என் மலர்
இந்தியா

கடவுள் ராமர் பெயரோடுதான் பிரச்சினை: "VB-G RAM G" திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் பதில்
- VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) திரும்பப் பெறப்பட்டு, பாராளுமன்றத்தில் VB-G RAM G சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பேராட்டம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் புதிய சட்டத்தில் ராம் பெயர் இருப்பதுதான் காங்கிரஸ்க்கு பிரச்சினை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசாரை மக்களவை எம்.பி. தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் இது தொடர்பாக கூறியதாவது:-
ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வேலைவாய்ப்பு அல்லது நிலத்திட்டம் குறித்து காங்கிரஸ் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஒரே பிரச்சினை கடவுள் ராமர் பெயரோடுதான். VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும். காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.
UPA ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு 10 வருடங்களில் மாநிலங்களுக்கு 2.13 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கியது. என்டிஏ அரசு 2014-ல் இருந்து மாநிலங்களுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரானது. கிராமப்புறங்களுக்கு எதிரானது.
காங்கிரசின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும். இதனால்தான் தேர்தலில் அவர்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.






