என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் செய்யும் 9.7 இன்ச் ஐபேட் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
    சிகாகோ:

    ஆப்பிள் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த ஆப்பிளின் கல்வி சார்ந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் சாதனத்தில் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, 10 மணி நேர பேட்டரி பேக்கப், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்டிஇ ஆப்ஷன் மற்றும் ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த 9.7 இன்ச் ஐபேட் விலை 329 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,340)என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய ஐபேட் மாணவர்களுக்கு 299 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மாணவர் அல்லாதோருக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் மாணவர்களுக்கு 89 டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ.5,772), வாடிக்கையாளர்களுக்கு 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,421) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் பென்சில் சாதனங்கள் அமெரிக்காவில் இன்று (மார்ச் 27) முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விநியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபேட் சாதனங்கள் கூகுளின் க்ரோம்புக் சாதனங்களுக்கு போட்டியாக அமையும். ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் லேப்டாப்கள் அமெரிக்க கல்வி துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்சமயம் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 



    இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஐபேட் அறிமுகம் அமைந்துள்ளது. 'ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பிரபலமான மாடலாக 9.7 இன்ச் ஐபேட் இருக்கிறது. மேலும் அதன் பயனர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான செயலிகள் கல்வி சார்ந்து உபயோகங்களுக்கு வழங்கப்படுகிறது.' என ஆப்பிள் நிறுவன துணை தலைவர் கிரேக் ஜோஸ்வியாக் தெரிவித்துள்ளார். 

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் விலை அதிகமான ஐபேட் ப்ரோ மாடலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இம்முறை புதிய ஐபேட் சாதனத்துடன் ஆப்பிள் பென்சில் தனியே விற்பனை செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய பென்சில் மலிவு விலை மாடலுக்கும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே விழாவில் ஸ்மார்ட் அனோடேஷன் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் ஆசிரியர்கள் நேரடியாக பக்கங்களை மார்க் அப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சேவையை சப்போர்ட் செய்யும் பேஜஸ், நம்பர்ஸ் மற்றும் கீநோட் போன்ற ஐவொர்க் செயலிகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைக்கான டிஜிட்டல் புத்தகங்களை ஆசிரியர்கள் மேக் கணினிகளை கொண்டு உருவாக்க முடியும்.

    கல்வி சார்ந்த அம்சங்கள் மட்டுமின்றி ஐபேட் சாதனங்களில் வேலை செய்யும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய செயலிகளில் சிலவற்றை ஆப்பிள் விளக்கியிருந்தது. இத்துடன் ஐபேட்களுக்கான கிரேயான் ஒன்றை லாகிடெக் உருவாக்கி வருவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் இம்முறை 5 ஜிபி-யில் இருந்து 200 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் ஐபேட், ஆப்பிள் பென்சில் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,


    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் கியூ.ஆர். கோடு மூலம் பணம் அனுப்பும் வசதிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் ஆப்ஷன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்தளவு அம்சங்களுடன் வெளியிடப்பட்ட இந்த அம்சத்தில் மெல்ல மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கியூ.ஆர் கோடு மூலம் பணம் அனுப்பும் வசதி வாட்ஸ்அப் பீட்டா செயலியில் வழங்கப்பட்டுள்ளது.

    கியூ.ஆர். கோடு ஆப்ஷன் மூலம் கியூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப முடியும். முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.93 வெர்ஷனில் மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் அப்டேட் செய்யலாம். கியூ.ஆர். கோடு அம்சத்தை இயக்க வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து பேமென்ட்ஸ் ஆப்ஷனில் பணம் அனுப்ப முடியும். 



    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பேமென்ட்ஸ் ஆப்ஷனில் யூபிஐ ஐடி மற்றும் கியூ.ஆர். கோடு ஆப்ஷன் காணப்படுகிறது. இதில் கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து, அனுப்ப வேண்டிய பணத்தை குறிப்பிட்டு யூபிஐ கடவுச்சொல்லை பதிவிட வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களது கியூ.ஆர். கோடினை பேமென்ட்ஸ் பகுதியில் காணப்படும் ஷோ கியூ.ஆர். கோடு ஆப்ஷனில் பார்க்க முடியும்.

    புதிய கியூ.ஆர். கோடு சப்போர்ட் வசதியுடன் வாட்ஸ்அப் நிறுவனம் யூபிஐ வழிமுறைகளை அதிகாரப்பூர்வமாக பின்பற்றுகிறது. புதிய அம்சம் பீட்டா பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பீட்டா செயலியை பயன்படுத்துவோர் நேரடியாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிக்கான புதிய அப்டேட்-ஐ டவுன்லோடு செய்ய முடியும்.
    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பீட்டா செயலிக்கான புதிய அப்டேட்டில் தேடல் அம்சம் எளிமையாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ச் அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்ப் பீட்டா டெஸ்டர்களுக்கான புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜிஃப்களை தேட வழி செய்கிறது. புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள் பீட்டாவுக்கான வாட்ஸ்அப் 2.18.93 பதிப்பில் ஜிஃப்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேட வாடிக்கையாளர்களுக்கு வழி செய்கிறது. WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய அம்சம் டெவலப்பர்களால் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிவுகள் மட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது, வரும் நாட்களில் மேலும் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ்டு ஜிஃப் சர்ச் அம்சத்திலேயே புக்மார்க் செய்யும் வசதியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய அம்சம் தற்காலிகமாக டிசேபிள் செய்யப்பட்டு இருப்பதால், 2.18.93 பதிப்பில் அப்டேட் செய்த பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு இருக்காது, எனினும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அம்சம் தவிர புதிய அப்டேட் சிறியது தான் என்றும் மற்றப்படி குறிப்பித்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எட்யூகேஷன் நிகழ்வில் புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எட்யூகேஷன் நிகழ்வு மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் மலிவு விலை ஐபேட் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருள்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    2012-ம் ஆண்டில் இருந்து கல்வி சார்ந்த சாதனங்களை வெளியிட பிரத்யேக விழாவை ஆப்பிள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இவ்விழாவில் விலை குறைந்த ஐபேட் சாதனம் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் கல்வி சார்ந்து இயங்கும் புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    கல்வி சார்ந்த சாதனங்களை பொருத்த வரை கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2017-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் கல்வி சார்ந்த தொழில்நுட்ப சந்தையில் மட்டும் 1770 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.

    ஆப்பிள் சாதனங்கள் 17% ஆக இருந்த நிலையில், கூகுள் க்ரோம்புக் சாதனங்கள் 60% மற்றும் விண்டோஸ் கணினிகள் 22% பெற்றிருந்தன. ஆப்பிள் விழாவில் அந்நிறுவனம் விலை குறைந்த மேக்புக் ஏர் சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபேட்களில் ஆப்பிள் நிறுவனம் கிளாஸ்ரூம் செயலியை வழங்கி வருகிறது. இந்த செயலியை கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆப்பிள் சாதனங்களை ஆசிரியர்கள் கண்கானிக்க முடியும். இத்துடன் ஐடியூன்ஸ் யு செயலியும் வழங்கப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஆசிரியர்கள் ஆன்லைனில் வீட்டுப்பாடம், மதிப்பென் உள்ளிட்டவற்றை வழங்க முடியும்.
    இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்துவோர், எப்போதும் புதிய போஸ்ட்களை பார்த்து ரசிக்க ஏதுவாக புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:
     
    இன்ஸ்டாகிராம் செயலியில் எந்நேரமும் புதிய போஸ்ட்களை பார்க்க ஏதுவாக புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்து இருக்கிறது. 

    நியூ போஸ்ட்ஸ் (New Posts) எனும் புதிய பட்டன் பயனர் விரும்பும் நேரத்தில் இன்ஸ்டாகிராமை ரீஃப்ரெஷ் செய்யும். இதுவரை இன்ஸ்டாகிராம் தானாக ரீஃப்ரெஷ் ஆகி வந்த நிலையில், இனி இந்த பட்டன் கொண்டு பயனர் விரும்பும் போது ரீஃப்ரெஷன் செய்யலாம். புதிய வசதியால் எந்நேரமும் புதிய போஸ்ட்களை பார்க்க முடியும்.

    இன்ஸ்டாகிராமில் நியூ போஸ்ட்ஸ் பட்டன் போஸ்ட்ஸ் ஃபீட் துவக்கத்திற்கு உங்களை எடுத்து செல்லும். இதனால் பிரவசிங் மிக எளிமையாகவும், அனைவரும் விரும்பும் படி இருக்கும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருக்கிறது. மேலும் புதிய அல்காரிதம் புதிய போஸ்ட்களை மட்டும் காட்சிப்படுத்தும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

    புதிய அம்சம் இன்ஸ்டா ஃபீட் பக்கத்தை எந்நேரமும் புதிதாகவும், பயனர் விரும்பும் போஸ்ட்களை தவற விடாமல் பார்த்து கொள்ளும். நீயூ போஸ்ட்ஸ் அம்சம் குறித்த விரிவான தகவல்கள் மேம்படுத்தப்பட்டு முழுமையாக தயாராவது குறித்த தகவல்கள் வரும் மாதங்களில் தெரிவிக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதால், இதற்கான அப்டேட் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியை திறக்கும் போது புதிய போஸ்ட்களை முதலில் காண்பித்தது. பின் 2016-ம் ஆண்டு வாக்கில் அதிகம் பார்க்கப்பட்ட போஸ்ட்களுக்கு ஏற்ப போஸ்ட்கள் காட்சிப்படுத்தும் படி மாற்றியமைக்கப்பட்டது.
    ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி பயன்படுத்துவோர் ரெயில்கள் மட்டுமின்றி ஒலா கார் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐஆர்சிடிசி மற்றும் ஒலா  இடையேயான புதிய ஒப்பந்தம் ஐஆர்சிடிசி பயனர்களை ஒலா கார் புக் செய்ய வழி செய்கிறது. அந்த வகையில் ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியிலேயே பயனர்கள் ஓலா புக்கிங் செய்வதற்கான API சேர்க்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் சேவை ஐஆர்சிடிசியில் இணைந்த முதல் போக்குவரத்து நிறுவனமாக ஒலா இடம்பெற்றிருக்கிறது. இந்தியா முழுக்க பயணம் செய்வோருக்கு மிக எளிமையான போக்குவரத்தை வழி செய்யும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    ஒலா வழங்கும் மைக்ரோ, மினி, பிரைம் பிளே, எஸ்யுவி, ஒலா ஆட்டோ மற்றும் ஷேர் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் புக் செய்து பயன்படுத்தலாம். இத்துடன் கார்களை பயன்படுத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே கார் புக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    ஐஆர்சிடிசி மூலம் ரெயில் பயணங்களுடன் ஒலா சேவையையும் முன்பதிவு செய்ய முடியும். வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் மட்டுமின்றி ரெயில் நிலையங்களிலும் ஒலா முன்பதிவு மையங்கள் துவங்கப்படும் என ஒலா தெரிவித்துள்ளது. பயனர்கள் இங்கும் ஒலா முன்பதிவு செய்ய முடியும்.
    ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஜியோஃபை JMR815 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ 2016-ம் ஆண்டில் ஜியோஃபை 3 அறிமுகம் செய்தது, இதன் விற்பனை 2017-இல் துவங்கியது. பின் சத்தமில்லாமல் ஜியோஃபை 4 (JMR1140) மற்றும் ஜியோஃபை 5 (JMR814) சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    அந்த வகையில் ஜியோ தற்சமயம் ஜியோஃபை JMR815 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோஃபை 6 என அழைக்கப்பட கூடிய புதிய சாதனம் 95 கிராம் எடை மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முந்தைய மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த பேட்டரி ஆகும்.

    பேட்டரி, சிக்னல், வைஃபை உள்ளிட்டவற்றிற்கு இன்டிகேட்டர்களும் பவர் மற்றும் WPS பட்டன்களும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஜியோஃபை சாதனத்தை சார்ஜ் செய்ய மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அல்டேர் ALT3800 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. 



    இந்த பிராசஸர் பேண்ட் 3 (1800 MHz), 5 (850 MHz) மற்றும் 40 (TD 2300 MHz) உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும். இத்துடன் வைஃபை 802.11 b/g/n சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 31 வைஃபை சாதனங்களும், யு.எஸ்.பி. கேபிள் மூலம் ஒரு சாதனத்துடன் இணைக்க முடியும். 

    இதுதவிர மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 64 ஜிபி வரை மெமரி நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஜியோஃபை மூலம் 2ஜி அல்லது 3ஜி போன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் உள்ளிட்டவற்றை ஜியோ4ஜி வாய்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்து மேற்கொள்ளலாம். 

    இந்தியாவில் ஜியோஃபை 6 விலை ரூ.999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இதன் உண்மை விலை ரூ.2499 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்சமயம் புதிய ஜியோஃபை 6 பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ட்கட்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் 14 க்விக் ஆக்ஷன்கள் - நியர்பை ஃபுட், மால்ஸ், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் வழிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்ய முடியும்.

    புதிய அம்சம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 9.72.2-இல் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் இடம்பெற்றிருக்கும் சிறிய கார்டு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மூன்று ஷார்ட்கட் ஆப்ஷன்களை வழங்குகிறது.

    இதில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களை எடிட் செய்யும் வசதியும் வழங்கப்ட்டிருக்கிறது. இதனால் பயனர் விரும்பும் அல்லது அதிகம் பயன்படுத்தும் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்ஷன்களில் அருகாமையில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இதே அம்சம் பயனர் விரும்பும் இடங்களை தேர்வு செய்து கொள்ளும் படி வழங்கப்பட்டு வந்தது. எனினும் புதிய அம்சம் பயனர்களை ஒரே சமயத்தில் நான்கு இடங்களுக்கான ஷார்ட்கட்களை பதிவு செய்ய வழி செய்கிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் கடந்த ஆண்டு கூகுள் வழங்கிய க்விக் ஆக்ஷன்ஸ் அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக பார்க்கப்படுகிறது.



    புதிய ஷார்ட்கட் அம்சம் இதுவரை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சர்வெர் சார்ந்த அப்டேட்கள் என்பதால் படிப்படியாக மற்ற பயனர்களுக்கு வழங்கப்படலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம், ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவது குறித்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டது. 

    புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளுக்கான க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் கடந்த சில வாரங்களாக ஆண்ட்ராய்டு பீட்டாவில் வழங்கப்பட்டது.

    புதிய க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதி பெரிய அப்டேட் இல்லை என்றாலும், பயனுள்ள அம்சமாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தை இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். புதிய அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும்.

    - முதலில் வாட்ஸ்அப் செயலியை ஸ்மார்ட்போனில் திறந்து, டிஸ்க்ரிப்ஷன் உருவாக்க வேண்டிய க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

    - இனி க்ரூப் இன்ஃபோ ஆப்ஷனில் டிஸ்க்ரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாய் சேர்க்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மாற்றப்படும் க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை குறிப்பிட்ட க்ரூப்-இல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.  

    வாட்ஸ்அப் க்ரூப் பயன்படுத்துவோரை தேடுவதற்கான வசதியும், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களிடையே எளிமையாக மாற்றிக் கொள்ளவும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முந்தைய ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.4 வெர்ஷனில் வழங்கப்பட்டது. வாட்ஸ்அப் சேவையை தற்சமயம் 130 கோடி பேர் உலகம் முழுக்க பயன்படுத்துகின்றனர்.
    மைக்ரோசாஃப்ட் சார்பில் குறுகிய காலத்தில் பிழையை கண்டறியும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெவலப்பர்களுக்கு அதிகபட்சம் ரூ.1.6 கோடி வரை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    மெல்ட்-டவுன் மற்றும் ஸ்பெக்டர் போன்ற புதிய பிழைகளை கண்டறியும் டெவலப்பர்களுக்கு 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடி) வரை வழங்குவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் சைடு-சேனல் பிழைகளை கண்டறியும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு புதிய வகையான பிழைகள் ஜனவரி 2018-இல் அறிவிக்கப்பட்டு, இதுபோன்ற ஆய்வுகளில் மிகமுக்கிய வளர்ச்சியாக இருக்கிறது என மைக்ரோசாஃப்ட் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுருக்கிறது. அதிகப்படியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், புதிய வகை பிழைகளை கண்டறிய புதிய பக் பவுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

    ஸ்பெகுலேட்டிவ் எக்சிகியூஷன் எனும் புதிய வகை பிழைகளை கண்டறிவதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டிருக்கலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிலிப் மிஸ்னர் தெரிவித்துள்ளார். புதிய பிழை கண்டறியும் திட்டம் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

    ஹேக்கிங் செய்யக்கூடிய பிழை இருப்பதை இன்டெல் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. பாதுகாப்பு வல்லுநர்களின் படி ஸ்பெக்டர் மற்றும் மெல்ட் டவுன் பெயரில் சிபியு அளவிலான பிழை இன்டெல் கடந்த இரண்டு தசாப்தங்களில் உருவாக்கிய சிப்செட்களிலும், ஏ.எம்.டி மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங் தயாரித்திருக்கும் சிப்செட்களை பாதித்து இருக்கிறது.

    பிரச்சனையை ஏற்படுத்தும் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு பேட்ச்களை அப்டேட் மூலம் வழங்கி வருகின்றன.
    சென்ஹெய்சர் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ அனுபவம் வழங்கும் புதிய ஸ்மார்ட் ஹெட்செட்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சென்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் AMBEO ஸ்மார்ட் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் ஹெட்செட்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் அம்சங்களுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஹெட்செட்களில் 3D சவுண்ட் ரெக்கார்டிங் வசதி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ ஸ்பேஸ் வழங்குவதில் வித்தியாசமான ஆடியோ அனுபவத்தை பெற முடியும். புதிய ஹெட்செட்களில் பியூர்டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஒன்றினைந்து சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

    காதுகளில் உள்ள கேட்கும் திறன் போன்று ஆடியோ பிக்கப் செய்யும் வகையில் இதன் மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட் ஸ்லைடர் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப மைக் சென்சிட்டிவிட்டியை மாற்றியமைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ஹெட்செட்களில் A/D மற்றும் D/A கன்வெர்ஷன், ஆப்பிள் MFi சான்றுடன் லைட்னிங் கனெக்டர்கள் வழங்கப்பட்டிருப்பதால் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும். இத்துடன் சிட்டிவேஷனல் அவேர்னெஸ் (Situational Awareness) எனும் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியாமல் செய்யவும், ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் அம்சத்தை ராக்கர் ஸ்விட்ச் மூலமாகவும் இயக்க முடியும்.

    அழைப்புகளை பேசும் போதோ அல்லது ரெக்கார்டு செய்யும் போதும் கூட சிட்டிவேஷனல் அவேர்னெஸ் அம்சம் வேலை செய்யும், இது தேவையில்லை என்பவர்கள் இந்த அம்சத்தை ஆஃப் செய்ய முடியும். அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தும் படி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன்கள் அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றிற்கு உதவியாக இருக்கும்.

    இந்தியாவில் சென்ஹெய்சர் AMBEO ஸ்மார்ட் ஹெட்செட்களின் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஹெட்செட்களின் ஆண்ட்ராய்டு பதிப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இது விற்பனைக்கு வரும் என சென்ஹெய்சர் தெரிவித்துள்ளது.
    இந்திய பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகளை ட்விட்டரில் பின்தொடர்வோர் குறித்த தகவல்கள் உண்மையில்லை என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு இதர அரசியல்வாதிகளை ட்விட்டரில் பின்தொடரும் கணக்குகளில் கணிசமானவை போலி என தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயது. 

    இந்நிலையில், அரசியல்வாதிகளை காப்பாற்றும் வகையிலான அறிவிப்பை ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. அரசியல்வாதிகளை பின்தொடர்வோரில் பெரும்பாலானவை போலி கணக்குகள் என்ற தகவல் முற்றிலும் உண்மையில்லை என ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    சமீபத்தில் ட்விட்டர் ஆடிட் என்ற பெயரில் இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் பல்வேறு முன்னணி அரசியல்வாதிகளை பின்தொடர்வோரில் பெரும்பான்மையானவை போலி கணக்குகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அறிக்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் அதிகளவு பிழைகள் இருப்பதாகவும், ட்விட்டர் ஆடிட் ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சேவை கிடையாது என ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பிழை இருப்பதால் ட்விட்டர் ஆடிட் வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என ட்விட்டர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


    புகைப்படம்: நன்றி ட்விட்டர் ஆடிட்

    ட்விட்டர் ஆடிட் கருவியானது ட்விட்டருடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு சேவையாகும். இதில் ட்விட்டர் பின்தொடர்பாளர்கள் 5000 பேரை தேர்வு செய்து அவர்கள் பதிவிட்டு இருக்கும் ட்விட்கள், அவர்களை பின்தொடர்வோர், மியூச்சுவல் ஃபாளோவர்கள் மற்றும் இதர அம்சங்களை கணக்கிட்டிருக்கிறது.

    அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்போர் அவற்றை செயற்கையான அல்லது நேர்மையற்ற முறையில் பெற்றிருப்பபர் என்பதால் ட்விட்டர் ஆடிட் தகவல்களை நம்ப வேண்டாம் என ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 

    ட்விட்டர் ஆடிட் வெளியிட்ட தகவல்களின் படி ராகுல் காந்தி 67% போலி பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவரை தொடர்ந்து அமித் ஷா, சஷி தரூர் மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரில் 61% பேர் போலி கணக்குகள் என தெரிவிக்கப்பட்டது.
    ×