என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிக்க வந்தபோது தன்னை எல்லோரும் கிண்டல் செய்ததாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
    ‘இறைவி’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் ‘மெர்க்குரி’. இதுதவிர தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் ‘மேயாத மான்’என்ற படத்தையும் தயாரிக்கிறார். இவற்றின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் டிஜிட்டலில் ரூ. 1 கோடி செலவில் படம் எடுக்க முடியும். பெரிய படங்களுடன் போட்டி போடமுடியும் என்று நிரூபித்தவர். அவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்.

    ஒரு காலத்தில் நான் நடிக்க வந்த போது, இவன் ஏன்டா நடிக்க வர்றான். டைரக்ட் பண்ணலாமே என்று என் காது படவே சொல்லி வலியை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி, எஸ்.ஜே.சூர்யாவால் நடிக்க முடியும் என்று நம்பி என்னை ‘இறைவி’ படத்தில் நடிக்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். என் நடிப்பு திறமையை உலகத்துக்கே காட்டியவர் அவர். அவருடைய பட நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவன தொடக்க விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.



    கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாதமான் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். இது தவிர பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வித்தியாசமானவை. கண்டிப்பாக சாதனைபடைக்கும்.

    இவருடைய பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களையும் தயாரிக்கும். அந்த விழாவுக்கு நானும் வந்து வாழ்த்துவேன்” என்றார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ‘மெர்சல்’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். அக்டோபர் மாதத்தில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
    என் தந்தையின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    சேலம் 5 ரோடு அருகே உள்ள தியேட்டரில் “இவன் தந்திரன்“ என்ற சினிமா படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “இவன் தந்திரம்“ படம் வருகிற 30-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வருகிறது.

    என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான் “இவன் தந்திரன்“. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். காதல், காமெடி என எல்லோரும் பார்க்கும்படியாக படம் இருக்கும். மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வாகவும் இருக்கும்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. நான் இப்போது தான் திரைத்துறையில் படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 10 ஆண்டுகள் சென்ற பின்பு அரசியல் குறித்த கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன்.



    என் தந்தை (நடிகர் கார்த்திக்) அரசியலில் இருந்தாலும், அவருடைய அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன். பாகுபலி போன்ற தரமான படங்கள் வரும் போது பொதுமக்கள் தியேட்டரை நோக்கி வருவார்கள். தரமான படங்கள் தான் மக்களை ரசிக்க வைக்கும். திருட்டு வி.சி.டி.க்களை தடுப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இயக்குனர் கண்ணன், நான் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போன்று வருவேன் என கூறுகிறார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த இடத்தை அடைவதற்கு நான் கடுமையாக உழைப்பேன். ரங்கூன் படம் போன்று “இவன் தந்திரம்“ படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது படத்தின் வினியோகஸ்தர் தனஞ்ஜெயன், இயக்குனர் ஆர்.கண்ணன், தயாரிப்பாளர் ராம்பிரசாத், இணை தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக ரசிகர்கள் கவுதம் கார்த்திக்குடன் ஆர்வமாக ‘செல்பி‘ எடுத்துக்கொண்டனர்.
    திரையுலகினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பட விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    அதர்வா, ரெஜினா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.’ சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு டைரக்டு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து உள்ளார்.

    இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “தமிழ் பட உலகில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நம்மிடம் இருக்கிறார். சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் பட உலகில் இருக்கிறார்கள். சிறந்த தயாரிப்பாளர்களும் உள்ளனர். சினிமா எல்லாதரப்பு மக்களை யும் சென்று அடைகிறது.



    தமிழ் சினிமா கலைஞர்கள் தங்கள் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமக்குள் வீண் சண்டை, சச்சரவுகள் வேண்டாம். அரசியல் பாகுபாடுகளும் வேண்டாம். தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். முரளி சிறந்த நடிகர். கடைசிவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரைப்போல் அதர்வாவும் சிறந்த நடிகராக உயர வேண்டும்.”

    இவ்வாறு நாசர் பேசினார்.

    விழாவில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படம் பற்றிய முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது.
    தெலுங்கானாவில் கார் விபத்தில் நடிகர் ரவிதேஜாவின் இளைய சகோதரர் பரத் கார் விபத்தில் மரணமடைந்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் ரவி தேஜா. இவரது இளைய சகோதரர் பரத் (வயது 49). இவரும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாம்ஷாபாத் நகரில் இருந்து தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவ்லி என்ற இடத்துக்கு பரத் தனது சொகுசு காரில் புறப்பட்டார்.

    ஷாம்ஷாபாத் நகரில் கோத்வால்குடா என்ற இடத்தில் உள்ள வெளிவட்ட சாலையில் கார் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலை ஓரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில், பரத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

    விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரத் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரத் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.

    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    கடற்கரையில் உதயமான கற்பனை

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

    பிரபல நடிகை நடுரோட்டுக்கு வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு சென்றுவிட்டதாக வெளிவந்த செய்தியை கேட்டு யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.

    அவர் ஒரு படத்தின் காட்சிக்காக அந்த நடிகையை நடுரோட்டில் நடந்துவரச் சொன்னார்களாம். நடிகையும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத பொதுமக்கள் நடிகையை கண்டுகொண்ட பிறகு அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.



    காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படக்குழுவினரை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டதாம். உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி படக்குழுவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்களாம். நடிகையையும் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.
    ராட்சத பலூன்களில் உலகத்தை ரஜினியின் அடுத்த படமான 2.ஓ வலம்வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்திற்கு இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்திற்கும் பிரம்மாண்ட அளவில் விளம்பரங்கள் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், படத்திற்கான விளம்பரங்கள் இதுவரை தொடங்கப்படவே இல்லை. அடுத்த வருடம் ஜனவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் விளம்பரத்தும் பணிகளை தொடங்கவுள்ளதாக லைக்கா நிறுவனம் தலைமை செயல் நிர்வாகி ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

    வெப்பக்காற்று அடங்கிய 100 அடி உயர பலூனில் 2.ஓ படத்திற்கான விளம்பரங்கள் இடம்பெறப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த பலூனை உலகமெங்கும் நடைபெறும் பலூன் திருவிழாவில் பறக்கவிடப் போகிறார்களாம்.



    8 மாதங்களுககு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம்.

    மேலும், லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

    2.ஓ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
    விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விஜய்யின் 61-வது படமாக உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 62-வது படத்தை யார் இயக்குவார்? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்தான் இயக்குவார் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும், அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாகவும் கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

     

    விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரு மாபெரும் வெற்றிப்படங்கள் அமைந்துள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாவனா கடத்தல் வழக்கில் தன்னை மாட்டிவிட்டு சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சில நடிகர்கள் சதி செய்கிறார்கள் என்று திலீப் பேட்டியளித்துள்ளார்.
    நடிகை பாவனா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நடிகர் திலீப் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகை பாவனா விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி குற்றவாளியாக்க சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக பணம் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். சினிமாவில் இருந்தும், என் குடும்ப வாழ்க்கையையும் ஒழித்துக்கட்ட சில நடிகர்கள், நடிகைகள் சதி செய்கிறார்கள்.

    இதற்காகவே எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. முதலில் அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அந்த கடிதத்தை தெளிவாக படித்தால் இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லையென்பது நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    நடிகர் திலீப்பின் உறவினரும், டைரக்டருமான நாதிர்ஷா கூறியதாவது:- திலீப்பிடமிருந்து பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர்கள்தான் விஷ்ணுமூலம் என்னையும், திலீப்பின் மானேஜர் அப்புண்ணியையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்களின் பேச்சை நாங்கள் பதிவு செய்துள்ளோம். ரூ.1½ கோடி பணம் கேட்ட தகவலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த வரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.



    படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக படக்குழுவினரை தணிக்கை குழுவினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ‘சென்னை 600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி ‘சென்னை 600028’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.

    கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் 'பண்டிகை' படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலட்சுமியின் 'டீ டைம் டாக்' தயாரித்து 'ஆரா சினிமாஸ் ' விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார்.



    விஜயலட்சுமியை பாடல் எழுத வைத்தது குறித்து இயக்குனர் கூறும்போது, கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'பண்டிகை' படத்தின் ஒரு பாடலுக்காக  நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலட்சுமி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை.

    ஒரு சில நாட்கள் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்! 'அடியே' என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமும் மிகவும் ரசித்தோம்.



    இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'பண்டிகை' க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×