என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார் .
    அவ்னி மூவிஸ்  வழங்கும் `மீசைய முறுக்கு'. இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். `மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.சி, ஹிப்ஹாப் தமிழா, நாயகிகள்  ஆத்மீகா, மனிஷா, நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார், ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன், படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில்  தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியது :- 

    "கிளப்புல மப்புல"  பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன். அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ், டி-சர்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார். `ஆம்பள' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும்  என்று கூறினேன். முதலில் `ஆம்பள' படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன்.


     
    ஆதி இசையமைத்த "பழகிக்கலாம்" பாடலை கேட்டேன், நன்றாக இருந்தது. அதன் பின் ஆதி நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன் என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே `ஆம்பள' படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது.

    அதன் பின் `ஆம்பள' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது. ஆதி இன்று கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார். `மீசைய முறுக்கு' ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பயோ-கிராபி திரைப்படம் போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை, நிறைய உண்மை கதை. இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல நான் நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது.



     யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன். பாடல்கள், படமென்று அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும் என்று சுந்தர்.சி கூறினார்.

    விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியது:- இண்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி, தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக `மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களுக்கு தான் நன்றி கூறவேண்டும்.



    நான் கதாநாயகனாக  அறிமுகமாகும் இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும்  என்று
    சுந்தர்.சி சார் என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இணைந்து பயணிக்கும் குழுவோடு, நான் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாக தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார்.

    விவேக் சார் தான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்னை போல் யூடியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

    குறும்படம் எடுத்து பலர் குழுவாக சினிமாவுக்கு வந்தார்களோ, அதே போல் இப்போது யூடியூப் மூலம் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்கு `மீசைய முறுக்கு' மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

    நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் கைதான நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு உள்ளார். கொச்சி அங்கமாலியில் உள்ள கோர்ட்டில் திலீப்பை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து கொச்சி அருகே உள்ள அலுவா ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார். அலுவா திலீப்பின் சொந்த ஊர். ஜெயிலில் திலீப்புக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்குவது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    ஜெயில் வாசலில் ஏராளமானோர் கூடி நின்று திலீப்புக்கு எதிராக கோஷம் போட்டனர். ‘வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்’ என்று கோஷம் போட்டார்கள். திலீப் கடைசியாக நடித்து திரைக்கு வந்த மலையாள படத்தின் பெயர் ‘வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்’ என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயில் வாசலில் திரண்டு நின்றவர்கள் திலீப்பை தாக்க முயற்சித்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தார்கள்.

    முன்னதாக திலீப் நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஒரு அப்பாவி. எந்த குற்றமும் செய்யவில்லை. என்னை இந்த வழக்கில் திட்டமிட்டு சிக்கவைத்து விட்டனர். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவேன்” என்றார்.



    திலீப்பின் வக்கீல் கே.ராம்குமார் கூறும்போது, “திலீப் மீது 120பி (சதித்திட்டம்) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாளை (இன்று) அந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

    திலீப்புக்கு சொந்தமாக கொச்சியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் முன்னால் சிலர் திரண்டு திலீப்பை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ஓட்டல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதேபோல புதியரா என்ற இடத்திலும் உள்ள திலீப்புக்கு சொந்தமான ஓட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. இதில் ஓட்டல் ஜன்னல்களும், நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

    திலீப் வீட்டிலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திலீப் படங்கள் ஓடும் தியேட்டர்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். திலீப் கைதானதை தொடர்ந்து அவர் நடித்து வந்த 3 படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.



    இதற்கிடையில் திலீப் கைது குறித்து ஆலோசிக்க மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மம்முட்டி வீட்டில் நடந்தது. இதில் செயற்குழு உறுப்பினர்களான மம்முட்டி, மோகன்லால் உள்பட நடிகர், நடிகைகள் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், திலீப்பை நடிகர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் நடிகர் மம்முட்டி நிருபர்களிடம் கூறும்போது, “மலையாள சினிமாவில் கிரிமினல்களுக்கு இடம் இல்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நடிகர்கள் சங்கம் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தது. நீதிக்காக அவர் நடத்திவரும் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும்” என்றார்.

    மலையாள இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டார்.
    ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
    சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தென்காசியை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தின் விளம்பர காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதுகுறித்து சுவாதியின் தந்தை சந்தானகோபாலன், கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ்செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி 3 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திலும் உண்மையானவர்களின் பெயரையே சூட்டியுள்ளார்கள். உண்மை கதை என்று விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், இதுபோல எப்படி படம் எடுக்க முடியும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    பணத்தின் அருமையும் அதன் முக்கியத்துவமும் நிறைந்தது தான் 'ரூபாய்' படத்தின் சிறப்பு என்று இயக்குநர் அன்பழகன் கூறியிருக்கறார்.
    காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பிரபு சாலமன்  தயாரித்துள்ள படம் 'ரூபாய்'.
    இந்த படத்தை சாட்டை படத்தின் வெற்றி இயக்குநர் அன்பழகன் இயக்கியுள்ளார்.  படத்தின் நாயகனாக கயல் சந்திரன், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர் .

    இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.  படம் நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் படம் பற்றி இயக்குநர் சில சுவாரஸிய விஷயங்களை பகிர்ந்தார்.



    பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அது போதுமானதாகவும் நியாயமான முறையில் சம்பாதித்தால் அது மனத்திற்கு சந்தோசத்தை தரும். அதுவே நியாயமற்ற முறையில் பெற்றால் அது நிறைய சங்கடங்களையும் துன்பங்களையும் தரும் . இதை தான் படத்தில் அனைவரும் பணத்தின் அருமையும், அதன் முக்கியத்துவமும் காண்பித்துள்ளோம்.

    சொந்தமாக லாரி வைத்திருக்கும் நாயகன் லாரிக்கு ட்யூ கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்பொழுது ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. இந்நிலையில், சின்னி ஜெயந்த், கயல் ஆனந்தி ஆகியோரை சந்திக்கிறார். அவர்களுடைய பிரச்னை அறிந்து நாயகன் உதவ முற்படும் பொழுது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், தனது சொந்த பிரச்னை என கதைகளம் செல்கிறது .
    ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் அரசியலில் குதித்துள்ளார்.
    ‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.

    தற்போது, தமிழில் கமலுடன் ‘சபாஷ்நாயுடு’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடித்து வருகிறார். இதுவும் பேசப்படும் வேடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



    இதே போல் தெலுங்கிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கில் நாராரோஹித், ரெஜினா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் ரம்யாகிருஷ்ணன் அரசியல்வாதியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை முழுவதும் நாயகன் நாராரோஹித், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரை சுற்றியே வருகிறது என்று கூறப்படுகிறது.

    இது ரம்யாகிருஷ்ணன் நடிப்புத் திறமைக்கு மற்றொரு அங்கீகாரமாக அமையும் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    தென் இந்திய பிரபல நாயகிகளான த்ரிஷா மற்றும் நயன்தாரவுடன் ஒரே நேரத்தில் நிவின் பாலி ஜோடி சேர்ந்துள்ளார்.
    ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற மலையாள நடிகர் நிவின்பாலி. இவர் தற்போது தமிழில் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

    அடுத்து இவர் நடிக்கும் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். இதை தொடர்ந்து ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நிவின் பாலி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை தியான் சீனிவாசன் இயக்குகிறார். திரிஷாவுடன் நிவின்பாலி நடிக்கும் ‘ஹேஷூட்’ படம் கடந்த வாரம் தொடங்கியது. நயன்தாராவுடன் ஜோடி சேரும் ‘லவ்ஆக்‌ஷன் டிராமா’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.



    தென் இந்திய பிரபல நாயகிகளுடன் நிவின்பாலி ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடிப்பது, முன்னணி நாயகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நிவின்பாலியுடன் இவர்கள் நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    "நாகின்" என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.

    வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்" என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்" என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

    "வீடியோ சிடி" எல்லாம் வராத காலம் அது.

    சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா. படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்" என்று கூறினார். "அவ்வளவுதானே! கவலையைவிடு" என்று அம்மா சொன்னார்.

    அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்" படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு" கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" என்பதுதான் அந்தப் பாடல்.

    1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா" பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்" படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

    "நீயா!" படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா" படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்" படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் 'கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?" என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்" என்றார், ஸ்ரீபிரியா.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்" படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார்.

    "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்" என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா" படத்தில் 'வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்" படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த மாதிரியான 'சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை 'சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி 'சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?" என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி 'டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.

    தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது" என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார்.

    அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி", "பாலாபிஷேகம்", "உள்ளத்தில் குழந்தையடி" உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.

    நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு" என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் 'படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.

    சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு" என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது."

    இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார். 
    பாவனா கடத்தல் வழக்கில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடிகை காவ்யா மாதவன் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா.

    கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் சென்ற போது ஒரு கும்பல் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது. அதனை செல்போனிலும் படம் எடுத்தது.

    இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காகவே பாவனாவை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் பாவனா, கடத்தல் விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. பாவனாவுக்கும், திலீப்புக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. திலீப், அவரது முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்ய பாவனாவே காரணம் என்று கருதியதால், பாவனாவை மிரட்ட திலீப் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.



    இதனை திலீப் மறுத்து வந்தார். தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்த சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். அவருக்கு மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா ஆதரவு கொடுத்தது.

    ஆனால் மலையாள நடிகைகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தனியாக அமைப்பு ஒன்றை தொடங்கி கேரள மனித உரிமை கமி‌ஷனில் புகார் செய்தனர்.

    அவர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேரள போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீசு அனுப்பினர்.

    இதையடுத்து போலீசார் பாவனா, விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிரம் காட்டினர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி பல்சர் சுனிலின் அறையில் போலீஸ் உளவாளி ஒருவரை தங்க வைத்தனர்.



    அவர், பல வாரங்கள் பல்சர் சுனிலுடன் நெருக்க மாக பழகினார். இந்த பழக்கத்தின் காரணமாக பாவனா கடத்தல் விவகாரத்தில் வெளிவராத முக்கிய தகவல்களை அந்த நபருடன் பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் திலீப்பின் தொடர்பு, பாவனா கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ ஆதாரங்களை எங்கு மறைத்து வைத்துள்ளோம் என்ற தகவல்கள் வெளியானது.

    அதனை போலீஸ் உளவாளி போலீசாரிடம் தெரிவித்ததும் வழக்கு விசாரணை வேகம் எடுத்தது.

    கடத்தல் வழக்கில் திலீப் மற்றும் திலீப்பின் 2-வது மனைவியும், நடிகையுமான காவ்யாமாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.



    திலீப், காவ்யாமாதவன், பாவனா ஆகியோர் சேர்ந்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முடக்கினர். பல இடங்களில் நிலங்களை வாங்கி விற்றனர். அப்போது திலீப்புக்கு காவ்யாமாதவனுடன் காதல் ஏற்பட்டது. இதனை பாவனா திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியாரிடம் போட்டுக் கொடுத்தார். அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாவனாவின் பெயரில் உள்ள சில சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றித்தரும்படி திலீப் கேட்டார்.

    அதற்கு பாவனா மறுப்பு தெரிவித்தார். இப்படி திலீப்புடன் ஏற்பட்ட உரசலே இருவருக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.



    இந்த நிலையில்தான் பாவனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதனை குலைக்கவும், பாவனாவை மிரட்டவும் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் பதிவுசெய்ய ரவுடி கும்பலுக்கு திலீப் உத்தரவிட்டார்.

    இதற்காக பணம் தருவதாகவும் கூறினார். திலீப் கூறியதால்தான் பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு காவ்யா மாதவனின் ஜவுளிக்கடையில் மறைத்து வைக்கப்பட்டது.

    இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீஸ் தனிப்படை ஐ.ஜி. தினேந்திரா காஷ்யப் தலைமையில் திலீப்பைகைது செய்ய நாள் குறித்தது. கடந்த வாரமே இந்த நடவடிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று தான் திலீப் கைது செய்யப்பட்டார். நேற்று காலையிலேயே கொச்சி போலீஸ் கிளப்புக்கு வரவழைக்கப்பட்ட திலீப் அங்கேயே மாலை 6 மணி வரை சிறை வைக்கப்பட்டார். அதன் பிறகு இந்த தகவலை உயர் அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    திலீப்பை தொடர்ந்து அவரது உறவினரும், தயாரிப்பாளருமான நாதிர்ஷாவும் கைது செய்யப்பட்டார். சதிச்செயலுக்கு பண உதவி செய்தது, ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர், கைது செய்யப்பட்டதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.

    இதுபோல சதிச்செய லுக்கு உடந்தையாக இருந்தது, பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை செய்த போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ காட்சிகளை போலீசாருக்கு தெரியாமல் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக காவ்யாமாதவனையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார் தேடுவதை அறிந்ததும், காவ்யா மாதவனும், அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
    தொடர் புகார்கள் எதிரொலியாக ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் பெயரை மாற்றம் செய்வதாக படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் அறிவித்திருக்கிறார்.
    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற தலைப்பில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையொட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.



    இந்தநிலையில் சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் தலைப்பை `நுங்கம்பாக்கம்' என மாற்றியுள்ளதாக இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் நடித்து வரம் கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுப்பையா தெரிவித்திருக்கிறார்.  

    சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தொடங்கிவிட்டது.
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தில் முதல் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் டூயட் பாடி இருக்கிறார்கள்.

    படம் திட்டமிட்டபடி ஷூட்டீங்கை முடித்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இப்படத்தின் மூலம் ஃபஹத் ஃபாஸில் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி அதிக பொருட்செலவில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    இந்நிலையில் `வேலைக்காரன்' படத்தின் வெளிநாட்டு வியாபாரமும் தொடங்கிவிட்டது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.11 கோடி வரை விற்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே இதுவரை ரூ.10 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஒன்று அதிகளவில் வியாபாரம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறுகிறார்கள்.
    ரூ.50 லட்சம் செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் டிவி நடிகை மற்றும் அவரது தாயாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பஞ்சாப் டி.வி. நடிகை அல்கா கவுசல். இவர் சல்மான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தில் நடிகை கரீனாகபூருக்கு தாயாக நடித்துள்ளார்.

    இவரும், தாயாரும் பஞ்சாபை சேர்ந்த அவதார்சிங் என்பவரிடம் டி.வி. தொடர் தயாரித்து கொடுப்பதாக கூறி ரூ.50 லட்சம் பணம் பெற்றனர்.

    ஆனால் டி.வி. தொடர் எடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.50 லட்சத்தை 2 செக்காக திருப்பி கொடுத்தனர். அதை அவதார்சிங் வங்கியில் போட்ட போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

    இதனை தொடர்ந்து நடிகை மற்றும் அவரது தாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சங்ரூர் கோர்ட்டு தாய்-மகளுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து இருவரும் மேல்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 2 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்தார்.

    இதையடுத்து தாயும், மகளும் சங்ரூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடப்பு தென்காசியில் தாெடங்க இருக்கிறது.
    பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய  படத்திற்கு சமுத்திரகனி வசனம் எழுதுகிறார். இதுவே உதயநிதி ஸ்டாலின், சமுத்திரகனி, பிரியதர்ஷன் இணையும் முதல் படம். மலையாளத்தில் மிக பெரிய வெற்றி அடைந்த `மகேஷின்டெ பிரதிகாரம்'  படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.

    இப்படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமாேத் நடக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில்  பார்வதி நாயர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி குற்றாலம் ,தென்காசி பகுதிகளில் தாெடங்க இருக்கிறது.
    ×