என் மலர்
நீங்கள் தேடியது "2026 தேர்தல்"
- திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
- எம்.ஜி.ஆர் அதிமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தந்த ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி. தவெக-வின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவளித்து வந்த ஜேஎம்எம்கே, கடந்தாண்டு முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இந்த முடிவில் இருந்து விலகி, தற்போது திமுகவிற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம்,
'கடந்த எட்டு மாதங்களாக தவெகவோடு பயணித்தோம். அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தியும் விஜய் போகவில்லை. வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தர இருக்கிறோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இக்கட்சி தனது ஆதரவை திரும்பிப் பெற்றாலும், தமிழ்நாடு முஸ்லீம் லீக், எம்.ஜி.ஆர். அதிமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸிற்கு இரண்டு, தேமுதிகவிற்கு ஒன்று.
- முதல்முறையாக மாநிலங்களவை செல்கிறது தேமுதிக.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எ.சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் முதல்முறையாக மாநிலங்களவை செல்கிறது தேமுதிக.
2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, தேமுதிக முதல்முறையாக இந்தமுறை திமுகவுடன் கூட்டணி அமைத்தது. கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இம்முறையும் அதிமுக, பாஜகவிடம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிகவின் மாநிலங்களவை சீட்டிற்கு அதிமுக மறுப்பு தெரிவிக்க, திமுகவுடனும் பேச்சை தொடர்ந்தது தேமுதிக.
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 19 அன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பப்படியும், மறைந்த தலைவர் விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரேமலதா தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தேமுதிக தரப்பில் ஒரு மாநிலங்களவை இடமும், இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளும் கோரப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்களவை இடத்தை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது திமுக. தேமுதிக தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பார் என பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதிகள் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க.,வை குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால் முன்பு இருந்த ஆளுமை இல்லை.
- விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
தஞ்சாவூரில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"அ.தி.மு.க., முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாள சின்னம் எல்லா இடத்திலும் சென்று அடைந்துள்ளது. அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க.,வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டில்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க.வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., இருக்கிறது. இதனை தமிழ்நாடு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.
எல்லா கட்சியும் தங்களை பெருமையாகவும், துாக்கி உயர்த்தி பேசுவது தமிழ்நாடு அரசியலில் வாடிக்கை தான். ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க.,வில் சேர்ந்த நிலையில், அந்த கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறியதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலதான் நடக்கிறது. த.வெ.க.,வில் உத்தரவு போட்டு, கட்டுபடுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அமைப்பு இல்லை.
விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். அரசியல் கட்சி துவங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளை பின்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ்., தி.மு.க.,வில் இணைந்தது முதலமைச்சர் ஸ்டாலினின் சாதுர்யமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும்.
அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை மு.க.ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட பெரியமனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. எல்லா கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதி தான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசியில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன்.
அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாக கண்டிக்கிறேன். ஈரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கிறது. அவர்கள் இந்த போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள். விலைவாசிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்தநாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் என தான் சொன்னேன். ஆனால் அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை . ஈரான் அரசின் கொடுமையை படிக்க வேண்டும்.
வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க., உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கு சென்றுவிட்டார்கள். த.வெ.க., கூட்டத்திற்கு அனைவரும் பத்திரமாக வந்து விட்டு செல்ல வேண்டும். மின்கம்பத்தில் ஏறாதீர்கள்." எனக் கூறினார்.
- தே.ஜ.கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
- திமுக மூன்று தொகுதிகளை கூடுதலாக கொடுக்க முன்வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நீண்டநாட்களாக இழுபறியில் இருந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு விவகாரம் இன்று முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இத்தேர்தலில் காங்கிரஸிற்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை கொடுக்க திமுக முடிவு செய்தது.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் 35 - 40 தொகுதிகள் கோரப்பட்டது. இதற்கு திமுக தீர்க்கமாக மறுப்புதெரிவிக்க இழுபறி நீடித்தது. மேலும் பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் அமைத்த குழுவில் இடம்பெற்ற கிரிஷ் சோடங்கர் போன்றோரும் இழுபறிக்கு முக்கிய காரணம். இதனிடையே மார்ச் 5-ஆம் தேதி ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், அதற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டிய கட்டாயம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டது.
இதனை உணர்ந்து தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறியைத் தீர்க்க, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது வியூகத்தை மாற்றியது. இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கிரிஷ் சோடங்கருக்குப் பதிலாக, மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமித்தது. அவரும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் காங்கிரஸ் 40 என்ற எண்ணிக்கையில் இருந்து 35க்கு இறங்கி வந்துள்ளதாகவும், திமுக 25+1 என்ற எண்ணிக்கையில் இருந்து ஏறி 29+2 என மூன்று தொகுதிகளை கூடுதலாக கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்று மாலைக்குள் நல்ல செய்திவரும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக தெரிகிறது. விரைவில் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என மாநிலக்குழு தீர்மானித்துள்ளது
- தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளும், பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,
"திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது என முன்னறே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன், எங்கள் கட்சி சார்பில் நானும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், கண்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என ஏற்கனவே மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. அந்த கோரிக்கையையும் பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் கலந்துபேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
தொகுதிப் பட்டியல் தொடர்பாக எதுவும் வழங்கவில்லை. முதலில் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம். தொகுதியை குறைக்கவேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை எதுவும் திமுக வைக்கவில்லை. பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலுசேர்த்தாலும் அது நல்லதுதான். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும் அவர்களுக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்." என தெரிவித்தார்.
- ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
- அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார்.
சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
- கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
- 2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உரையாற்றிய அவர்,
"இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் இயக்கம் தி.மு.க.தான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கலக்கும் அணியாக தி.மு.க. ஐடி அணி இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டுமில்லை. அஜந்தாவை செட் செய்வது. ஏனெனில் கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய, சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.
டிஃபென்ஸ் மட்டுமே ஆடக்கூடாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டுமே எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ள என்னுடைய சமூக வலைதளப் பக்கம், திமுகவின் பக்கங்கள், அரசு சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள். ஐடி விங்கின் வாட்ஸ் ஆப் சேனலை அனைவரையும் பின்தொடர வைய்யுங்கள். நம் சாதனைகள்தான் பேச்சுப் பொருளாக இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. அவர்கள் நம்மை குறித்து பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும்; இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதை நீக்கிவிட்டு ஓட வேண்டும்.
காமெடியாக பதில் கூறுங்கள், கிண்டலாக பதிவிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கூலாக, பொறுமையாக செய்யுங்கள். அவர்களக்கு வந்தால் ரத்தம், திமுகவிற்கு வந்தால் தக்காளி சட்னி என செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள்.
தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். அதற்கான அடித்தளம்தான் இந்த ஆடுகளம் செயலி.
2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் ஜெயிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காகத்தான் காத்திருப்போம்.
2026 தேர்தலும் அதே போலத்தான். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு. செயல்வீர ர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.வில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் தி.மு.க.தான் சிங்கம் எனக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக' என தெரிவித்தார்.
- 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.
- ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் பன்வர் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் மற்றும் பலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் கூறுகையில், "தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு சென்னை மற்றும் புதுச்சேரியை அடைந்துள்ளது," என்றார்.
தேர்தல் ஆணைய குழுவினர் நாளை, நாளை மறுநாள் (பிப். 12 மற்றும் 13) சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 12ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
- கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
- கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். கமல்ஹாசன் உரை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பலரும், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உரை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ஆக்கப்பூர்வமான யோசனைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நான் நல்ல எண்ணத்துடன் பேசினேன், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும்," என்று கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்," என்றார்.
- ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது.
- கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கொட்டாரம் சந்திப்பில் நிறைவு பெற்றுஉள்ளது. இனி நமது கட்சிக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான்.
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.
தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்." என அவர் தெரிவித்தார்.
- கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.
- காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்
தமிழ்நாட்டில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்துவிட்டன. ஒருசில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணியே தொடரும் என திமுக தரப்பும், காங்கிரஸும், அதில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கூறினாலும், திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தளபதி, 'வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.
இது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.
கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
- லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.
இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.
லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






