரசியல் வரை, நிறைய பேசுவார். பேச்சின் முடிவில், ஒருவேளை, நான் தீவிர அரசியலில் களம் இறங்குகிறேன் என வைத்துக் கொள்வோம். அந்த சூழல் எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரிந்ததை முதலில் சொல்லுங்கள். பின், உங்களுக்கு தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் கேட்டு, அவர்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று, மறக்காமல் கூறுவார்.

    ஒருவேளை, அரசியலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் விடாப்பிடியாக கேட்பார்.

    நிறைய பேரிடம் கருத்துக்களை மாறி மாறி கேட்பதாலேயே மனதுக்குள் நிறைய குழப்பங்களுக்கு ஆளாகி, ஆசைக்கும் தோல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என புரியாமல் இருந்து வந்தார். இதே நிலையை வெகு நாட்களுக்கு கொண்டு செல்ல அவர் விரும்பவில்லை. அரசியல் குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

    பா.ஜ.வுடன், நெருக்கமாக இருந்து, தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து தெரிவித்து வந்தாலும், ஒரு கட்சிக்குள் தன்னை சுருக்கிக் கொள்வதை அவர் விரும்பவில்லை.


    தற்போதைய நிலையில், தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு அவர் வந்து விட்டார். அதற்கான டீசர் தான் ரசிகர்கள் சந்திப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி, அரசியலில் குதிப்பது உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    விஷ்ணு விஷால் தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.
    விஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    இதன் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

    விஷ்ணு விஷால் அடுத்து, `மின்மினி' , `சிலுக்கு வார்பட்டி சிங்கம்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
              
    ×