search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப் பெரியாறு அணை"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.
    • புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.

    126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்ட விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அது தொடர்பாக அம்சங்கள் தொடர்பாக இரு மாநிலங்களும் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவில் பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது. இந்த அறிக்கை மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணையை கட்டுவதற்காக வடிவமைப்பை பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் நிறைவு செய்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.

    அதன்பிறகு மத்திய நீர் ஆணையம் புதிய அணை கட்டுவதற்கான தொடர் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. கடந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதை விட அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவு படுத்தக்கோரி கேரள அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்காக மத்திய நீர் ஆணையத்தை கேரள மாநில அரசு கடந்த வாரம் அணுகியது. அப்போது புதிய அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க விரும்புவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    • முல்லைப் பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
    • இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மறைவால் அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    உத்தமபாளையம்:

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது.

    152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுக் கடந்த 1916ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி இறந்தார்.

    இவரது கல்லறை லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் உள்ளது. இங்குள்ள கேம்பர்லி பூங்காவில் தமிழக அரசு சார்பில் பென்னி குக் சிலை அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக தமிழக அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றனர்.

    தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மறைவால் அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பென்னி குக் சிலை திறப்பு விழா நாளை (11-ம் தேதி) நடைபெற உள்ளது என்று லண்டலன் வாழ் தமிழரும், சிலை அமைப்பு ஒருங்கிணைப்பாளருமான சந்தன பீர் ஒலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது லண்டனிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பென்னி குக் சிலை திறப்பு விழா இன்றைக்கு பதிலாக நாளை எளிமையான முறையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார்.
    • அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார்.

    மேலும், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    முல்லைப் பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது.
    • கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக கடந்த 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 200 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும் வெளியேற்றப்பட்டது.

    அதன்பிறகு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்கு 400 கன அடியும், குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 137 கன அடி. நீர் இருப்பு 4966 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு 800 கன அடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3267 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.30 அடி. வரத்து 80 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.32 அடி. திறப்பு 3 கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று காலை முதல் 500 கன அடி வெளியேற்றப்படுவதால் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதேபோல் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து சீராக உள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இன்று காலை முதல் அங்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது.
    • வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடி பாசனத்துக்காக 1ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதே போல் வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தண்ணீர் திறப்பு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டது. 136 கன அடி நீர் வருகிற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.05 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 61.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 669 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40.50 அடியாக உள்ளது. 75 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.38 அடி. வரத்து இல்லாத நிலையில் 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை 10.2, சோத்துப்பாறை 0.5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 300 கன அடி நீர் திறக்கப்பட்டபோது 1 ஜெனரேட்டர் மூலம் 27 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று நீர் திறப்பு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும் 36 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. 139 அடியை நெருங்கிய நிலையில் இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. வெளியேறும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி சென்றடையும்.

    மதகுகள் திறக்கப்படும்போது, கேரள மாநில அமைச்சர் அருகில் இருந்தார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு எப்படி தண்ணீர் திறக்க முடியும். அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?. 142 அடி நிரம்புவதற்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழகத்தின் ராமநாதபுரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விமர்சனம் எழுந்தது.

    இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். என்றாலும், அதை ஏற்காமல் வருகிற 9-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 8 மதகுகள் திறக்கப்பட்டு 3,981 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் கேரளாவிற்கு செல்கிறது.
    முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்ய இருக்கிறார்.
    கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ந்தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், அணையின் 3 மற்றும் 4-வது மதகைத் திறந்து, விநாடிக்கு 257 கனஅடி வீதம், 514 கனஅடி நீர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கேரளா மாநிலத்தின் இடுக்கி அணைக்குச் செல்லும்.

    அணையில் நீர் திறக்கும்போது, தமிழக அரசைச் சேர்ந்த பெரியாறு அணை செயற்பொறியாளரும், உதவிப் பொறியாளரும் உடனிருந்தனர். முல்லைப் பெரியாறு அணையை, தமிழக அரசின் அனுமதியில்லாமல், கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம்

    முல்லைப்பெரியாறு அணை முதலன்முறையாகத் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்குத் தெரிந்துதான் இது நடந்ததா, அனுமதி பெற்றுத்தான் செய்தார்களா என்று தெரியவில்லை. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போதே அவசரமாகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பார்ட்டம் அறிவிப்பு

    முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

    கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவூட்டுகிறோம்.

    முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு ஜெயலலிதா முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களை நினைவில் கொண்டு, அப்போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ்நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    முல்லைப் பெரியாறு அணை

    காவேரி நீர்ப்பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை தி.மு.க. அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    எனவே 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, அ.தி.மு.க.வின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

    துரைமுருகன் விளக்கம்

    முல்லைப்பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. 28-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவந்ததால், இரண்டு மதகுகளைத் திறக்க மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்தது. இது குறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி, கேரள அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

    தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால்தான் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கும் நேரத்தில் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இதுவாக இருக்க, கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்பது தவறான தகவல். உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதலில் தெரிவித்த, நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அளவின்படி, தமிழக நீர்வளத்துறை அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்திவருகிறது. அணையின் இயக்கம் குறித்துத் தவறான செய்தி தெரிவித்திருப்பதில், ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.

    இருந்தாலும் முல்லை பெரியது அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணமே உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்கிறார்.
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடியாக உயர்ந்துள்ளாதால் இன்று நள்ளிரவு 2 மணிக்கு அணை திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பினால் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை இன்று நள்ளிரவு 2 மணிக்கு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நீர்மட்டம் 139 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்படுவதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ×