என் மலர்
கணினி
ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன்களை தொடர்ந்து 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து ஸ்மார்ட்போன், ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில் அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவை சார்ந்த தகவல்களை மறுக்கும் வகையிலான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சத்தமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்களை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன.

கோப்பு படம்
'ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம்.' என குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார். இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்சமயம் புதிய பிரிவில் ஆதரவு வழங்க 14 டெலிகாம் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
புதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்ட புதிய ஐபேட் சாதனத்திற்கான இந்திய முன்பதிவு துவங்கியுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த மாதம் நடைபெற்ற கல்வி சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் 9.7 இன்ச் கொண்ட புதிய ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்தது. ஆப்பிள் பென்சில் வசதி கொண்ட புதிய ஐபேட் ஆப்பிளின் A10 ஃபியூஷன் சிப்செட் கொண்டு இயங்குகிறது.
புதிய ஐபேட் விற்பனை ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என ஆப்பிள அறிவித்திருந்த நிலையில், புதிய ஐபேட் சாதனங்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் (2018) சிறப்பம்சங்கள்:
- 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் லேமினேட் செய்யப்பட்ட ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் பென்சில் சப்போர்ட்
- ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப் மற்றும் M10 கோபிராசஸர் மோஷன் கோபிராசஸர்
- 32 ஜிபி / 128 ஜிபி
- டச் ஐடி கைரேகை சென்சார்
- ஐஓஎஸ் 11
- 8 எம்பி 1080 பிக்சல் கேமரா, f/2.4 அப்ரேச்சர், பானரோமா
- 1.2 எம்பி ஹெச்.டி. செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- 32.4-வாட்wபேட்டரி
புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடல் சில்வர், கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் இந்தியாவில் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 20-ம் தேதி முதல் துவங்குகிறது.
ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் 2018 32 ஜிபி வைபை விலை ரூ.28,000
ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் 2018 32 ஜிபி வைபை + செல்லுலார் விலை ரூ.35,700
ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் 2018 128 ஜிபி வைபை விலை ரூ.38,600
ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் 2018 128 ஜிபி வைபை + செல்லுலார் விலை ரூ.46,300
சாம்சங் சார்பில் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காப்புரிமையில் புதிய அணியக்கூடிய சாதனம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் சார்பில் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.
அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் D813,864 S என்ற காப்புரிமை எண், அணியக்கூடிய மின்சாதனம் (Wearable Electronic Device) என்ற பெயர் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் இடம்பெற்றிருக்கும் வரைப்படங்களின் படி இந்த அணியக்கூடிய சாதனத்தில் நீட்டிக்கப்பட்ட டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது.
புதிய சாதனம் பயனரின் மணிக்கட்டில் அணிந்து கொள்ளும்படி காட்சியளிக்கிறது. மணிக்கட்டில் மாட்டிக்கொள்ள்க்கூடி சாதனத்தில் இருந்து டிஸ்ப்ளே நீட்டிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் சாம்சங்-இன் முட்டை வடிவ பட்டன் வாட்ச் ஃபிரேமில் இடம்பெற்றிருக்கிறது.

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட அணியக்கூடிய சாதனம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாதனங்களின் காப்புரிமை விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவற்றின் வெளியீடு குறுத்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. கேலக்ஸி X என அழைக்கப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் புதிய அணியக்கூடிய சாதனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
ஃபேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
குறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்குவோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்படும் ரகிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு குறைந்தபட்சம் ஐந்து நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை தனது சேவைகளில குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழிக்க வேண்டும். எனினும் அழிக்கப்பட்ட குறுந்தகவல் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டது (Your message has been deleted) என்ற வார்த்தையாக மாற்றப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் குறுந்தகவலை பயனர் பார்க்காத வரை அழிக்க முடியும்.
ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் 27 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசல்ஸ்:
ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 27 லட்சம் பேர் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் பயன்படுத்தப்பட்டதை ஃபேஸ்புக் உறுதி செய்துள்ளது. இத்தகவலை ஐரோப்பிய யூனியன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தகவல் திருட்டு குறித்து ஃபேஸ்புக் அனுப்பியிருக்கும் கடிதத்தில் இத்தகவல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க ஃபேஸ்புக்கிடம் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் திருட்டு மட்டுமின்றி இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்த தகவல்களும் ஃபேஸ்புக் அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க புதிய செட்டிங்ஸ் வழங்கியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சேகரித்த தகவல்களில் 81% அமெரிக்க பயனர்களுடையது என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா மற்றும் ப்ரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 11 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5.6 லட்சம் பயனரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் ரூ.2 மட்டும் செலுத்தி அதிவேக வைபை பயன்படுத்த முடியும்.
புதுடெல்லி:
இந்தியாவில் முந்தைய காலங்களில் தொலைபேசி சேவையை வழங்க பிசிஒ-க்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த காலத்தில் வைபை சேவையை மேம்படுத்தும் நோக்கில் பிடிஒ என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட இருக்கிறது.
மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் பொது டேட்டா அலுவலக திட்டத்திற்கான முன்னுரையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இண்டர்நெட் கட்டணங்கள் அதிகபட்சம் 90% வரை குறைக்கப்பட இருக்கிறது.
பொது வைபை க்ரிட் அமைக்கும் டிராயின் புதிய திட்டம் நாடு முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். இந்த திட்டம் பிராட்பேண்ட் பயன்பாட்டிற்கு மாற்றாக இந்தியாவின் ஊரக பகுதிகளிலும் அதிவேக இணைய வசதியை வழங்கும். புதிய திட்டத்தின் கீழ் துவங்கும் டேட்டா தி்ட்டங்களின் விலை ரூ.2 முதல் துவங்குகிறது.
சேஷெட் வடிவில் கிடைக்கும் டேட்டா சலுகைகளை பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் வைபை மூலம் பயன்படுத்தலாம். சேவை வழங்குவது, பண பரிமாற்றம் மற்றும் சேவை உறுதி செய்வது போன்ற பணிகளின் போது பல்வேறு நிறுவனங்கள் ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைய இருக்கின்றன.

கோப்பு படம்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக பிராட்பேண்ட் சேவை இருக்கிறது. அந்த வகையில் புதிய சேவை வழங்க வைபை சிறப்பான வழிமுறை ஆகும். வைபை சேவை வழங்குவதற்கான உதிரி பாகங்கள் விலை குறைவு, இலவச ஸ்பெக்ட்ரெம் உள்ளிட்டவை இண்டர்நெட் விலையை குறைவாக வழங்க வழி செய்துள்ளது என டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.
பிடிஒ-க்கள் சிறு நிறுவனங்களாகவோ அல்லது சிறு வணிகர்களாகவோ இருக்கலாம். இவர்கள் வைபை ஹாட்ஸ்பாட்களை இலவசமாகவோ அல்லது கட்டண அடிப்படையிலோ வழங்கலாம். புதிய திட்ட வடிவம் மந்திரி மனோஜ் சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் இந்த திட்டத்தின் முதற்கட்ட சோதனைகள் வெற்றி பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது வைபை சோதனை திட்டத்தில் பயனர்களுக்கு அதிவேக இணைய அனுபவம் கிடைக்கும். இந்த திட்டத்தில் டீ கடை, மளிகை கடை போன்ற சிறு சிறு இடங்களில் வைபை ஹாட்ஸ்பாட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிடிஒ-க்களை செட்டப் செய்வதற்கான பணிகளை உதிரி பாகங்களை தயாரிப்போர், இண்டர்நெட் சேவை வழங்குவோர் மேற்கொள்வர் என டிராய் தெ்ரிவித்துள்ளது.
பொது வைபை பயன்படுத்துவோர் மிக எளிமையாக நெட்வொர்க் கணி்டறிந்து ஒற்றை கிளிக் மூலம் இணைப்பை உறுதி செய்து, கட்டணம் செலுத்தி தங்களது சாதனங்களில் வைபை இணைத்து கொள்ள முடியும். இதேபோன்று பொது வைபை அமைக்க விரும்பும் சிறு வணிகர்களுக்கான செயல்திட்ட வடிவம் எளிமையாக இருக்கும் என டிராய் மேலும் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் பயன்படுத்தி வருவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:
உலக அளவில் புகழ் பெற்ற சமூக வலைத்தளமாக இருந்து, தகவல் திருட்டு சம்பவத்தில் பெரும் பிரச்சனைகளை ஃபேஸ்புக் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், தனது பயனரின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து வந்தது.
அது ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது. முதலில் 5 கோடி பேர் தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் உள்ள உறவை ஃபேஸ்புக் முறித்து கொண்டது.

இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க புதிய செட்டிங்ஸ் வழங்கியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சேகரித்த தகவல்களில் 81% அமெரிக்க பயனர்களுடையது என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா மற்றும் ப்ரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 11 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5.6 லட்சம் பயனரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
எங்கள் தளத்தில் இருந்து தகவல் திருடப்பட்டு இருப்பதால் அதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று ஃபேஸ்புக்கின் நிறுவன தலைவர் சூக்கர்பர்க் கூறி இருந்தார். சில நிறுவனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் அதிக டேமேஜ் ஆகியிருக்கும் ஃபேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் வழிமுறைகளின் கீழ் புதிய வசதியை வழங்கியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் பெருமளவு பாதிப்பை சம்பாதித்து விட்டது. இதில் இருந்து விடுபட ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை வழங்கியது. முன்னதாக ஃபேஸ்புக் பிரைவசி செட்டிங்ஸ் அம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்திய ஃபேஸ்புக் இம்முறை புதிய டூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் அறிவித்திருக்கும் புதிய டூல் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகளை ஒரே முயற்சியில் அழிக்க வழி செய்கிறது.
பயனர் விருப்பம் தெரிவித்து, அந்த செயலிகள் பயன்படுத்தும் பயனரின் தகவல்களை பார்த்து, குறிப்பிட்ட செயலிகள் பயன்படுத்த வேண்டிய தகவல்களை பயனர் கட்டுப்படுத்தும் வசதியை பயனருக்கு வழங்கி வருகிறோம். வரும் மாதங்களில் இந்த வழிமுறை மேலும் எளிமையாக்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.
புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் பயனர்கள் தேவையற்ற செயலிகளை மிகவும் எளிமையாக அழிக்க முடியும். ஃபேஸ்புக்கில் பயனர் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் இது துவக்கம் மட்டுமே, வரும் நாட்களில் இதுகுறித்த அம்சங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஃபேஸ்புக் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள செயலிகளை தேர்வு செய்து அவற்றை ஒற்றை கிளிக் மூலம் அழிக்க முடியும். முன்னதாக ஒவ்வொரு செயலியை தேர்வு செய்து அழிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதுமட்டுமின்று மூன்று மாதங்களில் பயனர் பயன்படுத்தாத செயலிகளை தானாக அழிக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.
கூகுள் க்ரோம் பிரவுசரில் க்ரிப்டோகரென்சி மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்களுக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது க்ரோம் சேவையில் க்ரிப்டோகரென்சி மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
கூகுள் க்ரோம் இணைய திட்ட விதிமுறைகளில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் இவை மைனிங் செய்யும் ஒற்றை பணியை மட்டும் செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்த விவரம் பயனருக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூகுள் சார்பில் விதிமுறை விதிக்கப்பட்டு இருந்தது.
"மைனிங் செய்யக்கூடிய ஸ்க்ரிப்ட்களை கொண்டிருக்கும் சுமார் 90 சதவிகித எக்ஸ்டென்ஷென்கள் வேலை செய்யாமல் போனது. இவற்றை க்ரோம் வெப் ஸ்டோரில் அப்லோடு செய்வதில் செவலப்பர்களின் முயற்சி பலனளிக்காமல் போனது. க்ரிப்டோகரென்சி மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷென்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டும், ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது," என எக்ஸ்டென்ஷன்ஸ் பிரிவு மேளாலர் ஜேம்ஸ் வேக்னர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று முதல் க்ரோம் வெப் ஸ்டோரில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்கள் வேலை செய்யாது," என அவர் தெரிவித்திருக்கிறார். தற்சமயம் செயல்பட்டு வரும் மைனிங் எக்ஸ்டென்ஷன்கள் அனைத்தும் ஜூன் மாத வாக்கில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

மைனிங் தவிர பிளாக்-செயின் சார்ந்த எக்ஸ்டென்ஷன்கள் அனைத்தும் க்ரோம் வெப் ஸ்டோரில் அனுமதிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு விதங்களில் பலன் அளிக்கும் எக்ஸ்டென்ஷன்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் ஸ்க்ரிப்ட்கள் (குறியீடுகள்) இடம்பெற்றிருப்பதும் இவை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பின்னணியில் வேலை செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற மைனிங் எக்ஸ்டென்ஷன் சார்ந்த ஸ்க்ரிப்ட்கள் பயனருக்கு தெரியாமல் சிபியு பயன்படுத்தும் என்பதால் சாதனத்தின் செய்லபாடு பாதிக்கப்படுவதோடு, அதிகளவு மின்சக்தியை பயன்படுத்தும்.
"கூகுளின் புதிய முடிவு க்ரோம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து பயனர்களுக்கு பாதுகாப்பான சேவையை தொடர்ந்து வழங்கும்," என வேக்னர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக க்ரிப்டோகரென்சி சார்ந்த விளம்பரங்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் அறிவித்தது. இதே போன்று ஜனவரி மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும் தனது வலைத்தளத்தில் க்ரிப்டோகரென்சிக்களை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சாட்வாட்ச் எனும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் பயனர்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் உரையாடல்களை பாதுகாப்பானதாக மாற்ற பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.
சமீபத்தில் லைஃப்ஹேக்கர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சாட்வாட்ச் என அழைக்கப்படும் இந்த செயலி ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம் குறித்த தகவல்களை வழங்குகிறது.
சாட்வாட்ச் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்றும் இரு கான்டாக்ட்கள் சாட் செய்யும் தகவல்களை தெரிவிக்கும்.

நண்பர்கள், குடும்பத்தார் அல்லது ஊழியர்களின் வாட்ஸ்அப் நடவடிக்கையை சாட்வாட்ச் மூலம் அறிந்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களின் லாஸ்ட் சீன் அம்சத்தை மறைத்து வைத்திருந்தாலும் இந்த செயலி வேலை செய்யும் என சாட்வாட்ச் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உங்களுக்கு அறிமுகமானவர்களின் சாட் விவரங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் வசதியும் இந்த செயலியில் உள்ளதாக சாட்வாட்ச் நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க இந்த செயலி 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தி நெக்ஸ்ட் வெப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆன்ட்ராய்டு பயன்படுத்துவோர் ரூ.140 செலுத்தி இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டு விட்டது. சாட்வாட்ச் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இந்த செயலியின் வெப் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் சேஞ்ச் நம்பர் அம்சம் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் புதிய வசதியை பெற இருக்கிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் சேஞ்ச் நம்பர் (Change Number) அம்சம் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் புதிய வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. மற்ற அம்சங்களை போன்றே புதிய வசதியும் முதற்கட்டமாக பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்படுகிறது.
புதிய வசதி வாட்ஸ்அப் வாடிக்கையாளர் தங்களது வாட்ஸ்அப் சேவையை புதிய நம்பருக்கு மாற்றும் போது அவர்களின் கான்டாக்ட் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரிவிக்கும். அந்த வகையில் புதிய நம்பரை மாற்றும் போது அதனை வாட்ஸ்அப் கான்டாக்ட்களுக்கு தனித்தனியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வாட்ஸ்அப் புதிய அம்சம் அதிகளவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.97 பதி்ப்பில் பயனர்கள் தங்களது கான்டாக்ட்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புவது குறித்து தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கான்டாக்ட்களை மட்டும் தேர்வு செய்யலாம்.
அடிக்கடி வாட்ஸ்அப் நம்பரை மாற்றுவோருக்கு புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே குறுந்தகவல் மூலம் புதிய நம்பரை வழங்குவதற்கு மாற்றாக புதிய அம்சம் இந்த பணியை எடுத்துக் கொள்கிறது. பயனர் புதிய நம்பர் மாற்றியதும், பழைய சாட் விவரங்கள் அனைத்தும் புதிய நம்பரிலும் தோன்றி, குறிப்பிட்ட பயனர் புதிய மொபைல் நம்பர் மாற்றி இருக்கிறார் என்பதை குறிக்கும்.
முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியை பயன்படுத்துவோர் தங்களது செயலியை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து புதிய அம்சத்தை பெற முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அறிமுகமான பட்ஜெட் விலை ஐபேட் குறித்து இந்த தகவல்கள் தெரியுமா?
சிகாகோ:
ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய ஐபேட் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருள்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்விழாவில் கல்வி சார்ந்த பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர்களின் பணிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு ஏற்றதாகவும் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும் இவ்விழாவில் ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய ஐபேட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கூகுள் க்ரோம்புக் மற்றும் இதர விலை குறைந்த சாதனங்களுக்கு போட்டியாக புதிய ஐபேட் அமைந்துள்ளது. புதிய ஐபேட் மாடல்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிளின் விலை குறைந்த ஐபேட் மாடல்கள் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, தாய்லாந்து, துருக்கி மற்றும் இதர நாடுகளிலும் புதிய ஐபேட் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தியாவில் புதிய ஐபேட் 32 ஜிபி வைபை மாடல் விலை ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் 32 ஜிபி, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.38,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் மாடல்களில் 9.7 இன்ச் ரெட்டினா ஸ்கிரீன், அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டச் ஐடி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலில் ஐபோன் X போன்று ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. வீடியோ காலிங் செய்ய ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, பின்புறம் 8 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலில் ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. எனினும் புதிய பென்சில் வாங்க கூடுதலாக ரூ.7,600 செலுத்த வேண்டும். ஆப்பிள் பென்சிலுடன் பிரத்யேக செயலிகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் லாகிடெக் கீபோர்டு, கிரேயான் பென்சில் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சாதனங்களையும் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்பிள் பென்சில் ஐபேட் ப்ரோ சாதனங்களுக்கென அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய ஐபேட் ஆப்பிள் A10 ஃபியூஷன் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தையும் புதிய ஐபேட் வழங்குகிறது.






