என் மலர்
பீகார்
- இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல
- முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது
பீகார் மாநிலம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் ஹிஜாப், புர்கா, நிகாப், முகமூடிகள் (Masks), ஸ்கார்ஃப் அல்லது ஹெல்மெட் அணிந்து முகம் மறைக்கப்பட்ட நிலையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதை தெரிவிக்கும் வகையில், பீகாரின் பல பகுதிகளில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் "முகத்தை மறைத்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை"என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டது என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்றும் AIJGF பீகார் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்துள்ளன
- அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இருப்பதில்லை.
- மக்கள் கஷ்டத்தை சந்திக்கக் கூடாத வகையில், அதிகாரிகள் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.
பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்களை சந்திக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக பஞ்சாயத்து மற்றும் டிவிசனல் அளவிலான அலுவலங்களில் கட்டாயம் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வருகிற 19-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதிஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அதிகாரிகள் இருப்பதில்லை என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.
இந்த சிஸ்டம் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) திரும்பப் பெறப்பட்டு, பாராளுமன்றத்தில் VB-G RAM G சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பேராட்டம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் புதிய சட்டத்தில் ராம் பெயர் இருப்பதுதான் காங்கிரஸ்க்கு பிரச்சினை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசாரை மக்களவை எம்.பி. தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் இது தொடர்பாக கூறியதாவது:-
ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வேலைவாய்ப்பு அல்லது நிலத்திட்டம் குறித்து காங்கிரஸ் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஒரே பிரச்சினை கடவுள் ராமர் பெயரோடுதான். VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும். காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.
UPA ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு 10 வருடங்களில் மாநிலங்களுக்கு 2.13 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கியது. என்டிஏ அரசு 2014-ல் இருந்து மாநிலங்களுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரானது. கிராமப்புறங்களுக்கு எதிரானது.
காங்கிரசின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும். இதனால்தான் தேர்தலில் அவர்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
- 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
"14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார்.
பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
- சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
- நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.
நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.
துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.
- நிதிஷ்குமார் 2000-ல் பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
- அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது.
பாட்னா:
பீகார் என்றாலே நிதிஷ்குமார், நிதிஷ்குமார் என்றாலே பீகார் என அழைக்கும் அளவுக்கு தனது பதவியை தக்க வைத்துள்ளதுடன், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த தலைவராக திகழ்கிறார்.
நிதிஷ்குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்துவிட்டார். இந்த ஆண்டு 10-வது முறை பதவி ஏற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பதுதான்.
இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டசபைத் தேர்தல்.

பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.யின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன.
இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டசபைத் தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல் மந்திரியாக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே.
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.
1985-ம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகை சூடினார்.
5 முறை மக்களவை பதவி, 10 முறை முதல் மந்திரி பதவி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைக்குள் இருப்பதை உறுதி செய்தவர்.
நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக முதல் முறை பதவியேற்றார். அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. அதன்பின், 2005-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 10 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதல் மந்திரியாக தனது அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்துள்ளார் என்பதே இவரது சாமர்த்தியம். வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய மந்திரி பதவி வகித்தவர்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் மீது அம்மாநில மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.
- நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
- அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் அரசு நிகழ்வின் போது ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் தனது அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளார்.
அரசுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார்.
இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும் பணியில் சேர்த்த அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.
- நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சரச்சை கருத்து.
பீகாரில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள 'சம்வாத்' என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற மேடை ஏறினார். அப்போது, மேடையில் நின்றிருந்த முதல்வர் நிதிஷ்குமார், "என்ன இது?" என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.
நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்சையையான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் நிஷாத அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்," அவர் ஹிஜாபை இழுக்கவில்லை, நியமனக் கடிதம் சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அதை இழுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர், அவரை யாரும் வேட்டையாடக்கூடாது... ஹிஜாப்பை தொட்டது இவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று நேர்காணலின் போது அமைச்சர் சிரித்துக் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
நிஷாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்திடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்," இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தரப் பிரதேச அரசு அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதைச் சொல்லும் விதமும், அந்த நயவஞ்சகச் சிரிப்பும் அவரது இழிவான, அபத்தமான மற்றும் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது," என்றார்.
கண்டனங்கள் வலுக்கும் நிலையில் சஞ்சய் நிஷாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," அந்த கருத்துகளை நான் சிரித்துக்கொண்டே, சாதாரணமாக, எனது உள்ளூர் போஜ்புரி வட்டார மொழியில் கூறினேன். எந்தவொரு சமூகம், எந்தவொரு பெண் அல்லது எந்தவொரு மதத்திற்கும் எதிராக எந்தத் தீய நோக்கமும் இல்லை, அவமதிக்கும் எண்ணமும் இல்லை," என்றார்.
இருப்பினும், ஹிஜாப் சர்ச்சை வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் மீது லக்னோவின் கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா, தனது வழக்கறிஞர்களுடன் சென்று, அந்த இரு தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரை அளித்துள்ளார்.
- பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டமாக நடைபெற்றது.
- கருத்துக்கணிப்புகளில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வென்றது.
பாட்னா:
காலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படும் மார்க்கெட். காய்கறிகள் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அங்கு காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தான் மணி.
அப்போது அங்கு வந்த முருகன், என்னடா மணி, SIR படிவம் எல்லாம் நிரப்பிக் கொடுத்துட்டியா என கேட்டான்.
ஆமாம்னே கொடுத்துட்டேன். எலக்ஷன் கமிஷனுக்கு ஏண்ணே இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா பழையபடி இருந்தா என்ன கெட்டுப் போச்சி என அங்கலாய்த்தான்.
அப்படி இல்லைடா மணி. இந்த மாதிரி சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டால் தான் போலி வாக்காளர்களை நீக்க முடியும். அப்படி செய்தால் தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் பதிவாகவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் எலக்ஷன் கமிஷன் இதுபோன்ற பணிகளை செய்து வருது. சமீபத்தில் பீகார் மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டதால் வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரிச்சிருக்கு என்றான் முருகன்.
அப்படியா, பீகாரில் அப்படி என்ன நடந்தது சொல்லு கேட்போம் என கேட்டான் மணி.

கடந்த மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் குறித்து முருகன் கூறியதன் சுருக்கம் வருமாறு:
பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற்றது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்டிரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏனைய 39 தொகுதிகளில் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.
ஆரம்பத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்னிலை இடைவெளி அதிகரித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது.

இறுதியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் கிடைத்தன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைத்தன. அந்தக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
மொத்தத்தில் 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஏற்றத்தையும், காங்கிரஸ் கட்சி கடும் சறுக்கலையும் சந்தித்தது.
ஆனால் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையால் தோற்றோம் என காரணம் கூறியது.
பீகார் தேர்தலில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் பயன்படுமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என முடித்தான் முருகன்.
என்னவோ நீ சொல்ற, SIR நடவடிக்கை இங்க எல்லாம் எந்த விளைவை ஏற்படுத்துமோ தெரியலை என்றபடியே லாரியில் இருந்து இறக்கிய மூட்டைகளுக்கான பணம் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் மணி.
- முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹஜாபை முதலமைச்சர் நிதிஷ்குமார் பிடித்து இழுத்து கழற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பணி நியமன ஆணை பேரானந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் பிடித்து இழுத்துகழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பெண் மருத்துவரை அவமதித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. நிதிஷ்குமாரின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்தது.
- அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.
- அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஒருவர், தனது மூன்று பெண் குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர்40 வயதான அமர்நாத் ராம். அவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில், அமர்நாத் ராம் தனது அனுராதா (12), ஷிவானி (7), மற்றும் ராதிகா (6), மகன்களான சிவம் (6) மற்றும் சந்தன் (5) என ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அமர்நாத் ராம் நேற்று முன் தினம் இரவு, குழந்தைகளின் தாய் பயன்படுத்திய சேலைகளைக் கொண்டே தூக்கு கயிறுகளை உருவாக்கி ஐவரின் கழுத்திலும் இறுக்கி, அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.
இதில் அமர்நாத் ராம் மற்றும் அவரது மூன்று மகள்கள் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
வீட்டில் சமயலறையில் முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன.பிள்ளைகளுக்கு முட்டைகளை சமைத்து சாப்பிடச் செய்துவிட்டு இந்த கொடிய முடிவை அமர்நாத் எடுத்துள்ளார்.
விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியின் மறைவுக்குப் பிறகு ஐந்து குழந்தைகளையும் தனியாக வளர்ப்பதில் அவர் சிரமப்பட்டார் என கிராமத்தினர் தெரிவித்தனர்.
ஒரு தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக அவர் இம்முடிவை எடுத்ததாக மற்ற சிலர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து முசாபர்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
- இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.
அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.
அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.






