என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தமிழில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், தனது அடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கு மற்றும் இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவிட்டு, தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர் அந்த வன நடிகை. அவரது நடிப்பை விட நடனத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.

    தனது முதல் படம் வெளியாவதற்கு முன்னரே அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியிருந்த நடிகைக்கு, மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறாராம்.



    ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட சில பிரச்சனைகளால், தனது முதல் படம் பெரிய வரவேற்பை பெறாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதால், தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவால் அவரது காட்டில் கனமழை கொட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் ட்ரைலரை புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
    வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் 'வேலையில்லாப் பட்டதாரி'.

    ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.



    படிப்பிடிப்பு முடிந்ததால், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பொதுவாக யூடுபில் ரஜினி, விஜய் மற்றும் அஜித் பெருமளவில் சாதனை செய்வது வழக்கம். இந்நிலையில், நடிகர் தனுஷும் இந்த பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் ட்ரைலரை இதுவரை 9,051,775 பேர் கண்டு ரசித்துள்ளனர். தனுஷின் படத்திற்கு அதிகளவில் பார்வையாளர்களை பெற்றுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ்,
    அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
    நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை சிக்க வைத்த ரகசிய செல்போன் குறித்து வெளிவராத பரபரப்பு தகவல்கள் வந்துள்ளன.
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப், இந்த வழக்கில் சிக்கியது மலையாள நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பாவனா கடத்தலில் உள்ள தொடர்பை போலீசார் கண்டுபிடித்தது, திகில் படங்களில் வரும் சம்பவத்தை மிஞ்சும் அளவுக்கு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்காக அவர்கள் தனியாக திரைக்கதை எழுதி அதில் சில நபர்களை நடிக்க வைத்து கண்டுபிடித்த பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம்:-



    பாவனா கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் முதலில் எந்த தகவலையும் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. பணத்திற்காக மட்டுமே கடத்தியதாக தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் உண்மை இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதற்காக பல்சர் சுனிலின் நண்பர் ஒருவரை இன்னொரு வழக்கில் கைது செய்த போலீசார் அவரை போலீசாரின் ரகசிய உளவாளியாக மாற்றினர். பின்னர் அந்த உளவாளியை பல்சர் சுனில் அடைக்கப்பட்ட அறையில் தங்க வைத்தனர்.

    அந்த உளவாளி பல்சர் சுனிலுடன் பேசி, பேசி அவரது நம்பிக்கையை பெற்றான். இதற்கே இரண்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு மெதுவாக பாவனா, விவகாரம் பற்றி பேசினார். அப்போதுதான் இந்த வழக்கில் வெளிவராத பல உண்மைகளை பல்சர் சுனில் கொட்டினார்.



    அந்த தகவல்களை உளவாளி போலீசாரிடம் தெரிவித்தான். அதன் பேரில் திலீப் மற்றும் அவரது மானேஜர் அப்புண்ணி, தயாரிப்பாளர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் 2-வது மனைவி காவ்யாமாதவன், அவரது தாயார் ஆகியோரின் செல்போன் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டன.

    மேலும் அவர்களின் வீடுகள், நிறுவனங்கள், கடைகளிலும் ரகசிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எதுவும் பெரிதாக சிக்கவில்லை.

    இதன் மூலம் திலீப் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மட்டும் யாருக்கும் தெரியாமல் தொடர்பில் இருப்பதை புரிந்து கொண்டனர். அந்த தொடர்பு எப்படி? நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    அப்போதுதான் ஜெயிலுக்குள் இருந்த பல்சர் சுனில் வெளியில் இருக்கும் முக்கிய நபரை தொடர்பு கொள்ள வழியில்லாமல் தவிப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் உளவாளி மூலம் பல்சர் சுனிலுக்கு ஒரு செல்போனை வழங்கினர். போன் கிடைத்ததும் அவன், ரகசியமாக சில எண்களை தொடர்பு கொண்டு பேசினார்.



    அந்த எண்கள் யாருடையது என்பதை போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்கரா உத்தரவின்பேரில் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த செல்போன் நம்பர் நடிகர் திலீப் வைத்திருந்த ரகசிய செல்போன் எண் என தெரிய வந்தது.

    அந்த நம்பரை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். இதில்தான் திலீப் ஜெயிலில் இருந்த பல்சர் சுனிலிடம் பேசியது, காவ்யாமாதவனுடன் ரகசியமாக பேசியது ஆகியவை தெரிய வந்தது. அந்த பேச்சுக்களை டிரேஸ்அவுட் செய்த போலீசார் அதன் அடிப்படையிலேயே திலீப்பை ஆலுவா போலீஸ் கிளப்புக்கு வரவழைத்து 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின் போதுதான் திலீப் பொறியில் அகப்பட்ட எலி போல மாட்டிக்கொண்டார். ரகசிய செல்போன் மூலம் பாவனாவுக்கு எதிராக அவர் செய்த சதி, கடத்தல் உள்ளிட்ட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொகுத்த போலீசார் மொத்தம் 19 சாட்சியங்களை திரட்டினர். அவை அனைத்தையும் கோர்ட்டில் சமர்ப்பித்து திலீப்பை கைது செய்யும் உத்தரவை பெற்றனர்.



    இதற்கு வியூகம் வகுத்து கொடுத்த டி.ஜி.பி. லோக்நாத் பெக்கராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    அவரை கைது செய்த போலீசார் திலீப் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் 342 (சட்ட விரோத மாக அடைத்து வைத்தல்), 366 கடத்தல், 376டி கூட்டு மானபங்கம், 411 திருட்டு பொருட்களை வைத்திருத்தல், 506(1) குற்றம் செய்ய தூண்டுதல், 201 தடயங்களை அழித்தல், 212 குற்றவாளிக்கு ஆதரவாக இருத்தல், அவரை பாதுகாத்தல், 34 ஒரே திட்டத்துடன் சேர்ந்து குற்றம் செய்தல், 120(பி) சதி, 66(இ) சுய உரிமையை மீறுதல், 67(ஏ) ஆபாச படங்களை தயாரித்தல் ஆகிய 11 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
    பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது.
    பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் மற்றும் அதில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள 14 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.



    இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்தவித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

    தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சாகருப்பு, வையாபுரி, சக்தி, ஆரூள், பரணி, சினேகன், கணேஷ் போன்ற 14 பேர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை டுவிட்டரில் 40 லட்சம் பேர் தொடர்கிறார்கள்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார்.

    சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் பற்றிய பல்வேறு விவரங்களை தெரிவிக்கிறார். சமீபத்தில் அவர் கைத்தறி துணியில் தயாரான கவர்ச்சி உடை அணிந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

    இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. டுவிட்டரில் அதிக அக்கறை காட்டும் சமந்தாவை டுவிட்டரில் தொடர்பவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தொட்டு இருக்கிறது. இதன் மூலம் தென் இந்திய நடிகைகளில் டுவிட்டரில் அதிகம் பேர் தொடரும் நடிகைகளில் 2-வது இடத்தில் இருக்கிறார்.



    நடிகை சுருதி ஹாசன் முதல் இடத்தில் உள்ளார். இவரை டுவிட்டரில் 56 லட்சம் பேர் தொடர்கிறார்கள். திரிஷாவுக்கு 36 லட்சம் பேரும், ஹன்சிகாவுக்கு 29 லட்சம் பேரும், தமன்னாவுக்கு 16 லட்சம் பேரும் டுவிட்டர் தொடர்பாளர்கள் உள்ளனர். ராகுல் பிரீத்தி சிங்கை 10 லட்சம் பேர் டுவிட்டரில் தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கையின்படி இவர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    பிரம்மாண்ட இயக்குநரான ராஜமவுலி, தனது அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில், அவரது படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் மத்தியில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பாகுபலி 2' திரைப்படம், திரையிடப்பட்ட இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலை குவித்தது. படத்தில் மிக பிரமாண்டமான காட்சிகளும், சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

    படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமண்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை `பாகுபலி 2' படத்திற்கு உண்டு. படம் இதுவரை ரூ.1700 கோடியை வசூல் செய்துள்ளது. படம் வெளிவந்து 3 மாதங்கள் ஆன நிலையில், படம் இயக்குவதற்கு சிறிய இடைவேளை விட்டிருந்த ராஜமவுலி, தற்போது தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    ராஜமவுலி அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்காக, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இருந்து நாயகர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தினை மூன்று மொழிகளிலும் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.



    இதற்கிடையில் படத்தின் நாயகன் யார் என்று சமூக வலைதளத்தில் மிக பெரிய மோதல்களும் நிகழ்கிறது. இதில் முக்கியமாக ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் தங்களுடைய தலைவர் தான் அடுத்த படத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினிகாந்தின் `காலா' படத்துக்கு தடை கேட்ட வழக்கு விசாரணையை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் என்ற நாகராஜா. இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்துள்ளேன். ‘கரிகாலன் என்ற தலைப்பு’ மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது ஆகும்.



    என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

    எனவே, என்னுடைய கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

    இந்த மனு 4-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதிலளிக்க ரஜினிகாந்த், ரஞ்சித் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கால அவகாசம் கேட்டனர்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
    `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருக்கும் அதர்வா தனது தந்தையோடு ஒப்பிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
    அதர்வா, ஆனந்தி, ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போகன்கர், சூரி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் `ஜெமினிகணேசனும்  சுருளிராஜனும்’. இந்த படத்தில் முதல் முறையாக அதர்வா 5 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார். இளவரசு ஓடம் இயக்கியுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஸன்ஸ் சார்பில் சிவா தயாரித்து உள்ளார்.

    இதுகுறித்து அதர்வா கூறும்போது,

    தான் இதுவரை பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதுவரை முழு காமெடி படத்தில் நடித்தில்லை என்றும், தான் நிறைய காமெடி கதைகளை கேட்டாலும், எந்த கதையும் தனக்கு சிரிப்பு ஏற்படுத்தும் விதமாக இல்லை. ஆனால் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், கதை கேட்ட பத்தாவது நிமிடத்தில் தனக்கு இந்த படம் சிறந்த காமெடி படமாக அமையும் என்று தோன்றியதாக அதர்வா தெரிவித்தார்.



    மேலும் தான் நடிக்க வந்த பொழுது தனது தந்தை முரளியின் படத்தினை பார்க்கவில்லை. தற்போது தனது தந்தை இருந்தால் தனக்கு எந்த மாதிரியான கதை, கதாபாத்திரம் பொருந்தும் என்று அவரிடம் கேட்கலாம். ஆனால் தமக்கு அந்த பாக்கியம் இல்லை, தன்னை தனது தந்தையோடு ஒப்பிட வேண்டாம் என்றும் அதர்வா கூறினார்.

    மலையாள நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவலால் அவமானம் ஏற்பட்டுள்ளதாக மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார்.
    நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதைதொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து திலீப் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். நடிகர் சங்கத்தில் பொருளாளர் பொறுப்பில் திலீப் இருந்துவந்தார். அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடிகர் மம்முட்டி வீட்டில் நடந்தது.

    நடிகர் சங்க தலைவரான இன்னசென்ட் எம்.பி. தற் போது உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரிடம் போனில் பேசி அனுமதிபெற்ற பிறகு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக மம்முட்டி தெரிவித்தார்.



    நடிகர் திலீப் நீக்கத்தை தொடர்ந்து விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளனர். அதுபற்றி சங்க தலைவர் இன்னசென்ட் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நடிகர் சங்கத்தில் கிரிமினல்கள் ஊடுருவியது அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் சங்கத்தில் கிரிமினல்களுக்கு இடம் கிடையாது.

    மேலும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். ஏற்கனவே அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நாங்கள் எங்கள் வருத்தத்தை பதிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில், கொச்சி பனம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீடு உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக வந்து மம்முட்டிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் அவரது வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.



    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று காங்கிரசாரை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

    கொச்சி ஆலுவாவில் நடிகர் திலீப்பின் வீடு உள்ளது. இந்த வீடு மீதும் யாராவது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மலையாள நடிகர் சங்கத்தில் மோகன்லால் துணைத்தலைவர் பொறுப்பில் உள்ளார். இவருக்கும் திலீப்புக்கும் நல்ல நட்பு உண்டு. மலையாள பட உலகில் திலீப் நுழைந்து பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மோகன்லால் உதவியுள்ளார். மேலும் தற்போதுவரை திலீப் கைது பற்றி மோகன்லால் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    மம்முட்டி பேட்டி அளித்தபோதும் அருகில் நின்ற மோகன்லால் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இறுகிய முகத்துடன் மவுனமாகவே இருந்தார். இதற்கிடையில் நடிகர்சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்யக்கூடும் என்ற பரபரப்பும் நிலவி வருகிறது.
    பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது.

    இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பின. நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர்.

    இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.



    இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் உதகை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மே 23-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் 8 நடிகர், நடிகைகளும் உதகை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, சத்யராத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உதகை நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா உள்ளிட்டோரின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், அந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    நடிப்பதற்கு வந்துவிட்டால், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும். மோசமான பாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடிப்பது தான் திறமை என்று நடிகை வரலட்சுமி கூறியிருக்கிறார்.
    சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘காதல் மன்னன்’ என்ற சினிமா படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று இலஞ்சியில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது.

    வரலட்சுமி சரத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக சந்திர மவுலி நடிக்கிறார். கதாநாயகி வீட்டின் எதிரே கதாநாயகனின் வீடு உள்ளது. இருவரும் காதலிக்கிறார்கள். காதலனை காண, காதலி வீட்டின் அருகே துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருக்கும் ஒரு தள்ளு வண்டி பக்கத்தில் நின்று துணி தேய்ப்பவரிடம் விசாரிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

    படப்பிடிப்பு இடைவேளையின் போது வரலட்சுமி சரத்குமார் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தற்போது நிபுணன், விக்ரம் வேதா, எச்சரிக்கை, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் 2 படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் 3 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். இதை தொடர்ந்து சண்டைக்கோழி-2 படத்திலும் நடிக்க உள்ளேன். படத்தின் கதையை வைத்துதான் நான் நடிப்பதை தேர்வு செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த காட்சி.


    பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி:- தாரை தப்பட்டை படத்தில் நீங்கள் குண்டாக இருந்தீர்கள். இப்போது உடல் எடை குறைந்து மெலிவாக இருக்கிறீர்களே இது எப்படி?

    பதில்:- இது ஒரு பெரிய விஷயம் இல்லை. கரகாட்டம் ஆடும் பாத்திரத்தில் அந்த உடல் தேவைப்பட்டது. அதற்காக அவ்வாறு மாறினேன். இப்போது அது தேவையில்லை. எனவே உடலை குறைத்துக்கொண்டேன்.

    கேள்வி:- நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தான் தேர்வு செய்வதாக சமீபத்தில் கூறியிருந்தார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நடிப்பதற்கு என்று வந்துவிட்டால், இந்த கேரக்டரில்தான் நடிப்பேன், அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறக்கூடாது. நடிகை என்றால் எல்லா பாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். மோசமான பாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடிப்பது தான் திறமை. என்னிடம் வருபவர்கள் எல்லாம் அது போன்றுதான் கூறுகிறார்கள். என்னை தேடி அந்த பாத்திரங்கள் வருகின்றன. அவர்களிடம் அவ்வாறு யாரும் போவதில்லை. இதுதான் விஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    படத்தின் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம் கூறியதாவது:-

    ‘காதல் மன்னன்’ படத்தில் புதுமுகங்களே இல்லை. வரலட்சுமி சரத்குமார் படப்பிடிப்பில் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார். இதுபோல விமல் மற்றும் அனைத்து நடிகர்களும் தொழிற்கலைஞர்களும் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். இதனால் இந்த படப்பிடிப்பு தொடங்கிய 9 நாட்களில் 35 நிமிட படக்காட்சிகள் படமாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. வருகிற அக்டோபர் மாதம் ஆடியோ வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    தமிழ் மற்றும் மலையாள திரைஉலகில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல நடிகை பாவனா. கடந்த பிப்ரவரி மாதம் திடீரென கடத்தி மானபங்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த கடத்தலில் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதனை முற்றிலுமாக மறுத்து வந்தார்.

    பாவனாவை பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் ஒரு மெமரி கார்டில் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மெமரி கார்டு வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் அதனை கடத்தல் கும்பல் மறைத்து வைத்திருந்தது. இதனையடுத்து அந்த மெமரி கார்டு எங்கு இருக்கிறது என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கினர். இறுதியில் காவ்யா மாதவனின் கடையில் இருந்து மெமரி கார்டை போலீசார் கைப்பற்றினர். இதன் பின்னரே பாவனா கடத்தல் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.



    பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப்புடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே கொச்சி போலீசார் திலீப்பை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனா கடத்தல் தொடர்பாக 13 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகள் திலீப்பை திணறடித்தன. இதன் மூலம் பாவனா கடத்தலின் பின்னணியில் திலீப் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப் நேற்று முன் தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    திலீப் முதல் மனைவியான மஞ்சு வாரியாரை பிரிவதற்கு பாவனாவே காரணமாக இருந்ததாக கூறப்பட்டது. திலீப் - காவ்யா மாதவன் காதலை மஞ்சு வாரியாரிடம் பாவனா கூறியதால் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக திலீப் நம்பினார். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே திலீப், ஆட்களை ஏவி பாவனாவை கடத்தியது வெட்ட வெளிச்சமானது. கைது செய்யப்பட்ட திலீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவ்யா மாதவனை போலீசார் தேடிவருகிறார்கள்.



    பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பிடம் மேலும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணி அளவில் திலீப் ஆலுவா சிறையில் இருந்து கொச்சி அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர்.

    அதில் பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புக்கு முக்கிய பங்கு உள்ளது. சதிதிட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சதிதிட்டம் திருச்சூர், கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந் துள்ளது. அங்கெல்லாம் திலீப்பை அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.



    மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது குறித்தும் திலீப்பிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே 3 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் திலீப்பை வேனில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் பாவனா கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலிலோ அல்லது நாளையோ திலீப்பை, கொச்சியில் சதி திட்டம் நடந்ததாக கருதப்படும் இடங்களுக்கு போலீசார் அழைத்துச் செல்கிறார்கள். திருச்சூருக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.



    இந்த விசாரணை முடிவில் பாவனா கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    திலீப் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். அங்கமாலி கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே திலீப்பின் வக்கீல் ராம்குமார் திலீப்புக்கு ஜாமீன் கேட்டும் கோட்டில் மனுதாக்கல் செய்தார். இது உடனடியாக விசாரணைக்கு எடுத்துகொள்ள மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார். திலீப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை உடனடியாக ஏற்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார். இன்று பிற்பகலில் அதன் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    ×