என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
    • பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.

    அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
    • 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அன்று, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை முடித்தனர். அதே நாளில், இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் நமதுஅரசியலமைப்பின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார்.

    நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நமது தனிப்பட்ட, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

    காலனித்துவ மனநிலையை விலக்கி தேசிய வாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு வழிகாட்டும் ஆவணம் ஆகும்.

    முத்தலாக் தொடர்பான சட்டம் மூலம், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நீதியை நோக்கி பாராளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது.

    370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த ஒரு தடை நீக்கப்பட்டது.

    அரசியலமைப்பில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது.

    பெண்கள், இளைஞர்கள், எஸ்.சி, எஸ்.டி, விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.

    25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெ டுத்தது நாட்டின் மிகப்பெ ரிய சாதனைகளில் ஒன்றா கும். இந்தியா உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை வழங்கி வருகிறது. இந்திய பாராளுமன்றம் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

    • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
    • ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது.

    திருவனந்தபுரம்:

    ஐனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக இருந்தது. அப்போது எல்லையில் நிலவிய போர் பதற்றம் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் அவர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.

    ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

    அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கி வந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலைக்கு புறப்பட்டார்.

     

    ஜனாதிபதி ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக பிரமடம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் நேற்று வரை கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு இருக்கிறது. அதில் தான் ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கி சரிந்ததாக தெரிகிறது.

    ஜனாதிபதி வருகைக்காக நேற்று அனைத்துவிதமான ஒத்தகைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில் ஹெலிகாப்டர் தளத்தின் கான்கிரீட்டில் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது.

    அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார்.

    அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    • பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
    • எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார்.

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார். 71-வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுபவர்கள் குறித்து ஆகஸ்ட் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை 'பார்க்கிங்' படம் பெறுகிறது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார். 'வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார்.

    மேலும், நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக விருது என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    சிறந்த படமாக 12-வது ஃபெயில், சிறந்த இந்தி படமாக காதல் - எ ஜாக்ஃப்ரூட் மிஸ்டரியும் தேர்வாகி உள்ளது. ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி (12வது ஃபெயில்) சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜி பெறுகிறார். 

    • தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
    • இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

    மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

    பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.

    அவரை மாவட்ட கலெக்டர் வே.சரவணன், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    பின்னர், அவர் திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோவில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    • கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
    • போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.

    விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
    • ஜனாதிபதி, பிரதமர் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் (வயது 81). இவர் கிட்னி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் பிதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் "பழங்குடியினர், ஏழை மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஷிபு சோரன் ஆர்வதாக இருந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஷிபு சோரன் உடல் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

    • மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது.

    இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில சட்டசபை அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.

    கவர்னர்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

    இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் பி.எஸ்.நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், ஏ.எஸ். சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதி களை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. இவ்வழக் கில் கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் மனுதாக்கல் செய்தன.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் கால அட்ட வணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யு மாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.

    ஜனாதிபதி விளக்கம் கோரிய இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19-ந் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனைகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    ஜனாதிபதியின் பரிந்துரையை ஆதரிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்க்கும் மனுக்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3, 9 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் மறு சமர்ப்பிப்புகள் இருந்தால், செப்டம்பர் 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு
    • உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தனர்.

    முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்டதே இந்த மேல்முறையீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள்:

    1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.

    2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.

    3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

    4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.

    5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

    6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

    7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

    8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.

    9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.

    10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.

    11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.

    12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.

    13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.

    14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.

    • மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
    • ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .

    ×